அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு கூடங்குளத்துல இருந்து முனுசாமி எழுதுறேன்.

                நாங்க எல்லோரும் கூடங்குளம் அணு உலய எதுத்து போராட்டத்துல எறங்குனதுல இருந்து, அதுவும் உண்ணாவிரதப் போராட்டமிருக்க ஆரம்பச்சதுல இருந்து சரியா சோறு-தண்ணி சாப்பிடாம ஒடம்பு கொஞ்சம் சுகமில்லாம இருந்தாலும், எங்க போராட்டத்த ஆதரிச்சுப் பேசுற பல தமிழர்கள் எங்க ஊருக்கு வந்து சொல்லுற ஆறுதலாலயும், அவுங்க எங்களோட தோள் கொடுத்துப் போராடுரதுனாலயும் நாங்க மனச நல்லா தெடமாத்தான் வச்சிருக்கோம்.

                ஆனா, தமிழ்நாட்டுல உள்ள சில பாமரமக்களும், படிச்சவுங்களும் எங்க போராட்டப் பத்தி பேசுற பேச்சுதாங்க எங்களுக்கு தாங்க முடியாத தொயரத்தத் தருது.

                எங்களோடு போராட்ட நியாயத்த உங்களுக்கெல்லாம் தெளிவாச் சொல்லனும்னுதான் இந்த போராட்ட நெருக்கடிலயும் மெனக்கட்டு ஒக்காந்து இந்தக் கடுதாசிய எழுதுறேன்.

                “இவ்வளவு நாள் கட்டவிட்டுப்புட்டு இப்ப ஏன் துள்ளுறாங்க” ன்னு சில படிச்சவங்க கூட கேக்குறது எங்க காதுல விழத்தான் செய்து.

                அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களே! எங்களோட இந்த அணு உல எதுப்பு போராட்டம் நேத்தோ, இன்னக்கோ தொடங்குனது இல்ல. கூடங்குளத்துல அணு உல தொடங்கனும்னு எப்பத் திட்டம் போட்டங்களோ, அதாவது 1987-ல இருந்தே போராடிக்கிட்டே தாங்க இருக்கோம்.

                1987-ல திருச்செந்தூரில பெரிய பொதுக்கூட்டம், இடிந்தகரையில பொதுக்கூட்டம், 1988ல திருநெல்வேலி, நாகர்கோவில்ல, ஊர்வலம் 1989-மார்ச் 20ல தூத்துக்குடில பெரிய அளவுல ஊர்வலம் நடத்துனோம்.

அதுமட்டுமில்லிங்க,           1989 மே 1ந் தேதி உழைப்பாளர் நாளன்னைக்கு, தேசிய மீனவர் கூட்டமைப்பின் சார்பா 10,000 மக்கள் திரண்டு பெரிய ஊர்வலத்த நடத்துனோம். அந்த ஊர்வலத்த கலெக்க நெனச்ச போலிஸ்காரங்க தடியடி துப்பாக்கிச் சூடு நடத்துனாங்க. அதுல இக்னேசியஸ்ன்னு ஒரு இளைஞர் துடிதுடிச்சு செத்துப்போனாரு. துப்பாக்கிக் குண்டுக்காயம்பட்ட இயேசு இரத்தினத்துக்கு ஒரு காலயே எடுக்கிற நெலம வந்துச்சு

1989 ஜுன் மாசத்துல நாகர்கோவிலச் சுத்தியுள்ள ஊர்கள்ல 101 பொதுக்கூட்டங்கள் நடத்துனோம்.

மக்களின் தீவிர எதிர்பால் அடிக்கல் நாட்ற விழா மூனுதடவை தள்ளிப்போயிருக்கு. இராசீவ்காந்தி, வெங்கட்ராமன், கருணாநிதின்னு வந்த தலைவர்கள் எல்லாரும் எங்க போராட்டத்தக் கண்டு மிரண்டு ஓடிருக்காங்க.

                எங்க போராட்டக்குரல் நம்ம நாடாளுமன்றத்து வரையில எதிரொலிச்சுருக்குன்னா பாத்துக்குங்களேன். இப்படி எங்களோட, போராட்ட வரலாற எழுதுன பல பக்கங்களுக்கு எழுதிக்கிட்டே போகலாம். இப்பவும் எங்க போராட்டம் பல வடிவங்கள்லயும் தொடந்துக்கிட்டேதாங்க இருக்கு.

