நோக்கம்

தொடக்காலம் முதல் சமகாலம் வரையில் அரவாணிகள் குறித்த இலக்கியப் பதிவுகள் வெளிவந்துள்ளன. ஆனால் சமகாலத்தில் அரவாணி குறித்த இலக்கியப் படைப்புகள் நிறைய வெளிவந்து கொண்டு இருக்கின்றன. “மானுடம் என்றதுமே நமக்கு ஆண், பெண் என்ற இரட்டைப் பிறவிகளே நினைவுக்கு வருகின்றனர். இதோ நாங்கள் மூன்றாவது பிறவியாக நடமாடுகிறோம் என்று ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் மானுடப்பிறவிகள் நம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதிவதில்லை. உடல் ஊனமுற்றோருக்கும் மற்ற பலவீனப் பிறவினருக்கும் பச்சாதாபப்படும் நாம் இந்தப் பாவிகளைப் பார்த்ததுமே சிரிக்கிறோம். இவர்களைப் பயங்கரப் பிறவிகள் என்று அனுமானித்து ஒதுங்கிக் கொள்கிறோம்”1 மனிதர்களைப் பெண்ணும் ஆணுமாக வகைப்படுத்திப் பார்த்துப் பழக்கப்பட்டுப்போன பொதுப்புத்தி சார்ந்த அதிகாரப் படிநிலை மனோபாவங்களை நிரப்பிக் கொண்டிருக்கும் மனிதர்கள் பால்நிலை திரிந்த அரவாணிகளை மனிதர்களாகவே பார்க்க மறுப்பது, மனிதம் என்பதின் இன்னொரு பகுதியை நிராகரிப்பதன் வெளிப்பாடு என்று தான் சொல்லமுடியும்.

பெண்ணைக் குறித்தும், ஆணைக்குறித்தும் புரிந்து கொள்ள அக்கறையெடுக்கும் மனிதர்கள், தம்மோடு சகமனிதர்களாகப் பிறந்திட்ட அரவாணிகள் குறித்துப் புரிந்து கொள்வதற்குத் துளியளவும் முயற்சி செய்வதில்லை. அதோடு அரவாணி பற்றிய தவறான பார்வைகளையும், தவறான புரிதல்களையுமே இந்தச் சமூக மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள். ஆண்களாலும் பெண்களாலும் உறவினர்களாலும் குடும்பத்தாலும் ஏன் ஒட்டுமொத்தச் சமூகத்தாலும் துரத்தியடிக்கப்பட்டு அகதிகளாக, அனாதைகளாக அரவாணிகள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். இச்சமூகத்தின் பொதுத்தளத்திலிருந்து வெளித்தள்ளப்பட்டும் கீழ்மைப்படுத்தப்பட்டும் விளிம்புநிலையில் இருத்தப்பட்டிருக்கும் அரவாணிகள் பற்றிய கவனத்தைக் கோருவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

அரவாணிகள்

இந்த மண்ணில் பிறந்த குழந்தையை ஆணா அல்லது பெண்ணா என்பதை அதனதன் பிறப்புறுப்பை வைத்தே அடையாளம் காண்கிறது சமூகம். ஒரு அரவாணியை எப்படி அடையாளம் காணமுடியம்? ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் எப்படி அடையாளம் காண்கிறீர்களோ அதே முறையில் தான் ஆணாகப் பிறந்து பெண்ணாக அல்லது பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறும் ஒருவரை அரவாணியென அறிந்து கொள்ள முடியும். “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்த பாலையை ஐவகை நிலங்களில் ஒன்றாக ஏற்று அதற்கு முதல், கரு, உரிப்பொருட்களைச் சூட்டி அழகு பார்த்திருந்தது தமிழ் மரபு! ஆயின், மனிதர்க்குப் பிறந்தும் இயங்குநீர்ச் சுரப்பியின் சமன் குறைவால்- குரோமோசோம்களின் ‘திரு’விளையாடல்களால்- ஆண், பெண் முறைமை திரிந்து ‘மாறிய பாலினமாக’ வாழ்பவர் அரவாணியர்”2. மேலும், அறிவியல் முறைப்படி “மனித செல்லிலுள்ள 23 இணை குரோமசோம்களில் கடைசி 23வது குரோமசோம் இணையே ஒருவர் ஆணா அல்லது பெண்ணா என்பதை தீர்மானிக்கிறது. பெண்ணின் கருமுட்டை பெண்பால் தன்மைகளை ஏற்படுத்தக்கூடிய ஒ குரோமசோம் மட்டும் கொண்டுள்ளது.

