சென்னை, மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கான விக்டோரியா விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த காலம் (1970-1972); இப்பொழுது திரும்பிப் பார்க்கும் போது பெரிதும் கனமான காலமாகத் தோன்றுகிறது; கல்லூரி வகுப்பறை கற்றுக் கொடுத்ததைவிட, இந்த விடுதி வாழ்க்கை கற்றுக் கொடுத்தது ஏராளம்; தாய் தந்தையரின் கண்காணிப்பில் வீட்டிலிருந்தபடியே கல்லூரியில் படிக்கின்ற குமரர்களுக்கு ஒரு ஐயோ…! போடலாம். அதுவும் சென்னை விக்டோரியா விடுதியைச் சும்மா சொல்லக் கூடாது; 250 பேர்தான் அதன் கொள்ளளவு என்றால், ஏறத்தாழ 450 பேர் தங்கியிருப்பார்கள்; ஒவ்வொருத்தர் அறையிலும் விருந்தினர்கள் என்று தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து யார் யாரோ தங்கியிருப்பார்கள்; யார் எப்பொழுது வருகிறார்கள்? யார் எப்பொழுது போகிறார்கள்? என்கிற ஒரு கணக்கு வழக்கும் கிடையாது; பக்கத்தில்தான் விடுதிக் காப்பாளரின் ‘அரண்மனை’! ஒருநாள்கூட அவர் திருவடிகளை எங்கள் விடுதி முற்றம் தரிசிக்க வாய்ப்பு கிடைத்ததில்லை; அப்படிப்பட்ட ஒருவர் ஒருநாள் எங்கள் விடுதிக்குள் வந்தார் என்றால் சும்மா வருவாரா? ஒரே அடிதடி! எங்கும் மனித இரத்தங்கள்!

                father and sonஇரண்டு கோஷ்டியினர் மோதிக் கொண்டனர்; தேர்தல் என்றால் அடிதடி இல்லாவிட்டால் அது என்ன ஜனநாயகம்? விடுதிக்கான செயலாளர் தேர்தல்; மதுரைப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர்; தஞ்சாவூர் கீழவெண்மணிக்காரர் ஒருவர்; இருவருக்கும் கடும் போட்டி; எப்படியோ கீழவெண்மணிக்காரர் ஜெயித்துவிட்டார்; மதுரைக்காரரால் தாங்க முடியுமா? கையில் சைக்கிள் ஜையினை எடுத்துக் கொண்டார்; அவருக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்களென்று அவர் யார் யாரைக் கருதுகிறாரோ அவர்களை எல்லாம் அறை புகுந்து வெளியே இழுத்துப் போட்டு ஓட ஓட அடிக்கத் தொடங்கி விட்டார்; மனிதர் 6½ அடி இருப்பார்; நனைந்த பனைமாதிரி கருப்பு; ‘கையாளுகள்’ சூழத்தான் எப்பொழுதும் வலம் வருவார்! சென்னைக்குப் படிக்க வந்ததே இப்படித் தேர்தலில் நின்று பழகி, பெரிய பெரிய தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, அதன் மூலம் போலீஸ் துறையில் பெரிய அதிகாரியாக ஆவதற்குத்தானாம்; (அப்படியேதான் பின்னால் ஆனார்) பெரிய வேடிக்கை என்னவென்றால் அவர் எங்கள் வகுப்புத் தோழர்; ஆனால் ஒருநாள் கூட அவர் வகுப்பில் இருந்ததாகச் சரித்திரம் இல்லை; வகுப்பு தொடங்கியவுடன் வெளியேறி விடுவார்; அவர் சார்ந்த ஆளுங்கட்சித் தலைவர்களின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் சென்று வருவதுதான் அவரது கல்வியாக இருந்தது; இப்பொழுது இடித்துக் கொண்டிருக்கிறார்களே அந்தப் பலமாடிச் சட்டமன்ற உறுப்பினர் விடுதியை அப்பொழுதுதான் கட்டி முடித்திருந்தார்கள்; அதன் ஒவ்வொரு படியும் இவரை அறியும். (கட்டி 40 வருடம் கூட ஆகவில்லை; இடிக்கிறார்கள்; வெள்ளைக்காரன், எங்கள் விடுதி உட்பட கட்டிய கட்டிடங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. நாம் உருப்படுவோமா?) அத்தகைய ஒருவரை எளிய வெள்ளைச் சட்டை மட்டுமே போடத் தெரிந்த ஒருவர் தோற்கடித்து விட்டார் என்றால் அவரால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? அடித்து நொறுக்கினார்; இரண்டாவது மாடியிலிருந்து குதித்து ஒடினவர்கள் ஏராளம்; கால், கை ஒடிந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர்கள் கணக்கில்லை; அன்றைய இரவு அந்த விடுதியில் தங்கியிருந்தவர்கள் நானும் அவருடைய கையாளுகளும்தான்; என் வகுப்புத் தோழர்; தம்பி! என்று என்னை அன்பாக அழைப்பார்; எனவே என்னை அடிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நான் வெளியேறவில்லை; மாணவர்கள் பலரையும் அன்றைக்கு அந்த மெரினாக் கடற்கரையின் குளிர் அலைகள்தான் மணல் மெத்தையில் தூங்க வைத்தன. (அன்றைக்கெல்லாம் இவ்வளவு போலீஸ் கெடுபிடி கிடையாது; நினைத்துப் பார்த்தால் இந்த 40 ஆண்டுகளுக்குள் போலீஸ்காரர்களின் அடாவடித்தனமான அதிகாரம் அளவிட முடியாத அளவிற்குக் கூடியிருக்கிறது) அத்தகைய ஒரு சூழலில்தான் விடுதிக் காப்பாளர் எங்கள் விடுதிக்குள் வர நேர்ந்தது; இப்படி அவர் விடுதிக்குள் நுழைந்தே ஆண்டுக்கணக்காக இருக்குமென்று பேசிக் கொண்டார்கள்; ஆனால் அவர் வந்து விசாரித்தும் ஒன்றும் நடக்கவில்லை; யார் மேலேயும் நடவடிக்கை இல்லை; ஒரு வாரத்திற்குள் விடுதி மாமூல் வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது.

