ஒரு சகாப்தத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள், அந்தச் சகாப்தத்தின் அதிகார வர்க்கக் கருத்துக்கள்தான் என்கிறது மார்க்சியம். உண்மைதான், இந்தியச் சமூகத்தின் கருத்துக்கள், கண்ணோட்டங்கள், விமர்ச்சனங்கள், புரிதல்கள், நம்பிக்கைகள் என அனைத்தும் சாதி-இந்துக்களுடையதாகவே இருக்கின்றன.

சாதி-இந்துக்களால், எங்கள் வீடுகளுகள் தீவைக்கப்படுகின்றன, உடமைகள் கொள்ளையடிக்கப்ப‌டுகின்றன, இளைஞர்கள் தாக்கப்படுகின்றோம், பெண்கள் கற்பழிக்கப்படுகின்றோம், காவல்துறை வழக்குகளை ஏற்க மறுக்கின்றது - தொலைகாட்சி ஊடகங்கள் "வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தேவைதானா" என்றே விவாதம் நடத்துகின்றன. "அதைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்களா....?" என்று எங்கள் தலைவர்களின் மென்னியைப் பிடித்துக் கேட்கின்றன.

dharmapuri_attack_641

எங்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள்கூட, சாதி இந்துக்களுக்கான மேடையாகவே மாற்றப்படுகின்றன. வன்முறைக்குக் காரணம் "சாதிவெறிதான்" என்று எவ்வளவு வெளிப்படையாகத் தெரிந்தாலும், ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என்று புலன்-விசாரணை செய்து, நடத்தப்பட்ட அக்கிரமத்திற்கு வெட்டி நியாயங்கள் தேடப்படுகின்றன.

சட்டத்திற்குப் புறம்பான, காட்டுமிராண்டித்தனமான, அறம்கெட்ட சாதி இந்துக்களின் விலங்குச் செயல்களை நியாயப்படுத்த, சட்டத்திற்குட்பட்ட, நியாமான, எங்களின் மனித உணர்வோ உரிமையோ கூட போதுமான காரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சாதியத்தில் புழுத்துப்போன பொது புத்தியின் கருத்துகளும் எண்ணங்களும், குற்றம் எங்களுடையது என்று தீர்மானிப்பதையே இயல்பாகக் கொண்டிருக்கின்றன.

சாதியச் சிக்கல் என்பது, தாழ்த்தப்பட்டோருக்கான சிக்கலாகவும், தாழ்த்தப்பட்டோரால் விளையும் சிக்கலாகவும் திட்டமிட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது. இதில் சாதி இந்துவோ பொதுச் சமூகமோ மாற்றிக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதாகவும் வலிந்து நம்பப்படுகின்றது. இந்தப் பாழாய்ப்போன சமூகத்தில், முற்போக்காளர்களின் பாத்திரம், ஒடுக்கப்படும் எங்கள் வீடுகளில் இழவு விழுந்தால் ஒப்பாரி வைப்பதும், போராட்டங்களை நொட்டை சொல்வதுமாக இருக்கின்றது.

இதைத்தான் அம்பேத்கர் "தீண்டப்படாதவர்கள் பிரச்சனைகள் பற்றி கவலை தெரிவிப்பவர்கள் (கூட), தீண்டப்படாதவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று ஓலமிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்களே தவிர, சாதி இந்துக்களை மாற்ற ஏதாவது செய்வோம் என்று சொல்வது அரிதாக இருக்கின்றது" என்று குறிப்பிட்டார். ஆனால், உண்மை அதையும் விட உக்கிரமானதாகவே இருக்கின்றது. குற்றமிழைக்கும் சாதி இந்துக்கள் இங்கு செல்லமாகப் பராமரிக்கப்படுகின்றனர். ஒடுக்கப்படும் எங்கள் மக்களின் போராட்டங்கள் கூட அவர்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் எதிர்பார்ப்பில் மண் விழட்டும்! "தலித்துக்கு வீடில்லை; சாக்கடையில் வசிக்கிறான், சோறில்லை; பட்டினி கிடக்கின்றான், ஆடையில்லை; அம்மணமாக இருக்கின்றான்" என்று சாதி இந்துக்களின் கற்பனைக் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் எழுத்துக்கள், இனியும் இந்தச் சமூகத்திற்குப் பார்க்க கிடைக்காது. ஊடகங்கள், முற்போக்காளர்கள் உள்ளிட்ட பொதுச் சமூகத்தால் கொம்பு சீவிவிடப்படும் சாதி-இந்துவின் 'சமூகப் பாத்திரத்தை'க் கூறுபோட்டுப் பார்க்கப் போகின்றோம். ஏனெனில், "தீண்டப்படாதவர்கள் பிரச்சனை சாராம்சத்தில் ஒரு சாதி-இந்துக்கள் பிரச்சனைதான்" –அம்பேத்கர்.