ஆணின் விந்து பெண்பால் தன்மையை ஏற்படுத்தக்கூடிய X குரோமசோம் அல்லது ஆண்பால் தன்மையை ஏற்படுத்தக்கூடிய Y குரோமசோம் இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கொண்டதாக இருக்கிறது. XX என்ற இணைச்சேர்க்கை பெண்ணாகவும் XY என்ற இணைச்சேர்க்கை ஆணாகவும் உருவாகிறது. மரபணு உருவாக்கத்தின் போது ஏற்படும் சில எதிர்பாரத மாற்றங்களால், பெண் கருமுட்டையிலேயே ஒரு X குரோமசோம் அதிகமாகவோ அல்லது ஆணின் விந்திலிருந்து வரும் Y குரோமசோமுடன் மேலதிகமாக ஒரு X குரோமசோமோ அல்லது Y குரோமசோமோ கருவில் இணைந்து விட்டால் பிறக்கும் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல் இரண்டுமில்லாமலும், இரண்டுமாகவும் அதாவது அரவாணியாக பிறக்கும்”3. எனும் கருத்து நிலையை வைத்துப் பார்க்கும் போது அரவாணி தாமே விரும்பி மாறுவதில்லை. அது பிறப்பு வழியில் வரும் இடர்பாடு தான் எனும் தன்மையினை உள்வாங்கி உயிர்களுக்கு உரியனவான அமைகின்றது.ஆண்தன்மையிலிருந்து பெண்தன்மையடையும் அரவாணி குறித்த பதிவுகள், படைப்புகள் மட்டும்.

அரவாணிகளின் செயல்பாடுகள்

அரவாணிகள் தங்களை உடலளவிலும், மனதளவிலும் மாற்றிக்கொண்ட பின்பு தங்களின் செயல்பாடுகளாக “ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அரவாணிகள் பெண்போன்று செயல்படுகின்றனர். இவர்களுக்கு ஆண் தோற்றம் இருந்தாலும் செயல்கள் அனைத்தும் பெண்களின் செயல்கள் போன்று இருக்கும். பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறும் அரவாணிகள் ஆண்களைப்போன்று செயல்படுவார்கள். இவர்களுக்குப் பெண்தோற்றம் இருந்தாலும் செயல்கள் ஆண்களைப் போன்று இருக்கும். ஆணாக இருந்து பெண்ணாக மாறும் அரவாணிகளிடம் சடைபோட்டுக் கொள்ளல், பூ வைத்துக் கொள்ளல், பொட்டு வைத்துக் கொள்ளல், பெண்ணாக நடத்தல், பெண்ணாக பேசுதல் போன்ற மாற்றங்கள் காணப்படும்”4. இதனை கி. இராஜநாராயணின் ‘கோமதி’ சிறுகதையில் கோமதிக்கான நிலைப்பாட்டின் மூலம் காணமுடிகிறது. மேலும், “பெண்களோடு இருக்க விரும்புவதும் ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சமும் வெட்கமும்”5 இருப்பதனை இலட்சுமணப் பெருமாளின் ‘ஊமங்காடை’ சிறுகதையில் பொன்ராசுவின் செயல்களில் காணமுடிகிறது. இந்த உடற்கூறு மாற்றங்களைவிட அரவாணிகள் அனைவரும் ஒன்று போலக் கூறுவது, “அரவாணிகளுள் பலர் ஏழு அல்லது எட்டாவது வயதில் இருந்தே குடும்பத்தில் ‘பெண்கள் வேலை’ எனக் கருதப்படும் சமையல், கோலம், பாத்திரம் கழுவுதல் போன்றவற்றில் அக்கம்பக்கத்தார் தம்மை வேறாகக் கண்டதையும் குறிப்பிடுகின்றனர். மஞ்சள் பூசிக்கொள்வது, தலைசீவிப் பின்னுவது, பூச்சூடிக் கொள்ளுதல், புடவை, பாவடை தாவணி அணிதல் ஆகியவற்றில் ”6. இந்த செயல்பாடுகள் அனைத்துமே ‘பெண் போல’ இருக்க விரும்பும் ஆணின் செயல்கள் போலத் தோன்றுகிறது. மேலும், அதோடு நிற்காமல் தங்களைப் பெண்ணாக உணர்வதாக அரவாணிகள் கருதுகின்றனர். ஆண் உடலில் சிறைப்பட்ட பெண்ணாகத் தாம் இருப்பதாகக் கருதுகின்றனர். அதன் வெளிப்பாட்டுச் சின்னங்களாக ஆண்கள் மீது ஏற்படும் கவர்ச்சி, உடலில் ஏற்படும் பாலியல் விளைவாகக் காணப்படுகிறது என்று களப்பணியின் போது சந்தித்த செல்வி(செந்தில்), அமலா, திவ்யா(மணி) பாரதிகண்ணம்மா (அரவாணியர்கள்) கூறுகின்றனர்.

