இன்றும் மற்றுமொரு நாளாய்த் தான் விடிந்தது என்று நம்பினோம். ஆனால் இந்தக் காலை அவ்வளவு நல்ல தினத்துக்கானது அல்ல என்பதை அறிகையில் மனம் விம்முகிறது. நடுக்குருத்தென வளர்ந்து தானும் தன் குடும்பத்தினருமாய் ஆயிரம் ஆயிரம் கனவுகளைக் கண்டுகொண்டிருக்கிற பதின் பருவத்தின் இறுதியில் கவனக்குறைவு அல்லது அஜாக்கிரதை என்று எதையும் சமாதானமாக ஏற்கவியலாமல் மனம் நொறுங்குகிறது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவன் வழி வந்த சமூகம் இல்லையா நாம்..?

இன்றைக்கு 10.12.2012 காலை சென்னையில் நாலு மாணவர்கள் பிணமான செய்தியை காணொளியிலும் மாலை நாளிதழ்களிலும் கண்டபோது இதை வெறும் செய்தி என்று நகர்ந்து சென்றுவிட இயலவில்லை.

இன்றைக்குக் காலை 7.30க்கு திருப்போரூரில் இருந்து தடம் எண் 519-சி என்னும் பேருந்து கிளம்பியிருக்கிறது. சரியாக எட்டரை மணிக்கு கந்தன் சாவடி என்னும் இடத்தில் பயணிகள் ஏறி இறங்கியதும் புறப்பட்டது. அது பீக் அவர் என்று அழைக்கப்படும் உச்சபோக்குவரத்து நேரம் என்பதால் படியில் தொங்கிக் கொண்டு பயணிக்கிற அளவு கூட்டம். முன்னால் சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில சிமெண்ட் லோடு லாரி சிறிய வளைவொன்றில் வண்டியைத் திருப்ப முயன்று முடியாததால் ரிவர்ஸ் எடுக்க முயன்றதாகவும் இதனைப் பார்த்த பின்னால் வந்த பஸ் டிரைவர் அஷோக் குமார் வண்டியை வலது புறம் வளைக்க முயன்றிருக்கிறார். பின்புறமாக வந்த லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் படியில் இருந்த நான்கு மாணவர்கள் சேகர் (18), மனோஜ்(18), பாலமுருகன்(16), விஜயன் (16) துடிதுடித்து இறந்திருக்கின்றனர்.

இந்த நாலு பேர் மரணத்திற்கு யார் காரணம்..? இது வெறும் விபத்தா.? அவர்கள் செய்த குற்றம்தான் என்ன.? படியில் பயணம் நொடியில் மரணம் என்ற நாலுவார்த்தை திருக்குறளை விடவும் அதிகப் பேரால் அதிகமுறை உச்சரிக்கப்படும் அறச்சொல்லாடலாக மாறி இருக்கும் சூழலிலும் திரும்பத் திரும்ப தேங்காய் உடைவது போல் மனிதர்களை வீதியில் உடைத்துக் குருதிவெள்ளத்தை சாலையில் பெருக்கெடுக்க வைத்துக் கொண்டிருக்கிற இச்சமூகத்தின் அறியாமை வெறும் குறையா..? இது பிழை மட்டுமா..?இது குற்றமல்லவா..? இதனை அடியோடு நிறுத்துவது என்ன மீப்பெரும் சோதனையா..?அரசாங்கத்தையே எல்லாவற்றுக்கும் முன்னே பழியும் பின்னே பாவமும் சொல்லிக் கொண்டிருக்கிறாற் போல் இதனையும் சொல்ல வேண்டுமா..?

இந்தப் பிரச்சினையில் அரசின் தவறு தான் பெரியது. அதனை முதலில் பேசலாம். அன்னிய நாடுகளில் இருந்து உணவு, உடை என்று மேட்டிமைத் தனத்தையும் நம் இயற்கைக்கு ஒவ்வாத பல பாவனைகளையும் தரவிறக்கம் செய்து கொண்டு தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் பலராகத் தான் நாம் இருக்கிறோம். ஆனால் சாலைவிதிகளை மிக மோசமாகக் கடைபிடிக்கும் நாடுகளில் நமக்கு எத்தனையாவது இடம் என்பதை வெட்கத்தோடு நாம் அறிந்து வைத்திருக்கிறோமா..?

அது சரி. தலைக்கவசம் உயிர்க்கவசம். எதுகையும் மோனையும் தளைதட்டாமல் வருகிறதா..? மெத்தச்சரி. எழுது எல்லா இடத்திலும். போடு அபராதத்தை. எல்லாம் சில நாள் கூத்துத் தான். தேர்தலைக் கட்டுக்கோப்பாக நடத்துகிறோம் என்று மார்தட்டிக்கொள்ளும் நம் அரசாங்கத்தின் தொடர் இயலாமைகளில் முதலாவது தலைக்கவசத்தை நடைமுறைப் படுத்த முடியாததில் துவங்குகிறது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று இருக்கும் விதியை எவ்வளவுக்கெவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு வளைக்கும் சமூகம் நாம் தான். அரசாங்கம் நடத்துகிற பார்களின் வாசலில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிற்பதை நாளும் பார்த்துக்கொண்டு தலையில் அடித்துக் கொண்டு தான் நீதிமான்களும் சத்தியவான்களும் இடமும் வலமும் சென்றுவருகிறார்கள். என்ன தேவை.? ஒரு தன்னிச்சை மனுவாக இதனை விசாரித்து அத்தனை வாகனங்களுக்கும் அபராதம் விதித்தால் ஒற்றை தினம் ஒரு முறை மட்டும் இப்படிச் செய்தால் வசூலாகும் தொகை எவ்வளவு தெரியுமா.?டாஸ்மாக்கின் வருமானத்தை விடவும் அதிகம் மக்களே. பலகோடி வசூலாகும். குடிப்பவர் குடித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிற பேரன்பை நம் மீது காட்டுகிறதா அரசு..?