செல்லப் பிள்ளைகளின் சிக்கல்

இந்தச் செல்லப் பிள்ளைகளின் சண்டித்தனம், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. மாறிவரும் சூழலுக்கேற்ப தனது கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் கூட மாற்றிக் கொள்ளாமல், அனைத்துக் காலங்களிலும் பார்ப்பனியத்தை இறுகப் பற்றி வட்டமடித்துக் கொண்டுள்ளது.

சாதி உருவான காலம் தொட்டே சாதி எதிர்ப்புக் கருத்துக்கள் நிலவி வந்தபோதிலும், இன்றளவும் சாதி இந்துச் சமூகத்திற்குள், விடுதலைக் கருத்துக்களால், ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாதது தற்செயலானது அல்ல. சமூகக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக்கொண்ட சாதி இந்துவின் 'ஆயிரமாண்டு கால நிலைப்பாடு’ உளவியல் பண்பாகவும் வெளிப்படுகின்றது. இது அவனுள் இயக்க மந்த நிலையையே உருவாக்கியுள்ளது. ஒரு சாதி-இந்து இயங்கியலைப் பொய்ப்பிக்காமல் இருப்பது, அவன் வயதாகிச் செத்துப் போகிறான் என்பதால் மட்டுமே.

மாற்றுக் கருத்துகளை அனுமதிக்காத, சாதி இந்துவின் மனநிலை அல்லது மந்தநிலை, தனக்குத் தொடர்பேயில்லாத வேற்று நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கருத்துக்களைக்கூட, அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை. உதராணமாக, கருப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக, ஒரு சாதி இந்துவிடம் பேசும் போது, போராட்டத்தின் மீதான நொட்டைகளும், சமத்துவமில்லா நிலைக்கான வெட்டி நியாயங்களும் வந்து விழுவதையே பெரும்பாலான நேரங்களில் பார்க்க முடிகின்றது. "வேற்று நாட்டு விடுதலைக் கருத்துக்களை ஆதரிப்பதானது, தன் மண்ணில் தனக்கு எதிரான கருத்தாக மாறும் - என்ற எச்சரிக்கை உணர்வு....." என்றெல்லாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. 'அது'தான் அவனது உளவியல் பண்பு அவ்வளவே. கவனமாக, கிளுகிளுப்பு இலக்கியங்களை மட்டுமே மொழிபெயர்த்த, பார்ப்பன அறிவுஜீவிகளுக்கிருந்த எச்சரிக்கை உணர்வை, இந்த உளவியல் பண்போடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அம்பேத்கரை விடுங்கள், பெரியார்.. காரல் மார்க்ஸ்... என்றுகூட ஆரம்பித்துப் பாருங்கள்? உங்களைப் பார்த்து சிரித்துவிடுவான். நீங்கள் பிறப்பால் சாதி இந்துவாக இருந்தால் மட்டுமே, 'அவ்வளவு' தூரம்கூட சாத்தியம். "நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு..." என்பதுதான் அவன் உலகம். அது கீதா உபதேசம் என்று தெரிந்தால் நிச்சயம் மகிழ்வான். தன்னால் ஒடுக்கப்படுபவனின் குரல் அவன் செவிப்பறையைக் கிழித்தாலும், தன் உலகத்திற்கு எதிரான குரல் கேட்பதாக அவன் ஒருபோதும் நம்பமாட்டான். ஆனாலும் அது ஒலிக்காமல் இருப்பதில்லை!