அரவாணியர் “உடற்கூறு ரீதியாக உள்ள மாறுபாடுகளை உணரத் தலைப்பட்ட பின், அதன் நீட்சியாகத் தங்களை முழுமையான பெண்களாக மாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் மார்பக வளர்ச்சிக்கான ஹார்மோன் மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆணாக மாறவிரும்பும் பெண்ணுக்கு மார்பகம் நீக்குதல், மார்பக வளர்ச்சி குறைத்தல், முடிவளர்த்தல், குரல் மாற்றம், செயற்கை ஆணுறுப்பு பொருத்துதல் போன்றவை உள்ளன”7. மேற்கூறிய அரவாணிகளின் மாற்றம் பழக்கத்தில் உள்ள பால்சார் நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் கேள்வி கேட்பதாக அமைகிறது.

அரவாணிகளின் அடையாளங்கள்

குடும்பமெனும் நிறுவனமோ, சமூகமோ தாம் உருவாக்கஞ் செய்யப்பட்ட காலந்தொட்டே ஆண், பெண் என்ற இருவகைப்பட்ட பால்நிலைகளை மட்டும் எதிரெதிர் நிறுத்தி இவ்விரு பாலினரை மட்டும் வரையறைகளுக்குட்பட்ட விதிகளின் அடிப்படையில் ஆய்ந்து, தேர்ச்சியுரின் தன்னுடன் இணைத்துக் கொண்டனர். ஆனால், இதனுள் தேர்ச்சியுறாத ஆண், பெண் என்ற வகைப்பாட்டினுள் பொருந்தி வராத பாலுணர்வு மட்டுமே மாறுபட்ட அரவாணிகளை சகமானுட உயிராகக் கூட ஏற்றுக் கொள்ளாத நிலை சமூக நடைமுறையில் காணக்கிடைக்கிறது.

ஒவ்வொருவரும் தனக்கான பாலியல் தனித்தன்மையை தெரிந்தெடுத்தல் என்பது தான் சமூகத்தின் வேறொரு உறுப்பினரோடு அவர் கொள்ளும் உறவை நிர்ணயிக்கிறது. எந்தவொரு சமூகத்திலும் பிறந்து வாழத் தொடங்கும் ஒருவர், அச்சமூகம் அங்கீகரிக்கும் ஏதேனும் ஒரு பாலியல் வரையறைக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டாக வேண்டும். அவ்வாறு பொருத்திக் கொள்ளாதவர்கள், பொருந்த மறுப்பவர்கள் பொதுவாழ்வியல் களத்தின் புழக்கத்திலிருந்து விலக்கப்படுவார்கள். அரவாணிகளும் அவ்வாறானவர்கள் தான்.

