அணுசக்தி அல்லது அணுமின்சாரம் பற்றிய விவாதம் அண்மைக் காலங்களில் தவிர்க்க முடியாதது. ஆனால் கூடங்குளம் அணுஉலைக்காக மீறப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளைக் காணும் போது கூடங்குளம் அணுமின் திட்டத்தில் அரசு அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது வெள்ளிடை மலைபோல் தெரிகிறது. 1988-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையத்திற்காக சோவியத் யூனியதோடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இரண்டு முக்கியமான சரத்துக்கள் என்னவென்றால் “அதிகமான கதிர்வீச்சை ஏற்படுத்தக் கூடிய அணுக்கழிவுகளை மீண்டும் சோவியத் ரஷ்யாவே திரும்ப பெற்றுக் கொள்வது; மற்றொன்று அணுஉலைகளை குளிர்விப்பதற்கான நீரை கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து குழாய் மூலம் எடுப்பது" என்பதாகும்.

koodankulam_371மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அணுஉலைக்கான அனுமதியை மே 9, 1989ம் ஆண்டு மேற்குறிப்பிட்ட விதிப்படியே சுற்று சூழல் தடையில்லாச் சான்று வழங்கியது. 1997-ம் ஆண்டு வரை அணுமின் திட்டத்தில் எந்த விதமான கட்டுமானப்பணியும் நடைபெறவில்லை. 1997-ம் ஆண்டு கூடங்குளம் அணுஉலைக்காக இந்தியா ரஷ்யாவோடு மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பித்தது. 1989 முதல் 1997 வரையிலான காலக்கட்டத்தில் முறையே கடலோர ஒழுங்குமுறைச் சட்டம் (Costal Regulation Zone-1991) மற்றும் Environment Impact Assessment-1994, என்று இரண்டு சட்டங்களை அரசே புதிதாக உருவாக்கியது. அதன் விதிமுறைகளை பின்பற்றித்தான் பெரிய ஆலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

1991-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கடலோர ஒழுங்குமுறைச் சட்டத்தில் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் பரப்பளவுக்குள் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் கட்டப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தொழிற்சாலைகள் கட்ட தடை செய்யப்பட்ட பகுதியாக கடலிருந்து 500 மீட்டர் கடற்கரைப் பகுதி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணுசக்தி துறைக்கு மட்டும் சில விதிவிலக்கு வழங்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் விதிமுறைக்கு முரணானது; ஏற்கக் கூடியது அல்ல. ஏனெனில் கூடங்குளம் அணுமின் திட்டம் தொழிற்சாலை விதிகளுக்கு உட்பட்டது. கூடங்குளம் அணுஉலையை கட்டும் பொறுப்பு இந்திய அணு சக்தி கழகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டம் நிறுவனச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. “....தனிநபர், தனியார் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டாண்மையோடு இது செயல்படுத்தப்படும்" என்று பதியப்பட்டுள்ளது. சட்டத்தின் படி பார்த்தோமென்றால் கூடங்குளம் அணுமின் திட்டமானது ஒரு தனியார் நிறுவனத்தின் திட்டம்; அணுசக்தித் துறையின் திட்டம் அல்ல. உச்ச நீதிமன்றம் தன்னுடைய பல தீர்ப்புகளில் தனியார் துறைகளை அரசுத் துறைக்கு இணையாக கணக்கிட முடியாது என்று சுட்டிக் காட்டியுள்ளது.

                கூடங்குளம் அணுஉலையை கடலோர ஒழுங்கு முறைத் திட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்க முடியாது. காரணம் இது நிறுவனச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனம். கடலோர ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி 500 மீட்டர் கடலோர எல்லைக்குள் அணுஉலை கட்டப்பட்டிருப்பது சட்டவிதிமுறை மீறலே. 1994-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட Environment impact Assessment சட்டத்தின்படி, பெரிய திட்டங்கள், நிறுவனங்களை புதிதாக உருவாக்கும்போது, விரிவுபடுத்தும் போது அல்லது மாற்றியமைக்கும் போது மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுஉலையும் இந்த வரையறைக்குள் வருகிறது. எனவே சுதந்திரமான வல்லுநர் குழுவை ஏற்படுத்தி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட பின்பே சுற்றுச் சூழல் அனுமதியை சுற்றுச் சூழல் அமைச்சம் வழங்கியிருக்க வேண்டும். அப்படியே மக்களிடம் கருத்துக்கேட்பு அனுமதி வழங்கினாலும் அது வெறும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். திட்டமானது 5 ஆண்டுகளுக்குள் தொடங்கப்படவில்லை என்றால் மீண்டும் புதிதாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி புதிதாக சுற்று சூழல் அனுமதிச் சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும்.

