நவீன நாகரிகம் என போற்றப்படும் இன்றைய காலகட்டத்திலும் பெண்கள் அரசியல் பொருளாதார, சாதி, மத, பண்பாட்டுத் தளங்களில் சமூக ஒடுக்குமுறைகளையும், ஆணாதிக்க வன்முறைகளையும் எதிர்கொண்டுவருவது தொடர்கதையாகியுள்ளது. அன்றாடம் குடும்பத்திலும், பொது இடங்களிலும் எதிர்கொள்ளும் பாலியல் பாகுபாடானது கேள்விக்கு இடமற்ற ஒன்றாக இருக்கின்றநிலையில், கடந்த டிசம்பர் மாதம் டெல்லி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணமாக தூக்கி வீசப்பட்டது அனைவரிடமும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அதற்கு எதிராக மாணவர்களும், சமூக உணர்வாளர்களும் ஆயிரக்கணக்கானோர் போராட்டக்களத்தில் இறங்கினர். டெல்லி மட்டுமல்ல இந்தியா முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. முதல்வர் ஷீலா தீட்சித் பதவி விலகவேண்டும் என்று பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

குற்றம் செய்தவர்களை உடனடியாக தூக்கில்போடு, அவர்களின் ஆண்மையை இழக்க செய் போன்ற தீவிரமான கோரிக்கைகள் முன்வந்ததன் காரணமாக, அரசும் அவசரமாக சட்ட திருத்தத்தை கொண்டுவர, வர்மா கமிட்டியை அமைக்க முன்வந்தது. இதுபோல் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் இதற்குமுன் நடந்திருந்தாலும் இச்சம்பவம்தான் முதன்முறையாக ஒட்டுமொத்த அரசியல் எழுச்சியாக மத்திய அரசிற்கு எதிரான மையக்கோரிக்கையாக முன்வந்துள்ளது என்பதால் இப்போராட்டங்கள் மிகவும் போற்றப்பட வேண்டியதோடு, இச்சமூகத்தில் மிகப்பெரிய கருத்தியல் போராட்டத்திற்கும் வித்திட்டுள்ளது என்பதுதான் இதிலுள்ள குறிப்பான அம்சமாகும். அதேசமயம், ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரத்திற்கு பலியாக்கித்தான் பெண்ணிற்கான அடிப்படை சுதந்திரத்தை சமூகத்திற்கும், ஆண்களுக்கும், உரத்தச் சொல்ல வேண்டியிருக்கிறது. இக்கொடூரச் சம்பவம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்றாட வாழ்வின் ஒழுக்கநெறி குறித்தும் குறிப்பாக பெண்களை பற்றிய ஆணாதிக்க பிற்போக்கு கருத்தியலின் கொடூரத்தன்மையையும் வெளிப்படுத்தியதுடன், இவை இந்தியாவில் பெண்ணுக்கான பாதுகாப்பையும், சமூக, ஜனநாயகப் பண்பாட்டு வளர்ச்சியையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியில் மக்களின் அறிவு ரீதியான விழிப்புணர்வும் வளர்ந்துள்ளதால் முன்பைவிட இப்பொழுது இச்சம்பவங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுகிறது. மத்திய அரசு வர்மா ஆணைய அறிக்கையை கிடப்பில் போட்டு குற்றம் செய்தவர்களை தண்டிக்க அவசர சட்டம் கொண்டுவந்தும், இத்தகைய குற்றங்களை தடுக்கமுடியவில்லை என்பதற்கு உதாரணமாய் அதே தலைநகரில் கடந்த ஏப்ரல் 15ல் குடியா என்கிற 5 வயது சிறுமி அண்டை வீட்டில் வசித்தவனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தால் டெல்லி மீண்டும் ஒரு எழுச்சி அலையை சந்தித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் மீது உதவி போலீசு ஆணையர் பானிசிங் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. பஞ்சாபில் தரண்தரண் மாவட்டத்தில் ஹர்பிந்தர் கவுர் என்ற பெண்ணை லாரி ஓட்டுநர் பாலியல் தொந்தரவு செய்ததால் அருகில் உள்ள காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்ற அப்பெண்ணையே இரண்டு போலீசார் பட்டப் பகலில் நடுரோட்டில் அடித்து உதைத்து ரவுடித்தனமாக நடந்துகொண்டது காவல்துறையினரின் அட்டூழியத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இதுபோன்று பொது இடம், குடும்பம், பணியிடம் ஆகிய இடங்களில்தான் அதிகளவு பாலியல் வன்கொடுமைகள், குற்றங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2011ல் மட்டுமே பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்கள் 50% அதிகரித்திருக்கின்றன. கணவனாலும், உறவினர்களாலும் நிகழும் வரதட்சணை கொலைகள் 50% எனவும், தற்போது பெண்கள் மீதான பாலியல் வழக்குகள் 1997ல் 2,487 ஆக இருந்த வழக்குகள் 2011ல் 24,206 ஆக பதிவாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் இதுவரை பதிவான வழக்குகள் 976 மட்டுமே. அதிலும் 2012ல் சென்னை நகரத்தில் மட்டுமே பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களில் இதுவரை 304 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என தேசிய குற்றப்பதிவு ஆவணப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப ரீதியாக நடக்கும் வன்முறைகளை எடுத்துக்கொண்டால், இந்திய சமூகத்தின் பண்பாட்டையும், அமைப்பு முறையையும் கட்டிக்காக்கும் வடிவமாக குடும்பம் இருந்து வருவதாகவும், அதன் கௌரவத்தை உடையாமல் பாதுகாக்கும் பொறுப்பு பெண்ணிற்கே உரித்தானது என இந்துத்துவ கட்டமைப்பு கூறுகிறது. மரபு வழிபட்ட இக்குடும்பங்களில்தான் அதிகளவு பெண்கள் வன்கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளாகின்றனர். பல நேரங்களில் அவளுக்கு சமாதியாகவும் இருக்கிறது.