                ஒரு இரண்டு மாதம் கழிந்திருக்கும்; ஒருநாள்,‘மாபெரும்’ அடிதடித் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய அந்த வெண்மணிக்காரர் அறைக்கு மாணவர்கள் பலரும் போய்விட்டு, சோகமான ஒரு முகபாவத்தோடு திரும்பி வந்தார்கள்; விசாரித்த போது தெரிந்தது ஊரில் ‘அவங்க அப்பா’ இறந்து விட்டாராம். எப்படி இறந்தார் என்று தெரிய வந்தபோது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது; அவங்க வீட்டுக் கூரையில், அவரிடம் இருந்த ஒரே வேட்டியில் ‘தூக்குப் போட்டு’க் கொண்டாராம்; அப்படித் தன்னைக் கொலை செய்து கொள்ளுகிற அளவிற்கு என்ன பெரிய துன்பம்? அதைக் கேள்விபட்ட போது அது எனக்குள் பெரிய இடிபோல இறங்கி என்னை ஒரு கணம் மூச்சுவிடக்கூட முடியாதபடி செய்துவிட்டது; மாணவப் பருவத்தில் என்னைப் பெரிதும் தாக்கிய நிகழ்வு அது.

                நான் தந்தை முகம் தெரியாமல் வளர்ந்த பிள்ளை; எங்கள் அம்மா பதினொரு பிள்ளைகள் பெற்றார்களாம்; நாங்கள் ஐந்துபேர்தான் மிஞ்சினோம்; பிறந்து வளர்ந்து ஓடியாடும் பருவத்தில் காலரா, அம்மையென்று கொள்ளை நோய்கள் வந்து கொண்டு போய்விடுமாம்; எங்கள் தந்தைக்கு சாமியாடிகள் முன்பும் கோயிற் சிலைகள் முன்பும் விழுந்து விழுந்து வணங்கி முழங்காலில் புண்ணே வந்துவிடுமாம்; அப்படிப்படாதபாடு பட்ட பிறகு ஐந்தாவது பிள்ளையாக வந்த எங்கள் மூத்த அக்காதான் சாகாமல் பிழைத்ததாம்; அக்காவைத் தொடர்ந்து நான்கு பேர் சாகவில்லை; நான்தான் ஐந்தாவது ஆள்; எனக்குப் பிறகு இரண்டு பேர் பிறந்து இறந்து விட்டார்களாம்; அதைத் தொடர்ந்து எங்கள் தந்தையும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார்; முகம் வீங்கி இறந்ததாக அம்மா சொல்வார்கள்.