                இப்ப, சப்பான்ல புகுஷிமா அணு உல வெடிச்சதுனால எற்பட்ட கொடூரப் பாதிப்ப பாத்ததுல இருந்து அந்த நெலம நமக்கும் வரக்கூடாதுன்னுதான் இப்ப ரொம்ப தீவரமாப் போராடிக்கிட்டிருக்கோம்.

                இதாங்க எங்களோட போராட்ட வரலாறு……. ‘படிச்ச’ நீங்களே, எங்க போராட்ட வரலாறு தெரியாமப் பேசலாமாங்க?

                அப்புறம், எங்க போராட்டத்த ஆதரிச்சுப் பேசுறவங்களே கண்டாவே உங்களுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வந்து முகமெல்லாம் செவந்து போகுதாமே…..

                “கரண்டே சரியா கெடக்காம அடிக்கடி கரண்ட் கட் ஆகுற இந்த நேரத்துல அவங்கதான் கரண்ட வர்ர அணு உலய தொறக்க விடாம இப்படிப் பன்றாங்கன்னா இவங்கெ வேற சேந்துக்கிட்டு பேசுறாங்க” அப்படீன்னு திட்டித் தீத்துர்ரிங்களாமே…….?

                நீங்க நெனக்கிறது மாதிரி கூடங்குளம் அணு உலய தொறந்தா உடனே கரண்ட்டு பொத்துக்கிட்டு ஊத்தாது.

                கூடங்குளம் அணு உலய தொறந்து, நம் தமிழ்நாட்ட ஒளியூட்டனும்றது இந்தியாக்காரனோட நோக்கமுமில்ல. தெற்காசிய நாடுகள் அளவுல தன்ன ஒரு பேட்டை இரவுடியாக காமிச்சுக்கிற இந்தியாக்காரனுக்கு அணு ஆயுதம் தேவைப்படுது. அந்தக் கொடிய ஆயுதத்தைத் தயாரிக்கத்தான் நம்ம தமிழ்நாட்டைத் தேந்தெடுத்துக்குறாங்க.

கூடங்குளத்துல இருக்குற இந்த அணு உலைய கட்டுறதுக்கு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம்னு அலஅலென்னு அலெஞ்சாங்க இந்தியாக்காரனும் இரசியாக்காரனும்.

                அந்ததந்த மாநிலத்துல இருக்குற மக்களெல்லாம் விழிப்புணர்வோடு ஒன்னாச் சேர்ந்து அணு உலயாவது மண்ணாங்கட்டியாவதுன்னு அடிச்சு விரட்டிப்புட்டாங்க. அடிவாங்குன முதுகோட நம்ம தமிழ்நாட்டுல வந்து அணுஉலய நட்டுப்புட்டான்

                நம்மள இளிச்சவாயன் ஆக்கிப்புட்டான் இரசியாக்காரன். நம்மாளுகளும் கீழே உளுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலங்கிற மாதிரி “அறிவியலு வளர்ச்சி நாட்டுக்கு நல்லதுதான்னு” ஆளாளுக்கு அள்ளிஉட்டுட்டுத் திரியுறாங்க.

                அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.

                ஒங்க நெனப்புப்படியே அந்த அணு உலய தொறந்தாலும் அதுல இருந்து வரப்போற எல்லாக் கரண்டையும் உங்களுக்கு அள்ளிக்கொடுப்பான்னு நெனக்காதீங்க!

                உங்களுக்குக் கெடக்கப் போறது வெறும் 237 மெகாவாட்தான்னு வெவ‌ரம் தெரிஞ்சவுங்க சொல்றாங்க. இந்த கரண்ட வச்சுக்கிட்டு இப்ப தமிழ்நாட்டுல இருக்குற இருட்டப்போக்க முடியும்மான்னு கொஞ்சஞ் சிந்திச்சுப் பாருங்க!

                அணு உலயில இருந்து கெடக்கப்போற கரண்டோ கொஞ்சம் ஆனா நஞ்சோ அதிகமுங்க.                 அணு உலயில இருந்து வெளிவர்ர அணுக்கசிவு நம்மள மட்டுமில்லீங்க நம்மளுக்குப் பின்னால பொறக்கப்போற பல தலமுறயப் பாதிக்கும்.

                இந்தியா நாடு இருக்கே, அது எப்பவுமே ஒட்டுப் போட்ட மக்கள் மேல உள்ள அக்கறைய விட தேர்தல் செலவுக்கு பணம்;கொடுத்த பெரு முதலாளிங்க மேலே ரொம்ப அக்கறயா இருப்பாங்கன்ற சேதி நான் சொல்லி ஒங்களுக்கு தெரியனும்னு அவசியமல்ல…..

