கடந்த மார்ச்சில் ஐநா சபையில் இலங்கை அரசாங்கம் தொடர்பில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், வடக்கில் இருந்து சிங்கள இராணுவத்தைத் திரும்பப் பெறுவது, வட – கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது குறித்த அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை அடைய முயற்சிப்பது ஆகிய அம்சங்களை வலியுறுத்தியிருந்தது.

இந்தியாவின் சார்பில், செப்டம்பர் 2013 இல் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்கும் பத்தியொன்றும் தீர்மானத்தின் இறுதி வரைவில் இணைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேறி, மூன்று மாதங்கள் கழிந்த பின்னரும், வடக்கிலிருந்து இராணுவ விலக்கம் நடைபெறவில்லை. ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீர்ர் என்ற விகிதத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கை அங்கு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அச்சுறுத்தும் வகையிலான இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்து இருக்கும் நிலையில், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் பணிகளை இலங்கை அரசாங்கம் முடுக்கி விட்டிருக்கிறது. தேர்தல் பணிகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்து வைத்திருக்கும் விதமே அதன் நம்பகத் தன்மையை கேள்விக்குரியதாக்கியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவப் படைகளின் தளபதியான மஹிந்த ஹதுருசிங்கே மற்றும் வடக்கு மாகாணத்திற்கான இராணுவத் தளபதி ஜி. ஏ. சந்திரசிறி ஆகிய இருவரும் இணைந்து, ஆளும் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் என இருபது வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக அறியப்பட்ட தயா மாஸ்டர் என்பாரை சிங்கள இராணுவத்தின் முழு ஒத்துழைப்போடு முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க ஜனாதிபதி ராஜபக்சே முடிவு செய்திருப்பதாகவும் அறியப்படுகிறது.

ஆரம்ப அறிகுறிகளே வலிமையான இராணுவத் தலையீடோடுதான் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறப்போகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

இந்திய அரசாங்கம் இந்த வெளிப்படையான இராணுவத் தலையீடுகளைப் பற்றிக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக, இலங்கை அரசியல் சாசனச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தத்தை நடைமுறைப்படுவது மட்டுமே ஈழத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான ஒரே வழி என்பதை வலியுறுத்துவதில் மும்முரமாக இறங்கியிருக்கிறது.

இந்த நோக்கில், ஜூன் 6, 7 தேதிகளில் தில்லியில் கருத்தரங்கம் ஒன்றையும் இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் ஏற்பாடு செய்திருந்தன. ஈழத் தமிழர்களின் பிரதான அரசியல் கூட்டணியான, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்றும் அதன் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் இக்கருத்தரங்கில் பங்கேற்றது. தில்லியின் ஓபராய் ஓட்டலில் தங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு உறுப்பினர்களைச் சந்தித்து, அதன் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் கருத்தை அறிய முற்பட்டதில், 13 ஆம் அரசியல் சாசனத் திருத்தம் அளிக்கும் சிறு அதிகாரப் பகிர்வில் இருந்து தொடங்குவதைத் தவிர தற்சமயம் வேறு வழிகள் ஏதும் இல்லை என்ற கருத்தையே வலியுறுத்தினார்.

இன்னொரு புறம், 13ஆம் அரசியல் சாசனத் திருத்தத்தையே கைவிட வேண்டும் என்று தீவிர சிங்கள இனவாதிகளின் தரப்பில் இருந்து ராஜபக்சேவிற்கு அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்த முனைந்தால், இலங்கையில் இரத்த ஆறு ஓடும் என்று தீவிர சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினரும் ராஜபக்சேவின் நெருங்கிய குடும்ப நண்பருமான சம்பிக்க ரணவக்க என்பவர் அறிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக உள்ள, ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவோ 13வது அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மட்டுமின்றி வட மாகாண சபைக்கான தேர்தல்கள் நடத்தப்படுவதற்கே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு முயற்சிகளுமே இலங்கையைப் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட சக்திகளுக்கு சாதகமானவை என்ற அச்சத்தை அவர் கிளப்பியுள்ளார்..

ஈழத்தமிழர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமென்றால், உண்மையான அதிகாரப் பகிர்வு நடக்க வேண்டுமென்றால், 13வது அரசியல் சாசனத் திருத்தத்தில் இருந்து தொடங்க முடியாது என்று வட – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத் தமிழர்களின் சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் நோக்கர்களும் வலியுறுத்துகின்றனர்.

