அறிவோம் அம்பேத்கர் 13

வட்ட மேசை மாநாட்டின் மூலம் பிரித்தானியப் பிரதமருக்கு தனி வாக்காளர் தொகுதி குறித்து முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்தது. ஆனால் அவர்களுக்கான தனி வாக்காளர் தொகுதி அமைப்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. பொதுத் தேர்தல் தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோர்க்கு வாக்களிக்கும் உரிமை எந்த அளவிற்குத் தரப்படலாம். அதேபோல் தனித் தேர்தல் தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப அந்தந்த மாகாணங்களில் எந்த அளவில் முடியும் என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பு 1931 திசம்பரில் லோதியன் பிரபு தலைமையிலான குழுவிற்குப் பிரதமரால் வழங்கப்பட்டது. இதுவே லோதியன் குழு என அழைக்கப்பட்டது.

தனி வாக்காளர் தொகுதி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றாலே தாழ்த்தப்பட்டோரின் மக்கள் தொகையை அறிந்தாக வேண்டும். அதைப் பொறுத்தே பிரதிநிதித்துவம் வழங்க முடியும். இதுவே லோதியன் குழுவின் குறிப்பான பணி எனலாம்.

1932ஆம் ஆண்டிற்கு முன் காங்கிரசாரோ சாதி இந்துக்களோ மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்துக் கவலை கொண்டதில்லை. அலட்சியம் செய்தே வந்தனர். ஆனால், இரண்டு வட்டமேசை மாநாடுகளில் தாழ்த்தப்பட்டோர் தனிவாக்காளர் தொகுதிக் கோரிக்கை உலக அரங்கில் பேசு பொருளாகிப் போனது. அம்பேத்கர் அறிவாற்றலால் அது முடிவெடுத்தாக வேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்துக்கள் என்ற பொது அடையாளத்தை வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டோரைத் தொடர்ந்து தம்மைச் சார்ந்திருப் பவர்களாகவே வைத்துவிடலாம் என்ற சாதி இந்துக்கள் கனவு மாநாட்டின் மூலம் குறிப்பாக அம்பேத்கரால் தகர்ந்து போனது. இக்குறிப்பான சூழலில்தான் பிரதமரால் லோதியன் குழு அமைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். லோதியன் குழு தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையைச் சரியாக இனங்காட்டிவிட்டால் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுவிடுவதற்கு நிகரானது என்பதை அப்போது சாதி இந்துக்கள் நன்கு அறிவர். அதற்காக அவர்கள் செய்தவை மிகவும் கீழ்த்தரமானவை.

1911ஆம் ஆண்டில் தீண்டத்தகாதவர்களின் மக்கள் தொகைக் கணக்கெடுக்க முதல் முயற்சி எடுக்கப்பட்டது. இது உண்மையில் தீண்டத்தகாதோரைக் கணக்கெடுக்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, இந்து மதத்தைப் பிளந்து பலவீனப்படுத்தும் செயல் என அப்போதே சாதி இந்துக்கள் கூப்பாடு போட்டனர். சென்சஸ் ஆணையர் தம் கணக்கெடுப்புக்கு வைத்துக் கொண்ட வரையறை அன்றைய தாழ்த்தப்பட்டோர் நிலையையும் அறிய உதவும். அதாவது:

(1)    பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை மறுப்பவர்கள்.

(2)    பார்ப்பனர்களிடமிருந்தோ அல்லது வேறு இந்துக் குழுக்களிட மிருந்தோ மந்திர தீட்சை பெறாதவர்கள்.

(3)    வேதங்களின் ஆணை உரிமையை ஏற்காதவர்கள்.

(4)    உயர்ந்த இந்துக் கடவுள்களை வணங்காதவர்கள்.

(5)    பார்ப்பனர்களால் உணவு பரிமாறப் படாதவர்கள்.

(6)    பார்ப்பனப் புரோகிதர்களை அறவே புறக்கணிப்பவர்கள்.

(7)    இந்துக் கோவில்களுக்குள்ளேயே அனுமதிக்கப்படாதவர்கள்.

(8)    தீட்டுப்படுத்துபவர்கள்.

(9)    இறந்தவர்களைப் புதைப்பவர்கள்.

(10)   மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள்.

(11)   பசுவைப் போற்றி வணங்காதவர்கள்.

இந்த வரையறை குறித்து அம்பேத்கர் குறிப்பிடும் போது, தீண்டத்தகாதவன் என்பவனுக்கு சட்டரீதியான வரையறை ஏதும் இல்லை@ தோலின் நிறம் - தலைரோமம் - இரத்தம் - இவைகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுபவனுமல்ல. தீண்டத்தகாதவன் என்பவன் இந்துக்களால் ஒரு குறிப்பிட்ட முறையில் நடத்தப்படுகிறவன்@ இந்துக் களிலிருந்து மாறுபட்ட சில குறிப்பிட்ட பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பவன், அந்தப் பொருளில் சென்சஸ் ஆணையர் வகுத்துக் கொண்ட வரையறை மிகச் சரியானதே என்றார் அம்பேத்கர்.