சாதி; சாதியம்; சாதியச் சிக்கல்; (சாதியொழிப்பு கூட அல்ல) போன்ற சொற்கள் பொது இடங்களில் உச்சரிக்கப்படும் பொழுது, ஒரு சாதி இந்து, வந்த வழியை சபித்துக் கொள்கின்றான். அந்தச் சொற்கள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களின் நீதிக்காகவே, இப்படிப் பச்சையாக நிர்வாணமாக ஒலிக்கப்படும் என்பதை அவன் எப்போதும் புரிந்து வைத்திருக்கின்றான். அதற்கும் மேலாக அந்தச் சொற்கள் தன்னை நோக்கித்தான் முழங்கப்படுகின்றன என்பதைத்தான் ஒரு சாதி இந்துவால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களால் இப்படி சத்தமாக உச்சரிக்கப்படும் அல்லது காரி உமிழப்படும் "சாதி", தனக்கு சத்தமில்லாமல் சலுகைகளாகவும் அதிகாரமாகவும் இருக்கின்றது என்பதை அவன் ஒப்புக்கொள்ள நேரிடும் என்று அஞ்சுகின்றான். அங்கே அவனது மந்தநிலை அவனைக் காப்பாற்றிவிடுகின்றது. (எல்லா நேரங்களிலும் அல்ல)

dalit_woman_312அச்சு ஊடகங்களிளும் தொலைகாட்சி ஊடகங்களிலும் பெருமளவு புறக்கணிக்கப்பட்டிருந்த எங்கள் மக்களுக்கு, கட்டற்ற பதிவிடும் தளமாக இணையதளம் கைகொடுத்துள்ளது. அதிகாரமில்லாத, ஒடுக்கப்பட்ட, எங்கள் இளைஞர்களின் பச்சையான பதிவுகளை, தன் நடுவீட்டில் அமர்ந்து வாசிக்கும் ஒரு சாதி இந்து, விளக்கெண்ணையைக் குடித்ததுபோல் உணருகின்றான். இப்படி அவன் தொண்டைக்குழியிலேயே வைக்கப்படும் மருந்தானது, அவனைத் தொந்தரவு செய்யத் துவங்குகின்றது. சாதி-இந்து பேசத் துவங்குகின்றான் அல்லது பேச வைக்கப்படுகின்றான்.

மந்தநிலையின் ஸ்திரத் தன்மையும் வீரியமும்

சமூகம் பற்றிய, சாதி-இந்துவின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் 'சுவாரஸ்யமானவை'. சாதி இந்துக்களுக்கும் அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஒருவனின் பைத்தியம் ஆயிரக்கணக்கான பைத்தியங்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் இழந்துவிடுவதாகச் சொல்கிறார் Haward fast.

அவன் தனது முன்னோர்களை நினைத்துப் பெருமூச்சு விட்டபடிதான் பேசவே துவங்குகின்றான். 'எல்லாம் மாறிவிட்டது’ என்று வருத்தம் தெரிவிக்கின்றான். எல்லாத்தையும் மாற்ற வேண்டும் என்றும் சபதம் எடுத்துக் கொள்கின்றான்.

சிக்கல் எளிதானது. பிராமணங்கள் சொல்வது போல், பார்ப்பனனின் பிறப்புறுப்பு அக்கினியிலிருந்து தப்பிக்க, ஒரு மன்னன், பார்ப்பனனை தன் அரண்மனையின் அறைகளுக்குள் கட்டுப்பாடின்றி அனுமதிக்க அவசியமில்லை. ஏனென்றால் இன்று மன்னனுமில்லை அரண்மனையுமில்லை, அரண்மனைகளில் பெண்களும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம் பண்ணைக்குத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஏனென்றால் பண்ணையார்கள் பெரும்பாலும் தொழிலதிபர்களாகிவிட்டார்கள். சூத்திரனும் தீண்டப்படாதவனும் கல்வி கற்கலாம், யாரும் அவனது காதுகளில் ஈயத்தைக் காச்சி ஊத்தவோ நாக்கை வெட்டவோ மாட்டார்கள். ஏனென்றால் இன்று படித்த அடிமைகள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லாம் மாறிவிட்டது. சாதி இந்துவின் மந்தநிலையைத் தவிர! (ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி இந்துவிடம், சூத்திரர்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள் பதில்! சுவாரஸ்யமானதாக இருக்கும்) 

