தனியார் கல்வி வியாபாரிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றக் கூடிய நிலைக்கு தமிழகக் கல்வியை குட்டிச்சுவராக்கியவர்களுக்கு காமராசரின் இன்றைய பிறந்த தினத்தில் நாம் என்ன செய்தியை சொல்லவேண்டியுள்ளது? கல்வி கொடுப்பது அரசின் கடமை என்பதை உறுதியாகக் கடைபிடித்த காமராசரின் கல்விக் கொள்கைகள் எப்படி சீரழிக்கப்பட்டது? குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்த காமராசருக்கு அவருடைய ஆதரவாளர்கள் தங்கள் நிலத்தைக் கொடுத்து செலவத்தைக் கொடுத்து எப்படியெல்லாம் துணை நின்றார்கள்?

Kamarajar pho 292காமராசர் என்றால், கல்விக் கண் கொடுத்தவர், நாட்டிலேயே முதன்முதலாக மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தவர், நாட்டிலேயே முதன்முதலாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்தவர், தன்னலமற்ற தலைவர், படிக்காத மேதை என்று தானே பேசவேண்டும். இன்னும் காமராசரைப் பற்றி பேசுவதற்கு என்ன்வெல்லாம் இருக்கிறது?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை கரிகாற் சோழன் பெயரைச் சொல்கிறது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை பென்னிகுயிக் பேரைச் சொல்கிறது, மேட்டூர் அணை டேன்லி பேரைச் சொல்கிறது, வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி அணை கட்டி பயிர்த்தொழிலை வளர்த்ததால் இவர்களின் பெயரை ஆண்டுகள் பல கடந்தும் சொல்லுகிறோம். அதைப்போலவே வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி பயிர்த்தொழில் வளர பல அணைகள் கட்டிய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஒருவரின் பெயரையும் சொல்லித்தானே ஆகவேண்டும்.

வெறும் 9 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராசர் அவர்களால் கீழ்பவானி, மணிமுத்தாறு, பரம்பிக்குளம், வைகை, சாத்தனூர், உட்பட 9 நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. பதினைந்து ஆண்டுகள் முதல்வராக இருந்த பிற முதல்வர்கள் எத்தனை நீர்ப்பாசன திட்டங்களை கொண்டுவந்தார்கள் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது? வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவிக்க வழிவகுத்த முதல்வர்கள் என்று தானே பிற முதல்வர்களைப் பற்றி சொல்லவேண்டிய நிலை இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் காமராசரைப் போன்ற ஒரு முதல்வர் வேண்டும். காமராசரைப் போன்ற ஒரு முதல்வர் தமிழ்நாட்டிற்கு மீண்டும் ஏன் தேவைப்படுகிறார்? காமராசர் முதல்வராக இருந்த 9 ஆண்டு காலத்தில் கல்வியில் மாபெரும் மாற்றத்தை செய்ய முடிந்தது என்பதே இக்கேள்விகளுக்கான விடையாக இருக்கும்.

“எதற்காகச் சுதந்திரம் வாங்கினோம்? எல்லோரும் வாழ. எப்படி வாழணும்? ஆடுமாடுகள் மாதிரி உயிரோடு இருந்தால் போதுமா? மனிதர்களாக வாழணும். அதற்குப் படிப்பு வேணும். பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா? வராது. ஏழைகளுக்கெல்லாம், பள்ளிக்கூடங்களிலேயே சாப்பாடு போடணும். அப்பதான் படிப்பு ஏறும். இதுவே முதல் வேலை; முக்கியமான வேலையுங்கூட. இதை நான் ரொம்ப முக்கியமாகக் கருதுகிறேன். அதனால், மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இதே வேலையாக, ஊர் ஊராகப் பிச்சையெடுக்க வருவதற்குத் தயாராக இருக்கிறேன்”. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரும் போது காமராசர் அவர்கள் குறிப்பிட்ட வார்த்தைகள் இது.

மாநில அரசின் ஆணை வருவதற்கு முன்பே, மதிய உணவுத் திட்டம் மக்கள் இயக்கமாய் வளரத் தொடங்கியது. காமராசர் மேல் உயிரை வைத்திருந்தவர்கள் எண்ணற்ற ஊர்களில் விரைந்து ஏற்பாடுகள் செய்தனர். அரசின் நிதி உதவியைப் பெறாமல், முழுக்க முழுக்க மக்கள் இயக்கமாக மதிய உணவுத் திட்டம் பல நூற்றுக்கணக்கான கிராமப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது. பள்ளிக்கூட மதிய உணவுத் திட்டத்திற்கு எப்படிப் பொருள் சேர்ந்தது?

பல சிற்றூர்களில் பணக்காரர்கள் நிறையக் கொடுத்தார்கள். நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் எல்லோரும் முடிந்ததைக் கொடுத்தார்கள். மாத ஊதியம் பெற்றவர்கள் மாத நன்கொடை தந்தார்கள். உழவர்கள் அன்னதானத்திற்கு அரிசி கொடுத்து உதவினார்கள். எத்தனையோ ஆயிரக்கணக்கான ஊர்களில், நாள்தோறும் பிடியரிசி ஒதுக்கி பள்ளிக்கு அனுப்பிவைத்து உதவினார்கள். குடும்பப் பெண்களே முறை போட்டுக்கொண்டு சமைத்துக் கொடுத்து உதவினார்கள். ஆசிரியர்களும் இத்திட்டத்திற்கு உயிர்நாடியாக இருந்தார்கள். பிறகு தான் அரசின் திட்டமாக இது மாறியது. நிதி உதவியும் வந்தது. முப்பதாயிரம் தொடக்கப் பள்ளிகளில் பதினாறு இலட்சம் மாணவ மாணவியர் மதிய உணவு உண்டனர்.

