கற்பு நெறி, பாலுறவு, பாலுறவு உறுப்புகள், பாலுறவுச் செயல்பாடுகள் இவை குறித்து தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்கள் அனைத்துமே ஆதிக்கக் கருத்தாக்கங்கள். ஆதிக்க நலன் சார்ந்தவை அல்லாது ஆதிக்க எதிர்ப்பு நோக்கமுடையவை என இப்படி வறட்டுத் தனமாக முடிவு செய்வது சரியா? அப்படியானால் சமூகத்தில் பொதுவான ஒழுக்கவியல் கோட்பாட்டின் அடிப்படையிலான கருத்தாக்கங்களே இல்லையா? என்கிற கேள்விகள் சிலருக்கு எழலாம். நியாயம்.

சமூகத்தில் நிலவும் எல்லா கருத்தாக்கங்களையும் எல்லா மதிப்பீடுகளையும் இப்படி ஆதிக்க நலன் சார்ந்தவை, ஆதிக்க எதிர்ப்பு நோக்க முடையவை என இருவகைப்பட்டவையாகவே மட்டும் பிரித்து வறட்டுத்தனமாக முடிவு செய்யக்கூடாது என்பதும், காரணம் இந்த இரண்டிலும் வகைப்படுத்த முடியாத பொதுவான சமூக இயக்கம் சார்ந்தும் சில கருத்தாக்கங்கள், மதிப்பீடுகள் சமூகத்தில் நிலவுகின்றன என்பதும் எல்லாம் சரிதான்.

ஆனால் ஒழுக்கவியல் கோட்பாடுகள் என்பது என்ன? அவை முற்று முழுதான என்றுமே மாறாத நிலைத்த கெட்டி தட்டிப்போன அருவக் கோட்பாடுகளா? நிச்சயமாக இல்லை. மாறாக, நிலவும் சமூகத்தோடு தொடர்புடைய, அதனோடு பொருத்திப் பார்த்து, உரசிப் பார்த்து தேர்வு செய்யக் கூடியவைகளே அவை.

காட்டாக, காலையில் எழுந்திரு, பல் துலக்கு, குளி, கடவுளைக் கும்பிடு, சாப்பிடு, பள்ளிக்கூடம் செல், பாடங்களைப் படி, பெரியோர்களை மதித்து நட, பொய் பேசாதே, திருடாதே என்றெல்லாம் ஒரு சிறுவனுக்குச் சொல்கிறோம் என்றால் சரி. இவை பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்குமான பொதுவான போதனைகள் என்று சிலர் சொல்லலாம். ஆனால் இதிலேயே கடவுளைக் கும்பிடு, பொய் பேசாதே என்பதெல்லாம், எல்லா மாணவனுக்கும் எல்லாச் சூழலுக்கும் பொருந்தி வருமா? கடவுளைக் கும்பிடாத மாணவனும் இருக்கலாம். பிறர் நன்மை சார்ந்து எதையாவது ஒளிக்க, மறைக்க பொய் சொல்ல வேண்டியும் சிலருக்கு நேரலாம். இதனால் அந்த மாணவன் ஒழுக்கக் கேடானவன் ஆகிவிட முடியுமா? நிச்சயம் முடியாது. இதுபோலவே பிறவும். ஆகவே எதையும் சூழல் சார்ந்தே முடிவு செய்ய முடியும். முடிவு செய்ய வேண்டுமேயல்லாது, பொத்தாம் பொதுவாக முடிவு செய்யமுடியாது.

இதே போலவேதான் பாலுறவு சார்ந்த கருத்தாக்கங்களும், மதிப்பீடுகளும், செயல்பாடுகளும். காட்டாக, புராதன மனிதச் சமூகத்தில் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்குமான உறவு தடை செய்யப்பட்டது என்றால், அது ஒரு பொது நியதி சார்ந்த வளர்ச்சி, முன்னேற்றம். அதேபோல சகோதர சகோதரிகளுக்கிடையேயான உறவு தடை செய்யப்பட்டது என்றால் இதுவும் அவ்வாறே உயிரியல் நலன் கருதி, சமூக நலன் கருதி விதிக்கப்பட்ட ஒழுக்கம். இதில் தனிப்பட்ட எந்த ஆதிக்க நலனும் இல்லை. பொதுவாக சமூக நலன், மனித நலன் மட்டுமே அடங்கியிருந்தது.