                 ‘அந்தக் காலத்திலேயே மதுரை வரைக்கும் கொண்டு போய்ப்

                 பார்த்தோம்! பாழாய்ப் போன குடிகார மனுஷன் பச்சப்

                 பிள்ளைகள ஏந்தலையில கெட்டிட்டுப் போய்ச் சேந்திட்டாரு’

இந்த வசனத்தை அம்மா அடிக்கடிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்; இதைச் சொல்லும் போது ஒரு தடவை கூட அழாமல் சொன்னதில்லை; மற்றொன்றும் சொல்வார்கள்;

                இன்றைக்கு நான் அதை என் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; என் தகப்பனார் காட்டில் வேலை செய்து விட்டு வரும்போது பெரும்பாலும் ‘பனங்கள் பருகி’விட்டுத்தான் வருவாராம்; வந்தவுடன் ‘கும்பா-வில்’ சாப்பிடும் போது, பக்கத்தில் வரும் நடை பயிலும் பிள்ளைகள் கும்பாவிலேயே “ஒன்னுக்கு” இருந்துவிடுமாம்; ‘அமிர்தம் பெய்கிறாய் மகனே’ என்று கொஞ்சிக் கொண்டு அந்த உணவை ஒதுக்காமல் சாப்பிட்டு எழுந்து விடுவாராம். அத்தகைய மனுஷன், பிள்ளைகள் வளர்ந்து வாழ்வதைப் பார்க்காமல் போய்விட்டாரே! என்பது அம்மாவின் குறை. ஊர் முழுக்க, ‘உங்க ஐயாவா! தங்கமான மனுஷனாச்சே’ என்று சொல்லத்தான் கேட்டிருக்கிறேன்; அப்படிப்பட்ட தந்தைவுடனான அனுபவம் இந்த வாழ்க்கையில் இல்லாமலேயே போய்விட்டது என்கிற இல்லாமை உணர்வு எனக்குள் ஆழமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. எனவே தந்தையைக் குறித்து யார் பேசினாலும் மிக எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன்; புறநானூற்றில் தந்தையை இழந்து அனாதைகளாக நிற்கும் பாரிமகளிர் பாடுகின்ற அந்தப் பாட்டு என்னை எத்தனை தடவை அழ வைத்திருக்கிறது என்று அளவிட்டுவிட முடியாது.

                                                அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

                                                எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்

                                                இன்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

                                                வென்றெறி முரசின் வேந்தரெம்

                                                குன்றும் கொண்டார்; யாம்எந் தையுமிலமே!

                ‘எந்தையும் இலமே’ என்று மதுரை தியாகராசர் கல்லூரியில் எங்கள் பேராசிரியர் சங்கர நாராயணன் இசையோடு பாடி முடிக்கும் போது வகுப்பிலேயே ஏங்கி ஏங்கி அழுதிருக்கிறேன்.

                ஊரைவிட்டுப் பிரிந்து, விடுதியில் வந்து சேர்ந்து படிக்கத் தொடங்கிய அந்தப் பருவ காலங்களில் இந்தப் பாடலைப் படிக்கும் போதெல்லாம் என் கண்கள் நனைந்துவிடும். தந்தையை இழந்தவர்களோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் ஓர் அமைதி கிடைக்கிறது; அந்தப் பாரிமகளிர் என் உடன்பிறப்புக்களாகவே எனக்குத் தோன்றும்; (இவ்வாறு என் உணர்வுகளோடு கலந்து கிடக்கும் அந்தப் பிள்ளைகளை வெறும் சிரிப்பு காட்டுவதற்காகத் திரைப்படத்தில் ஒரு இயக்குநர் பயன்படுத்தியதைக் கண்டுப் பெரிதும் கலங்கிப் போனேன் நான்; நமது திரைப்பட உலகத்தில் நடமாடுகிற மனிதர்கள் எந்த அளவிற்கு நுண்ணுணர்வு அற்ற ஜடங்களாகிப் போனார்கள் என்பதற்கு அந்தக் காட்சிகள் சான்று)

