வறட்சியின் பாதிப்பு குறித்து காட்சி ஊடகங்கள் உழவர்களின் உயிரிழப்பை உடனுக்குடன் பதிவு செய்து வருகின்றன. புதிய தலைமுறையில் தஞ்சை வறட்சி குறித்து நெஞ்சை உருக்கும் ஒரு தொகுப்பைப் பார்த்தேன். கடந்த இரண்டு நாட்களாக அறிஞர்களின் ஆய்வரங்கமும் நடந்தது.

farmer 273நிலைமைகளை உலகம் உணரும் பொருட்டு நான் எனது குடும்ப நிலையையும், எனது கிராமத்தின் நிலையையும் இன்று பதிவு செய்து, பகிர்ந்து கொள்கிறேன்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் பசுவபட்டி எனும் ஊரில் உள்ளோம். கீழ்பவானி பாசனத்தில் எட்டு மாத காலம் எங்கள் பகுதி பாசனம் பெறும். சில ஆண்டுகள் நான்கு மாதங்களாக பாசன வசதி சுருங்குவதும் உண்டு.

எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக பத்து ஏக்கர் நிலம் உள்ளது. இரண்டு கிணறுகளும் ஒரு ஆழ்துளைக் கிணறும் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பில் கசிவு நீரை சேமிக்க ஒரு குட்டையும் அமைத்துள்ளோம். கிணறுகள் கால்வாய் தண்ணீர் நின்ற ஓரிரு மாதங்களில் வறண்டுவிடும்.

2002 வறட்சியின் போது அமைத்த 500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றை நம்பி 3 ஏக்கர் கரும்பு, 2.5 ஏக்கர் வாழை(1700 மரங்கள்), 200 தென்னை மரங்கள் இவைகளுக்கு பாசனம் செய்து வந்தேன்.

வற்றாத பவானி ஆறு இந்த ஆண்டு வறண்டு விட்டது. அதிக பட்சம் இன்னும் 15 நாட்களுக்குள் ஆழ்துளைக் கிணறு தனது இறுதி மூச்சை நிறுத்தி விடும். எனது நிலத்திலுள்ள பயிர்கள் அனைத்தும் வறண்டு போகும்.....!

எனக்கு வயது 60. சர்க்கரையோ, இரத்த அழுத்தமோ இதுவரை இல்லை. மனம் இப்பொழுது தடுமாறுகிறது. இதே நிலைதான் எங்கள் கிராமத்திலுள்ள 1200 ஏக்கரை நம்பி வாழும் சுமார் 300 நிலமுள்ள குடும்பங்களுக்கு.

விவசாயத் தொழிலாளர்கள் சுமார் 700 குடும்பங்கள் இந்த நிலத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். நூறு நாள் வேலையும் முடிந்து விட்டது. 400 குடும்பங்கள் தாழ்த்தப்பட்டவர்கள். சுமார் 1000 கறவை மாடுகளும் உள்ளன. நொய்யல் சாயக்கழிவு நீரால் எங்கள் ஊராட்சியின் ஒரு பகுதி குடிநீரையும் இழந்து விட்டது. மூன்று ஆழ்துளைக் கிணறுகளை நம்பியே சுமார் 4500 மக்களும் குடிநீர் பெற வேண்டும்.

எனக்கு வங்கியில் பயிர்க் கடன் ரூ3 இலட்சம், ரூ1 இலட்சம் நகைக்கடன், ரூ.4 இலட்சம் நில மேம்பாட்டுக் கடன். ஆக எட்டு இலட்சம் கடன் உள்ளது. இதுவரை முறையாக வரவு, செலவு செய்து வங்கியின் நன் மதிப்பு புத்தகத்தில் உள்ளேன்.

அனைத்து குடும்பங்களுக்கும் அனைத்துக் கடன்களும் உள்ளன. ஒரு 10% கடனின்றி இருப்பார்கள். பவானி பாசனத்தில் 2-5 இலட்சம் ஏக்கர் நிலத்திற்கும் இதுதான் நிலை.

இந்த அரசின் நடவடிக்கைகள் எதிலும் பெரிய நம்பிக்கை இல்லை. இறந்துபோன உழவர்களுக்கு ஒரு இரங்கல் செய்தி கூட கொடுக்கவில்லை முதல்வர். எங்கள் உயிரைக் கொடுத்து மானம் காக்கும் உழவர்களின் உயிரை மதிக்காத இந்த அரசுகளிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை. வாழும் உரிமை வேண்டும்!

- கி.வே.பொன்னையன்

Pin It