இப்போதும்கூட மிக நெருக்கமான சொந்தங்களுக்குள் செய்து கொள்ளப்படும் திருமணங்களில், பிறக்கும் குழந்தைகள், உடல் உறுப்புகள் ஊனமுற்றவர்களாகவோ, மனவளர்ச்சி குன்றியவராகவோ இருப்பதைப் பார்க்கலாம். அதேபோல, சமூகத்தில் மிகச் சிறுபான்மையாயிருக்கும் சில சாதிகள் தங்கள் சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள முயன்று, சவலைகளைப் பெற்று, அந்தச் சாதியே இருந்த சுவடு தெரியாமல் அழிந்துபோன செய்தியையும் அறியலாம்.

இவை ஏன் இப்படி அழிகிறது? நெருங்கிய சொந்த இரத்த பந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வது சவலைச் சந்ததியைத்தான் உருவாக்கும் என்பது ஓர் அறிவியல் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை அறிந்தோ அறியாமலோ அல்லது நடைமுறை விளைவுகளைப் பார்த்தோதான், புராதன சமூகம் பெற்றோர் பிள்ளைகளுடனான உறவையும் அடுத்து சகோதர சகோதரிகளுடனான உறவையும் தடை செய்து நேரடி இரத்த உறவுக்கு அப்பாற்பட்ட, மாற்று மண அல்லது ஒருதார ஒரு கணவ முறையை உருவாக்கியது. அவ்வளவுதான் அத்தோடு அதன் பணி முடிந்து போகிறது. அதாவது ஆதிக்க சார்பற்ற பொதுவான சமூக நலன், மனிதகுல நலன் சார்ந்த அதன் நடவடிக்கை முற்றுப் பெற்று விடுகிறது.

ஆனால் ஒரு தார - ஒரு கணவ முறையில் சேரும் இணை காலா காலத்துக்கும் அப்படியே இருக்கவேண்டும், பெண் கற்பு நெறியோடு திகழவேண்டும் என்பதெல்லாம் ஆதிக்கங்கள் உருவாக்கியவை, ஆதிக்க நலன் சார்ந்தவை. ஆதிக்கங்களைப் பாதுகாக்கும் உள்நோக்கம் உடையவை. அதேபோலத்தான் இந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பாலுறவு சார்ந்த நடவடிக்கைகளையே கேவலப்படுத்துவது, அதைச் சிற்றின்பம் என்பது, பாலுறவு உறுப்புகளை அசிங்கம், ஆபாசம் என்பது, அதன் பெயர் குறிப்பிட்டுச் சுட்டுவதைக் கெட்ட வார்த்தைகள் என்பது எல்லாமும். இவையெல்லாம் தான் ஆதிக்க, தன்னல நோக்கம் கொண்டவை, ஆதிக்க நலன்களைப் பாதுகாப்பவை என்கிறோம். எனவே, இந்த நோக்கில் இந்த அடிப்படையிலேயே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள, இப்படி யோசித்துப் பார்ப்போம். இவற்றையெல்லாம் கெட்ட வார்த்தைகள் என்றும், அசிங்கம், ஆபாசம் என்றும் யார் சொல்லியிருப்பார்கள்? எப்போது சொல்லியிருப்பார்கள்? அரசாணை மாதிரி இதைத் தேதியிட்டு சொல்ல முடியாது என்றாலும் எப்படிப்பட்ட சமூகப் பின்னணியில் எப்படிப்பட்ட ஆதிக்க சக்திகளால் இது சொல்லப்பட்டிருக்கும் என்று ஊகிக்கலாம். அநாகரிக நிலையிலிருந்து நாகரிக நிலைக்கு அடியெடுத்து வைத்த சமூகம், அதாவது இணை மண முறையிலிருந்து ஒரு தார, ஒரு கணவ முறைக்கு அடியெடுத்து வைத்த சமூகம், அதாவது பொது உடைமையிலிருந்து தனியுடைமைப் பாதைக்கு மாறிய சமூகம், ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணியில் அப்போது தலையெடுத்த ஆதிக்க சக்திகள், தங்கள் ஆதிக்க நலன் காக்கும் நோக்கில் இதைப் பரப்பியிருக்கலாம். அது அப்படியே காலா காலத்துக்கும் தொடர்ந்து வந்திருக்கலாம்.