                'மேற்குறிப்பிட்ட எந்த விதிமுறையும் கூடங்குளம் அணுஉலைக்குப் பொருந்தாது, Environment Impact Assessment விதிமுறைகள் 1989-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்திற்குப் பின்பு உருவாக்கப்பட்டது' என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும், சுற்றுச் சூழல் அமைச்சகமும் கூறுகிறது. (ஆனால் அணுஉலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது 1997-ம் ஆண்டு தான் அதை கட்ட ஆரம்பித்தது 2000-ம் ஆண்டு)

                1989-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய, கதிர்வீச்சை வெளியிடக்கூடிய அணுஉலைக் கழிவுகளை ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் என்ற முந்தைய ஒப்பந்தம் மீறப்பட்டு, இந்தியாவுக்குள்ளேயே அக்கழிவுகள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இரண்டாவது மாற்றமும் மிகவும் முக்கியமானது. அதாவது நன்னீர் அல்லது குடிநீர் தேவைக்காக பேச்சுப்பாறை அணைத் தண்ணீரைப் பயன்படுத்துவோம் என்று ஒப்பந்தத்தில் கூறிவிட்டு இப்பொழுது கடல்நீரைக் குடிநீராக மாற்றுவதற்கு கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக மாற்றும் போது ஏற்படும் சூழலியல் பிரச்சனைகள் மற்றும் கடல், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய அழிவுகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது போன்றவை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

அணுக்கழிவுகளை இந்தியாவிலேயே சேமித்து வைப்பது, அதை இடமாற்றம் செய்வது மற்றும் மறுசுழற்சி செய்வது பெரும் சூழலியல் பாதிப்புகளையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் கடல்வாழும், கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பது போன்ற தகவல்கள் 1989-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட சுற்றுச் சூழல் அனுமதிச் சான்றிதழில் இல்லை, இப்போதும் அதைப் பற்றிய தெளிவு இல்லை.

                2003-ம் ஆண்டு நீரி என்ற அமைப்பு (National environment Engineering Research Institue) அணு உலை கட்டத் தொடங்கியபோது ஓர் அறிக்கை தயார் செய்தது. இந்த அறிக்கையிலும் அணுக்கழிவுகளை இந்தியாவிலேயே பாதுகாப்பது மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான ஒப்புதல் எவையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பொதுவாக சுற்றுச் சூழல் ஆய்வு என்பது ஓர் உலையால் ஏற்படும் நீர், காற்று, ஆலையைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் என்று அனைத்தையும் ஆய்வு செய்வதாகும். ஆனால் திருவாங்கூர் கடற்கரைக்கு மேற்கிலிருந்து கூடங்குளம் உலைக்கு கிழக்கு வரையுள்ள கடற்கரைப் பகுதியை மட்டும் மேலோட்டமாக கணக்கில் கொண்டு அறிக்கையை சமர்ப்பித்தது நீரி. அதில் அணுஉலையை குளிர்விக்க கடலிருந்து எடுக்கப்பட்ட நீர், அணுஉலையை குளிர்வித்தப்பின்பு மீண்டும் கடலுக்குள் செலுத்தப்படும்போது அவை கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது. இது முழுமையான அறிவியல் முறைப்படி செய்யப்பட்ட ஆய்வு அல்ல. (இதனை உச்சநீதிமன்றம் அண்மையில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலிருந்து 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குக் குறைக்க உத்திரவிட்டுள்ளது).

                அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், NPCIL மற்றும் சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம் என்று அனைத்து அமைப்புகளும் 'அணுக்கழிவுகள் இங்கேயே பாதுகாக்கப்படும், இது ஒரு சொத்து. இதனை பாதுகாப்பாக சுமார் 5 ஆண்டுகளுக்கு அணுஉலைக்கு அருகிலேயே வைத்திருக்க முடியும். பிறகு பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றி, மறுசுழற்சி செய்யப்படும்' என்றும், 'அணுக்கழிவை பாதுகாக்கும் இடம் பிறகு அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளனர். இதனை உறுதிப்படுத்தக் கூடிய எந்தவித ஆதாரங்களையும் அவை வெளியிடவில்லை. அணுக்கழிவை பாதுகாப்பாக வைக்க எந்த இடமும் கூடங்குளம் அணுஉலை அமையவிருக்கும் இடத்தில் இல்லை. உலகில் எந்த நாடும் அணுக்கழிவை பாதுகாக்க முன்வருவதில்லை, இதுவே மிகவும் அபாயகரமான கதிர்வீச்சை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்கும்.

                அமெரிக்காவில் அணுஉலைக்கு அனுமதி பெற, 1984-ம் ஆண்டு அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி, அணுக்கழிவுகளை நிரந்தரமாக பாதுகாத்து வைப்பதற்கான சேமிப்புக்கிடங்கை கட்டாயம் அமைத்திருக்க வேண்டும். 1990-ம் ஆண்டு இதற்கான காலவரம்பு 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2010 டிசம்பர் மாதம் அணுக்கழிவுகளை சேமிக்கத் தேவையான கிடங்கை தேவையின் அடிப்படையில் அமைத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. (State of New York et. al.. Vs Nuclear Regulatory Commission and USA). நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் “அணுக்கழிவுகள் சேமிக்கப்பட்டு இருப்பது மிகவும் அபாயகரமானது. இதனை மனிதனால் அறுதியிட முடியாது. காலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறியது.

                அமெரிக்க நீதிமன்றம் இரண்டு காரணங்களுக்காக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தைக் கண்டித்தது.

1. தேவைப்படும்போது அணுக்கழிவுக்கான சேமிப்பு கிட்டங்கியை அமைப்பது என்பது மிகவும் அபாயகரமானது. அதுமட்டுமில்லாமல் அணுக்கழிவுகளை பாதுகாப்பது தொடர்பாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தொடர்பாகவும் போதிய அறிவில்லாததும், கவனத்தில் கொள்ளாததும் ஆகும்.

2. அணுக்கழிவுகளை அணுஉலையின் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் அணுஉலைக்குள்ளேயே பாதுகாக்கும் போது ஏற்படும் எதிர்காலப் பிரச்சனைகளையும், விளைவுகளையும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கவனத்தில் கொள்ளவில்லை.

                இறுதியாக சுற்றுச் சூழல் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாமலே அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட தகவல் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது. அந்த ஆணையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

                “ஜப்பான் புக்குஷிமா அணுஉலையில் ஏற்பட்ட விபத்துக்கு சுனாமி மற்றும் நிலநடுக்கம் மட்டும் காரணமல்ல. மனித தவறும் ஒரு காரணம்" என்று புக்குஷிமா அணுஉலை வெடிப்புக்கான விசாரணைக்குழு என்று ஜப்பான் அரசாங்கம் நியமித்த குழு எச்சரித்துள்ளது.

                “ஜப்பான் அரசாங்கத்தின் தனிப்பெறும் கருத்தாக்கமான அணுஉலைத் திணிப்பை உள்வாங்க விரும்பாத கண்காணிப்பாளர்களுக்கும், மற்றும் அணுஉலை பணியாளர்களுக்கும் இடையே வெடித்த கருத்து மோதலும் ஒழுக்க விதிமுறைகளை எதிர்த்ததும் விதிமீறல்களை மறைத்ததும் இதற்குக் காரணம்”. அதாவது அணுஉலைகளை அமைக்க வேண்டும், அணுமின்சாரம் தயாரிக்க வேண்டுமென்பது அரசாங்க முடிவு. இதனை செயல்படுத்த விரும்பமில்லாத அதே வேளையில் தொழில்நுட்பங்களை கையாளத் தெரியாத அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களால் இந்த தவறு நடந்துள்ளது.

(5.11.2012- இந்து நாளிதழில். எ.சுரேஷ், நாகசகிலா எழுதிய ஆங்கில கட்டுரையை தழுவி எழுதப்பட்டது).

- ரா.பி.சகேஷ் சந்தியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It