நீண்ட நாட்களாக மனதில் புரண்டு கொண்டிருந்த ஆவலை கடந்த சனி, ஞாயிறுகளில் தீர்த்துக் கொண்டேன். நண்பர்கள் இருவருடன் கூடங்குளம், இடிந்தகரை சென்றிருந்தேன். கூடங்குளம் பகுதியில் இருக்கிற ஒரு பொறியியல் கல்லூரியில்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் கணிப்பொறியியல் படித்தேன். அதனால் அந்தப் பகுதியின் நிலவமைப்பு எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். மிகவும் வறண்ட பூமி. அரிதாகத் தென்படும் மரங்கள், உரத்து வீசும் காற்று, 150 மீட்டர் உயர வெள்ளைக் கொக்குகளாக நிற்கும் காற்றாலைகள், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்கள் - இவை இந்தப் பகுதியின் பொதுவான அடையாளங்கள். படித்தவர்கள் என்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மிகவும் பிற்போக்கான பகுதி. சாதி வெறியும், மதவெறியும் ஒப்பீட்டளவில் இங்கு அதிகம்.

உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் இடிந்தகரைப் பெண்கள்

நான்கு ஆண்டுகள் அந்தப் பகுதியில் படித்த அனுபவத்திலிருந்து யோசிக்கும்போது, தற்போது நடைபெறும் போராட்டத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை ஆண், பெண் பேதமின்றி கலந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் வியப்பான செய்திதான். ஆறுமாதமாக போராட்டம் நடைபெறுகிறது என்றால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி மனதிற்குள் இருந்தது. அங்கு போனபோதுதான் அந்தப் போராட்டத்தின் திட்டமிட்ட செயல்பாடுகள் பெரிய ஆச்சரியமாக விரிந்தது. ஆண்கள் வழக்கம்போல் வேலைக்குச் செல்கிறார்கள். பெண்கள்தான் உண்ணாநிலை இருக்கிறார்கள். கைக்குழந்தைகளை முன்னால் படுக்க வைத்து, கையில் பீடி சுற்றியவாறு காலையிலிருந்து மாலை வரை உண்ணாநிலை மேற்கொள்கிறார்கள். ஆண்களில் பெரும்பாலும் முதியவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள். முற்றுகைப் போராட்டம், பேரணி போன்ற நாட்களில் மட்டும் - போராட்டக் குழு எடுக்கும் முடிவின்படி - ஆண்கள் வேலைக்குச் செல்லாமல் முற்றுகையில் கலந்து கொள்கிறார்கள்.

அந்த மக்களிடம் சொல்வதற்கு நமக்கு ஒன்றுமில்லை... கற்றுக் கொள்வதற்குத்தான் ஏராளம் இருக்கிறது. மக்களுக்காக உழைப்பது என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றால், நாம் நிச்சயம் போய் கற்றுக் கொள்ள வேண்டிய இடம் கூடங்குளம்.

காவல் துறை போட்ட வட்டத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தி பழக்கப்பட்ட நமக்கு, 'மக்களின் அனுமதி இல்லாமல் எஸ்.பி. கூட இடிந்தகரை போராட்ட இடத்திற்குள் நுழைய முடியாது' என்ற உண்மை அதிர வைத்தது.

உளவுத் துறையினர் உள்ளே நுழைந்தால் சிறிது நேரத்தில் சுற்றி வளைத்துப் பிடித்து விடுவார்களாம். பின்பு அவர்கள் கெஞ்சிக் கேட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவார்களாம். போராட்டக்குழு ஆதரவாளர்கள் என்றால், வாஞ்சையுடன் அரவணைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் மனவுறுதி, போர்க்குணத்திற்கு முன் நாராயணசாமியும், மன்மோகன் சிங்கும் நடுநடுங்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் இருக்கிற கிராமங்களில் உண்மையிலேயே மக்களின் ஆட்சி நடக்கிறது. அந்தப் பகுதி முழுவதும் எளிய, அதே நேரத்தில் போர்க்குணம் மிக்க‌ மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