இதில் இங்கு இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பாலுறவு உறுப்புகளையும், பாலுறவுச் செயல்பாடுகளையும் குறிக்க ஒவ்வொன்றுக்கும் பல சொற்கள் இருக்கின்றன. இதில் சில சொற்களைக் குறிப்பிடுவது அசிங்கம், ஆபாசம், சில சொற்களைக் குறிப்பிடுவது நாசூக்கு, நாகரிகம். அதாவது உறுப்பு ஒரே உறுப்புதான், செயல்பாடுகளும் ஒரே செயல்பாடுகள்தான். ஆனால் அதை ஒரு பெயரால் குறிப்பிட்டால் அசிங்கம், ஆபாசம், இன்னொரு பெயரால் குறிப்பிட்டால் நாசூக்கு, நாகரிகம் என்றால் இப்படி இதை வகைப்படுத்தியது யார்? பாமர மக்கள் மொழிக்கும், பண்டித மொழிக்கும் உள்ள வேறுபாடுதானே இது? பண்டைய இலக்கியங்களில் பாலுறவுத் தாக்கங்கள் பண்டித மொழியில் சொல்லப்பட்டுள்ளன. அது தவறில்லை. அது கெட்ட வார்த்தையில்லை. ஆபாசம் இல்லை. ஆனால் அதுவே பாமர மொழியில் சொல்லப்பட்டால் அது கெட்ட வார்த்தை, ஆபாசம்.

ஆக, பாமர மக்கள் மொழி ஆபாச மொழி, பண்டித மொழியே உன்னத மொழி என்பதன் வெளிப்பாடுதானே இது? அதாவது பாலுறவு உறுப்புகளைச் செயல்பாடுகளைத் தங்கள் பண்டித மொழியில் வெளிப்படுத்தினால் அது தவறில்லை. ஆனால் பாமர மொழியில் பேசினால் தான் அது தவறு என்கிற மேட்டிமைத் தனமும் இதில் அடங்கியுள்ளது என்பதுதானே இதன் பொருள்? ஏறக்குறைய இப்புவிக்கோளின் எல்லாச் சமூகத்திலும், எல்லா மொழியிலும் இதுவேதான் நடந்தது. அந்தந்த சமூகத்திலும் உள்ள ஆதிக்க சக்திகள், மக்களின் பாலுறவு நடவடிக்கைகளையும், அது சார்ந்த சொல்லாடல்களையும் முழுக்க முழுக்கத் தங்கள் ஆதிக்கநலன் சார்ந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, தன்னல நோக்கில் அது சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்கி, அதுவே ஒட்டுமொத்த சமூக நலனுக்குமான மதிப்பீடு என்பதாக அதை வலியுறுத்தின.

இந்தக் கட்டுத்திட்டங்கள் மக்களது இயல்பு வாழ்க்கைக்குப் பொருந்தி வராத நிலையிலேயே அது சார்ந்த மீறலும் இலைமறை காய்மறை நடவடிக்கைகளும் தோன்றின. இவை வெளித் தெரியாதவரை எந்தவிதச் சிக்கலுமின்றி அவை பாட்டுக்கு அப்படியே தொடர்ந்தன. வெளித்தெரிய வந்தபோது கோபம், ஆத்திரம், வன்மம், பழிவாங்கல், குரூரம், படுகொலைகள் எனக் குற்றச் செயல்கள் தொடர்ந்தன. இவற்றுள் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் நடந்த சம்பவத்தையொட்டி எழும் கோபம், ஆத்திரம், ஆவேசத்தை விடவும், இவ்வுணர்வுகளைத் தூண்டுவதற்கு அடிப்படைக் காரணமான சமூக மதிப்பீடுகளே முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.