ஒரு சாதி இந்து தனது கேள்விக் கணைகளால், எவ்வளவு விஷயம் தெரிந்தவர்களையும் திக்குமுக்காடச் செய்து விடுகின்றான். அக்’கணைகளை’ அவன், தனது மந்தநிலையின் ஸ்திரத் தன்மையை நிறுவுவதாகவும், 'யாராலும் தனக்கு விளங்க வைக்க முடியாது’ எனும் திமிரோடும் தொடுப்பதே, விஷயம் தெரிந்தவர்களின் பரிதாப நிலைக்குக் காரணமாய் இருக்கின்றது.

முட்டிக்கிட்டுவரும் புரட்சிகர உணர்வை அவனால் கட்டுப்படுத்த முடிவதில்லை. விவாதம் என்ற பெயரில் தொலைகாட்சி ஊடகங்கள் நடத்தும், லாவணிக் கச்சேரிகளில் கலந்து கொள்கின்றான். "ஒரு செருப்புத் தைப்பவனுக்கோ சாக்கடை அள்ளுபவனுக்கோ, 'உங்கள்’ இடஒதுக்கீடு பயன்படுகிறதா..." என்று கொதிக்கின்றான். புரட்சியைத் தள்ளிப்போட முடியாது என்று அடக்க முடியாமல் துடிக்கின்றான். செருப்புத் தைப்பவனும் மலம் அள்ளுபவனும் யார் என்பதும், அவன் எதற்காக அப்படி இருக்கிறான் என்பதும், இதை ஒளிபரப்பும் ஊடகங்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் இந்தக் கேள்விகள்தான் நிகழ்ச்சிக்கான விளம்பரமாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படும். படித்த இளைஞர்களை இப்படி மடச் சமூகமாக வைத்திருப்பதில் முதலாளித்துவ+பார்ப்பன ஊடகங்களின் பங்கு அளப்பரிய‌‌தாக உள்ளது. அவன் ஒரு சாதி இந்துவாகவும் இருப்பதால் ’அது’ அவனுடைய இயல்பாகவும் இருந்துவிடுகின்றது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தக் கோரி, பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்கள்/அறிஞர்களும் போராடிக் கொண்டிருக்கையில், பிற்படுத்தப்பட்ட சாதி இந்து, படிக்கும் வேலை பார்க்கும் இடங்களில், இடஒதுக்கீட்டிற்கு எதிராக எங்கள் இளைஞர்களுடன் விவாதச் சண்டையில் இறங்குகின்றான். இட ஒதுக்கீட்டின் நியாயம் பற்றியோ பார்ப்பனியம் பற்றியோ அவனுக்கு விளக்க முயற்சிப்பவர்கள்தான் பாவம். உடனே "எங்கள் ஊரில் ஒரு அய்யர் இருக்கார்.... " என்று ஆரம்பித்து விடுவான். அவன் கண் முன்னால், கோடானகோடி தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டிருப்பார்கள். சாதிக் கொழுப்பிருந்தாலும் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் கூட வறிய நிலையில் வாடிக் கொண்டிருப்பார்கள்.... ஆனால், அந்த ஒத்த அய்யருக்காக அழுதே இவனுக்குக் காய்ச்சல் வந்துவிடும். பாவம் இந்த ஆனைமுத்து அய்யாக்கள்.  