இவ்வாறு தந்தை என்கிற அனுபவப்படாத உலகம் குறித்து எனக்குள் நிறைய பிரமைகள் வந்து குவிந்து கிடந்த ஒரு காலகட்டத்தில்தான் எங்கள் விடுதியின் செயலாளர், அந்தக் கீழவெண்மணிக்காரரின் தந்தை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இவ்வாறு சொல்லப்பட்டது:

அவருடைய தந்தை தன் ஒரே மகனை ‘கொள்ளை நாளாகப் பார்க்கவில்லையே’ என்ற ஏக்கத்தில் கையில் ஒரு மஞ்சள் பையோடு கிளம்பி வந்துவிட்டார்; கிராமத்து ஆள்; எப்படியோ விசாரித்து எங்கள் விடுதிக்கும் வந்துவிட்டார்; வந்து பெயரைச் சொல்லியிருக்கிறார்; பேர்தான் பிரபலமான ஒன்றாயிற்றே! உடனே அவரை சில மாணவ நண்பர்கள் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்; ஆளைப் பார்த்தவுடனேயே அவருடைய அப்பாவாகத்தான் இருக்கும் என்று மரியாதையுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்; அறையில் அந்தத் தஞ்சாவூர்க்காரர் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்; கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்; பார்த்தவுடன் சந்தோசப்படுவதற்குப் பதிலாக முகம் பேயறைந்தது மாதிரிப் போய்விட்டதாம்; பிறகு சமாளித்துக் கொண்டு ‘உள்ளே வா!’ என்று ஒருமையில் வேலைக்காரனை அழைக்கும் தோரணையில் அழைத்திருக்கிறார்; அறையைக் காட்ட வந்தவர்களிடம்,

                எங்கப் பண்ணையில வேலை பார்க்கிறவன்

                அப்பா அனுப்பி வைத்திருக்கிறார்

என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்; இப்பொழுது தந்தையின் முகம் பேயறைந்தது மாதிரி ஆகிவிட்டது. மாணவர்கள் போன பிறகு,

                                ஏன் இங்க இல்லாம் வந்து கழுத்த அறுக்கிற?

                                உன்ன யாரு இங்க வரச் சொன்னா?

                                பாக்கணும் போல இருந்தா கடுதாசி எழுத

                                வேண்டியதுதான் நான் புறப்பட்டு வந்திருப்பேன்ல்ல

இப்படியெல்லாம் திட்டியிருக்கிறார்; பக்கத்து அறை மாணவர்கள் காதில் விழுந்திருக்கிறது; அவர் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாராம்! உடனே புறப்படச் சொல்லி, எக்மோர் அழைத்துச் சென்று இரயில் பெட்டிக்குள் தள்ளிவிட்டுத்தான் வேறு வேலை பார்த்திருக்கிறார்; இப்படிப் போனவர்தான் தூக்கில் தொங்கியிருக்கிறார்.

                ஏற்கனவே நான் நான்கு ஆண்டுகள் மதுரையில் விடுதி வாழ்க்கை வாழ்ந்தவன்தான்; ஒவ்வொரு விடுதியிலும் இப்படிப் பல கதைகள் நிலவும்; கிராமத்து ஏழைச்சாதி மாணவர்கள், முதல் தலைமுறையாகப் படித்து முன்னேறி வரும்போது பகட்டான நகர வாழ்வை எதிர் கொள்ளுகிற தாழ்வு மனச்சிக்கலின் ஒரு வெளிப்பாடாக இந்தக் கதைகளை எல்லாம் கதையென்றே நம்பி வந்திருக்கிறேன்; ஆனால் இப்பொழுது நேராகவே அந்தக் கதை உண்மைதான் என்று அறிய நேர்ந்த போது தந்தையுடனான உறவு குறித்துப் பெரிதும் பிரமை கொண்ட நான் ஆடிவிட்டேன். பிறகு அந்தத் தஞ்சாவூர்க்காரரோடு என்னால் முகம் கொடுத்துப் பேசவேமுடியவில்லை; படித்து முடித்து வெளியே வரும்வரை அவரோடு நான் பேசவே இல்லை; அதற்குப் பிறகும் இதுவரை அவரை எனக்குப் பார்க்க வாய்க்கவில்லை.