இம்மதிப்பீடுகள் ஆதிக்க நலன் சார்ந்து உருவாக்கப்பட்டவை என்பதற்கு, இந்தியாவில் நிலவிய ஆதிக்க சக்திகள் மட்டுமின்றி, இந்தியாவில் காலூன்றிய வெள்ளை ஆட்சி, பாலுறவு சார்ந்த சித்தரிப்புகளையே எப்படிக் குற்றச் செயலாக்கியது என்பது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக இந்தியாவின் வட பகுதிகளில் வாழும் இந்துச் சமூகத்தின் இறைவழிபாட்டில் பாலுறவு சார்ந்த செயல்பாடுகளுக்கும், சித்தரிப்புகளுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. இராதா-கிருஷ்ண லீலைகளும், கிருஷ்ணா-கோபியர் களியாட்டங்களும் சார்ந்து இடம் பெறும் இவை விழாக்களில், வழிபாட்டில், பக்திப் பாடல்களில் முக்கிய இடம் பெற்றன. இதுவன்றி கோயில் சிற்பங்களிலும் பாலுறவுக் காட்சிகள் தெய்வீகத் தோற்றம் கொண்டிருந்தன. இப்படி இறைவனின் காதல் களியாட்டங்களைப் பூசித்து வழிபட்டு வந்த இதே இந்திய ஆதிக்க சக்திகள்தான் பாலுறவு சார்ந்து மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தன. அதாவது எல்லாச் செயல்பாடுகளிலும் போலவே தனக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதி என்பதாக அவை பிரச்சாரம் செய்தன.

எனில், இந்தப் பாலுறவுச் சித்தரிப்புகளை வழிபாடுகளைப் பாடல்களைக் கூட ஏற்க மறுத்து அவற்றைத் தடை செய்தனர் வெளியேயிருந்து வந்த வெள்ளைக் காலனியாதிக்கத்தினர். தாங்கள் சார்ந்த கிறித்துவ மதத்திற்கும், பாலுறவு சார்ந்த அதன் கெடுபிடி விதிகளுக்கும் இவை எதிராயிருப்பதாகக் கருதி அவை இந்நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்து சமூக அமைப்பின் சமய சீர்திருத்தவாத இயக்கங்களும் இந் நடவடிக்கைக்குத் துணை புரிந்தன.

1857 இந்தியப் படை வீரர் பேரெழுச்சிக்குப்பின், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி முடிவுற, பிரித்தானியப் பேரரசே இந்தியக் காலனி நிர்வாகத்தை நேரே கையிலெடுத்து, விக்டோரியா மகா ராணியின் பேரறிக்கையைப் பிரகடனம் செய்தது. இதையடுத்து, 1860இல் வெள்ளை ஆட்சி இந்தியத் தண்டனைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. வெள்ளை ஆதிக்க நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் பாலுறவு சார்ந்த நட வடிக்கைகளில் இந்தியச் சூழலுக்குப் பொருத்தமான விதிமுறைகளை வகுக்காமல், தான் சார்ந்த இங்கிலாந்து மண்ணுக்கும், கிறித்துவ மதத்திற்கும் பொருத்தமாகவே இச்சட்டங்களை வகுத்தது.

இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 292, 293, 294 ஆகியன பாலுறவு சார்ந்த நடவடிக்கைகளை ஆபாசம் என அவற்றைத் தண்டனைக்குரிய தாக்கி, பண்பாட்டு நடவடிக்கைகளிலும் அதைப் புகுத்தியது. சில இந்திய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது அவற்றுள் பல பகுதிகளை அவை ஆபாசம் எனக் கூறி அவற்றைத் தவிர்த்து மற்றவற்றை மட்டுமே மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டது. வட இந்திய மக்கள் பெரும் உற்சாகத்தோடும் கோலாகலத்தோடும் கொண்டாடும் ஹோலி பண்டிகையில் பெண்கள் யாரும் பாலுறவு சார்ந்த பாடல்களை, அவை ஆபாசம் எனக் கூறி அவற்றைப் பாடக்கூடாது எனத் தடை செய்தது. இவை அனைத்தையும் இந்து சீர்திருத்தவாத அமைப்புகளின் துணையோடு செய்தது.