                போபால், யூனியன் கார்பைடு நிறுவனத்துல விபத்து நடந்து 20,000 பேருக்கு மேலே செத்துப்போனாங்க….. அதன் பாதிப்பு இப்பவும் இருக்கத்தான் செய்து. அந்தப் பேரழிவு காரணமான ஆண்டர்சன பத்திரமா அவுங்க நாட்டுக்கு அனுப்பி வச்சவன் இந்தியாக்காரன். இத வச்சே தெரியலயா அவுங்க இலட்சணம்….

                “அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாமே அணுஉல பாதுகாப்பானதுன்னு சொல்லீட்டாரே, அப்பறம் என்ன அதுல பாதிப்பு இருக்கப் போகுது” ன்னு ரொம்ப பேரு கேட்குட்டுக்கிட்டே இருக்காங்க….

                அப்துல் கலாம் இருக்காரே அவரு எப்பவுமே அரசுக்குத்தான் சாதகமாக இருப்பாரு. மக்களுக்குச் சாதகமா இருக்கவே மாட்டாரு. கொஞ்ச நாளைக்கு முன்னால, இலங்கைக்குப் போயி நம்ம இனத்தையே ஒட்டு மொத்தமா கொன்னுகுவிச்ச சிங்களப் பயலுகளோட சேந்து கூத்தடிச்சாரே நினைவிருக்கா உங்களுக்கு …..?

                அவரு “நல்ல அறிவாளிதான்” ஆனால் அந்த அறிவ அமெரிக்க - இந்திய “வல்லரசுகள்”ட அடகுவச்சு ரொம்பக்காலமாச்சுன்னு ஏன் ஒங்களுக்கு புரியவே மாட்டேங்குது.. கூடங்குளம் வந்த அப்துல் கலாம் 100 நாளா போராடிக்கிட்டு இருந்த எங்கள வந்து சந்திக்காம அணுஉலய மட்டும் பாhத்துப்புட்டு “பேஷ்ஷா” இருக்குன்னு சொல்லிட்டு எங்க போராட்டத்த உதாசீனப்படுத்திட்டுப் போனாரே அவர எப்படி நல்லவர்னு நம்பச் சொல்றீங்க.

                இரகசியமா ஒன்னு சொல்றேன். அப்துல் கலாம் அணு விஞ்ஞானியல்ல. வானுர்திக்கான விஞ்ஞானிங்க.             

                அதுமட்டுமில்லீங்க, நம்ம நாட்டு விஞ்ஞானி இருக்காங்களே, மழை வருமுன்னு சொல்லுவாங்க ஆனா வெயிலு பௌந்து கட்டும். வெயிலடிக்கும்னு சொல்லுவாங்க அப்ப மழை கொட்டித் தீக்கும். இதெல்லாம் நம்மாளுக டீக்கடையில ஒக்காந்து பேசுற விசயந்தானே?

                நம்ம விஞ்ஞானிகளப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருந்தும், இப்பக் கூடங்குளத்துல இருக்குற அணு உல மூன்றாம் தலமுறப்; பாதுகாப்பு நாலாந்தலமுறை பாதுகாப்பன்னு அள்ளி உடுறத நாம நம்பித்தான் ஆகணுமா?

                இப்ப இருக்குற மூன்றாந் தலமுறதரப்பாதுகாப்போட கூட நாலஞ்சு தலமுறப்பாதுகாப்ப சேத்து போட்டு, நல்லாக்கட்டி, நம்ம நாட்டு நாடாமன்றத்துக்குப் பக்கதிலே வச்சுக்கிட்டா பாதுகாப்பாவும் இருக்கும். மன்மோகன்சிங், சிதம்பரம், நாரயணசாமிலாம் போய்ப்பாக்குறதுக்கும் கொஞ்சம் வசதியா இருக்கும்.

அணுஉல எங்கெ இருந்த என்ன? நம்ம நாட்டு “வளர்ச்சி” தானங்க நமக்கு முக்கியம் டெல்லி வளந்தா நம்ம தமிழ்நாடு வளந்தது மாதிரித்தான!

                சில பேரு சொல்றாங்களாம்…..

“பஸ்சுல போனாக்கூட ஆக்ஸிடென்ட் வரத்தானே செய்யுது….. அதனால பஸ்சுல ஏறாம இருந்துருவாங்களா” ன்னு…., அட நம்ம அறுவாளி அப்துல்கலாம் கூட ஒரு தடவ அப்படித்தான் சொல்லிஇருக்குறாரு…..