தினந்தோறும் ஆங்காங்கே பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்படுவதை செய்தித்தாள்களில் பார்க்கிறோம். வளர்ந்துவரும் நவீன வளர்ச்சிக்கேற்ப வரதட்சணைக் கேட்பது நவீன வடிவில் உருவெடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வேலூரைச் சேர்ந்த கோமதி என்ற பெண் தன் மாமியார், கணவனால் வரதட்சணைக்கேட்டு, வாயில் ஆசிட் ஊற்றிக் கொடூரமாக கொல்லப்பட்டார். இதுபோல் பல சம்பவங்களைச் சொல்லலாம். வரதட்சணை, சிசுக்கொலைகள், குழந்தை திருமணங்கள் சட்டங்களால் தடைசெய்யப்பட்டிருந்தாலும், இவை சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டே வருகிறது. 90 நிமிடத்திற்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் கொல்லப்படுவதாகவும், கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளதாகவும், 1998ல் 7,146 ஆக இருந்த வரதட்சணைக் கொலைகள், 2012ல் 8,391 என்ற அளவில் அதிகரித்துள்ளதாகவும் தேசியப்புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆக, தனிச்சொத்துடமையும், ஆதிக்க அதிகாரமும் வளராத புராதனப் பொதுவுடமைச் சமூகத்தில் பெண் என்பவள் விவசாயத்தை மேற்கொண்டும், தன் இனக் குழுவை, குலங்களை வழி நடத்தி தாய் வழி உரிமையை நிலைநாட்டி வந்தாள். பெண்ணை தெய்வமாக வணங்கும் பண்பாட்டுக் கலாச்சாரத்தை கொண்ட தாய்வழிச் சமூகத்தின் வழிவந்தவளாக போற்றப்பட்டவள், இன்றோ குடும்பம் என்றால் மூன்றுமுடிச்சு தாலியை சுமந்து, பிள்ளைபெறும் இயந்திரமாக மாற்றப்பட்டு, ஆணாதிக்க அதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டு தன் சுதந்திரம், உரிமை, விருப்பங்கள், தனக்கான பொருளாதார உரிமைகள் அனைத்தையும் இழந்து குடும்பத்திற்குள் கட்டுண்டு கிடக்கும் ஒருவளாக வாழ்ந்து வருகிறாள்.

சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை வேண்டும் என்ற மனோபாவத்தை உயர்த்திப் பிடித்து ஆணை குடும்ப வாரிசாகவும், பெண்ணை இரண்டாம் பாலினமாகவும் ஒதுக்கிவைக்கும் இழிநிலைதான் சமூக மதிப்பீடுகளாக வளர்ந்துள்ளது. ஆக சிறிதும் ஜனநாயகமற்ற இக்குடும்ப முறையில் பெண்ணை பற்றிய மதிப்பீடுகள், ஒழுக்கநெறிகள், சக மனுசியாக நடத்தாத உறவுமுறையோடு நிலவும் இறுகிப்போன நிலவுடமைப் பண்பாட்டை இச்சமூக உற்பத்திமுறையும், சிந்தனை முறையும் உயர்த்திப் பிடிப்பது எதார்த்தமாக நிலவிவருகிறது. வரலாற்று வழிவந்த இவ்வாதிக்கச் சிந்தனைமுறை சமூகக்கட்டங்கள் மாறினாலும் அதற்கேற்ப ஆளும் அரசும் அதனை நிறுவனமயமாக்கி வருவதற்கு இன்னுமோர் உதாரணம், பணியிடங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் ஆகும்.

நிலவுடமைச்சமூக காலக்கட்டத்தில் பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கியிருந்த நிலை மாறி முதலாளிய உற்பத்திமுறைகள் வளர்ந்ததன் விளைவாய் சமூக உற்பத்தியில் பெண்கள் ஈடுபட ஆரம்பித்தனர். 1980களில் தமிழகத்தில் மட்டும் 29-39 வயதுடைய பெண் தொழிலாளர்கள் 39% சமூக உற்பத்தியில் பங்கேற்றிருந்தனர். அவை 2004ல் 51% அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளவிவரங்கள் வெளியிட்டுள்ளன. இன்று அனைத்துத் துறைகளிலும் ஆண்களில் சரிபாதி பெண்கள் உழைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உற்பத்தியில் ஈடுபடுவதாலும், தனக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்வதாலும் பெண்கள் ஓரளவு பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுள்ள அதேவேளையில் புதிய வடிவங்களில் பல்வேறு சமூக சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆக, சமூகத்தின் வளர்ச்சியை மதிப்பிடும் அடிப்படை உற்பத்தியிலேயே பால் பாகுபாடு நிலவுவது என்பது மற்ற தளங்களில் பாகுபாடு தொடர்வதற்கான மூலகாரணியாக அமைந்துள்ளது.