koodankulam_dmk

ஈழப் பிரச்சினை, மூவர் உயிர் காப்பு அனைத்திலும் தேர்தல் கட்சித் தலைவர்களின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, தொண்டர்கள் தங்களது உணர்வுகளை அடக்கிக் கொள்வதை சென்னையில் பார்த்திருக்கிறோம். ஆனால், அங்கு நிலைமை அப்படியல்ல.. போராட்டத்திற்கு எதிராக கருணாநிதி பேசியதும், அத்தனை திமுக தொண்டர்களும் தங்களது கரை வேட்டியை எரித்திருக்கிறார்கள். நாங்கள் போயிருந்தபோது திமுக கொடி, அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் பெரும்பாலோனோர் காலம்காலமாக திமுக தொண்டர்களாக இருந்தவர்கள்.

மறைந்த சுற்றுச்சூழல் போராளி அசுரன் மூலமாக தோழர் உதயகுமார் அமெரிக்காவில் இருந்தபோதே கீற்று இணையத்தை வாசித்திருக்கிறார். அதை அவர் பகிர்ந்துகொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.

போராட்டக் களமாக மாறியிருக்கும் இடிந்தகரை தேவாலயம்

மதியம் முழுவதும் இடிந்தகரையில் இருந்துவிட்டு, மாலையில் கூடங்குளம் அணு உலை பக்கமாகச் சென்றோம். தூரத்தில் 40, 50 போலீஸ்.. நமது கையில் காமிரா, வாய்ஸ் ரெக்கார்டர் எல்லாம் இருந்ததால் கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. பக்கத்தில் போனால் அத்தனை போலிசுக்கும் முன்னால் நாலைந்து போராட்டக்குழுவினர் (பெரும்பாலோனோர்க்கு 50 வயது) கைலி கட்டிக்கொண்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு ரவுசு விட்டுக் கொண்டிருந்தார்கள். போனால் போகிறது என்று போலிசுக்காரங்களை இந்த இடத்திலே விட்டிருக்கிறோம் என்பதுபோல் இருந்தது அவர்களது தோரணை. அசந்துவிட்டோம். கூடங்குளம் அணுமின் நிலைய வாயிலில் இரண்டு செக்போஸ்ட்கள். ஒன்று போலீஸ் செக்போஸ்ட். மற்றொன்று கூடங்குளம் மக்களின் செக்போஸ்ட். மக்களின் செக்போஸ்ட்டைத் தாண்டி, அணுமின் நிலையத்திற்குள் வேலை பார்க்க யாரும் போய்விட முடியாது. முன்பு பத்தாயிரம் வேலை பார்த்த இடத்தில், இப்போது பராமரிப்பு பணிகளுக்காக 90 பேரை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள் மக்கள்.

இத்தனை போலிசு இருக்காங்களே பயமில்லையா என்று கேட்டபோது ஒரு பெருசு பதில் சொன்னார்: "இவங்க எத்தனை பேரைச் சுடுவாங்க... அதுவுமில்லாம அணு உலை திறந்தா எப்படியும் கொஞ்சம் கொஞ்சமா சாகப்போகிறோம். அதுக்கு துப்பாக்கி குண்டுலே ஒரே தடவையா நிம்மதியா போயிருலாம்"

koodankulam_police

வெறும் உயிருக்குப் பயந்து மட்டும் அவர்கள் போராடவில்லை. "யுரேனியத்திலிருந்து மின்சாரம் எடுத்தபின்பு, புளுடோனியம் கிடைக்கும். அதை வச்சி அணு குண்டு தயாரிப்பாங்க.. எங்கோ ஒரு நாட்டுலே அதைப் போடப் போறாங்க.. அங்கேயும் மக்கள்தான் சாகப் போறாங்க.. அதற்கு எங்க ஊரைப் பயன்படுத்துறதை எப்படி அனுமதிக்கிறது?" என்று அவர்கள் கேட்டபோது அவர்களது மனிதநேயம் நெகிழவைத்தது. மாற்று எரிபொருள், மின்பகிர்மானம், பன்னாட்டு நிறுவனங்கள், வல்லரசு நாடுகள், காங்கிரஸ் அரசின் யோக்கியதை, ஈழத் தமிழர்களை காங்கிரஸ் கொன்றது என அவர்கள் அரசியல் அறிவும், தகவல் அறிவும் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்.

