1986-ம் ஆண்டில் எய்ட்ஸ் நோய் உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட பிறகு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

புதிய எச்.ஐ.வி. தொற்றுகளை பூஜ்ஜிய‌ சதவீதம் பரவாமல் தடுத்தல், எச்.ஐ.வினால் ஏற்படும் இறப்புகளை பூஜ்ஜிய சதவீதம் தடுத்தல், எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் சமூக புறக்கணிப்புகளை பாகுபாடுகளை முழுமையாக தடுத்தல், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்தாகும்.

மக்களிடையே விழிப்புணர்வு, நோய் குறித்த தவறான கருத்துக்களை அகற்றுதல், நோய் பற்றிய கல்வி அறிவை மேம்படுத்துதல், நோய் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் நிதியை உருவாக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக உலக எய்ட்ஸ் நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து பல சந்தர்ப்ப நோய்த் தொற்றுகள் எளிதில் ஏற்பட வழிவகுக்கும் எச்.ஐ.வி. நுண்கிருமிகள் மனிதர்களை இறுதியில் எய்ட்ஸ் நோய் நிலைக்கு கொண்டு செல்ல காரணமாக அமைகிறது என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

எய்ட்ஸ் நோய் ஒரு சர்வதேச நோய் என்பது அந்த நோய்க்கு பெருமை(!) சேர்க்கும் விஷயமாக உள்ளது. ஆனால் மனித குலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் விஷ விருட்சமாக உள்ளது.

       ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பாக செயல்படும் UNAIDS அமைப்பு மதிப்பீடுகளின்படி தற்போது உலகம் முழுவதும் சுமார் 3 கோடியே 34 லட்சம் பேர் எச்.ஐ.வி. நோய் தொற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 23 லட்சம் பேர் எச்.ஐ.வி நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 1.8 லட்சம் பேர் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

 இந்தியாவிலேயே எச்ஐ.வி. நோய்த் தொற்றை தடுப்பதிலும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் தமிழகம் முதன்மையாகத் திகழ்கிறது என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் எச்.ஐ.வி. தடுப்பு பணியை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரமோ கேள்விக்குறியாக உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நல சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சேரலாதன் அவர்களிடம் பேசியபோது்-

மருத்துவதுறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் இதை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக, சுகாதாரத் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதற்கு அரசு மருத்துவத் துறை தேர்வு ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது மருத்துவத் துறை சம்மந்தமாக படித்துள்ள இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளையும் இணைத்துள்ளது வரவேற்கக் கூடியது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த பத்தாண்டுகளாக 3000 பேர் குறைந்தபட்ச‌ தொகுப்பூதியம் பெற்று தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம். எங்களோடு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசின் கடைநிலை ஊழியர்கள் கூட 6-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகு மாதம் 25000 வரை பெறுகின்றனர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களோ 8000 முதல் 10000வரை மட்டுமே பெறுகிறோம். சமவேலை சம ஊதியம் என்பது தான் எங்களது முக்கிய கோரிக்கையாகும். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு அரசின் எந்தவித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. விலைவாசி உயர்வுகளுக்கு ஏற்ப எங்களின் ஊதியம் உயர்த்தப்படுவதில்லை. எப்பொழுது பணிநீக்கம் செய்யப்படுவோமோ என்ற அச்சத்திலேயே பணிபுரிந்து வருகிறோம்.

மொத்தத்தில் அரசின் நவீன கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறோம். சமீபத்தில் “காண்ட்ராக்ட்” முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்ட விரும்புகிறேன். நீதிபதிகள் மார்க்ண்டேய கட்ஜூ மற்றும் சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு வருமாறு:

முதலாளிகள் பெரும்பாலும் காண்ட்ராக்ட் முறையினைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வமான உரிமைகளை மறுக்கும் சூழ்நிலை உள்ளது.

 தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய உரிமைகளை வழங்க மறுக்கும் கம்பெனி நிர்வாகங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களை அவர்கள் காண்ட்ராக்ட் தொழிலாளர்களே என்று கூறி தப்பிக்கப் பார்க்கின்றனர். இந்த தந்திர ஏமாற்று வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு கூறிய பெஞ்ச் தனது வருத்தத்தினை வெளியிட்டுக் கூறும்பொழுது, தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டவைகளே. முதலாளிகளும், தொழிலாளர்களும் பேரம் பேசும் சக்தியில் சம அளவில் இல்லை. எனவே சுரண்டல் நடவடிக்கைகளில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க சட்டங்கள் தேவைப்படுகிறது. ஆனால் சமீப காலத்தில் சில முதலாளிகள் தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொழிலாளர்களது உரிமையினை மறுக்கிறார்கள். கம்பெனியின் தொழிலாளர்களை காண்ட்ராக்டர்களின் தொழிலாளர்கள் என ஏமாற்றுகிறார்கள். அவர்கள் தினக் கூலி தற்காலிகப் பணியாளர்கள் எனக் கூறி ஏமாற்றுகிறார்கள். ஆனால் உண்மையில் இத்தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களின் பணியினையே செய்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் இதனை இனிமேலும் அனுமதிக்காது. உலகமயமாதல், தாராளமயமாதல் வளர்ச்சி என்ற பெயரில் தொழிலாளர்களின் அழிவின் மீது பயணம் செய்ய முடியாது.

தொழிலாளர்கள் கம்பெனியின் தொழிலாளர்கள் என்பதற்கு தொழிலாளர் நீதிமன்றம் பல நியாயமான காரணங்களை சீராகக் கூறியுள்ளது. இந்த தொழிலாளர்கள் கம்பெனி அதிகாரிகளின் ஆணைப்படியே செயல்படுகிறார்கள். தினம் ரூ.70 கூலி கொடுக்கப்படுகிறது. காண்டராக்டர் பிடித்தம் போக தொழிலாளி பெறுவதோ தினம் ரூ. 50 மட்டுமே.

தொழிலாளர் சட்டங்களிலிருந்து தப்பிக்கவே கம்பெனி உரிமையாளர்கள் இத்தகையை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உயர்நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்பது சரியானதே என உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறி, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

 எனவே எங்களின் கோரிக்கைகள் சட்டத்தின்படியும், மனிதாபிமான அடிப்படையிலும் நியாயாமனதாகும். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதியதாக அமைக்கப்பட உள்ள மருத்துவ தேர்வு வாரியம் மற்றும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கப் பணியாளர்களையும் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேசினார்.

       எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும் மத்திய மாநில அரசுகளுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதால் நிதிப்பற்றாக்குறை ஏற்படப் போவதில்லை. எனவே 25-வது உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கும் இந்த ஆண்டில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கப் பணியாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

Pin It