கடந்த சில வாரங்களாக, கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கும், அந்த 13வது அரசியல் சாசனத் திருத்தம் என்னதான் சொல்கிறது. இந்திய ராஜதந்திரத் தரப்பு வலியுறுத்துவது போன்று, இன்றைய சூழலில் அது ஒன்றுதான் தொடக்கப் புள்ளியாக இருக்க முடியுமா? தீவிர சிங்கள இனவாதத் தரப்பு வெறித்தனமாக கூறுவது போன்று, அதை நடைமுறைப்படுத்தினால் ஈழத்தமிழர்கள் மீண்டும் இலங்கையைப் பிளவுபடுத்தி விடுவதற்கான வழி ஏற்பட்டுவிடுமா?

அப்படி என்னதான் இருக்கிறது இலங்கை அரசின்13வது அரசியல் சாசனத் திருத்தத்தில்?

13வது அரசியல் சாசனத் திருத்தத்தின் அம்சங்களுக்குள் நுழைவதற்கு முன்பாக, அத்திருத்தத்தை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டிய சூழல் எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்வது மிக அவசியமானது.

1983 ஜூலை மாதம் சிங்கள இன வெறியர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய கலவரங்களைத் தொடர்ந்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வேண்டுகோளின் பேரில், அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, சிறந்த ராஜதந்திரி என அறியப்பட்ட ஜி.பார்த்தசாரதி என்பார் தலைமையிலான குழு ஒன்றை 1983 ஆகஸ்டு மாதம் இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முன்வைத்த அதிகாரப் பகிர்வுக் கோரிக்கைகளை கேட்டறிந்த ஜி.பார்த்தசாரதி, அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனேவுடன் ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதியாக, தமிழர்கள் சார்பான அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கிறார்.

அவ்வறிக்கையின் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:

1) இந்தியாவில் நிலவுவதைப் போன்று பல மாநில அரசுகளின் கூட்டரசாக இலங்கை அரசு அமையவேண்டும். அதாவது, இந்திய அரசமைப்பை போன்று, ஒரு மத்திய அரசும், அதன் உறுதித்தன்மைக்கு ஊறுவிளைவிக்காத பிராந்திய அளவிலான மாநில அரசுகள் என்பதான ஒரு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

2) இந்தியாவில் நிலவுவது போன்று, மத்திய அரசு அதிகாரத்திற்கு உட்பட்ட துறைகளுக்கான பட்டியல், மாநிலங்களுக்கான பட்டியல், பொதுப் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும். மாநிலங்கள் தமது உரிமைகளுக்கு உட்பட்டு சட்டங்கள் இயற்றவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

3) தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் வட – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தனியொரு மாநில அரசாக அமைக்கப்பட வேண்டும். அம்மாநிலத்தின் ஆட்சி மொழியாக தமிழ் உறுதி செய்யப்பட வேண்டும். முஸ்லீம்களின் விருப்பப்படி, அவர்கள் பெரும்பான்மையினராக வாழும் அம்பாரை மாவட்டத்தை ஒரு தனி மாநிலமாகவும் அமைக்கலாம்.

4) மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடுகளை நிதிக் கமிஷன் ஒன்றை அமைத்து அதன் பரிந்துரைகளின் படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

5) இலங்கை அரசின் இராணுவம் தமிழர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரது மக்கட்தொகையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொண்டதாக சீரமைக்கப்பட வேண்டும். வட – கிழக்கு மாகாணத்தின் போலீஸ் துறை தமிழர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும்.

6) மாநில அளவிலான நிர்வாகத் துறைகளுக்கு அவசியமான அரசு ஊழியர்களைத் தேர்வு செய்ய, மாநிலத் தேர்வாணைக் குழுமங்கள் அமைக்கப்பட்டு, அவை தேர்வு செய்யும் ஊழியர்களை மாநில நிர்வாகப் பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டும்.