ஒரு பெண் என்ற மனப்பான்மைக்கு அடுத்துதான் அவளின் உழைப்பும், திறமையும், சமூகத்தில் மதிப்பிடப்படுகிறது. சமூக உற்பத்தியில் ஈடுபடுவதற்கும், சமூக உறவுகளோடு தன்னை பிணைத்துக்கொள்வதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிற புறச்சூழலை மீறி வெளியில் வரும் பெண்கள் அன்றாடம் தான் வேலை செய்யும் இடங்களிலும், பேருந்துகளிலும், நடந்துசெல்லும் பாதைகளிலும் பாலியல் துன்புறுத்தலுக்கோ, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதற்கோ தினந்தோறும் அச்சுறுத்தப்படுகிறாள். கடந்த 1998ல் எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த சரிகாஷா என்ற மாணவியை ஈவ்டீசிங் செய்ததில் பாதிக்கப்பட்டு இறந்துபோனதன் விளைவாகத்தான் தமிழக அரசும் உட்னடியாக ஈவ்டீசிங் தடுப்புச்சட்டத்தை கொண்டுவந்தது. ஆனாலும் கடந்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அக்கல்லூரி மேல்தட்டுவர்க்க, சாதி இந்து மாணவர்களால் ஈவ்டீசிங் செய்து மனரீதியாக துன்புறுத்தப்பட்டதில் தற்கொலை செய்துகொண்டார்.

இதுபோல் நகர்ப்புறத்திலேயே வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மட்டுமின்றி கிராமத்திலிருந்து குடிபெயர்ந்து நகரத்தில் வாழும் பெண்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளம். கார்மெண்ட்ஸ், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் முதற்கொண்டு, வீட்டுவேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் வரை பல்வேறு உழைப்புச் சுரண்டலுடன்கூடிய பாலியல் கொடுமைகளை அனுபவித்துவருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வீட்டுப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஆண்டு சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீட்டு வேலைசெய்துவந்த 14 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டதும், வெளிமாநிலத்திற்கும் சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்ற வீட்டுப்பணிப் பெண்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்குட்பட்டு கொல்லப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 அதேபோல், ஒடுக்கப்பட்ட மக்களில் தலித் பெண்கள்தான் மூன்று வடிவங்களிலும் ஒடுக்குமுறையை சந்திக்கின்றனர். சமூக ஒடுக்குமுறை, ஆணாதிக்க ஒடுக்குமுறை, சாதிய ஆதிக்க ஒடுக்குமுறை. எந்த ஒடுக்குமுறையாக இருந்தாலும் முதலில் பெண்ணின் உடல்தான் பலியாக்கப்படுகிறது. உதாரணமாக கயர்லாஞ்சி படுகொலையை யாரும் மறந்திட முடியாத ஒன்று பட்டப்பகலில் தாய், மகளை சாதி இந்துக்கள் வக்கிரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் முதற்கொண்டு, கடந்த 2012-13ல் மட்டும் கௌரவக்கொலைகளும், தலித் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலும் அதிகரித்துள்ளது என்பதற்கு சான்றாக கடலூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன் (20) சாதி இந்துப் பெண்ணை காதலித்ததால் கொலை செய்யப்பட்டார்.

சம்பந்தம் காலனி சந்தியா, பிரியா, சுகந்தி செஞ்சி ரீட்டாராணி, பென்னடம் சத்யா, பொன்னேரி ரேவதி சேரன்மகாதேவி பகுதி இசக்கியம்மாள் சேலம் தீபா செய்யாறு ரஞ்சனி மன்னார்குடி இளையநிலா ஆகியோர் சாதி இந்துக்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுபோல் சாதிய வடிவில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் மட்டுமின்றி மத ரீதியாகவும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பார்த்தால், இந்திய சாதிய சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் மத கருத்தியல்களும், இந்துத்துவ கும்பல்களான ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் போன்ற அமைப்புகளும் திட்டமிட்டே இந்துத்துவ கோட்பாடுகளை, பெண்ணடிமைத்தனத்தை நிலைநாட்ட பெண்களை நோக்கியே தாக்குதல்களை தொடுத்துவருகிறது. குஜராத் இனப்பெடுகொலை அதன் பாசிசத்தை தோலுரித்துக் காட்டியது. நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவள் வயிற்றை கிழித்து உயிருடன் இருந்த குழந்தையை வெளியே எடுத்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்துவெறி பாசிசத்தின் உச்சக்கட்டத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.

ஒரிசாவில் கிறிஸ்தவ மதம் மாறிய பழங்குடியினப் பெண்கள மீது நடத்திய மதவெறி தாக்குதல்கள், கர்நாடகாவில் நட்சத்திர ஓட்டலில் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் உள்நுழைந்து அங்கிருந்த பெண்களை நிர்வாணமாக ஓட ஓட விரட்டிய சம்பவத்தில் அக்குண்டர்களைத் தடுக்கவோ, கைது செய்யவோ முன்வரவில்லை. பட்டப்பகலில் நடக்கும் ஒரு பாலியல் தாக்குதலைக்கூட தடுக்க முன்வராத இத்தகைய போலீசிடம்தான், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டத்தை அமலாக்கவும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆணாதிக்கத் திமிர்த்தனத்தில் ஊறிப்போயுள்ள நீதித்துறையிடம்தான் பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