                பஸ்ல ஆக்ஸிடென்ட் ஆகும்னு தெரிஞ்சா ஏர்றோம். பஸ் வந்தா ஏர்றோம். டிரைவரோட கவனக்குறைவாலயோ, வேற ஏதாவது காரணத்துலாலயோ ஆக்ஸிடென்ட் நடந்துருது.      

பஸ் ஆக்ஸிடென்ட்ல பஸ்சுல போனவன் மட்டுந்தான் சாகுறான். ஆனா அணு உல வெடிச்சா அதுக்கு பக்கத்துல வசிக்கிறவன் மட்டும் சாகுறதுல்ல. அதச் சுத்தியிருக்குற 200 கி.மீக்கு அப்பால இருக்குறவங்களுக்குக்கூட அந்தப் பாதிப்பு இருக்கும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.

                அந்தப் பாதிப்பு நாம நெனச்சுப் பாக்கமுடியாத அளவுக்கு குரூரமா இருக்குமாம்.

                கதிர்வீச்சு பாதிப்பு அந்த விபத்து நடந்த நாளோடு முடிஞ்சு போற விசயமில்லங்க, அடுத்து வர்ற நம்ம தலமுற பலரப்பாதிக்கும்ங்க…

                இப்ப சொல்லுங்க, பஸ் ஆக்ஸிடென்டும், அணுஉல ஆக்ஸிடென்டும் ஒன்னாங்க.

                இப்படிப் பல தலமுறயப் பாதிக்கிற ஆபத்து இருக்குறதாலத்தான் பல நாட்டுக் காரங்க அணு உலய இருந்த எடம் தெரியாம மூடிக்கிட்டு இருக்கிறாங்க.

                1986-ல ரசியாவில இருந்த செர்னோபில் அணுஉல வெடிச்சு 2004 வரைக்குமே 9,85,000 பேரு புத்துநோய் வந்து எறந்து போயிருங்காங்கன்னு இரசியாக்காரன் சொல்றான். இம்புட்டுக்கும் அந்த அணுஉல மூடித்தான் இருந்துச்சாம்.

                செர்னோபில்ல வெடிச்சது 2700 கி.மீட்டருக்கு அப்பால உள்ள இங்கிலாந்து நாட்டுல கூட அந்தக் கதிர்வீச்சு பரவுச்சாம். நாய், மாடு, மீன், தண்ணீர், மரங்களெல்லாம் நாசமாப் போச்சுன்னா பாத்துக்குங்களேன் இந்தக் கதிர்வீச்சு அபாயத்த…..

                1979-ல மூன்று மைல் தீவுன்ற ஒரு எடத்துல அமெரிக்க அணு உல வெடிச்சுச் சிதறுனதுல அங்க இருந்த நெறய மக்கள் செத்துப்போயிட்டாங்களாம். இப்பவரைக்கும் அந்த ஏரியாவையே பயன்படுத்த முடியாத அளவுக்கு நஞ்சாப் போச்சாம்.

                இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஜப்பான்ல புகுசிமா அணுஉல வெடிச்சு எவ்வளவு பாதிப்பு வந்துச்சுன்னு உங்களுக்கே தெரியும். அந்த சமயத்துல ‘நம்ம நாட்டுலகூட கதிர்வீச்சு பரவும் அபாயம் இருக்குன்னு’ உங்க செல்போனுக்கு சேதி வந்ததே ஞாபகம் இல்லையா உங்களுக்கு….?

இப்ப அந்த புகுசிமா அணுஉலய மூடுறதுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய செலவாகுமாம். அதுவும் 45 ஆண்டுகள் வரை ஆகுமாம். ஆதனால அவுங்க அந்த அணுஉலய மூட படாதபாடு பட்டுக்கிட்டு இருக்காங்க. ஜப்பான் விஞ்ஞானிகளப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும். அவுங்க பாடே திண்டாட்டம்னா…? விண்ணில் பாயிறதுக்குப் பதிலா மண்ணக் கவ்வுற ராக்கெட் “கண்டுபிக்கிற” நம்ம இந்திய விஞ்ஞானிகளப்பத்தி சொல்லவே தேவயில்ல…..

                புகுஷிமா அணுஉல வெடிச்சதுக்குப் பின்னாடி ஜப்பான்ல இருந்த 28 அணு உலய உடனே மூடிட்டான். 10 அணு உலயில நடந்த வேலய நிறுத்திப்புட்டான்.