சாலை விதிகள் பற்றிய குறைந்த பட்ச அறிவும் புரிதலும் கொஞ்சமும் இல்லாதவர்கள் தான் இந்த நாட்டில் பலப்பல பெரும்பதவிகளை வகித்து வருகிறார்கள். எதை எதையோ கனவு காண்பதற்கு முன்னால், ரேஷன் அட்டையில் இருந்து பாஸ்போர்ட் வரை எதற்காக யார் விண்ணப்பித்தாலும் ஒரு எளிமையான முன் தேர்வு, சில கேள்விகளுடன் அடிப்படை சாலைவிதிகள் பற்றிய புரிதலுக்காக செய்துவிடுவதென்ன கடினமா..?

மஞ்சள் கோட்டைத் தாண்டுவதில் இருந்து எல்லா சாலைமீறல்களுக்கும் கணினிமயமாக்கப்பட்ட ரசீதுகளை நீதி மற்றும் நிர்வாகத் துறை இணைந்து நடைமுறைப்படுத்தக் கூடாதா..? வேகத்துக்கும் அவசரத்துக்கும் வித்தியாசம் அறியாது தினந்தோறும் மன அழுத்தத்தின் உச்ச நிலமாக சாலைகள் மாறிக்கொண்டிருப்பதை பல்லக்கிலும் விதானத்திலும் அமர்ந்தபடி ரசிக்கின்றதா இந்த அரசு.?

போக்குவரத்துக் காவலர்கள்-பொதுமக்கள்-அதிகாரிகள் என அனுதினமும் படியில் பயணிக்கிறவர்களுக்கு சிறைத் தண்டனை என்று விதித்தால் தான் என்ன? உயிர் மிஞ்சுமே. இன்றைக்கு அது வெறும் மீறலாகக் கணக்கில் கொள்ளப்பட்டதால் தானே நான்கு உயிர்கள் மழித்த ரோமங்களைவிடவும் இலகுவாகப் பறிபோய் இருக்கின்றன..?எந்தப் பெற்றோரும் இதனை எதிர்ப்பார்களா..? படியில் தொங்கிக் கொண்டு பயணிப்பதை அரசாங்கம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறது..? அரசாங்கம் காவாத மக்களை வேறார் காப்பது..?

மிக மேலோட்டமாகப் பார்த்தால் படியில் பயணித்தது அவர்களது அறிவீனம். அவர்கள் பயணித்தனர்; செத்தனர் என்று சப்பைக் கட்டும் சமாதானமும் ஆங்காங்கே கேட்கக் கூடும். இல்லை மக்களே... அரசாங்கம், நிர்வாகம், பொதுமக்கள் என மூன்றுமே வேடிக்கை பார்த்ததால் தானே இந்த உயிரிழப்பு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. கூட்ட நெரிசல் அதிகமுள்ள வழித்தடங்களைக் கண்டறிந்து, கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு மறப்பது ஏன்? எத்தனை ஆண்டுகளாக காலை, மாலை நேரங்களில் நிற்பதற்குக் கூட இடம் இல்லாமல், படிகளில் தொங்கிக் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்கிறார்கள்? அமைச்சர்களின், அதிகாரிகளின் கண்களில் இது படவேயில்லையா?

உயர் நீதிமன்றம் ஒற்றைக் கையெழுத்தில் விளம்பரப் பலகைகள் எனப்படுகிற ஹோர்டிங்குகளை நீக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லையா.? அவை நடைமுறைப் படுத்தப்படவில்லையா..? உயர்நீதிமன்றம் ஒற்றைக் கையெழுத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என்று உத்தரவிடவில்லையா..? அவை நடைமுறைப்படுத்தப் படவில்லையா..? இப்படி எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கமுடியும்.

சாலைகள் பெரும்பசி மிருகங்களாகத் திகழ்கின்றன. அவை அருந்துவதற்குக் குருதியும் புசிப்பதற்கு மனித உயிர்களும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. உலக அளவிலோ இந்திய அளவிலோ கணக்கெடுக்க வேண்டாம். தமிழகம் என்னும் நம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலைவிபத்தில் 90 விழுக்காடுகள் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் தான் நிகழ்கின்றன என்பதை எப்போது உணரப் போகிறோம்? ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாணவனையும் தினமும் 'லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன். குற்றச்செயல்கள் செய்ய மாட்டேன். படியில் பயணிக்க மாட்டேன்' என இந்தமூன்று சத்தியங்களை மட்டும் தினமும் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் மெல்ல சமானமடையாதா இளம்குருத்துக்களின் மனம்..?

முன்னாலே அறிவுரையும் பின்னாலே அனுதாபமும் என இன்னும் எத்தனை காலத்துக்கு வெறுமனே பேசிக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கப் போகிறோம்..?

- ஆத்மார்த்தி

Pin It