7) இந்தியாவில் நிலவுவதைப் போன்று, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் என்ற நீதித்துறை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

8) சட்டம் – ஒழுங்கு, நீதித்துறை, சமுக – பொருளாதார – பண்பாட்டுத் துறைகள், நிலப் பங்கீட்டுக் கொள்கை ஆகியவற்றைத் தீர்மானப்பதில், மாநில அரசுகளின் சட்ட சபைகளுக்கும் அதன் அமைச்சர்களுக்கும் சட்டம் இயற்றவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

அமிர்தலிங்கம் பொதுச் செயலாளராகவும், சிவசிதம்பரம் தலைவராகவும் சம்பந்தன் துணைத் தலைவராகவும் இருந்து செயல்பட்ட ஒரு மிதவாதக் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முன்வைத்த மிகவும் ஜனநாயகப் பூர்வமான, இலங்கை அரசின் ஒற்றுமைக்கோ, இறையாண்மைக்கோ எந்த விதத்திலும் ஊறு விளைவித்துவிடாத மிகவும் மிதமான கோரிக்கைகளையே மேற்கண்ட பரிந்துரைகளாக இந்திய ராஜதந்திரியான ஜி. பார்த்தசாரதி சமர்ப்பித்தார்.

இதே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தந்தை செல்வாவின் தலைமையில், அமைதி வழியில் ஈழ விடுதலைக்காக போராடுவதைத் தவிர தமிழர்களுக்கு இனி வேறு வழி என்று 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தில் பிரகடனப்படுத்தியதையும், 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அப்பிரகடனத்தை முன்வைத்து தமிழர் பகுதிகளில் முழுப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ள வேண்டும். ஜி. பார்த்தசாரதியின் பரிந்துரைகளின்படி, இந்திய மாதிரியிலான அதிகாரப் பகிர்வு முறை ஒன்றை ஏற்றுக் கொண்டு, ”அமைதி வழியில் ஈழ விடுதலைக்காக போராடுவது” என்ற கோரிக்கையை அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கைவிடவும் தயாராக இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், இந்தக் குறைந்தபட்ச கோரிக்கைகளைக்கூட இனவெறியில் மூழ்கித் திளைத்திருந்த இலங்கை அரசு ஏற்கத் தயாராக இல்லை. ஜி. பார்த்தசாரதியின் பரிந்துரைகளைத் தொடர்ந்து நான்கு மாதங்கள் இழுபறியான பேச்சுவார்த்தைகளை இந்தியாவுடன் ஜெயவர்த்தனே அரசு நடத்தியது. இறுதியில், 30 நவம்பர் 1983 இல் தில்லியில் இந்திரா காந்தியுடன் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளான பிறகு, வட – கிழக்கு மாகாணங்களின் இணைப்பில் தனக்கு பிரச்சினையேதும் இல்லையென்றாலும் தன்னால் அறிவிக்க முடியாது என்று நிலையை எடுத்தார் ஜெயவர்த்தனா. தொடர்ந்து, டிசம்பர் 1984 இல் கொழும்பு நகரில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் மற்றும் புத்த பிக்குகளின் கடும் எதிர்ப்பால் அக்கோரிக்கை முற்ற முழுதாக நிராகரிக்கப்படுகிறது. வட – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையில் ஜி. பார்த்தசாரதியின் மிதவாத அதிகாரப் பகிர்வுக்கான பரிந்துரைகளும் குப்பையில் வீசப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டில் நடந்த இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளின் போது ஈழ விடுதலைக்காக போராடிய ஆயுதக் குழுக்கள் மிக ஆரம்ப நிலையில் வலுவற்ற சிறு குழுக்களாகவே இருந்தன. இலங்கை அரசோ, ஒருபுறம் மிதவாதக் குழுவான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனும் இந்திய அரசுடனும் இழுபறி பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டே மறுபுறம் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான, வெறிபிடித்த தாக்குதல்களை இராணுவத்தைக் களத்தில் இறக்கி ஏவிக் கொண்டிருந்தது. இறுதியில், மிதவாதக் குழுவையும் இந்திய அரசையுமே அனாயசமாகப் புறக்கணித்து எந்தவொரு சிறு அதிகாரப் பகிர்வுக்கும் தயாரில்லை என்ற முடிவில் உறுதியாக நின்றது இலங்கை அரசு.

இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள், மறைந்த ராஜீவ் காந்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில வருடங்களில் 1985 ஆம் ஆண்டில் இருந்து துவங்குகிறது. இந்தக் குறுகிய கால இடைவெளியில் ஆயுதம் ஏந்திப் போராடிய இளைஞர் குழுக்களின் செல்வாக்கு ஈழத் தமிழர் மத்தியில் கணிசமாக அதிகரித்திருந்தது. அதன் விளைவாகவே, 1985 ஆகஸ்ட்டில் நடைபெற்ற திம்பு பேச்சு வார்த்தைகளில், மிதவாதக் குழுவான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோடு, ஆயுத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அனைத்து குழுக்களும் பங்கேற்றன.

திம்புவில் நடந்த பேச்சு வார்த்தைகளிலும் இலங்கை அரசு தனது முந்தைய நிலையில் பிடிவாதமாக இருந்த காரணத்தினால், பேச்சு வார்த்தைகளில் பங்கேற்ற அனைத்து குழுக்களும் இணைந்து தமது பிரகடனத்தை வெளியிட்டனர். அப்பிரகடனம் நான்கு முக்கியமான அம்சங்களை வலியுறுத்தியது.

1) இலங்கையில் வாழும் தமிழர்களை தனித்த ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்.

2) தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பகுதிகள் என்று அறியப்பட்ட பகுதிகளை அங்கீகரித்து அவை ஒரே பிராந்தியமாக உறுதி செய்ய வேண்டும் (வட – கிழக்கு மாகாண இணைப்பு).

3) தமிழ் தேசத்தின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

4) இலங்கைத் தீவைத் தமது நாடாகக் கருதும் அனைத்து தமிழர்களின் குடி உரிமையும் அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தனி ஈழமே தீர்வு என்ற கோரிக்கையை முன்வைத்து போராடினாலும், அமைதியையும் சமாதானத்தையும் விரும்புவதால், மேற்கொண்ட நான்கு அம்சங்களை ஏற்றுக் கொண்டு இலங்கை அரசு முன்வைக்கும் பரிந்துரைகளை பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்.

இவைதான் திம்பு பிரகடனத்தின் சாரம்.

இதைத் தொடர்ந்து, இந்திய அரசின் சார்பில் திரு. ரமேஷ் பண்டாரி அவர்களின் தலைமையில் அனுப்பட்ட இந்தியக் குழு, ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுடன் நேரடியாக பேச்சு வார்த்தைகளை நடத்தி சில பரிந்துரைகள் முன்மொழியப்பட்டன. இப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள தமிழர் குழுக்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்பதால், அனைத்துக் குழுக்களும் இப்பரிந்துரைகளை நிராகரித்தன. என்றபோதிலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, வட – கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர் பகுதிகளில் வலுக்கட்டாயமான சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், தமிழர்கள் தமது பாரம்பரிய நிலங்களை இழப்பதைத் தடுத்து நிறுத்துவது, சட்ட ஒழுங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் அளித்து நிலைநாட்டுதல் ஆகிய மூன்று அம்சங்களுக்கு இப்பேச்சுவார்த்தைகளில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியது. இந்த மூன்று அம்சங்களும் ஜி. பார்த்தசாரதி பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்தவை மட்டுமே. ஆனால், இலங்கை அரசாங்கம் இம்முறையும் செவிசாய்க்கவில்லை.

மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைகள், மே 1986 இல் பி. சிதம்பரம் தலைமையிலான இந்தியக் குழுவால் தொடங்கி வைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலிக்க இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஜனாதிபதி ஜெயவர்த்தனேயுடன் பேச்சு வார்த்தைகளில் இறங்கியது. இரண்டு மாதங்கள் நீடித்த இப்பேச்சுவார்த்தைகளிலும் எந்த கருத்தொருமிப்பும் உருவாகவில்லை.

தொடர்ந்து, நவம்பர் 1986 இல் பெங்களூரில் நடைபெற்ற இந்திய – இலங்கை பேச்சுவார்த்தைகளில் கிழக்கு மாகாணத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் பரிந்துரையை இலங்கை அரசு முன்மொழிந்தது. தமிழர் தரப்பு கோரிக்கை வட – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பதாக இருக்கையில் அதற்கு நேர்மாறாக தமிழர் பகுதிகளைத் துண்டாடும் திட்டத்தையே இலங்கை அரசு முன்வைத்தது. தமிழர் அமைப்புகளின் எதிர்ப்பால் இதுவும் கைவிடப்பட்டது.