'எங்க மக்களிடம் பேசுங்கள்' என்று மத்திய அரசின் குழுவையும், மாநில அரசுக் குழுவையும் உதயகுமார் கேட்பதற்கு காரணமில்லாமல் இல்லை. போராடும் மக்களின் பிரதிநிதிகளாகத்தான் உதயகுமார், புஷ்பராயன், மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். அனைத்து முடிவுகளும் மக்களிடம் கலந்தாலோசித்தே எடுக்கப்படுகிறது. பிரதிநிதிகளை சமாதானப்படுத்தி காரியத்தை சாதித்துவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அந்த மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்.

போராட்டத்தின் தளகர்த்தர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றால் அரசு, வன்முறையைக் கட்டவிழ்க்கத் தயங்காது என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். பெண்கள் சொல்கிறார்கள்.. "ஆம்பளைங்க பின்னாடி இருக்கட்டும்.. அவங்க செத்து, சோத்துக்கு வழியில்லாம நாங்க தவிக்கிறதை விட, நாங்களும், பிள்ளைகளும் குண்டடிபட்டு சாகிறோம்.. அடுத்து அவங்க போராடட்டும்.. கை, கால் ஊனமா பேரப் புள்ளைங்க பிறக்கிறதைப் பார்க்கறதைவிட, மொத்தமாக போராடி சாகலாம்" என்று தீர்க்கமாக சொல்கிறார்கள்.

அந்த எளிய மனிதர்களின் சொல்லாடல்களில் நாராயணசாமி, மன்மோகன் சிங், அப்துல் கலாம், கருணாநிதி, சு.சுவாமி எல்லாம் அடிக்கடி வந்துபோகிறார்கள். அற்பப் புழுக்கள் என்பதைத் தாண்டி அவர்களுக்கு ஒரு மரியாதையும் இல்லை..

போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று ஆளும் வர்க்கமும், ஆளும் வர்க்கத்தை நக்கிப் பிழைப்பவர்களும் கூறிக்கொண்டிருக்க, உண்மை வேறுவிதமாக அப்பட்டமாக காட்சி அளிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் திரட்டும் அளவிற்கு அங்கு செலவு ஏதும் பெரிதாக இல்லை. ஒரு மீனவர் சொன்னார்: "சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு நாளைக்கு போராட்டத்திற்கு ஆகுற செலவு என்ன தெரியுமா? 25 லிட்டர் வாட்டர் கேன் 2, 3 தான். நாங்க போராட்டம் நடத்துற சர்ச் எங்க கட்டடம். போட்டிருக்கிற கொட்டகை எங்க கொட்டகை. அதனாலே ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு ஆகிறதே அதிகம்தான். போராட்டக்குழு வெளியூர் போகும்போதுதான் கொஞ்சம் செலவு ஆகும். நாங்க சம்பாதிக்கிறதுலே பத்திலே ஒரு பங்கை போராட்டத்திற்குக் கொடுத்திட்டு வர்றோம். எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து காசு வருதுன்னு சொல்றவன் தைரியமிருந்தா எங்க மக்கள் முன்னாடி வந்து சொல்லட்டும்"