                செர்மனிக்காரன் 2022க்குள்ள எல்லா அணு உலயயும் மூடப் போறதா அறிவிச்சுருக்கான்.

                அவுங்க மட்டுமில்ல ஆஸ்திரியா, அயர்லாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்தன்னு பல நாட்டுக்காரன் அணு உலய மூட முடிவு பன்னிட்டான்……

                இரஷ்யாக்காரன் கூட செர்னோபில்ல நடந்த விபத்துக்குப் பின்னாடி இப்பவரைவரைக்கும் புதுசா அணுஉல எதையும் நிறுவலன்னா பாத்துக்குங்களேன். ஆனா, அவன் நம்ம தமிழ்நாட்டுக்கு வந்து இந்தியாக்காரன் ஆசிர்வாதத்தோட அணுஉலய அமைச்சுகிட்டுருக்கான்.

                இந்தியாக்காரனும் இலங்கைக்காரனும் சேர்ந்து ஈழத்துல வாழ்ந்த தமிழர்கள மொத்தமா கொன்னுப்புட்டானுங்க. இப்ப, இந்தியாக்காரனும், இரசியாக்காரனும் சேந்து கூடங்குளம் அணுஉல மூலமா தமிழ்நாட்டுல இருக்குற ஒட்டுமொத்த தமிழர்களையும் கொல்லப்பாக்குறாங்க…….

                இப்பத் தடுக்கல அப்புறம் நம்ம கதி அதோ கதி தாங்க…..

  விழிப்பு இல்லாத மனுசன் பொழக்க முடியாது பாத்துகுங்க…..

                இவ்வளவு பனத்த விரயம் பன்னியாச்சே, நம்ம மக்களோட வரிப்பனமெல்லாம் வீணாப் போகுதேன்னு பல ‘படிப்பாளிகள’; மண்டயப் பிச்சுக்கிட்டு ரொம்ப நாளாச் சரியா சாப்புடாம கெடக்குறாங்களாம்…….

                நம்ம நாடு ஊழல்ல ‘வளர்ச்சி’யடைஞ்சுட்டு வர்ர நாடுகள்ல ‘முன்னணி’ல இருக்குன்னு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. நம்ம அரசாங்க நல திட்டத்துனால எது நடக்குதோ இல்லயோ, ஊழல் மட்டும் ‘அமோகமா’ நடக்கும். ஆதர்ஸ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2பு ஸ்பெக்ட்ரம் ஊழல், இப்படி சமீபகால ஊழல்கள அடுக்குக்கிட்டே போகலாம். இந்த ஊழல்கள்ல எல்லாம் பல ஆயிரம் கோடி வீணாப்போச்சே அதெப்பத்தியெல்லாம் நீங்க நெனச்சுப்பார்த்துருக்கிங்களா?

                பல கோடி ரூபாய் போட்டு சேது சமுத்திரத் திட்டம்னு ஒரு திட்டத்தக் கொண்டு வந்தப்ப, அந்த இடத்துலதான் இராமர் ‘ஒன்னுக்கு’ போனார்னு சொல்லி மதவாதிங்கள்ளாம் கூடி அந்தத் திட்டத்த கெடுத்துப்புட்டானுங்க. அந்தத் திட்டத்த திரும்பவும் கொண்டு வாங்கன்னு அரசுக்கிட்டே எப்பாவாவது கோரிக்கை வச்சுருக்கிங்களா?

                சொன்னா நம்ப மாட்டிங்க.

                நம்ம ‘மக்கள் சேவகர்கள்’ அதாங்க அரசியல்வாதிகள் சுவிஸ் வங்கில போட்டு வச்சிருக்கிற பணத்துக்கு எத்தன சைபர்ன்னு நம்ம ‘பொருளியலு மேத’ மன்மோகன் சிங்குக்கு கூடத் தெரியாதுன்னா பாத்துக்குங்களேன். ஆக அந்த வங்கில எவ்வளவு பனந்தான் இருக்குதுன்னு பார்ப்போம்னு நீங்க நெனச்சுருக்கீங்களா?

                அதனால பண‌த்த முன்னிலப்படுத்தி, பண‌ம் செலவாயிடுச்சு, அதனால அணுஉலய தொறக்கனும்னு நீங்க நெனக்கிறது எவ்வளவு முட்டாள்தனம்னு இப்பவாவது தெரிஞ்சுக்குங்க….