 சமூகத்தில் நிலவும் வன்முறைகளைப் பார்த்த அதேசமயம், அரச வடிவில் நிகழும் வன்முறைகளையும் நாம் ஆழமாகப் பார்க்கையில், 1984ல் இந்திராவின் இறப்பின்போது காங்கிரஸ் கட்சிக்காரர்களால் பல சீக்கிய பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். அதேபோல் காஷ்மீர், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநில தேசிய விடுதலைப் போராட்டங்களின் காரணமாக அங்கு தினம் தினம் பெண்கள் பல்வேறு வடிவங்களில் துன்புறுத்தலை சந்திக்கின்றனர். 1991ல் குனான் போஷ்பாரா என்கிற கிராமத்தில் மட்டும் 18 வயது முதல் 80வயது வரையுள்ள அனைத்து பெண்களும் ராஜஸ்தான் ரைபிள் படையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர், ஷோபியா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2011ல் சோனிசோரி என்ற ஆசிரியையை மாவோயிஸ்ட் என்று கைதுசெய்து சத்தீஸ்கர் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலைப்படையின் தீவிரவாதி என்று பங்ஜம் மனோரமா என்ற பெண்மணியை ராணுவத்தினர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தால் 10க்கும் மேற்பட்ட மணிப்பூர் பெண்கள் “இந்திய ராணுவமே எங்களை பலாத்காரம் செய்“ என்ற பதாகையை ஏந்தியவாறு நிர்வாணமான போராட்டத்தின் மூலம், ராணுவத்தை நோக்கி முழக்கமிட இந்திய ராணுவத்தின் அயோக்கியத்தனத்தை உலகமே பார்த்ததில் இந்தியாவின் ஜனநாயகமும், பாதுகாப்பும் வெட்கித்தலைகுனிந்தது.

இங்குமட்டுமல்ல, இலங்கையில் சிங்களபேரினவாதத்துடன் கூட்டுசேர்ந்து இந்திய ராணுவமே தமிழ்மக்கள் மீது நடத்திய போரில் இனவெறிகொண்ட சிங்கள ராணுவம், கொல்லப்பட்ட ஈழத்து பெண் போராளிகளின் உடலையும், தாய்மார்களையும் வெறித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்தது. இன்றும் வதை முகாம்களில் 4000 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. வரலாற்றில் வீரமிக்க பெண்மணிகளாய் தம் இன விடுதலைக்கு களம் கண்ட பெண்போராளிகள் இன்று எதிரியின் கையில் சிக்கியதில் அவர்களின் வீரத்திற்கு, காமவெறியாக உமிழ்ந்துள்ளான் என்பதைத்தான் இறந்துபோன உடலின் மீது சிங்கள மிருகம் பாய்ந்துள்ள கொடூரம் நமக்கு உணர்த்துகிறது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்திலும் காவல்துறையின், சிறப்பு அதிரடிப்படையின் அட்டூழியத்தை வெளிக்கொணர்ந்த சம்பவங்கள் ஏராளம். குறிப்பாக 1989ல் நடந்த தேன்கனிக்கோட்டை கல்பனா சுமதி, செஞ்சி ரீட்டாமேரி, சிதம்பரம் பத்மினி, சென்னை சாந்தி, வாச்சாத்தியில் 130 பெண்கள், திருக்கோவிலூர் 5 இருளர் பெண்கள், என அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் குற்றம் செய்தால் அரசையும் நீதிமன்றத்தையும் தண்டிக்கக் கோரி போராடும் மேல்தட்டு, நடுத்தரவர்க்க சக்திகள் அரசே நடத்தும் இதுபோன்ற பயங்கரவாத செயலுக்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் மௌனம் காப்பதன் மூலம் தனது வர்க்க நலனை நிலைநாட்டுகிறார்கள்.

மேலும், பெண்களின் மீதான வன்முறைகள், ஒடுக்குமுறைகளைப் பற்றி பேசும் தளங்களிலேயே பண்பாட்டுத் தளங்கள்தான் முதன்மை பாத்திரம் வகிக்கிறது. நாம் முன்னெடுக்க வேண்டிய களமாகவும் இவை இருக்கிறது. அவற்றில் திரைப்படங்கள், பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இலக்கியங்கள், கதைகள், பத்திரிகைகள், இசை நிகழ்ச்சிகள் என பெண்ணின் உடலையும், அழகியலையும் சரக்காக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஒப்புதலுடன் இண்டர்நெட்டில் உலவும் போர்னோகிராபி, புளுஃபிலிம் போன்ற காட்சிகள் கூடுதலாக மனிதன் தவறுகளை இழைக்கவே வழிவகுக்கிறது. இதுமட்டுமின்றி முதலாளியம் நுகர்வுப்பண்பாட்டினை ஊக்குவிப்பதன் மூலம் தனது சரக்குப்பொருட்கள் விற்பனையில் மூலதனத்தை பெருக்கிட அழகியல் சார்ந்த கோட்பாட்டை மனித வாழ்வியலாக நிர்ணயம் செய்கிறது. அதன் விளைவாய் இன்று அழகுக்கு முக்கியத்தவம் கொடுக்கப்படுவதும், ஒவ்வொரு மனிதரையும் அழகியல் சார்ந்து மதிப்பிடுவதும் என்ற மனோபாவம் மக்கள் மத்தியில் அதிரித்திருக்கிறது. மாறிவரும் உலக நிலைமைக்கு ஏற்ப தன் வாழ்க்கைச் சூழலை மாற்றிக்கொள்ள மக்கள் முயற்சிக்கும்போது அதனை பயன்படுத்தி லாபத்தை ஈட்டும் உத்தியை நடைமுறையாக்குகிறது. ஏற்கனவே நிலவிவந்த நிலவுடமைக் கட்டுக்கோப்பு வாழ்க்கைமுறை சிறிது உடைந்து வளர்ந்துவரும் ஏகாதிபத்தியம் தனது நிதி மூலதனத்தை விரிவிபடுத்திட அனைத்தையும் வியாபாரமாக்கும் நோக்கில் ஓழுங்கற்ற பண்பாட்டை ஊக்குவிக்கிறது. அதன் அடிப்படை அம்சமாக தான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், எதையும் அனுபவிக்கலாம் என்ற வாழ்க்கை முறை கொண்ட உதிரித்தனத்தில் பெரும் மக்கள் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