அரவாணிகள் பிறப்பிலேயே அரவாணிகளாகப் பிறந்தவர்கள் மிகக் குறைவே. பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக சிறிது காலம் வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களிடம் பேசும்போது, இனம்புரியாத வயதிலிருந்தே பெண்ணாக உணர ஆரம்பித்ததாகக் கூறுகிறார்கள். பெண்கள் உடையை அணிவது, ஆண்கள் மேல் பாலுறவு நாட்டம் கொள்வது, பெண்களுடன் சரிசமமாக பழகுவது போன்ற உணர்வுகளை அனுபவிப்பதாகக் கூறுகிறார்கள்.

“ஆண்கள் மீதான எதிர் பாலுறவு நாட்டம் அவர்களது உடம்பின் ஓர் அங்கமான ஆணுறுப்பை தேவையற்ற ஒன்றாக எண்ணத் தூண்டுகிறது. பெண்ணாக உணரும் இவர்கள், தங்களுக்கு விருப்பமான ஆணுடன் நேரடி உறவில் அந்த சிறுநீர்த்துளைப் பாதையில் பெண்குறி போன்ற அமைப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு இருப்பது போல மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்ள ‘ப்ளாஸ்டிக் சர்ஜரி, கார்போன் ஊசி போட்டுக் கொள்ளுதல்’ போன்றவைகளைச் செய்து கொள்கிறார்கள்”8. போன்றவை அரவாணிகள் குறித்த அடையாளங்கள் ஆகும்.

அரவாணிகளின் குடும்ப, சமூக அமைப்பு முறைகள்

அரவாணிகளின் சமூக அமைப்பானது குடும்பம், சாதி, பண்பாடு, சமயம் இவற்றின் ஒருங்கிணைப்பாக செயல்படும் சமூகத்திலிருந்து வேறுபட்டு தாயம்மா, ஜமாத், குருபாய், அரவாண், மாத்தா தெய்வ வழிபாடாக அமைந்துள்ளது, இச்சமூகத்துள் இவர்கள் கொண்டிருக்கும் விதிமுறைகள், கட்டுபாடுகள், மொழி ஆகியன பல சிந்தனைகளை உருவாக்குகின்றன. பெருபான்மைச் சமூகம் தங்களைப் புறக்கணிப்புக்கு உள்ளாக்குவதால் தாமே ஒரு சமூகமாக இணைந்து எதிர்கொள்ளுகின்றன. அரவாணியரின் சமூகம் சாதி மதப்பாகுபாடுகள் அற்றதாக காணப்படுகின்றன. குடும்பத்தோடும் சமூகத்தோடும் தேவையான அளவுக்கு உறவைப் பேணுவதையும் அவர்கள் கடைபிடிக்கின்றனர்.

