national flag at theatre

இனி திரையரங்குகளில் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஷியாம் நாராயண் சவுக்கி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவாராய் ஆகியோர் அடங்கிய தேசபக்தர்கள் பெஞ்சு இப்படியொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தேச பக்தி என்ற உணர்வை இதற்குமேல் யாரும் சொச்சைப்படுத்த முடியாது. திரையரங்குகளில் ஒலிபரப்பப்படும் தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றாலே தேசபக்தி பீறிட்டுக் கொண்டு கிளம்பும் என்று ஒரு உச்சநீதி மன்ற நீதிபதி நினைக்கின்றார் என்றால் அவரின் சமூக அறிவு எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் ‘புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்’, ‘மது உடல் நலத்திற்குத் தீங்கானது’ போன்ற விளம்பரங்கள் எந்த ஒரு விளைவையும் சமூகத்தில் ஏற்படுத்தாத போது இது போன்ற யோசனைகள் எப்படித்தான் நீதிபதிகளுக்கு ஏற்படுகின்றது என்று தெரியவில்லை.

 எப்படி சாராய ஆலை அதிபர்களிடமும், புகையிலை தயாரிக்கும் பெரு நிறுவனங்களிடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை தேர்தல் நிதியாக பெற்றுக்கொண்டு பாதிக்கப்படும் மக்களின் கோபத்தை மட்டுப்படுத்துவதற்காக அரசு விளம்பரங்களை செய்கின்றதோ, அதே போலத்தான் விரல்விட்டு எண்ணத்தக்க கார்ப்ரேட்கள் இந்த நாட்டை கொள்ளையடிப்பதை மூடி மறைப்பதற்கே இந்த தேசபக்தி கோசம் பயன்படுகின்றது. தேச பக்தி என்பது ஏதோ அருவமான வெற்றிடத்தில் இருந்து பிறப்பெடுக்கும் உணர்வு அல்ல. அது தான் வாழும் நாட்டில் ஆட்சியாளர்கள் தன் குடிமக்களின் மீது கொண்டுள்ள தார்மீக அறநெறிகளில் இருந்து முகிழ்த்து எழுவது. குடிமக்கள் அனைவருக்கும் இந்த நாட்டின் வளங்களில் சம அளவு பங்குள்ளது, அதை பிரித்துக் கொடுப்பது மட்டுமே தனது பணி என்று நினைப்பதில் இருந்து பெருமிதத்தோடு வருவது. தன் நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மட்டும் அல்லாமல், சமமான கல்வி முறை, தரமான மருத்துவம், சுகாதாரமான குடிநீர், மூளை உழைப்புக்கும், உடல் உழைப்புக்குமான வேறுபாடுகளை ஒழித்தல், அவர்களை பண்பாட்டு தளத்தில் வளர்தெடுக்க முழு கருத்துச்சுதந்திரம் போன்றவற்றை வழங்குவதன் மூலம் கீழ் இருந்து பேரார்வத்தில் பற்றிப்படர்வது தேசபக்தி என்பது. அதை ஒரு போதும் மேல் இருந்து திணிக்க முடியாது.

 ஆனால் இந்தியாவைப் பொருத்த மட்டும் இது போன்று கீழ் இருந்து முகிழ்த்து எழும் தேசபக்தி என்பது ஒரு போதும் சாத்தியம் அற்றது. பன்னாட்டு பெருமுதலாளிகளையும், இந்திய தரகு முதலாளிகளையும் தவிர சாமானிய இந்திய குடிமக்கள் அனைவரையும் சுடுகாட்டிற்கு அனுப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் பணம் தின்னிப் பேய்கள் வாழும் ஒரு நாட்டில் எப்படி தேசபக்தி உணர்வு என்பது கீழ் இருந்து எழும்? அப்படி சாமானிய மக்களால் தேசபக்தி உணர்வு கொண்டாடப்படுகின்றது என்றால், அது அரசியல் தெளிவில் இருந்து தோன்றியதாக இருக்காது. உள்நாட்டு பெருமுதலாளிகள் மற்றும் மதவாதிகளின் பொய்ப் பிரச்சாரங்களை எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் நம்புவதன் வாயிலாக மட்டுமே இருக்கும். அது போன்ற தேசபக்திகள் அற்பத்தனமானது. அது தன்னை மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களையும் அழிக்கக்கூடியது.