தமிழர் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட எந்த ஒரு நியாயமான, மிதவாத கோரிக்கைளையும் ஏற்றுக் கொள்ளாமல் இலங்கை அரசு தனது இனவாதத் திட்டங்களையே இந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்த வரலாறு இது.

இவ்வாறு, பேச்சுவார்த்தைகளில் இழுபறி செய்து கொண்டிருந்த அதே வேளையில், இலங்கை அரசு தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை உச்சத்திற்கு கட்டவிழ்த்துக் கொண்டிருந்தது. 1987 ஜனவரியில் யாழ்ப்பாணத்தின் மீது பொருளாதாரத் தடையை விதித்து பெரும் நெருக்கடியையும் உருவாக்கியது. அதன் பிறகே, இந்திய அரசின் நேரடியான இராணுவத் தலையீடும், ஜூலை 27, 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையொப்பமானதும் நிகழ்ந்தன.

மிக அவசரமாகத் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்த பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர் தரப்பு கோரிக்கைகளான அதிகாரப் பரவலாக்கம் குறித்து எந்தவிதமான தீர்க்கமான வழிகாட்டுதல்களும் இடம்பெற்றிருக்கவில்லை. அதற்கு இடமளிக்காத இலங்கையின் அரசியல் சாசனத்திலோ, சட்டங்களிலோ எத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்தும் எந்த வழிகாட்டல்களும் இருக்கவில்லை. மாறாக, குறைந்தவொரு கால இடைவெளியில் வட – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்தவும், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தி ஒரு முதலமைச்சரை ஆட்சியில் அமர வைக்கவுமே அதிக அழுத்தங்கள் தரப்பட்டிருந்தன.

என்றாலும், இந்த இரண்டு அம்சங்களையும் அரசியல் சாசனச் சட்ட அளவில் அங்கீகரிக்கும் நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு இந்திய அரசு ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கை அரசுக்கு கடும் நிர்ப்பந்தத்தைத் தந்தது. அந்த நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தே, 1987 ஆகஸ்டு மாதம் (ஒப்பந்தம் ஏற்பட்ட சில வாரங்களில்) இலங்கை அரசாங்கம் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

அத்தருணத்தில், 1983 ஆம் வருடத்தின் மத்தியிலிருந்து 1986 ஆம் வருட இறுதிவரை நடைபெற்றிருந்த நீண்ட பேச்சுவார்த்தைகளில் அதிகாரப் பரவல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழர் தரப்பு முன்வைத்த ஆலோசனைகளையும், இந்தியத் தரப்பின் பரிந்துரைகளையும் அத்திருத்தம் ஏற்றுக் கொண்டிருந்ததா, நடைமுறை சாத்தியமான அதிகாரப் பரவலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்ற திசையில்தான் இந்திய அரசு அடுத்து அணுகியிருக்க வேண்டும். ஆனால், ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு அவ்வழியில் செல்லாமல், தனக்கு மசியாத போராளிக் குழுக்களை நசுக்குவதிலும், தனக்குத் தலையாட்டும் ஒரு குழுவை பொம்மை அரசாக ஆட்சியில் அமர்த்துவதிலுமே குறியாக இருந்தது.

ஆனால், மிதவாத தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உட்பட அனைத்து தமிழர் தரப்பும் 13வது அரசியல் சட்டத்தை முற்றிலுமாக நிராகரித்தன. ஒப்பந்தம் முறிந்து இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய போது, அதனுடன் சேர்ந்து இந்தியாவுக்குத் தஞ்சம் புகுந்த, இந்திய இராணுவ பலத்தால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஈபிஆர்எல்எஃப் குழுவும், இறுதியில் 13வது சட்டத் திருத்தத்தால் சிறு அளவு கூட அதிகாரப் பரவல் சாத்தியமில்லை என்று அறிவித்தே வெளியேறியது. இலங்கை அரசோடு சமரசம் செய்து கொண்டு கிழக்கு மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டு முதலமைச்சரான பிள்ளையானும், அங்கு முதலமைச்சர் பதவிக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று வெளிப்படையாகவே புலம்பினார்.

அப்படியென்றால், அத்திருத்தம் யாருக்கு அதிகாரத்தை அளித்திருக்கிறது? அப்படி என்னதான் இருக்கிறது அத்திருத்தத்தில்?