                நாம மானமுள்ள தமிழர்கள்னா “எங்க மண்ணுல (நெய்வேலி) உற்பத்தி செய்ற கரண்ட் எல்லாத்தையும் எங்களுக்கே கொடு”, "பன்னாட்டு நிறுவனத்துக்கு மின்சாரத்தக் கொடுக்காதே” அப்படீன்னு குரல் கொடுத்து போராடுனம்னா, அப்பத்தாங்க தமிழ்நாட்டு இல்லங்கள் பளீர்ன்னு மின்னும். ஏன்னா? கெடக்கிற கரண்ட் எல்லாத்தயும் பக்கத்து மாநிலத்துக்குக் கொடுத்துட்டுத்தான் நாம ஏமாந்து, இருண்டு கெடக்குறோம்.

                அப்புறம் முக்கியமாக சொல்லனும்னு நெனச்ச சேதிய எழுதாம மறந்துட்டேன் பாத்தீங்களா?

                பத்திரிக்கையாளர்களையே சந்திக்காத பிரதமர்ன்னு பேருவாங்குன நம்ம பிரதமரு மன்மோகன்சிங்கு திடீர்னு ஒரு நாள் பத்திரிக்கையாளரச் சந்திச்சு, “கூடங்குளத்துல போராடுறவுங்க அன்னிய சக்திகள்ட பணத்த வாங்கிட்டுதான் அணுஉல திட்டத்த தடுக்கப் பாக்குறாங்கன்னு” ஒப்பாரி வச்சாரு. நம்ம ஊரு போலிசும் பூதக்கண்ணாடி போட்டு தொலாவுதொலாவுன்னு தொலாவி கடைசியில தெருவோரம் நின்னுக்கிட்டு இருந்த செர்மனி நாட்டுக்காரர் ஒருத்தரப் புடிச்சு விசாரிச்சது. என்ன எழவு காரணமோ தெரியல அப்புறம் அவரயும் விட்டுருச்சு.

                அட, நான் தெரியாமத்தாங்க கேக்குறேன். நாங்க நடத்துறது உண்ணாவிரத போராட்டம். அதுக்கு தேவை தண்ணி மட்டும் தான். அதுக்கு எதுக்குங்க அன்னிய நாட்டுப்பண‌மெல்லாம்…??

                சிதம்பரம், நாராயணசாமி, மன்மோகன்சிங் சொல்றதத்தான், அப்படியே வாந்தி எடுக்கிறான் டீவிக்காரனும் பேப்பர்காரனும். அதப்போயி நம்பிக்கிட்டு நீங்க எங்களோடு போராட்டத்தக் கொச்சப்படுத்துறது எப்படிங்க நியாயம்…?

                ஒன்ன மட்டும் தெளிவா தெரிஞ்சுக்குங்க, நாங்க கூடங்குளத்துல நடத்துற போராட்டம் எங்கள மட்டும் காக்குற போராட்டமட்டுமில்ல. ஒட்டுமொத்த தமிழர்களையும் காக்கும் ஒரு பெரிய யுத்தம்.

                இப்ப நம்ம போராடத் தவறுனம்னு வச்சுக்குங்க, இனிவர்ற தலைமுறை அணுஉலயினால ஒரு பெரிய பாதிப்பச் சந்திக்கும். அப்ப இந்த அணுஉலை கட்டுனப்ப நம்ம முன்னோர்களெல்லாம் என்னத்தக் கிழிச்சுக்கிட்டு இருந்தாங்கன்னு கேக்குறதோடு இருக்கமாட்டாங்க. நம்மள புதச்ச எடத்துல கிடக்கிற எலும்ப எடுத்து காலுல கிடக்கிறத வச்சு நைய்யப்புடப்பாங்க….

                போராடாத மனுசனோட எலும்பு கூட அடி வாங்கும்.

                நாம எறந்த பின்னாடி இப்படியொரு அவமானம் தேவதானா?

                இனிவாற நம்ம தலமுறைக்கு கதிர்வீச்சையும், புத்து நோயையும் தான் செல்வமா சேத்து வச்சுட்டுச் சாகப்போறமா?

                நல்லா யோசிங்க.

                கூடங்குளம்கிற மரண உலய எதிர்த்துப் போராட இப்போதிலிருந்தே குரல் கொடுங்க சொந்தங்களே!

                  இப்படிக்கு,

        எங்க போராட்ட நியாயத்தச் சொன்ன மனநிறைவோடு,

- முனுசாமி  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It