மீனவ மக்கள் தற்சாற்புடைய மக்கள். யாருடைய கையையும் நம்பி வாழ்கிறவர்கள் அல்ல. அதனால் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல. அடித்தால், திருப்பி அடிக்கும் குணம் உடையவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தகரை மீனவர்களுக்கு குடைச்சல் கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை நையப்புடைத்திருக்கிறார்கள். பிறிதொரு முறை போலீஸ் ஒருவரின் துப்பாக்கியைப் பிடுங்கி, அவர் நெஞ்சிலேயே வைத்து, 'ரொம்ப வாலாட்டுனே.. ஊரைத் தாண்டிப் போயிற முடியாது' என்று மிரட்டியிருக்கிறார்கள். அப்படி இருந்த மக்கள்தான் இன்று உதயகுமாரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அமைதி வழியில் போராடி வருகிறார்கள். ஈ, காக்கை கூட அவர்களின் அனுமதியில்லாமல், போராட்ட இடத்திற்குள் நுழைந்துவிட முடியாது. அந்த மக்களை மீறி உதயகுமாரை யாரும் நெருங்கிவிட முடியாது.

அணு உலை வாயிலுக்கு முன்பாக கூடங்குளம் மக்களின் 'செக்போஸ்ட்'

எலியும் பூனையுமாக பகையுடன் இருந்த ஊர்கள்தான் இடிந்தகரையும், கூடங்குளமும். சாதியால் பிளந்திருந்த மக்களின் மனதை உதயகுமார் தனது தன்னலமற்ற தொண்டால் இணைத்திருக்கிறார். எங்க ஊர் காமராசர் என்கிறார்கள் மக்கள்.

இங்கே சில‌ர் கீறல் விழுந்த‌ ரெக்கார்ட்டைப் போல‌ திரும்ப‌த் திரும்ப‌ ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார்க‌ள், 'ம‌க்க‌ளின் அச்சத்தைப் போக்கிவிட்டு, அணு உலையைத் திற‌க்க வேண்டும்' என்று. ஏதோ அந்த‌ ம‌க்க‌ளிட‌ம் குழ‌ப்ப‌மும், தேவையில்லாத‌ ப‌ய‌மும் இருப்ப‌தாக‌க் க‌ருதிக் கொண்டு சொல்கிறார்க‌ள்.  அவ‌ர்க‌ள் அத்த‌னை விப‌ர‌ங்க‌ளையும் முழுக்க‌ அறிந்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் அச்ச‌மில்லை. மிக‌வும் தீர்க்க‌மாக‌க் கூறுகிறார்க‌ள் 'அணு உலையை மூட‌ வேண்டும்'. அவ‌ர்க‌ளிட‌ம் பிர‌ச‌ங்க‌ம் ந‌ட‌த்தி ஏமாற்றி விட‌லாம் என்ற பேச்சுக்கே இட‌மில்லை. 'அணு உலையை எடுத்திட்டு, அதே க‌ட்ட‌ட‌த்தில் மாற்று வ‌ழியில் மின்சார‌ம் த‌யாரிக்க‌ட்டும். நாங்களே அவர்களுக்கு முழு உதவியையும் செய்கிறோம்' என்கிறார் கூட‌ங்குளப் பெரிய‌வ‌ர் ஒருவ‌ர்.

காவல் துறை சொல்கிற இடத்தில், சொல்கிற நேரத்திற்குள்ளாக ஆர்ப்பாட்டம் செய்து, எந்தத் தீர்வையும் எட்டாமலேயே போராட்டங்கள் முடிந்து விடுவதைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருக்கும் நமக்கு கூடங்குளம் போராட்டம் மிகப் பெரிய மலையாக உயர்ந்து நிற்கிறது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சியினரும், இயக்கத்தவர்களும் கூடங்குளம் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. வெறுமனே அங்கு போய் ஆதரவு கொடுப்பது என்பதோடு மட்டுமல்லாமல், எப்படி மக்களைத் திரட்டுவது, எப்படி மக்களுக்குக் கற்பிப்பது, எப்படி போராடுவது என்பதையெல்லாம் கற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். நம் சமகாலத்தில் தமிழகத்தில் இப்படி ஒரு போராட்டத்தை யாரும் பார்த்ததில்லை என்பதுபோல் கூடங்குளம் போராட்டம் உள்ளது. இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் ஆவணமாக்க வேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் உள்ளது. அது, அடுத்து போராட வரும் தலைமுறையினருக்கான வேதநூலாக இருக்கும்.

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It