1) இலங்கை அரசின் 13வது அரசியல் சாசனத் திருத்தம், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநருக்கே மாகாண சபை விவகாரங்களில் முற்றமுழுதான அதிகாரங்களை வழங்குகிறது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி முதலமைச்சரும் அவரது மந்திரி சபையும் எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர இயலாது. அவர்கள் முன்மொழியும் எந்தவொரு சட்டத்தையும் இலங்கையின் அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்று நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. முதலமைச்சர், மற்றும் அவரது மந்திரி சபையின் ஆலோசனைகளுக்கு அப்பாற்பட்டு ஆளுநர், தமது விருப்பத்தின் பேரில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கலாம்.

2) ஆளுநர் தமது விருப்பத்தின் பேரில் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எந்தவொரு நீதிமன்றமும் கேள்விக்குட்படுத்த முடியாது. ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களின் பேரில் ஆளுநரின் முடிவுகள் இருக்க வேண்டும். அதாவது, ஜனாதிபதியின் முற்றுமுழுதான அதிகாரத்தின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுவார்.

3) மாகாண சபைக் கூட்டங்களைத் தள்ளிவைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு உண்டு.

4) மாகாண சபைகள் கொண்டுவர விரும்பும் எந்தவொரு சட்டமும் அல்லது சட்டத் திருத்தமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகே செல்லுபடியாகும்.

5) மாகாண சபைகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரிவுகளில், நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் பாராளுமன்ற அமைச்சரவைக்கு உண்டு.

6) நில உரிமை குறித்த விவாகாரங்களில் இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. இதனால், தமிழர்களின் மிக முக்கியப் பிரச்சினையான வலுக்கட்டாயமான சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்புகள் விடயத்தில் தமிழர்களால் தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.

7) காவல் துறை மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும்.

8) மாகாணங்களுக்கான பட்டியலில் உள்ள ஏறக்குறைய அனைத்து துறைகளும் மத்திய அரசு – மாகாண அரசுகளுக்கான பொதுப்பட்டியலில் அடங்கும். இதன்படி, மாகாணங்களுக்குரிய எந்த ஒரு துறையிலும் மத்திய அரசு நேரடியாக சட்டங்களை இயற்றியும் ஆணைகள் பிறப்பித்தும், மாகாண அரசு இயற்றியவற்றை மாற்றிவிட இயலும்.

1983 இல் ஜி. பார்த்தசாரதி, இந்தியாவில் நிலவுவது போன்ற மத்திய – மாநில அரசுகளுக்கிடையிலான அதிகாரப் பகிர்வை முன்மொழிந்ததில் இருந்து 13வது அரசியல் சட்டத் திருத்தம் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதை மேலே குறித்துக் காட்டியிருக்கும் அதன் முக்கிய அம்சங்களில் இருந்து எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை சிறிதளவும் தராத, ஒன்றுக்கும் உதவாத இத்தகைய பிரிவைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. அதைக்கூட நடைமுறைப்படுத்த முடியாது என்று இலங்கை அரசாங்கம் வீம்பு செய்து கொண்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், அவ்வாறு முரண்டு பிடிப்பதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே இந்த ஒன்றுக்கும் உதவாத திருத்தத்தை அது இயற்ற வேண்டியிருந்தது. இன்று அதை நிராகரிப்பதன் மூலம், இலங்கை அரசு இந்தியாவின் அரசியல் தலையீடுகளில் இருந்து தன்னை முற்ற முழுதாக விடுவித்துக் கொள்வதை அறிவிப்பதாக இருக்கும். அதே சமயம், அதை நிறைவேற்றி வட மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினால், இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து சர்வதேசச் சமூகத்தின் பாராட்டுதல்களையும் பெறமுடியும். அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போர்க் குற்ற விசாரணைகளில் இருந்து விடுபடவும் முடியும்.  

ஆனால், இந்திய அரசைப் பொறுத்த அளவில், 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்துவதால் எந்தவிதமான பலனும் ஏற்படப் போவதில்லை. அதன் மூலம் இலங்கையில் இந்தியாவின் அரசியல் செல்வாக்கு பலமடையப் போவதும் இல்லை; பொருளாதாரச் செல்வாக்கை நிலைநிறுத்துவதும் நடக்கப்போவதில்லை. இவ்விரண்டு புலங்களிலும் ஜனாதிபதியின் கைகளில் அதிகாரம் குவிந்திருக்கும் வரையில் எதுவும் நடக்கப் போவதில்லை.