இவற்றில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது. மேலோட்டமான நோக்கில் அணுக இப்படியெல்லாம் செய்தது நல்லதுதானே என்று சிலர் நினைப்பதானாலும், இந்நடவடிக்கைகளின் நோக்கம் இலக்கு என்ன என்பதுதான்.

சமூகம் கட்டுக்கோப்பாக, ஒழுக்கமாக, புனிதமாக, நல்லதே பேசி, நல்லதே செய்து, நல்லவிதமாக இருக்கவேண்டும் என்கிற நல் லெண்ணம் தான் காரணம் என்று சிலர் கருதலாம். ஆனால் அது இல்லை நோக்கம். காரணம் அப்படிப்பட்ட நோக்கத்தில் சட்டம் இயற்றுபவர்கள் இருந்திருந்தால் முதலில் அவர்கள் இதைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் இதைக் கடைப்பிடிப்பதில்லை. திரை மறைவில் மீறுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க எதற்கு இந்தச் சட்டம்? யாரை ஏய்க்க? யாரை ஒடுக்க?

ஆக, இதன் நோக்கம் மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதாவது மக்களின் பிற எல்லா நடவடிக்கைகளையும் போலவே பாலுறவு நடவடிக்கைகளையும், அது சார்ந்த சொல்லாடல்கள், மதிப்பீடுகள் அனைத்தையும் தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவேண்டும் என்பதுதான். மக்களின் உடல்கள்மீதும் உணர்வின் மீதும் - அதாவது அதைக் கட்டமைக்கும் கருத்தியலின் மீதும் தன் அதிகாரம் நிலைக்கவேண்டும் என்பதுதான்.

இதனால்தான் பக்தி இலக்கியங்களிலும், கோவில் சிற்பங்களிலும் பாலுறவுக் காட்சிகளைச் சித்தரித்த இவர்கள், அதைத் தெய்வீகம் எனப் போற்றிப் பாராட்டும் இந்திய ஆதிக்க சக்திகள், மக்கள் இது பற்றிப் பேசுவது பாவம், ஆபாசம், கெட்ட வார்த்தை என அதைத் தடுக்கின்றனர்.

கிருஷ்ணனின் லீலா விநோதங்களைப் பாடிப் புகழ்ந்து பரவசப்படுபவர்கள் அதே காரியத்தை ஒரு இளைஞன் செய்தால் இது ‘ஒழுக்கக் கேடு’ என்று அதைக் குற்றச் செயலாக்குகின்றனர். கிருஷ்ணன்மீது தீராத மோகம் கொண்டு காமரசம் ததும்பும் பாடல்களைப் பாடிய இராதாவின் காதலை அது தெய்வீகம் என்று போற்றிப் புகழ்பவர்கள் அதே காரியத்தை ஓர் இளம்பெண் செய்தால் அது அபச்சாரம், ஒழுக்கக்கேடு என்று பதறித் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

இதே காரணம் பற்றியே, இதே நோக்கம் கருதியே வெள்ளை ஆட்சியும் இதைச் சட்டவிரோதம், குற்றச் செயல் என்கிறது. இப்படிப்பட்ட முரண், இயல்புக்கு மாறான கட்டுத்திட்டங்கள், மதிப்பீடுகள், பாலுறவு சார்ந்து சமூகத்தில் தொடர்ந்து நிலவுவதால்தான், அது சார்ந்த குற்றச் செயல்களும் சமூகத்தில் மலிந்து கிடக்கின்றன.

ஒன்று, இறையவர்களின் காதல் களியாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் அல்லது அவற்றைப் புறக்கணிக்க வேண்டும். அல்லாது அதை அனுமதிப்பதானால், பக்தர்களுக்கும் அந்தச் சுகத்தை, சுதந்திரத்தை அனுமதிக்கவேண்டும். இதில் இது எதுவுமே முடியாது என்பதனால்தான் எல்லாச் சிக்கலும். அதாவது பாலுறவு சார்ந்த குற்றச் செயல்கள், கொலை நடவடிக்கைகள் எல்லாமும்.

எனவே, இந்தப் புரிதலில் இதன் தீர்வுக்கு என்ன வழி என்று யோசிப்போம்.

Pin It