1911 கணக்கெடுப்பின் முடிவு ஐக்கிய மாகாணங்கள், மத்திய மாகாணங்கள் உட்பட்ட ஆறு மாகாண மக்கள் தொகை 221.2 விழுக்காடு;; அதில் தாழ்த்தப்பட்டோர் தொகை 41.9 விழுக்காடு என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

1921ஆம் ஆண்டு மீண்டும் இப்படியொரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தாழ்த்தப் பட்டோர் எனப்படுவோர் பிரிவில் வழக்கமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் சாதியினர் குறித்த மதிப்பீட்டை மக்கள் தொகைப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் வழங்குமாறு சென்சஸ் ஆணையர் மாகாண அரசுகளைக் கேட்டுக் கொண்டார். மற்ற மாகாணங்கள் தவிர, ஐக்கிய மாகாணங்களின் அதிகாரிகள் அப்பணியைச் செய்து முடிக்க மிகுந்த தயக்கம் காட்டினர். இந்தியா முழுமையும் குறிப்பிட்ட பிரிவினரின் நிலையும் அவர்கள் குறித்த ஒரே மாதிரியான அளவுகோலும் அவரிடம் அளிக்கப்படவில்லை.

1912 - 17ஆம் கல்வி முன்னேற்றம் குறித்த அறிக்கையில் மேற்சொன்ன 1911ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் அறிக்கையைக் கருத்தில் கொண்டு மதிப்பீடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இவ்வாணையர் ஆய்வு மேற்கொண்டார். எந்தக் குறிப்பிட்ட சாதியினருக்கும் மொத்த எண்ணிக்கைப் பதிவு இன்மையால் சில இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். இறுதியாக தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை 5 கோடி 30 இலட்சம் எனக் கணக்கிட்டார். இது குறைந்தபட்சக் கணக்குதான் என்றார் அம்பேத்கர். காரணம், ஆணையரே குறிப்பிட்டது போல் குறிப்பிட்ட சாதிகள் மற்றும் பழங்குடிகளின் மொத்த எண்ணிக்கை சேர்க்கப்படாதது@ அடுத்து அண்மையில் இந்துமத அரவணைப்பில் ஈர்த்து வைக்கப்பட்ட தொல்குடி மக்கள் எண்ணிக்கை இன்மை என்றார். இப்படி அனைவரின் எண்ணிக் கையையும் கணக்கிட்டுப் பார்த்தால் 5.5 கோடி முதல் 6 கோடி வரை தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை வரும் என நிச்சயமாக நம்பலாம் என்றும் அம்பேத்கர் குறிப்பிட்டார்.

இரண்டாம் வட்டமேசை மாநாட்டிற்குப் பிறகு அமைக்கப்பட்ட லோதியன் குழுவும் தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகையைக் கணக்கிட்டது. ஆனால் இதைச் சாதி இந்துக்கள் தமக்கு ஏற்படும் பேராபத்தாய்க் கருதினார்கள். தாழ்த்தப்பட்டோர் எண்ணிக் கையை இக்குழுவின் மூலம் அறிந்து கொண்டால் அதற்கேற்றவாறு தனி வாக்காளர் தொகுதி அமைக்கும் பணி தொடங்கப் பட்டுவிடும். லோதியன் குழு முன் சாட்சியமளிக்க வந்த சாதி இந்துக்கள் தீண்டத்தகாதோர் தொகை மிகக் குறைவு என்று கூட வாதிடவில்லை@ தீண்டப்படாதோர் என்போரே இந்நாட்டில் இல்லை என வாதிட்டனர். ஒவ்வொரு மாகாணமும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவே இருந்தது என்பது இங்கே முகாமையானது.

பஞ்சாப் மாகாண அரசு தாழ்த்தப் பட்டோர் என்று பஞ்சாபில் யாரும் இல்லை என பஞ்சாப் மாகாணக் கமிட்டி பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் குழுவிடம் தெரிவித்தது. ஜக்கிய மாகாண வாக்குரிமைக் கமிட்டி தீண்டத் தகாதவர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டோராகக் கருதப்படுவர் எனக் குறிப்பிட்டது. ஆகையால் தீண்டாமைப் பிரச்சனை இங்கு இல்லை என்றது. விதிவிலக்குகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது மொத்த எண்ணிக்கை 5,82,000தான் என்றது. வாக்குரிமைக் கமிட்டியில் தாழ்த்தப் பட்டோர் பிரதிநிதியாக இருந்த ராய்சாகிப் பாபுராம் சரண் என்பார் தாழ்த்தப் பட்டோர் எண்ணிக்கை 1 கோடி எனக் கணக்கிட்டார். ஆனால் ஜக்கிய மாகாண அரசாங்கமோ அதிகபட்ச எண்ணிக்கை 1 கோடி 70 லட்சம் என்றும், குறைந்தபட்ச எண்ணிக்கை 10 இலட்சம் என்றும் தெரிவித்தது. குறைந்த பட்ச எண்ணிக்கை 67,73,814 ஆக இருக்கும் எனக் கருதிற்று.