இன்னொரு அம்சம், உலகமயமாக்கல் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, உணவு நெருக்கடி, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள சிதைவுகள் போன்ற காரணங்களால் மக்கள் வேலைத்தேடி கிராமம், நகரம் விட்டு புதிய இடங்களுக்கு அதிகளவு புலம்பெயர்ந்து வருகிறார்கள். அப்படி பொருளாதார நெருக்கடியிலும், வறுமையிலும் சிக்கி குடும்பத்தை நடத்தமுடியாமல் சிறு கூடாரங்களாகவோ, நெரிசலான வட்டாரங்களுக்குள்ளாகவோத்தான் இவர்கள் தங்கள் வாழ்க்கை இருப்பிடத்தை அமைத்துக் கொள்கிறார்கள். இதுபோன்று வாழ்கைச்சூழல், குடும்பத்தை பிரிந்த புதிய வாழ்க்கைமுறை, நகர்ப்புற நவீன கலாச்சாரத்திற்கு மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். இத்தகைய பின்புலங்களும் பெண்கள், சிறுமிகள் மீது நடக்கும் வன்முறைகளுக்கு காரணங்களாகின்றன. அதுவும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் என்பது 2 ஆண்டுகளாக கூடுதலாகியுள்ளது. 2001-2011-க்குள் சிறுமிகள், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 336 மடங்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அளிக்கிறது. தமிழகத்தில் 2011 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 484 பாலியல் பலாத்கார குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2012 இல் இது 528 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 75 சதவீதத்துக்கும் மேலான குற்றங்கள் சென்னை நகரத்தில் பதிவாகியுள்ளன. சிறுமிகள் மட்டுமின்றி சிறுவர்கள், திருநங்கைகள் ஆகியோர் இதுபோன்ற சூழலில் பாதிக்கப்படுகின்றனர்.

அரசின் வன்முறையைப் பற்றி பேசும்போது குற்றங்களை தடுக்க கொண்டுவந்துள்ள சட்டத்தையும் நாம் பேசியாக வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு பல சட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. உடன்கட்டை தடுப்பு சட்டம், பிறப்புக்கு முன் செய்யப்படும் கருத்தரிப்பு தடை சட்டம், குடும்ப வன்முறைத்தடுப்புச்சட்டம், வீட்டுவேலைசெய்யும் பெண்கள் மீதான வன்முறைத் தடுப்புச் சட்ட மசோதா, (இன்னும் சட்டமாக்கப்படவில்லை) பெண்களை அநாகரீகமாக சித்தரிக்கும் சட்டம், ஈவ்டீசிங் சட்டம், இப்போது அரசு கொண்டுவந்துள்ள சட்டம் ஒழுங்கு தடுப்பு சட்டம் 2011, போன்ற சட்டங்களும் பல முறை ஏற்படுத்திய கமிசன்களும் ஏற்கனவே இருந்துவருகின்றன. இதுவரை மேலே பார்த்த வன்முறைகளில் சட்டங்கள் பெண்களின் சிக்கல்களை சரியாக கையாள்கிறதா அவை கையாளும் விதம் இன்னும் குற்றங்கள் அதிகரிக்கிறதா என்பதை உணரமுடியும். அரசு இதுபோன்ற குற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டுவந்தாலும் அதனை கீழ்மட்டம் வரை நடைமுறைப்படுத்துவதிலும், அதற்கான நெறிமுறைகளையும் உருவாக்காமல் அதே ஆணாதிக்க அதிகார மனோபாவத்துடன் கையாளுவதால் எத்தனை சட்டங்கள் இருந்தும், கமிசன்கள் இருந்தும், இன்று வர்மா ஆணைய அறிக்கைக்கு நிகழ்ந்ததுபோல்தான் புறந்தள்ளப்பட்டு பயனில்லாமல் கிடப்பில் போடப்படும் நிலையைத்தான் நிரூபிக்கிறது.

வர்மா கமிட்டி பரிந்துரைகள்

பெண்களின் மீதான குற்றங்களை தடுப்பதற்கான 326 பக்கங்களைக்கொண்ட வர்மா ஆணையப் பரிந்துரைகள் இன்றைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. மிக நுணுக்கமான வகையில் பல்வேறு கோணங்களில் இருந்து பெண்ணுக்கான உரிமையை, அடிப்படை வாழ்வை, தனிமனித சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையிலும் அலசி ஆராய்ந்துள்ளது. பாலியல் வன்கொடுமை என்பது பற்றிய இதுவரையிலான பொதுப் புரிதலை, ஆணாதிக்க கருத்து நிலையை, வர்மா ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, பெண்ணின் சுதந்திரத்தை, அவளின் பாலியல் தேர்வு உள்ளிட்ட சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற கோணத்தில் இருந்து பாலியல் வன்கொடுமையை வர்மா ஆணையம் அணுகியிருக்கிறது.

