சாலையோரத்தில் மூளை சிதறி செத்துக் கிடப்பவனை சர்வசாதாரணமாக கடந்து செல்லும் மன நிலையுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் கடந்து சென்று விட்டோம்.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஊடகங்களுக்குத் தீனியிட்ட இப்பிரச்சனை சமீபத்தில் தான் ஏற்பட்டதா? அடுத்த தமிழக முதல்வர் என பாட்டாளி மக்கள் கட்சியால் சொல்லப்படும் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தொகுதி தர்மபுரி. மத்திய ஆட்சியில் ஐந்து ஆண்டு காலம் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த தொகுதியில் ஏன் இவ்வளவு குழந்தைகள் இறந்தன என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றது.

தர்மபுரி மாவட்டதில் மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும், இரண்டு வருவாய்க் கோட்டங்களும், ஐந்து வட்டங்களும், ஒரு நகராட்சியும், எட்டு ஊராட்சி ஒன்றியங்களும், பத்து பேரூராட்சிகளும் உள்ளன.

குழந்தைத் திருமணங்கள்

infantsஇந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் குறைவு என எண்ணத்தை நொறுக்கிப் போட தர்மபுரி சம்பவத்திற்கு முன், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு வங்கம் கொல்கத்தா பி.சி.ராய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 36 மணி நேரத்தில் 42 குழந்தைகள் இறந்தன. அதே போன்று 3 நாட்களுக்குள் 13 குழந்தைகள் தர்மபுரியில் இறந்திருக்கின்றன.

தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகள், இளம்வயது திருமணங்கள் அதிகமாக நடக்கும் தர்மபுரி மாவட்டத்தில், எடை குறைவாக குழந்தைகள் பிறந்தது தான் காரணம் என அரசு தரப்பில் சொல்லப்பட்டது. அரசு மருத்துவமனைகளின் கணக்கெடுப்பின்படி சேலம் மாவட்டத்தில் 5.6 சதவீத குழந்தைகளும், தர்மபுரி மாவட்டத்தில் 10.8 சதவீத குழந்தைகளும், நாமக்கல் மாவட்டத்தில் 4.3 சதவீத குழந்தைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 சதவீத குழந்தைகளும் குறைப்பிரசவத்தில் இறப்பைத் தழுவுகின்றன என்று கூறப்படுகிறது. இறந்த குழந்தைகளின் தாய்களின் வயது 18 வயதைத் தாண்டாதவர்கள் அதிகம் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

கர்ப்பிணிகள் கண்காணிப்பு

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களும் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

18வயது முடிந்த பின்னரே பெண்களுக்கு திருமணம் செய்யவேண்டும் என்பதற்கு உடல்ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் உள்ளன. 18 வயது நிறைவடைந்த பின்னரே ஒரு பெண்ணின் உடல் தாய்மை அடைய தகுதி பெறுகிறது. இந்த வயதை எட்டும் முன்பு இனவிருத்திக்கான உறுப்புகள், தேவையான அளவுக்கு வளர்ச்சியடையாமல் இருக்கின்றன. இதனால் அவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைகிறது. அப்படியே கர்ப்பம் தரித்தாலும் குழந்தை ஊனமாகவோ அல்லது குறைப் பிரசவத்தில் குறைந்த எடையுடனோ பிறக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் மையத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது. மேலும் பேறு காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவும், தகுந்த மருத்துவ கண்காணிப்பும் அவசியம். அதைக் கருத்தில் கொண்டு தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு பேறுகால நிதியுதவித் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணிக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் தலா 6 மாதம் பிரித்து இத்தொகை ரூ.ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இந்த நிதியை கொடுப்பதே கர்ப்பிணிகள் உடல் நல பராமரிப்புக்குத் தான். அதேபோல் கர்ப்பிணிகளின் எடையை மாதம் தோறும் கண்காணித்து ஆலோசனை வழங்க வேண்டியது ஆரம்ப சுகாதார நிலைய கிராம செவிலியர்களின் பொறுப்பு.

தர்மபுரி மாவட்டத்தில் 48 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 218 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. இவற்றில் 213 கிராம சுகாதார செவிலியர்களும், 48 துணை செவிலியர்களும் உள்ளனர். கிராம சுகாதார செவிலியர் பணியிடம் 5 காலியாக உள்ளது. சமீபகாலமாக சுகாதார செவிலியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மலைக்கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ளும் விழிப்புணர்வும் இல்லை என பெண்கள் நல அமைப்பினர் கூறுகின்றனர்.

கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணித்து, அவர்களுக்கு ஊட்டச்சத்துணவு கொடுப்பதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது தவிர பெண்கள் கர்ப்பமடைந்த மூன்று மாதங்களுக்குப் பின் அவர்களுக்கு தடுப்பூசி போடுவது, சத்து உருண்டை தருவது, மாத்திரை வழங்குவது, தடுப்பூசி போடுவது என கிராமசெவிலியர்கள் வசம் அப்பெண், குழந்தை பெறும் வரை பராமரிக்கப்படுவார். அப்படியான நிகழ்வுகள் தர்மபுரியில் நடந்ததா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

குறையும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை

தர்மபுரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை இறப்பு விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்றே புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2011 ஆம் ஆண்டு தர்மபுரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 923. இதில் ஆண் குழந்தைகள் 13 ஆயிரத்து 452, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 471. பிறப்பிலேயே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை தர்மபுரியில் காண முடியும். இதில் பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் என எடுத்துக் கொண்டால், 381 பேர் இறந்துள்ளனர். பிறந்து சில மணிநேரங்களிலேயே 120 குழந்தைகள் இறந்துள்ளன. ஆறு மாதத்திற்குள் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை என்பது 663.

இதே போல 2012 ஆம் ஆண்டு தர்மபுரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 799. இதில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 324. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 475. பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 271. பிறந்து சில மணிநேரங்களிலேயே 73 குழந்தைகள் இறந்துள்ளன. ஆறு மாதத்திற்குள் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை என்பது 554. 2013 ஆம் ஆண்டு தர்மபுரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த மொத்தக் குழந்தைகளின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 583. இதில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 128. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 455. பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 302. பிறந்து சில மணிநேரங்களிலேயே 105 குழந்தைகள் இறந்துள்ளன. ஆறு மாதத்திற்குள் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை என்பது 480.

மூன்றாண்டுகளில் தர்மபுரியில் குழந்தைகள் இறப்பு குறித்து எஸ்ஐஆர்டி நிறுவனத்தைச் சேர்ந்த பவளம் கூறுகையில், கர்ப்பிணி பெண்களைக் கண்காணிக்க வேண்டிய ஆரம்ப சுகாதார ஊழியர்களின் செயல்பாடு குறித்து முதலில் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. 3 மாதத்தில் இருந்து கர்ப்பிணிகளைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இவர்களுடையது தான். இவ்வளவு குழந்தைகள் மரணம் நிகழ்ந்தது என்றால், தாயின் உடல்நலம், சிசுவின் நிலை குறித்து என்ன கண்காணிப்பு செய்தார்கள்? ஆயிரம் குழந்தைகளின் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 952 இருக்க வேண்டும். ஆனால், தர்மபுரியில் 2011ல் 927 என இருந்த பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 2012ல் 861, 2013ல் 873 என உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு தர்மபுரியில் பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை 913 ஆக இருந்தது. ஆனால், படிப்படியாக அது குறைந்து வருவது சமூகத்திற்கு நல்லதல்ல என்றார்.

சத்துணவு பற்றாக்குறை

இப்படிப்பட்ட பிரச்சனைகள் உள்ள சூழலில், "குழந்தைகள் மரணத்திற்குக் காரணம் மதுவுக்கு அடிமையாக உள்ள இளைஞர்களே" என தர்மபுரியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மருத்துவக் கல்வி இயக்குநரக இயக்குநர் கீதாலட்சுமி, "பச்சிளம் குழந்தைகள் வார்டுக்கு அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கூடுதல் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். இனிமேல் இறப்பு ஏற்படுவது முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இறந்த குழந்தைகளின் மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்து இறப்புக்கான காரணத்தை கண்டறிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 42 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சரியான உணவு கிடைக்காமல் வறுமையில் வாடும் குழந்தைகள், பலவிதமான ஊடச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்களுக்கு ஆட்பட்டு மரணிக்கிறார்கள். உலகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் 3 குழந்தைகளில் 1 குழந்தை இந்தியக் குழந்தையாகும்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து போகிறது என்பது பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள், அங்கன்வாடிகள் போன்றவைகள் முழுமையாக செயல்பட வேண்டிய அவசியத்தை தர்மபுரி சம்பவம் எடுத்துரைக்கிறது.

Pin It