பார்ப்பனர்களின் வாயாக இருந்து, எங்கள் மக்களை வேட்டையாடுவதையே தன் வாழ்நாள்ப் பணியாகச் செய்துவரும் சூத்திர-சாதி-இந்து, புரட்சி நமைச்சலில், "தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் தாழ்த்தவில்லை; 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறி தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்" என்ற தனது ஆராய்ச்சி முடிவை ’பிற்படுத்தப்பட்டவர்கள் / மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்’ பட்டியலில் இருந்துகொண்டு வெளியிடுகின்றான்.

இப்படி, சமூகத்தைப் பற்றி அடிப்படை அறிவே இல்லாத சாதி இந்து, குற்ற உணர்ச்சியில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு 18 நிமிடமும், எங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் மூன்று பெண்கள் கற்பழிக்கப்படுகின்றோம், இரண்டு பேர் கொல்லப்படுகின்றோம், இரண்டு வீடுகளைத் தீவைப்புகளில் இழக்கின்றோம். அத்தனையும் சாதி இந்துக்களின் சண்டித்தனத்தால்!

சங்கிலியும் சம்மட்டியும்

இந்தியப் பொதுச் சமூகம் என்பது தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரகவும், இந்தியப் பண்பாடு என்பது தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கலாகவும் இருப்பது, ஒரு சாதி இந்து, தனது மந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவசியமில்லாமல் செய்கின்றது. இதனால், ஒரு சாதி இந்து எங்கள் மீது எத்தகைய வன்முறையை நிகழ்த்தும்போதும் தன்னைக் குற்றவாளியாக உணருவதில்லை. என்னதான் சட்டரீதியாகத் தவறு என்றாலும், அரிதாகச் சில நேரங்களில் தண்டிக்கப்பட்டாலும், எங்கள் மக்களை கொலையோ கொள்ளையோ கற்பழிப்போ செய்த ஒரு சாதி இந்து, சமூக ரீதியாக வரவேற்கப்படுகின்றான். மந்த மனிதர்களுள் மாவீரனாக வளம்வருகின்றான்.

dalit_woman_480

எங்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துவதை, தனது சமூக உரிமையெனக் கருதும் சாதி இந்துவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாத வரை, வன்முறையால் ஒடுக்கப்படும் எங்கள் மக்களின் விடுதலை சுமூகமாக இருக்க வாய்ப்பில்லை. அடக்குமுறைகளுக்கு நிகரான போராட்டங்கள் இல்லாமல், ஒரு சாதி இந்து தன் நிலைப்பாட்டை பரிசீலனைகூட செய்யமாட்டான் என்பதே வரலாறு. சாதி இந்து மந்தநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நிச்சயமாக அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படுகின்றது. ஒரு அர்த்தத்தில், சாதி இந்துக்களின் விடுதலையே கூட தீண்டப்படாதவன் கைகளில்தான் உள்ளது. அது எங்கள் எதிர்க் கலகங்களில்தான் உள்ளது.

ஆனால், "வன்முறையை" உச்சகட்ட சமூக அதிகாரமாகப் புரிந்து வைத்திருக்கும் பொதுச் சமூகம், அது தற்காப்புக்காகக் கூட ஒடுக்கப்பட்ட மக்களால் கையாளப்படுவதை ஒரு போதும் விரும்புவதில்லை. சாதி இந்துக்களால், எங்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களையும் கற்பழிப்புகளையும் கொலைகளையும் கொள்ளைகளையும் தீவைப்புகளையும் "தாழ்த்தப்பட்ட/ பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகள்" என்றுகூட அடையாளப்படுத்த விரும்பாத ஊடகங்கள், எங்கள் மக்களின் எதிர்த் தாக்குதல்களை "சாதிக்-கலவரம்" என்று பெயர் சூட்டி, பொதுச் சமூகத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அதற்காக அவைகள் சிரமப்படுவதுமில்லை. நாங்கள் தாக்கப்படும் போது மௌனம் காக்கும் –இன்னும் சொல்லப்போனால் அந்த கொடுமைகளை உள்ளூர அதாரிக்கும்- பொதுச் சமூகம் எதிர்க் கலகத்தின் போது, அனைத்து வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு, ஓடிவந்து கருத்துச் சொல்லிச் செல்ல எப்போதும் தயாராகவே உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியின் மீதான, பொதுச் சமூகத்தின் விருப்பமின்மையே, வன்முறை தீர்வாகாது. வன்முறையை யார் செய்தாலும்... என்ன இருந்தாலும்... போன்ற நயமான குமுறல்களாக வந்து விழுகின்றன. "என்ன இருந்தாலும்... " என்ற phrase க்குப் பின்னால் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைச் சிந்திப்பதே கொடுமையாக இருக்கின்றது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை வன்முறையால் ஒடுக்கப்படுபவனின் எதிர்க் கலகங்கள் வன்முறையே அல்ல என்பதும்.