அரவாணியர்களின் உணர்வுகளுக்கும் இந்தச் சமூகத்தின் மதிப்பீடுகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் உணர்வுகளே வெற்றி பெறுகின்றன. ஆனால், தம்மைப் போல இருக்கச் செய்வதில் தோல்வியும் சமூக மனிதர்கள், அரவாணியரைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஏமாற்றவும் அவர்களது உழைப்பை உறிஞ்சவும் எனக் கீழான செயல்களில் இறங்குகின்றனர். அதற்கு மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து எனும் சிறுகதையில் “உங்கள் மாற்று உடலாளர்களான நாங்கள் உங்களை வெறுப்பதேயில்லை. நீங்கள் அருவருப்பான செயல் செய்பவர்களாக... பயன்படுத்தி தூக்கியெறிந்து விடுகிற ஆணுறையாக எங்களைப் பயன்படுத்தினாலும்.. உடல் அலுக்க வலிக்கப் பிழிந்தாலும்.. மனம் நொந்து குலுங்கும் படி அவமானப் படுத்தி அனுப்பினாலும் நாங்கள் உங்கள் மீதான நேசத்தை விட்டொழிக்க முடியாதவர்கள். ஒரு முனைப்பாளர்களான ஆண்களே.. பன்முனை சிந்தனைவாதிகளான பெண்களே.. முனையற்ற முனைப்பற்ற நாங்களும் மனித சமூகத்தில் அடக்கம் தான்”9 எனுமிடங்களில் அரவாணிகள் சமூகத்தினரால் எவ்வளவு வெறுத்து ஒதுக்கினாலும் நாங்கள் உங்கள் மீது அன்பினை வைத்து இருக்கின்றோம். அதில் கொஞ்சமாவது எங்கள் மீது வைக்காமல் இருக்கின்றீர்களே என அரவாணிகளின் உணர்வுப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.

அரவாணியருக்குச் சொத்துரிமை மறுப்பை எல்லாக் குடும்பத்தினரும் செய்கின்றனர். பெற்றோரை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ள அரவாணியரை நாடுகின்றனர். அவர்களின் உழைப்பில் வரும் பணத்தைப் பெற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை. இதற்கு செல்வி(செந்தில்), திவ்யா(மணி), ரதி... இன்னும் எத்தனையோ அரவாணியர்கள் கடைசிகாலத்தில் தன்னுடைய பெற்றோரை பாதுகாத்து வருவதனை களப்பணியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அரவாணியரின் அனுபவங்கள், உணர்வுகள் மனிதசமூகம் கொண்டிருக்கும் விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன.

அரவாணிகளின் சடங்குமுறைகள்

அரவாணிகளின் சடங்குமுறையில் நிர்வாணமுறைச் சடங்கு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டு வருகின்றன. அவை 1. தாயம்மா நிர்வாணம், 2. டாக்டர் நிர்வாணம்.

தாயம்மா நிர்வாணம்

நிர்வாணம் செய்யும் அரவாணிகளின் விருப்பப்படியே நிர்வாணம் செய்யப்படுகிறது. தாயம்மா நிர்வாணம் செய்து கொண்டால் பொம்பள மாதிரியே ஆகிவிடலாம். கை, கால்முடியெல்லாம் கொட்டி விடுமெனும் நம்பிக்கை அரவாணிகளின் மத்தியல் நிலவுகின்றது.

தாயம்மா நிர்வாணம் செய்யவதற்கு முன்னால் குரு வீட்டில் மாத்தா பூசை செய்து விட்டு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியப் பின்னர் நிர்வாணத்திற்கு முதல் நாள் அவர்களுக்கு தேவையான பொருளெல்லாம் சாப்பிட கொடுக்கப்படுகின்றன. அன்று இரவு 2மணிக்கு தாயம்மா அரவாணி நிர்வாணம் செய்யக் கூடிய அரவாணியின் ஆண்குறியினை நூலால் கட்டி விட்டு அரவாணியை தூங்கச் சொல்லிவிட்டு 4மணிக்கு வந்து நிர்வாணம் செய்யக் கூடிய அரவாணியை தனியறைக் கொண்டு சென்று மாத்தா தெய்வத்தின் முன்னால் நிர்வாணமாக நிக்கச் சொல்லி தனது தலைமுடியினை வாயில் கடிக்கச் சொல்லி அல்லது துணியை கடிக்கச் சொல்லி விட்டு பின்தாயம்மாவை பின்னால் இரண்டு கைகளை பிடிக்கச் சொல்லிவிட்டு மாத்தாவை வேண்டிக்கச் சொல்லிவிட்டு தாயம்மா ஆண்குறியினை கூரிய கத்தியினைக் கொண்டு அறுத்தெடுத்து விட்டு இரத்தம் வருகின்றதை அள்ளி முகம், கை, கால், உடல்முழுவதும் தேய்த்துவிடுகிறார் இதனால் உடலிலுள்ள முடிகளெல்லாம் உதிர்ந்து விடுமென்பது அரவாணிகளின் நம்பிக்கை, தொடர்ந்து நல்லெண்ணெயை நன்கு காய்ச்சி சூடாக ஊற்றப்பட்டு நிர்வாணம் செய்யப்பட்ட அரவாணியை தூங்கமால் வைப்பதற்காக சுக்கு, பால்கலக்காத தேனீர் கொடுக்கப்படுகிறது. 4மணி நேரத்திற்கு பிறகு கொஞ்ச நேரம் தூங்கச் சொல்லி விட்டு நன்றாக விடிந்த பிறகு அரவாணியை முழிக்க வைத்து நீ முழுமையான அரவாணியாய் ஆகிவிட்டாயென தாயம்மா சொல்வார். இந்த முறையே தாயம்மா நிர்வாணமென அரவாணியான ராதா உணர்வும் உருவமும் எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.