                பொதுவாகவே நமது சமூக வாழ்வில்-குடும்ப உறவில்-அப்பாமார்கள் மிகவும் பரிதாபகரமானவர்களாகவே எனக்குப்படுகிறது; பெரும்பாலான அம்மாமார்கள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்காக அப்பாவை அதிகாரம்மிக்க ஓர் ஆளாகப் புனைந்து வைத்திருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. வளர்ந்து பெரியவர்களான பிறகு பிள்ளைகளை அம்மாமார்கள் கைப்பற்றிக் கொள்ளுகிறார்கள்; அப்பாவிற்கு எதிராக நிறுத்தி விடுகிறார்கள்; அம்மாவைக் கொண்டாடுகிற அளவிற்கு அப்பாவைக் கொண்டாடுகிறோமா? நமது இலக்கியங்களிலும்கூட ‘அப்பாவிற்கு’ அம்மா அளவிற்கு இடம் கிடையாது; அப்படியே எங்காவது வந்தாலும் அதிகாரம் செலுத்துகிற ஒருவராகத்தான் பெரும்பாலும் காட்டப்படுகிறார். கவிஞர் ஞானக்கூத்தன் சித்திரிப்பதைப் பாருங்கள்:-

                                                மூன்றாம் பிறையைத் தாடியாய்ப்

                                                பொருத்திய சிவனைப் போல்

                                                அப்பா தெரிந்தார்.

‘சுதேசமித்திரன்’ என்று ஒரு நண்பர். கோயம்புத்தூர்க்காரர்; மிகவும் ஆர்வமுள்ள துடிப்புள்ள இளைஞர்; ‘அப்பா’ என்ற தலைப்பில் ஒரு புதுக்கவிதைத் தொகுப்பு கொண்டு வந்துள்ளார். 50 கவிதைகள்! முழுவதும் அப்பாவைப் பற்றி. அந்தக் கவிதைகளிலும் அம்மாவின் ஆக்ரமிப்பிற்குள் சிக்கிய ஒரு மகனின் பார்வையில்தான் அப்பா வெளிப்படுகிறார்; அம்மாவை நினைத்தவுடன் உருவாகுமே அன்பு, இரக்கம், கருணை, பாசம், தியாகம் என்கிற உணர்வுகள், அத்தகைய உணர்வுகள் ‘அப்பா’ குறித்து ஏன் வெளிப்படவில்லை? பாவம்! அப்பாமார்கள்! சுதேசிமித்திரன் கவிதைகளிலிருந்து ஒன்று:-

அப்பாவின் ஈகோ

-------------------------

                அப்பா தன் ஈகோ இருளில் எப்போதோ தொலைந்து போயிருந்தார்

                                                                                                                                                அப்படி

                அப்பா மட்டும் ஒரு அந்தகாரக் குருடராய் வாழ்ந்துவந்தார் என்பது

                                                                                                அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது.

                                                                                                                                அப்படியாய்

                அப்பாவின் கண்களுக்கு இருளோடு ரொம்பவும் ஸ்நேகமாயிற்று.

                                அப்பா இருட்டுத்தான் நிஜம் என்று இப்போது

                ஒரு பிரபஞ்சக் கொள்கையைக் கைக் கொண்டிருக்கிறார்…

இப்படிப் போகிறது அவரது கவிதை. மீண்டும் ஒருமுறை; பாவம்! அப்பாமார்கள்!

சமீபத்தில் கவிஞர் மீராவின் மகள் கண்மணி தன் அப்பாவைக் குறித்து ஒரு கவிதை நூல் கொண்டு வந்துள்ளார். அப்பாவைப் போற்றும் அந்தக் கவிதைகளை வாசிக்கும்போது ஆறுதலாக இருந்தது.

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8

Pin It