 ஆனால் நீதிபதிகள் தான் பங்கேற்று இருக்கும் இந்த அரசு இயந்திரம் சாமானிய மக்களுக்கு எதிராக இருக்கும் நடைமுறை உண்மையைக் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் சங் பரிவராத்தின் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அவர்களை திருப்திபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கொடுக்கப்பட்டது போன்று இருக்கின்றது. அரசு நம்முடைய நிலங்களை பறித்துக்கொண்டு வீடுகளை தீவைத்துக் கொளுத்தி, நம்முடைய பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக பிச்சைக்காரர்கள் போன்று வாழ நிர்பந்தித்தாலும், நமக்கு தரமான கல்வியையும், வேலைவாய்ப்பையும், மருத்துவத்தையும் கொடுக்காமல் நம்மை துடிதுடிக்க சாகவிட்டாலும் அதை செய்துகொண்டு இருக்கும் அமைப்புக்கு ஆதரவாக தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்கின்றது. எவ்வளவு அற்பத்தனமானது இத்தகைய சிந்தனை. தனக்கு எதுவுமே செய்யாத ஓர் அரசுக்கு ஒருவன் எதற்காக மரியாதை செலுத்த வேண்டும். நீதிபதி தேசபக்தி என்பது தாகூரின் பாட்டில் தொத்திக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். அவரைச் சொல்லி என்ன பயன்? அவரும் இந்த சமூக அமைப்பின் விளைபொருள் தானே. கடவுள் தனக்கு எதுவுமே செய்யவில்லை என்பதைத் தெரிந்துகொண்டே அதற்கு காவடி தூக்கி, கோசம் போடும் ஒரு மட்டமான பக்தனின் மனநிலை என்று இதைச் சொல்லலாம். இல்லை, கணவன் என்னதான் ஊர்மேய்ந்தாலும் மனைவி மட்டும் பதிவிரதையாக இழுத்து மூடிக்கொண்டு அடக்கம் ஒடுக்கமாக கணவன் பேச்சைத் தட்டாமல் வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆணாதிக்க பிற்போக்கு சனாதானியின் மனநிலை என்று இதை சொல்லலாம். அப்படியும் இல்லை என்றால், முதலாளி எவ்வளவு தான் குறைவான கூலி கொடுத்தாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்காமல் அவன் முன் தொழிலாளி சாஸ்டாங்கமாக விழுந்து ‘கும்பிடுறேன் சாமி’ என்று சொல்லவேண்டும் என நினைக்கும் ஒரு ஆண்டை முதலாளியின் மனநிலையாக இருக்கலாம். இப்படி ஏதோ ஒரு மனநிலையில் இருந்தே நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்து இருக்கின்றார்.

 நீதிபதிக்கு வேண்டும் என்றால் ஒரு நல்ல அரசு வருமானம் வருவதால் அந்த விசுவாசத்தை வெளிப்படுத்த அவர் திரையரங்கத்தில் என்ன கழிப்பறையில் கூட எழுந்து நின்று தனது தேசபக்தியை வெளிப்படுத்தலாம். முடிந்தால் வந்தே மாதரமோ, இல்லை பாரத்மாதா கீ ஜேயோ சொல்லலாம். ஆனால் இந்த அரசால் பிச்சைக்காரர்களைவிட கேவலமாக வாழ நிர்பந்திக்கப்பட்ட வீடற்ற, உடுத்த நல்ல ஆடையற்ற, சாலை ஓரங்களிலும், குப்பை மேடுகளிலும் நாய்களைப் போல வாழ்ந்துகொண்டு இருக்கும் கோடாண கோடி மக்களை தேசபக்தியை வெளிப்படுத்தச் சொல்வது கீழ்த்தரமானது. நீதிபதிகளின் இந்த உத்திரவால் திரையரங்குகளில் இனி என்ன நடக்கும்?. போர்னோகிராபி படங்கள், போர்னோகிராபி மற்றும் காமெடி கலந்த படங்கள், போர்னோகிராபி மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்கள், போர்னோகிராபியும் பேய்களும் வரும் படங்கள், போர்னோகிராபியும் நல்ல கதைகளும் கலந்துவரும் படங்கள் இப்படி பலதரப்பட்ட படங்களைப் பார்க்கவரும் தேசபக்தர்கள் முதலில் தங்களுடைய தேசபத்தியை உணர்ச்சி பொங்க எழுந்து நின்று தெரிவித்துவிட்டு, அதே தேசிய உணர்வு கொஞ்சமும் குறையாமல் ‘போர்னோகிராபி மற்றும் பிளஸ்’ படங்களை பார்ப்பார்கள். தேசபக்தியைப் பரப்ப இதைவிட வேறு சிறந்த இடம் எது இருக்க முடியும்!.

 வந்தே மாதரம் பாட மறுப்பவர்கள், பாரத் மாதா கீ ஜே சொல்ல மறுப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என்ற சங்பரிவாரத்தின் கருத்தை வரும் காலங்களில் நீதிமன்றங்களே சொல்ல ஆரம்பித்துவிடும் போல் நிலைமை இருக்கின்றது. திரையரங்குகளில் மட்டும் அல்லாமல் டாஸ்மாக் பார்கள், இரவு நேர கேளிக்கை விடுதிகள், சூதாட்ட கிளப்புகள் போன்ற எல்ல இடங்களிலும் இனி தேசிய கீதத்தைப் பாடுவதை கட்டாயமாக்கலாம். இந்தக் கருமத்தை எல்லாம் நாம் வாழும் காலங்களில் பார்க்க வேண்டி இருக்கின்றதே... என்ன செய்வது?

-       செ.கார்கி

Pin It