திட்டமிட்டு, சகல அதிகாரத்தோடு, பொது சமூகத்தின் ஆசிர்வாதத்தோடு, சாதி இந்துவால் விரும்பிச் செய்யப்படும் கொழுப்பெடுத்த வன்முறையையும், கையறு நிலையில் களமாடும் எங்கள் மக்களின் எதிர்க் கலகங்களையும், ஒரே அளவுகோளில் பார்க்கும் முற்போக்காளர்களின் நடுநிலைமை இந்நேரங்களில் அயோக்கியத்தனமானதாக இருக்கின்றது.

வர்ணத்தார் X பகாய்ஸ் (புறம்பானவர்கள்) என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாக காட்டுமிராண்டித்தனமாக ஒதுக்கப்பட்டு, வன்முறையால் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்க் கலகங்களுக்கு எதிரான முற்போக்காளர்களின் நிலைப்பாடு, அடிமட்ட சாதி வெறியனின் மனநிலையைவிட வஞ்சகமானது.

சாதி இந்துவிற்கு, சாதி வெறி ஊறிப்போய் உள்ளது... அவனைத் திருத்த முடியாது.... அவனிடம் பேச முடியாது..... என்று எங்கள் பக்கம் நின்றுகொண்டு, சாதி இந்துவிற்காகப் பேசும் ’எல்லாம் தெரிந்தவர்களும்’ - சாதியம் பற்றிய ஆராய்ச்சிகள் தெளிவாக இல்லை அல்லது தேவைப்படுகின்றது என்னும் அறிவுஜீவிகளும், எல்லா நேரங்களிலும் தப்பித்துக் கொள்ள முடியாது.

சகலமும் கிடைத்த சாதி இந்துவை மாற்றுச் சிந்தனைகள் தீண்டாதது வியப்பில்லை என்றால், ஒவ்வொரு கணமும், சொல்லிலும் செயலிலும் இருப்பிலும், நாடி நரம்பெல்லாம் தன் அடையாளத்தின் மீது கவனத்தைக் குவித்து வாழும் ஒரு தீண்டப்படாதவனுக்கு, அம்பேத்கரியத்தில், பெரியாரியத்தில், மார்க்சியத்தில் கிடைக்காத விடுதலை உணர்வு, தன் தெருவில் சண்டித்தனம் செய்யும் ஒரு சாதி இந்துவைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் போது கிடைப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது.

இந்துமத ஒழிப்போ, தேசிய விடுதலையோ, பண்பாட்டுப் புரட்சியோ, உற்பத்தி முறையில் புரட்சிகர மாற்றமோ எது தீர்வானாலும், எங்கள் மீது நிகழ்த்தப்படும் அன்றாட வன்முறைகளைப் பொறுத்துக் கொள்ளச் சொல்ல, எந்தச் சிந்தாந்தத்திற்கும் உரிமையில்லை என்று அறிவிக்கின்றோம்.

கவனம்! காலம் மாறிவிட்டது, தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது, இழப்பதற்கு ஏதுமில்லாத ஒடுக்கப்பட்ட மக்களின், திரளான பட்டுவாடாவிற்குப் பாரதம் தாங்காது!

______________________

(சாதி இந்து என்பதை, தனி மனிதனாகப் புரிந்துகொண்டு, ஆட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களின் உளவியல் பிரச்சனைக்கு நான் பொறுப்பல்ல)

- மதியவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It