மொழி ஒரு மனிதனின் அடையாளம். அதுவும் குறிப்பாக தமிழனுக்கு அது அடையாளத்தையும் தாண்டிய ஒரு விடயம். ஆம்.! அதனால்தான் இந்தியாவின் எந்தவொரு மாநிலமும் செய்யத் துணியாத வகையில் ஹிந்தியைத் தூக்கி எரிந்தோம். இன்று வரையில் இந்தியை முற்றிலும் புறக்கணிக்கும் ஒரே இந்திய மாநிலம் "தமிழ்நாடு" தான்.

மெல்லத் தமிழினிச் சாகும் என்று சொன்னானே பாரதி..... அதைப் பொய்பித்த பெருமைக்குச் சொந்தக்காரர் அறிஞர் அண்ணா. வான் புகழ் வள்ளுவம் உலகெலாம் மொழிபெயர்த்து உணர்வூட்டித் திளைத்தது திராவிட இயக்கம். உண்டு களித்து உறங்கித் திரிவதா உன் வாழ்க்கை? உழையடா தமிழுக்கு... என்று அனுதினமும் பேசிப்பேசியே வளர்ந்த இயக்கம் தி.மு.க.

அறிஞர் அண்ணா நாடாளுமன்றில் ஒரு முறை சொன்னார்.

ஒரே நாய்க்கூண்டில் பெரிய நாய் போகவும், சின்ன நாய் போகவும் எவனாவது வாசல் வைப்பானா? பெரிய நாய் போகும் வழியிலேயே சின்ன நாயும் போகாதா? என்று உலகோடு பேச ஆங்கிலமும் வேண்டும், ஊருக்குள் பேச ஹிந்தியும் வேண்டும் என்று சொன்ன வடநாட்டு மேதாவிகளின் வாயை அடைத்தார்......

தமிழ் வளர்ந்தது. தமிழ்நாட்டு அளவிலாவது தனியிடம் பிடித்தது... அவ்வளவு ஏன் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயரும் கிடைத்தது.... பிறகு வந்த ஆட்சியாளர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள்....?? என்ன தான் செய்து கிழித்தார்கள்??? தமிழை வாழவைத்தார்களா?

மலேயாக்காரர்கள் ஊரெங்கும் தமிழ்ப்பள்ளி தொடங்கி தம் சந்ததிக்கும் தமிழ் சொல்லிக்கொடுத்தார்கள். ஈழத்துக்க்காரர்கள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கி இன்றளவும் குன்றாத சிறப்பினைத் தமிழுக்குச் சேர்ப்பித்து வருகிறார்கள்.... தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன செய்தோம்? ஆறு கோடித் தமிழர்கள் என்ன செய்து கிழித்தோம்? ஊரெங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளைத் திறந்தோம்... ஆங்கிலம் என்பது அறிவல்ல வெறும் மொழியென்பதையே மறந்தோம்....... மழையே பெய்யாத வறட்டுக் கழனிகளில் கூட "ரெயின் ரெயின் கோ அவே" என்று பாடித் திரிகின்ற வரலாறு படைத்தோம்.

அட உலகம் முழுமையும் ஒப்புமையற்ற நாடுகளாகத் தெரியும் அனைத்து நாடுகளும் தாய் மொழி வழிக் கல்வியையே நாடுகின்றன என்ற அடிப்படை கூட தெரியாத செம்மறியாடுகளோனோம். எவனோ ஒருசிலர் ஆங்கிலம் பேசித் திரிவதால் போகும் வழி தெரியாமல் முன் செல்லும் ஆட்டைத் தொடரும் செம்மறிக்கூட்டங்களானோம்... படிப்பில் மட்டுமா நாம் செம்மறியாடுகள்?

சீனாவில் தொழில் தொடங்கப் போக சீனத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் வெளியார்கள்........ ஆனால் வெளிநாட்டுக்காரன் நம்மூரில் தொழில் தொடங்க ஆங்கிலம் கற்றுக் கொண்டிருக்கிறோம் நாம்...

உலகின் எத்துனை மொழிகளை எவன் கற்றறிந்திருந்தாலும், தத்தமது தாய்மொழியிலேயே சிந்திப்பான் என்பதையே மனவியலாளர்கள் எடுத்துரைக்கிறார்கள்....... ஆனால் நாமோ " பாப்பா...மாமாக்கு ரைம் சொல்லு...பாக்கலாம் " என்று ஆங்கிலப்பாடலை ஒப்பிவிக்கச் சொல்லி குழந்தையின் திறமையை கூர்தீட்டிப் பார்க்கிறோம்....

இப்படி, தமிழையே நாம் கொண்டாடுவதில்லை......... தமிழையே நாம் மதிப்பதில்லை...... தமிழ்பேசுபவனை இனத்தானாக மதிப்பதுவும் இல்லை.... மதித்திருந்தால், இந்திய நடுவண் அரசு இராஜபக்சேவுக்கு சாமரம் வீசிய போது இந்திய தேசியத்தை மிதித்திருப்போம் அல்லவா? செய்யவில்லையே.........அப்படித் தமிழ் பேசுபவனுக்காக குரலேதும் கொடுப்பதுவுமில்லை...

தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை..... பெயரில் மட்டும் தானே தமிழ் இருக்கிறது...

