கூடங்குளம் அணுமின் திட்டத்தின் சில உயர் அதிகாரிகளும், காவல்துறை மற்றும் உளவுத் துறைகளைச் சார்ந்த சில அதிகாரிகளும் சேர்ந்து ஒரு மாபெரும் ஊழல் செய்திருப்பதாகத் தெரிகிறது. நேற்று (ஆகஸ்ட் 23, 2013) அஞ்சுகிராமம், கூடங்குளம், விஜயாபதி, ராதாபுரம் போன்ற ஊர்களில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
 
இடிந்தகரையைச் சார்ந்த காங்கிரசு பிரமுகர்கள் பி. எல். அந்தோணி சந்தியாகு என்பவரும், முன்னாள் விஜயாபதி பஞ்சாயத்துத் தலைவர் வால்டர் எட்வின் என்பவரும் சேர்ந்து அந்த சுவரொட்டியை வெளியிட்டிருந்தனர். அதில் ரூ. 50,000 விலை மதிப்புள்ள 50 மீன் பிடி வலைகளை இடிந்தகரை மீனவ மக்களுக்கு வழங்கியதற்காக இந்திய அணுமின் கழகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
 
இதுபற்றி விசாரித்தபோது ஒரு மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பரமேசுவரபுரம் எனும் கிராமத்தில் வசிக்கும் சிலுவை அந்தோணி மகன் கபூர் (வயது 35) என்கிற கூடங்குளம் அணுமின் திட்ட துணை ஒப்பந்தக்காரர் ஒருவரும், மேற்கண்ட இரு நபர்களும் சேர்ந்து காடுதலா, காமனேரி போன்ற உட்பகுதி கிராமங்களில் வசிக்கும் விவசாயக் கூலியாட்களை மீனவர்களாக அடையாளம் காட்டி, அணுமின் நிலைய அதிகாரிகளின் கூட்டுச் சதியோடு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை வாங்கியிருக்கின்றனர். கையெழுத்துப் போட்டு வலைகள் திருட்டில் உதவிய மக்களுக்கு ரூ. 500 மட்டும் சம்பளமாகக் கொடுத்திருக்கின்றனர். அந்த வலைகளை நாகர்கோவிலிலுள்ள பாத்திமா ஸ்டோர் எனும் மீன் வலைக் கடையில் 4.75 லட்சம் ரூபாய்க்கு திருட்டு விலைக்கு விற்றிருக்கின்றனர்.
 
கடல் தொழிலுக்கு சம்பந்தமேயில்லாத ஊர்களில் வசிக்கும் மக்களுக்கும், கடலில் மீன்பிடிக்கப் போகாத மக்களுக்கும் வலைகள் வழங்கியதாக அணுமின் நிர்வாகம் தனது ஊழல் சகாக்களுடன் சேர்ந்து மக்கள் பணத்தை திருடியிருக்கிறது. மக்கள் பணத்தை திருடுவதோடு, இரண்டு ஆண்டுகளாக அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடிவரும் இடிந்தகரை ஊர் மக்களைக் கேவலப்படுத்துவதும், ஊருக்குள் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி வன்முறை நிகழச் செய்வதும்தான் இவர்களின் சதித் திட்டம்.
 
இந்த வலை வழங்கும் திட்டத்தில் நடந்திருக்கும் ரூ. 25 லட்சம் ஊழலை உடனடியாக விசாரித்து குற்றம் செய்திருக்கும் அணுஉலை அதிகாரிகள் மீதும், காவல்துறை, உளவுத் துறை அதிகாரிகள் மீதும், பி. எல். அந்தோணி சந்தியாகு, வால்டர் எட்வின், சிலுவை அந்தோணி மகன் கபூர் ஆகிய சமூக விரோதிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.
 
- போராட்டக் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
Pin It