தமிழர் தரப்புக்கு இதனால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதைப் புரிந்திருந்த காரணத்தினால்தான், இத்திருத்தம் வந்த உடனேயே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப் பொறுப்பில் இருந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஆகிய மூவரும், 28 அக்டோபர் 1987 தேதியிட்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர். அக்கடிதத்தில், இத்திருத்தத்தில் உள்ள கபட நாடகத்தை மேலே தந்திருப்பதைவிடவும் நுணுக்கமாகவும் விரிவாகவும் எடுத்துக் காட்டி, அதை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு ஜெயவர்த்தனே அரசை கேட்டுக் கொள்ளுமாறு ராஜீவ் காந்தியை வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஆனால், இன்றோ, இத்திருத்தத்தை விட்டால் வேறு வழி ஏதும் இல்லை என்று சம்பந்தன் அவர்களே வலியுறுத்தும் வேடிக்கையைக் காண வேண்டியிருக்கிறது.

சரி. வேறு எங்கிருந்துதான் தொடங்குவது?

13வது அரசியல் சாசனத் திருத்தத்தைக் காட்டிலும் ஜி. பார்த்தசாரதியின் பரிந்துரைகள் பன்மடங்கு சிறப்பானவை. ஆனால், அவை 1983லேயே வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும். 30 ஆண்டுகள் போர் முடிந்து, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை இழந்து தவிக்கும் ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கு இன்று அதை ஒரு தீர்வாக முன்மொழிய முடியாது.

இந்திய அரசு தனது செல்வாக்கை இலங்கைத் தீவினில் உறுதி செய்து கொள்ள விரும்பினால் ஈழத் தமிழர்களின் சுயேச்சையான அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவது ஒன்றுதான் அதற்கான வழி. சீனா என்ற துருப்புச் சீட்டைக் காட்டி ராஜபக்சே ஆடும் விளையாட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்கவும் ஈழத் தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பலப்படுத்தினால் மட்டுமே முடியும்.

அதற்கு முதல் படியாக, வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளுமாறு சர்வதேசச் சமூகத்தின் துணையோடு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்தப்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, போரின் முடிவுக்குப் பிறகும் ஈழத் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயர் மிகுந்த வாழ்க்கையிலிருந்து சிறிதளவேனும் மீளவேண்டுமென்றால், தமிழர் பகுதிகளில் சர்வதேசச் சமூகத்தின் மேற்பார்வையில் ஒரு இடைக்கால நிர்வாக சபை அமைக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும். அதன் நேரடி மேற்பார்வையில், அவர்களுக்கான புணர் வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவை இரண்டையும் முன்னெடுக்க இந்தியா தயங்குமானால், 13வது அரசியல் சாசனத் திருத்தத்தையும் மாகாண சபைக்கான தேர்தல்களையும் புறக்கணித்து, தமக்கான தீர்வு அவற்றில் இல்லை என்பதைச் சர்வதேசச் சமூகத்திற்கு காட்டுவதே அபலைகளாகக் கைவிடப்பட்டுள்ள அம்மக்களின் முன்நிற்கும் ஒரே வழி.

குறிப்பு: “தமிழ் ஆழி” ஜூலை இதழுக்காக எழுதியது. பல்வேறு காரணங்களால் இதழ் வெளிவருவது தாமதமாகியிருக்கிறது. பிரச்சினையின் அரசியல் முக்கியத்துவம் கருதி “தமிழ் ஆழி” ஆசிரியரான நண்பர் செந்தில்நாதனிடம் அனுமதி பெற்று ”கீற்று” இதழில் வெளியிட அனுப்பியிருக்கிறேன்.

”தமிழ் ஆழி” செப்டம்பர் இதழில் இக்கட்டுரை வெளியாகும். “தமிழ் ஆழி” இதழ், மய்ய நீரோட்ட பத்திரிகை உலகில் ஒரு ஆரோக்கியமான மாற்று முயற்சி. அவ்விதழ் நின்று நீடிக்க வேண்டும். நண்பர்கள் தம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.

- வளர்மதி

Pin It