"இன்னாமே...??? நாஸ்டா துன்னுக்கினியா?" இதையெல்லாம் எந்த மொழிக் கணக்கில் சேர்த்துவது?

இப்படித் தமிழைத் தமிழாகவும் பேசுவோமில்லை நாம்..... ஆனாலும், ஐந்தாம் வகுப்பில் அடிக்கடி படித்த " கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே" என்ற பழைய ரெக்கார்டைப் போட்டுப் பார்த்து பரவசப் பட்டுக்கொள்வோம் நாம்....! அட....... வெறும் ஏழே சத தமிழர்கள் இருக்கிறார்கள் சிங்கப்பூரில்... அங்கே விமான நிலையம் முதற்கொண்டு தமிழ் இருக்கிறது.....!

இங்கோ தமிழ்நாட்டுப் பரப்பில் நாம் தான் பெரும்பான்மை.... ஆனால் தமிழோ சிறுபான்மை.... இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்வது??? இது போன்ற செம்மறியாட்டுக் கூட்டங்களுக்கு தமிழ் மாநாடு என்று ஒன்று நடந்தால் அங்கு போகவே தகுதியில்லை......... ஆனால் இச்செம்மறியாடுகள் செம்மொழி மாநாடு நடத்துகின்றனவாம்...! அதுவும் எப்போது? வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் வன்னிப் பெருநிலத்தில் தமிழ் பேசும் சொந்தங்கள் நடைப்பிணங்களாய்த் திரியும்போது...!

முகாம்களிலிருந்து வெளிவந்து நடுத் தெருவில் நாதியற்ற பிறவிகளாய் தமிழர்கள் திகைத்திருக்கும்போது.....!

தமிழ் பேசுகின்ற ஒரே காரணத்திற்காக இளைஞர்களின் பட்டாளம் அணியணியாய்க் காணாமல் போகின்ற போது.....!

ஊருக்குள்ளே இழவு வீடு ஒன்று இருப்பது இயல்புதான்..... ஈழத்தில் இழவு விழாத வீடாக ஏதேனும் இருக்குமா? அப்படி இழவு விழுந்த ஒரு இனத்தின் பங்காளிகளாகிய நாம் பல கோடி செலவில் மேடை போட்டு தமிழை வளர்க்கப் போகிறோமாம்..........

இழவுக்கும் மரியாதையில்லை...இழப்புக்கும் மரியாதையில்லை....அட தமிழன்னைக்குமா?

இனிமேலும் இலங்கைத் தீவில் வாழவியலாது என்று ஆஸ்திரேலியா போன அகதிகள் இந்தோனேசியாவில் நூறு நாட்களுக்கும் மேலாக படகினில் வாழ்ந்து தவிக்கின்ற கதை தெரியுமா உங்களுக்கு? செம்மொழி மாநாட்டுப் பெருந்தகைகளே அவர்களும் தமிழ் பேசுபவர்கள் தான் என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு?

தமிழ் பேசுவதால் தான் நாடின்றி, நிலமின்றி, போக்கிடமின்றி, பிழைப்பின்றி, உணவின்றி சாகக் கிடக்கிறார்கள் அவர்கள் என்ற உண்மையாவது தெரியுமா உங்களுக்கு? இப்படி தமிழைப் பேசுபவன் பரதேசியாய்ப் பஞ்சம் பிழைக்க உலகெங்கும் சுற்றித் திரிகையில் தமிழுக்கு விழா எடுக்கும் செம்மொழி மாநாட்டுச் செம்மறியாடுகளே நீங்களும் நீரோ மன்னனும் ஒன்றுதானே?

தான் அரசாண்ட ரோம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் என்ற கதையினை வெகு பலரும் சொல்வதுண்டு...அதை நேரில் பார்க்கும்படியான துர்ப்பாக்கியமொன்று எமக்கு வாய்த்ததை என்ன சொல்லி நொந்து கொள்ள?

தமிழ், தமிழ், தமிழ், என்று சொல்லி வயிறு வளர்த்த கூட்டமொன்று, இன்று தமிழினம் அழிகையிலும், தமிழின் பெயரால் அதைச் சரிக்கட்ட பார்க்கிறதே...... இந்த விதியை நாம் எங்கு போய் சொல்லி அழ? செம்மொழி மாநாட்டினைக் கொண்டாடத் துடித்திடும் செம்மறியாட்டுக்கூட்டங்களே....

எங்களின் உணர்வு நெருப்பில் நீங்கள் பொசுங்கப் போவது உண்மையெனினும், உங்களின் நாடகத்தீயில் வெந்து தணிவது எங்கள் சொந்தங்களின் இதயமல்லவா? அதனால் கொஞ்சம் கருணை காட்டுங்கள்..!

நீங்கள் தான் அரசியல் தேர்தலில் பிழைத்துப் போயாற்றே....... இனியேனும் கொஞ்சமாவது தமிழர்கள் மேல் இரக்கம் காட்டுங்கள்.... எரிந்து கொண்டிருக்கும் இதயப் புண்களை குத்திக்கிளறாதீர்கள்...........

பிழைத்துப் போகிறோம் எங்கள் சொந்தங்கள்...!

- மதிபாலா

Pin It