தமிழக முதல்வருக்கு படைப்பாளிகள் வேண்டுகோள்

செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்புமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளைத் திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றக்கோரியும், குடும்பத்தாரோடு வாழ அனுமதிக்கக் கோரியும், செங்கல்பட்டு சிறப்புமுகாமில் உள்ள ஈழத் தமிழ் இளைஞர்கள் டிசம்பர் 23ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரை மேற்கொண்டுள்ளனர். உடல்நலிவடைந்த நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களை, மாவட்ட ஆட்சியர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, நல்லெண்ண அடிப்படையில், 11 பேர் போராட்டத்தைக் கைவிட சம்மதித்தனர். மீதியுள்ள 9 பேர் ஆட்சியரின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தைத் தொடருவர் என்று ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது.

உண்ணாநிலை அறப்போரைத் தொடரும் 9 பேரின் உடல்நிலை மோசமடைந்து வருவது கவலையளிக்கிறது. அவர்களது உடல்நலன் குறித்த கவலையோடும் அச்சத்தோடும், இந்த வேண்டுகோளை எங்கள் அனைவர் சார்பிலும் தமிழக முதல்வர் முன் வைக்கிறோம்.

கடந்த ஏழெட்டு மாதங்களில் சிறப்புமுகாம்களிலிருந்து தங்களைத் திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றக்கோரி செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாம்களைச் சேர்ந்த ஈழ உறவுகள் தொடர்ந்து உண்ணாநிலை போராட்டத்தை நடத்திவருகின்றனர். அதனால் அவர்களது உடல்நலன் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பது அரசுக்கு நிச்சயம் தெரியும். ஒவ்வொரு முறையும் சாவின் விளிம்புவரை அவர்களைக் கொண்டுசெல்வது - கடைசி நிமிடத்தில் வாக்குறுதி கொடுத்து போராட்டத்தைக் கைவிடச் செய்வது - அதன் பிறகு வாய்மொழியாக அதிகாரிகள் கொடுக்கும் வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறுவது - என்கிற அலட்சியப்போக்கு தொடர்கிறது. இதை மிகுந்த வருத்தத்துடன் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்.

மனிதநேய அடிப்படையில் தமிழக முதல்வர் இதில் நேரடியாகத் தலையிடவேண்டும். சிறப்புமுகாம் என்கிற தடுப்புமுகாம்களில் இருந்து திறந்தவெளி முகாம்களுக்கு ஈழத் தமிழ் உறவுகளை மாற்றவேண்டும். காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரைத் தொடர்வதால் உடல்நலிவடைந்திருக்கும் ஈழத்து உறவுகளைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முதல்வர் நேரடியாகத் தலையிட்டால் மட்டுமே, சிறப்புமுகாம் என்கிற கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்றும், அகதிகளை அதிதிகளாக (விருந்தினர்களாக) நடத்தவேண்டும் என்கிற சர்வதேச மரபைத் தமிழகம் காப்பாற்றமுடியும் என்றும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நன்றி!

என்றும் அன்புடன்,

புலவர் புலமைப்பித்தன், இயக்குநர் ஆர்.சி.சக்தி, கோவை ஞானி,

கவிஞர் இன்குலாப், கவிஞர் தாமரை, இயக்குநர் மணிவண்ணன்,

எழுத்தாளர் செயப்பிரகாசம், கவிஞர் முத்துலிங்கம், அறிவுமதி,

மாலதி மைத்ரி, சுகிர்தராணி, பழனிபாரதி, கவிபாஸ்கர்,

ஓவியர் டிராட்ஸ்கிமருது, வீரசந்தானம், சிற்பி பாஸ்கர்,

இயக்குநர் கௌதமன், புகழேந்திதங்கராஜ், சுப்பிரமணிய சிவா,

எழுத்தாளர் பாமரன், ராசேந்திரசோழன், கண குறிஞ்சி.

தேதி: 09.01.2013

Pin It