ஒரு பெண் ஒப்புக்கொள்ளாத எந்தவொரு பாலியல் நடவடிக்கையும், அவளை கட்டாயப்படுத்தலும் பாலியல் வன்கொடுமைதான் என்று வர்மா ஆணையம் முன்வைக்கிறது. மேலும், அந்தக் குற்றத்தை எவர் புரிந்திருந்தாலும் அவர் இராணுவ வீரராக, காவல்துறை அதிகாரியாக, நீதிபதியாக, அரசியல்வாதியாக எவர் புரிந்திருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பித்து விடக்கூடாது என்பதிலிருந்து வர்மா ஆணையம் துவங்குகிறது. மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யாத காவல் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறைதண்டனை என கோருகிறது. அதேபோல் நீதிபதிகளோ, ராணுவ அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கிறது. இன்றளவும் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக நீதிமன்றத்தில் விசாரிப்பதும், சாட்சியங்களை பாதுகாக்க முடியாமல் போவதால் பல வழக்குகள் திரும்பப்பெறும் சூழ்நிலையே நிலவுகிறது. மிகவும் மோசமான சோதனைமுறையை பெண்ணின் மீதே செலுத்தப்படும் இரண்டு விரல் சோதனை பெண்ணை இழிவுபடுத்தி, சந்தேகிக்கும் முறையாக இருந்துவருகிறது. இதனால் குற்றவாளிகள் எளிமையாக தப்பிக்க வழிவகை செய்கிறது இன்றைய நீதிமன்ற விசாரணைகள். இதனை முற்றிலும மறுத்து ஒதுக்குகிறது வர்மா பரிந்துரை.

இவற்றில் முக்கிய அம்சம் சமூகத்தில் நிலவும் ஆண் பெண் சமத்துவமின்மை, பெண்ணை பற்றிய ஆணின், சமூகத்தின் பார்வை, மதிப்பீடுகள், பொருளாதார ரீதியில் ஆணுக்கு நிகராய் இல்லாத பாகுபாட்டை சுட்டிக்காட்டுகிறது. வர்மா ஆணையமானது சட்டரீதியிலான சீர்திருத்தத்தை முன்வைத்துள்ளதை நாம் பாராட்டியே ஆகவேண்டும். மற்றொரு முக்கிய அம்சம் இதுபோன்ற பெண்களின் மீது நடக்கும் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் இந்திய அரசின் நிர்வாக சீர்கேடே காரணம் எனவும் சுட்டிக்காட்டுகிறது.

ஆனால், சமூக நோக்கில் பெண்களின் சிக்கல்களை ஆராய்ந்துள்ள வர்மா கமிட்டியின் பரிந்துரையை ஒதுக்கி விட்டு, அதனை திசைதிருப்புவதற்காகவே அவசரசட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. குற்றம் செய்த அனைத்து பிரிவினரையும் தண்டிப்பதற்கான அத்தனை கூறுகளும் உள்ளடங்கிய பரிந்துரையை முற்றிலும் புறக்கணித்து குற்றங்களை பாதுகாக்கும் மோசடி செயலை செய்துள்ளது. அதற்கு வக்காளத்து வாங்கும் ப. சிதம்பரமோ அவை மத்திய சட்ட அமைச்சகத்தில் வைத்து விவாதித்துவிட்டு சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளுக்குப் பின்புதான் அதனை நிறைவேற்ற முடியும் என்றும், அப்பரிந்துரையில் இந்திய அரசின் ராணுவத்தை தண்டனைக்குட்படுத்தும் அம்சங்கள் இருந்ததை பார்த்து இதுபோல் ராணுவ வீரர்களை எல்லாம் தண்டிக்கமுடியாது என்று கூறினார். இதற்கெதிராக வர்மா பரிந்துரையை உடனடியாக அமல்படுத்தக்கோரி பல்வேறு பெண்கள், பெண்கள் அமைப்புகள், சமூக உணர்வாளர்கள், அரசியல் இயக்கங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குற்றவியல் சட்டதிருத்த மசோதாவை (2013) விவாதத்திற்கு விட்டு பெரும்பான்மை கருத்துடன் நிறைவேற்றியுள்ளது.

வர்மா பரிந்துரைத்துள்ள முக்கிய அம்சமான ஒருவர் தன் பாலுறவுக்கு விருப்பம் தெரிவிக்கும் வயது வரம்பு 16 ஆக மாற்றவேண்டும் என்ற திருத்தத்தை முன்வைத்திருந்தது. ஆனால் மத்திய அரசு அதனை 18 ஆக மாற்றியுள்ளது. இன்றைய அறிவியல் வளர்ச்சி, வேகமான வாழ்க்கை முறை புதிய கண்டுபிடிப்புகள் என மனித சிந்தனை ஓட்டம் கடந்த தலைமுறையைவிட இன்று பெரும் மாறுதலுக்குள்ளாகியுள்ளதைக் கணக்கில்கொண்டு வயதை 16 என நிர்ணயித்துள்ளது. ஆனால் நிலவுடமை பிற்போக்குவாதிகளோ தாங்கள் கட்டிக்காத்துவரும் இந்துத்துவ கலாச்சாரம் சிதறிப்போகுமோ என்ற அச்சத்தில் 18 என நிர்ணயிக்கின்றனர்.

மேலும் “காப்“ போன்ற பஞ்சாயத்துக்கள் சட்டவிரோதமானவை அவற்றை தடைசெய்ய வேண்டும் என்ற அம்சத்தை முன்வைத்தது அவற்றையும் அரசு கண்டுகொள்ளவில்லை. அதேபோல் வன்புணர்ச்சி செய்தவனுக்கு தூக்குதண்டனை அளிக்கக்கூடாது, அவற்றால் இக்குற்றங்களை தடுத்திட முடியாது இந்திய தண்டனைச் சட்டங்களே அதற்கு போதுமானது அதனை கடுமையாக கையாளாமல் போனதற்கு அரசே முழு பொறுப்பு என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது.

ஆனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குற்றவியல் சட்டத்தில், பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை அளிக்கவேண்டும் என்று சட்டதிருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற சட்டங்களை கடுமையாக்கினால் குற்றங்கள் குறையும் என்ற கோணத்தில் மட்டுமே பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அணுகும் முறையானது மீண்டும் குற்றங்களைத் தடுத்திட வழிவகுக்காது என்பதையே காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் 33சதவீத இடஒதுக்கீடு அரசியலில் பெண்களுக்கான அதிகாரப்பகிர்வு என்பதையே 70களிலிருந்து இன்றும் அமல்படுத்தமுடியாமல் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கும் வேளையில், சட்டம் ஒழுங்கு சிக்கலாக மட்டுமே சுருக்கி பார்க்கும் மத்திய அரசின் செயல் புரையோடிப்போயுள்ள ஆணாதிக்க கருத்தியலுக்கு உதவிகரமாக அமையுமே தவிர சமூகத்தில் கருத்தியல்கள் மாறாது. ஏனென்றால் இந்த அரச கட்டமைப்பும், பண்பாட்டு ஒழுக்க நெறிகளும், எத்தகைய கமிசன்கள் அமைத்தாலும் அதனை சார்ந்துதான் அவை செயல்படவேண்டிய நிலை இருக்கிறது.

இத்தகைய சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள வர்மா ஆணையம்கூட, இச்சமூகத்தின் அடிப்படை பொருளாதார காரணிகளையோ, வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகமய, தாராளமயமாக்கலில், பெண் எப்படி ஒரு பாலியல் பண்டமாக முதலாளித்துவத்தால் விற்கப்படுகிறாள் என்ற அடிப்படைக் கண்ணோட்டத்திலிருந்து சட்ட திருத்தத்தை முன்வைத்திருக்க வேண்டும். காரணம், மனித சமுகம் தோன்றிய காலத்தில் தாய் வழிச்சமூகமாக வாழ்ந்த பெண்ணின் வாழ்க்கை மாறி, சமூக வளர்ச்சிப்படிநிலையில், உழைப்புப் பிரிவினையோடுகூடிய வேலைப்பிரிவினையுடன் தனிச்சொத்துடமையும், அதை பாதுகாக்க அதிகாரமும் வாரிசும், உருவானதோ, அன்றே அப்பெண் ஒவ்வொரு ஆணின் பார்வையில் அவள் கீழானவளாக மாற்றப்பட்டாள் என்ற கோணத்திலிருந்து அணுகியிருக்கவேண்டும். ஏனெனில் சொத்துரிமைச் சட்டங்கள் இருந்தும் குடும்பங்களில் சண்டையிட்டு நீதிமன்றத்திற்கு சென்றுதான் தனக்கான சொத்தை பெண்கள் பெறும் நிலைதான் இன்றும் நீடிக்கிறது. எப்பொழுது ஆண் வாரிசுரிமை சார்ந்த பொருளாதார பாகுபாடு அஸ்திவாரமாக்கப்பட்டதோ, அன்றிலிருந்து அவள் அதிகாரமற்றவளாக இரண்டாம் குடிமகளாக உருவாக்கப்படுகிறாள் என்பதை இவை நிரூபிக்கிறது.

குழந்தைகளை தோளில் சுமந்து முரட்டுத்தனமான தைரியத்துடன் வேட்டையாடி தன் குலத்திற்கு உணவை கொடுத்தவள், இன்றும் அனைத்துத் துறைகளிலும் தன் பங்கை நிறுவிக்கொண்டிருப்பவளை, பலமில்லாதவள், சமூக உற்பத்தியில் அவள் பயன்பெறாதவள் என்று ஒதுக்கப்பட்டு, வெறும் மோகப்பொருளாக சித்தரிக்கும் மனப்பான்மை எங்கிருந்து வந்தது? இந்த பாகுபாடு எப்படி உருவானது? இதற்கும் இன்றைய சமூக வளர்ச்சிக்கும் உள்ள உறவு என்ன? என்பதற்கான மாற்றை வர்மா ஆணையம் சட்டத்திருத்தத்தில் முன்வைத்திருக்க வேண்டும். ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அச்சமூகத்தின் உற்பத்தி வளர்ச்சியில், அரசியலில் ஆணுக்கு நிகராக பெண்கள் எத்தகைய சமமான பங்கு வகிக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கான பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளதையும் பொறுத்துத்தான் அச்சமூகத்தின் வளர்ச்சி அமைந்துள்ளது. வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை வரவேற்கிற அதேவேளையில் அவை சட்ட சீர்திருத்தத்தை கோருவதுகூட, சமூக பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான அடிப்படையாக வர்மா ஆணையத்தின் அறிக்கை அமைந்திருக்க வேண்டும்.