பால்ஊற்று சடங்கு முறைகள்

நிர்வாணம் செய்யப்பட்ட நாளிலிருந்து 40 நாட்களுக்கு அரவாணிகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, ஆண்கள் முகத்தைப் பார்க்கக் கூடாது. நாற்பது நாட்களில் முதல் 5நாள் அரவாணியை குளிக்க வைக்காமல் 5 நாள்கழித்து வெந்நீர் வைத்து உடலினை துடைத்து விட்டு 11ம் நாள், 20ம் நாள், 30ம் நாள்களில் தலைக்கு தண்ணீர் ஊற்றப்படும் நாள்களில் ஆட்டுத் தலைக்கறி கொழம்பு வைத்துக் கொடுத்து 40வது நாள் முகத்தில் வளர்ந்து இருக்கும் முடியினை வேரோடு புடுங்கி அன்றை இரவு 2 மணிக்கு ஒரு பலகைப் போட்டு பாவாட மட்டும் கட்டி மஞ்சள் பூசி மருதாணி தேய்த்து சக்கரையை வாயில் போட்டு ஆரத்தி எடுத்துப் பிறகு தண்ணீர் ஊற்றி பிறகு பச்சை புடவை, பச்சை ஜாக்கட், பச்சை பாவாடை எடுத்து போட்டு கொண்டு ஒரு குடத்தில் பால் கொண்டு போயி கடலில் ஊற்றி விட்டு வீட்டுக்கு வந்து மாத்தா தெய்வத்தினை வழிபட்டு பின்பு தான் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கச் சொல்லி சடங்கு கழிக்கும் முறையினை பால்ஊற்றுச் சடங்கு என்பர்.

முடிவுரை

சமூகத்தில் பல்வேறு நிலைகளில் அரவாணிகளை ஒதுக்கிவிடுவதால் அவர்கள் வாழ வழியில்லாமல் தவறான தொழில்களில் பிச்சையெடுத்தல் தொழில்கள் குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன. மேலும், வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் மனிதர்களின் மனதில் நல்ல புரிதல் ஏற்பட வேண்டுவனவான இக்கட்டுரை அமைகிறது.

சமுத்திரம்.சு, வாடமல்லி, என்னுரை, ப.இ.
மகாராசன்(தொ.ஆ), அரவாணிகள்-(உடலியல்-உளவியல்-வாழ்வியல்), ப.17.
மார்க்ஸ்.அ, விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும் ப.91.
முனிஷ்.வெ, தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள், பக்.85-86.
மகாராசன், மேலது, ப.43.
மேலது, ப.43.
மேலது, ப.44.
மார்க்ஸ்.அ, மு.நூ., ப.92.
மகாராசன், மு.நூ., ப.71.
நடராசன்.இரா, மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து, ப.10.

- சௌ.சுரேஷ்குமார் முனைவர்பட்ட ஆய்வாளர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.

Pin It