பள்ளிக்கூடம் போனால் மதிய உணவு கிடைக்கும் நிலையை உருவாக்கியதால் தான் தமிழ்நாட்டில் கல்வி அறிவு பெற்ற முதல் தலைமுறையினர் எண்ணிக்கை காமராசர் ஆட்சிக் காலத்திலேயே ஒரு கோடியைத் தாண்டியது. காந்தி கிராமத்திற்கு பத்தாம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் நேரு அவர்களிடம் அதே விமானத்தில் வந்த இந்திய கல்வி அமைச்சகச் செயலர் தமிழ்நாட்டில் நடைபெறும் மதிய உணவுத் திட்டம் பற்றிக் குறிப்பிட்டார். மதுரை விமான நிலையத்தில் இறங்கியதும் நேரு காமராசரை பார்த்து “சென்னை மாநிலத்தில் நடக்கும் அற்புத இயக்கத்தைப்பற்றி,எனக்கு கூடச் சொல்லாமல், மூடி வைத்திருக்கிறீகளே” என்றார். அதற்குப் பிறகுதான் அதுபற்றிய விவரக் குறிப்பு பிரதமருக்கே அனுப்பப்பட்டது.

காமராசர் முதல்வராக இருந்த ஒன்பதாண்டு காலத்தில் 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் சுமார் 48 இலட்சம் குழந்தைகள் கல்வி கற்கும் நிலை உருவாகியது. இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் 13 இலட்சம் பேர் படிக்கும் நிலையும் உருவாகியது. அந்தந்த ஊர்மக்களின் உழைப்பையும் உதவிகளையும் சேர்த்து, உள்ளூர்ப் பள்ளிக்கூடங்களின் நிலையைச் சீராக்கும் ‘பள்ளிச் சீரமைப்பு இயக்கம்’ காமராசர் ஆட்சியில் இந்தியாவில் முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் தோற்றுவிக்கப்பட்டது

1955 ஆம் ஆண்டு முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 1958 ஆம் ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அடுத்து, கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை நாட்டிலேயே முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவரும் காமராசர் தான் என்பது கூட இன்றைய இளைய ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொழிற்கல்வி, பொது நூலகம், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் என காமராசர் ஆட்சியில் இருக்கும் போது கல்விக்கென பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.. கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக காமராசரின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் கல்வியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப்பட்டது என்றே கூறலாம்.

இன்று கல்வியில் ஏற்பட்டுள்ள அவல நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை. மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வரை விலைகொடுத்துப் பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் கல்வி அமைப்பிலேயே வளர்க்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. கருப்புப் பண உற்பத்தியில் மூன்றாமிடம் பெறக்கூடிய அளவிற்கு கல்வி சந்தைச் சரக்காக மாற்றப்பட்டுவிட்டது.

தனியார் பள்ளிகளின் பெருக்கத்தினால் அரசுப்பள்ளிகளும் அரசின் நிதியில் இயங்கும் உள்ளாட்சித்துறைப் பள்ளிகளும் சமூகத்தின் கடைக்கோடியில் வாழும் மக்களுடைய பள்ளிகளாக, வசதி படைத்தவர்களால் தீண்டப்பட்டாத பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்களின் குழந்தைகளே அரசுப்பள்ளியில் சேர்க்க முடியாத நிலை உருவாகிவிட்டது. பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்விக்கும் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முழுமையாக தாய்மொழி அறிவே இல்லாத புதிய தலைமுறையினர் உருவாகி வருகின்றனர். மொழியும் அழிந்து இனமும் அழியும் நிலையில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம். காமராசருக்குப் பிறகு 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களின் சாதனை இதுதான்.

உலகின் பல்வேறு முன்னேறிய நாடுகளிலும் தேசியக் கல்விக் கொள்கையாகப் பின்பற்றப்படும் கட்டணமற்ற பொதுப்பள்ளி முறையோடு இணைந்த தாய்மொழி வழிக் கல்வி வழங்கும் அருகமைப் பள்ளிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கொள்கை 1968 ஆம் ஆண்டின் கோத்தாரிக் கல்விக் குழு முதற்கொண்டு 1986 ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் குழு, ஆச்சாரியா இராமமூர்த்தி கல்விக் குழு, ஆகியவற்றால் வலியுறுத்தப்பட்டன. இக்குழுக்களின் ஆய்வறிக்கைகள் 1968, 1986, 1992 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இன்றுவரை ஆட்சியாளர்களால் குப்பைத்தொட்டியில் போடப்பட்ட கல்வி அறிக்கைகளாகவே உள்ளன.

நாட்டில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இழைக்கப்படும் துரோகம் என்றே இதை அனைவரும் கருதவேண்டும். இந்த அவல நிலையை மாற்றுவதற்கு காமராசரைப் போல ஒரு தலைவர் வாய்க்கவேண்டும். தமிழ்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த குழந்தைகளின் கல்வி நலன் காமராசராசரைப் போல மீண்டும் ஒரு தலைவர் உருவாவதில் தான் இருக்கிறது. அதனால் தான் நாம் காமராசர் யார் என்று தேடுகின்றோம்.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.

Pin It