இதற்கான தற்காலிக தீர்வுகளாக

  • பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில் அந்தந்த காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும் என்ற நிபந்தனையை கொண்டுவர வேண்டும். அப்படி செய்யாத அதிகாரிக்கு வர்மா ஆணைய பரிந்துரையை அமல்படுத்த அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் கட்டாயம் சாட்சியத்தை காண்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கவேண்டும். இரண்டுவிரல் சோதனை முறையை உடனடியாக தடைசெய்யவேண்டும்.
  • சிறுமியர், சிறுவர் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து, அவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உறுதிசெய்ய வேண்டும்.
  • பொது இடங்களிலும், பணியிடங்களிலும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசு மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும். பாலியல் வன்முறைகளைத் தடுத்திடும் வகையில் தமிழகத்தில் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்.
  • பெண்கள்மீது நடத்தப்படும் அமிலத்தாக்குதலை தடுத்திட அரசு விற்பனை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அதற்கான சிறப்புச்சட்டங்களை இயற்ற வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிறப்பு மருத்துவ சிகிச்சையையும், அவர்களுக்கான வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் வழங்கிட அரசே பொறுப்பேற்க வேண்டும்.
  • வர்மாக கமிட்டிகள் முன்வைக்கும் அனைத்து பரிந்துரைகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • பெண்ணைச் சித்தரிக்கும் ஆபாச படங்கள், பாடல்கள், பாலியல் காட்சிகள், போர்னோகிராபி இணையதளங்கள், போன்றவற்றை நீக்க வேண்டும்.
  • தொழில் நிறுவனங்களுக்கு பெண்ணை காட்சிப்பொருளாக விளம்பரத்திற்கு பயன்படுத்தகூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும். அழகிப்போட்டிகளை தடை செய்ய வேண்டும்.
  • பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக தகவல் அளிக்கும் விதமாக தொலைபேசி சேவை மையத்தை அமல்படுத்த வேண்டும். அதற்கான நிர்வாகமுறையை உருவாக்க வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விரைவு நீதிமன்றங்கள் அமைத்து வழக்குகளை விசாரிக்க வேண்டும்.
  • பெண்ணை பற்றிய மதிப்பீடுகள், பால்பாகுபாட்டு கண்ணோட்டங்கள் உடைவதற்கான கருத்தியல் பிரச்சாரங்களை பள்ளி முதல் கல்லூரிகள், மக்கள் வரை கொண்டு செல்வதற்கான பாடமுறையை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.

பெண்களுக்கான ஜனநாயகமும், விடுதலைக்கான தீர்வுகளும்,

மேற்கண்ட குறிப்பான அம்சங்களோடு இச்சமூகத்தில் பெண்கள் பல்வேறு தளங்களில் எதிர்கொள்ளும் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளை ஆராய்ந்தோம். இச்சிக்கல்களை தற்காலிக தீர்வுகளால் தடுக்கமுடியுமேதவிர, மாறாக பெண்களுக்கான சமத்துவத்தை, ஜனநாயக உரிமையை இத்தீர்வுகளே தீர்த்திடாது. பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் என்பது இச்சமூகப் படிநிலையில் எங்கெல்ஸ் முன்வைத்துள்ளதுபோல் வர்க்க முரண்பாடுகள் தோன்றி, தனிச்சொத்துடமையும், ஆதிக்க அதிகாரமும் உருவான காலகட்டத்தில் சொத்துக்கான வாரிசாக ஆணை தேர்வுசெய்து ஆண் தலைவனாகவும், பெண் குடும்பத்தை கவனிப்பதற்கும் என்ற முதல் வர்க்க வேலைப்பிரிவினை உருவானதோ அன்று பெண் அடிமையாக்கப்பட்டாள். ஆக வர்க்க முரண்பாடு, சொத்துடமை, அதனை பாதுகாக்கும் குடும்பம், ஆதிக்கத்திற்கான அரசு ஆகிய கூறுகளோடு இணைந்ததாக பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளைக் கையாள வேண்டியிருக்கிறது. இம்முரண்பாடு நிலவுடமை உற்பத்தியோடு, முதலாளிய உற்பத்தியும் இணைந்த அதனை நிறுவனமயமாக்கும் அடித்தளத்தோடு பிணைக்கப்பட்ட ஒன்று. ஆக, இச்சமூக அமைப்பின் மூலத்தோடு பெண்களின் சிக்கல்கள் சம்பந்தபட்டிருப்பதால் சமூக மாற்றத்தோடுதான் தீர்க்க முடியும்.

வெறும் பெண்களுக்கான பால் சமத்துவத்தைக் கோருவதும், ஆண் மட்டும்தான் காரணம் என்று ஆணை எதிரியாக முன்நிறுத்தும் கருத்தியலும், நடுத்தரவர்க்க மேல்தட்டுப் பிரிவினர் வலியுறுத்துவதுபோல், சட்டங்களிலேயே பெண்ணின் உரிமையை சமத்துவத்தை நிலைநாட்டிடலாம் என்ற கருத்தியல் பார்வையும் பெண்ணிற்கான சமத்துவத்தை, விடுதலையை பெற்றிட முடியாது. தனித்து பெண்கள் பிரிவினர் மட்டும் போராடி பெண்விடுதலையை பெற்றிடுவதும் சாத்தியமில்லை. அவை ஆண்களோடு, ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்த வர்க்க, சமூக, ஜனநாயகத்தோடு கூடிய தேச விடுதலைக்கான அதிகாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகத்தான் இதனை அணுக முடியும். அவற்றின் மூலம்தான் பால்பாகுபாடற்ற சமூகத்தை படைக்க முடியும் என்கிற மார்க்சிய கண்ணோட்டத்தோடு, பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுத்திடும் விதமாக பண்பாட்டுக் கருத்தியல் தளங்களில், ஆண்கள் மத்தியில், விவாதங்களைக் கட்டியெழுப்புவோம். பெண்ணின் மீதான பண்பாட்டுத் தாக்குதலுக்கு எதிராகவும், அதிகரித்துவரும் ஏகாதிபத்திய சீரழிவு கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டங்களையும், பெண்ணின் அடிப்படை உரிமைக்கான ஜனநாயகக் கோரிக்கைகளையும் முன்னெடுப்போம்.

- ஆசாதி, மக்கள் விடுதலை ஆசிரியர் குழு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Pin It