வங்காள மாகாணக் கமிட்டியோ தீண்டாமை, அணுக முடியாமை என்னும் பதங்கள் இந்தியாவின் இதர பகுதிகளில் பொருள் கொள்ளப்படும் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, புய்மாலிங்களைத் தவிர, இந்த மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோர் என யாரும் இல்லை என்று இறுதியாக அறிவித்துவிட்டது. தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதி முல்லிக் என்பாரோ 86 சாதிகள் கொண்ட பட்டியலை முன்வைத்தார். ஆனால் கமிட்டி இதை ஏற்கவில்லை.

பீகார் ஒரிசாவைப் பொறுத்தவரை 1911 ஆம் ஆண்டு சென்சஸ்படி தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 93,00,000 என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இங்கே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவுகள் தனிவாக்காளர் பட்டியலில் சேர்க்கும் அளவிற்குப் போதிய எண்ணிக்கையில் இல்லை என அறிவித்தது. பம்பாய் மற்றும் தென்னிந்தியாவில் உள்ளது போல் இங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எக்குறைபாடும் இல்லை. அதனால் தனிப் பிரதிநிதித்துவம் தேவை இல்லை என இறுதியாக அறிக்கை தந்தது.

1911ஆம் ஆண்டிற்கும் 1921ஆம் ஆண்டிற்கும் பிறகு 1932இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் திடுக்கென தாழ்த்தப்பட்ட மக்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைக்கப்பட்டு விட்டது. சாதி இந்துக்கள் முன்னெப்போதைக் காட்டிலும் இம்முறை இவ்வளவு மூர்க்கமாக இச்செயலில் ஈடுபட என்ன காரணம்?

1932ஆம் ஆண்டுக்கு முன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தில் ஒரு பிரிவினராகவே மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். ஆனால் வட்டமேசை மாநாடுகள் மூலம் இந்துமத பூதத்தின் கருவறை கிழித்துத் தலைகாட்ட முற்பட்டு விட்டனர். இந்துக்களும் இசுலாமியர்களும் எப்படி சட்டமன்ற இடங்களைப் பிரித்துக் கொள்வது என்று மட்டுமே இதுவரை அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்துக்களுக்குள்ளே ஒடுக்குண்ட மக்கள் ஒடுக்குபவர்களின் ஆதிக்கம் மறுத்து தமக்கான பிரதிநிதித்துவம் பெறும் பேச்சு அதுவரை இடம் பெறவே இல்லை. இந்துக்கள் எனும் பொது அடையாளம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமையைப் புதைத்து விடவே பயன்படுகிறது என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டனர். இந்துக்களுக்கு என ஒதுக்கும் இடங்களில் தமக்கான இடங்கள் கேட்கலாயினர். அதற்காகவே வட்டமேசை மாநாடுகளுக்கு அம்பேத்கர் உள்ளிட்ட தமது தலைவர்களை அனுப்பி வாதிடவும் செய்தனர். அது கருத்தியல் அளவில் வெற்றியும் பெற்றுவிட்டது.

இரண்டாம் வட்டமேசை மாநாடு முடிவில் தனி வாக்காளர் தொகுதி குறித்த சிக்கலை அனைவரின் அனுமதியோடு பிரதமர் தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் தாழத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிய லோதியன் குழு அமைத்ததைச் சாதி இந்துக்கள் தமக்கு ஏற்பட்ட தோல்வியாகவே கருதினர். பிரித்தானிய அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சாதகமான முடிவை எடுக்க விரும்பியதையே இச்செயல் காட்டியது. அதனாலேயே சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பையே மறுக்கும் அளவுக்குக் கீழான வேலையில் ஈடுபடலாயினர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் எண்ணிக் கையைக் குறைக்கும் நோக்கத்தோடு சாதி இந்துக்கள் இரண்டு காரணங்களை முன்வைத்து வாதிட்டனர்.

சென்சஸ் ஆணையர் அளித்துள்ள புள்ளி விவரங்கள் தாழ்த்தப்பட்டோருக் கானதேயன்றி தீண்டப்படாதோருக்கானதல்ல. அதுமட்டுமன்றி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தீண்டப்படாதோர் அன்றி வேறு பல வகுப்பினரும் அடங்கியுள்ளனர்.

தீண்டப்படாதவர்களின் எண்ணிக் கையை நிர்ணயிக்கும் போது தீண்டப்படாதவர் என்பதன் பொருள்வரையறை ஏக இந்தியாவுக்கும் ஒரே மாதிரியானதாக, எல்லா மாகாணங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

சாதி இந்துக்கள் இந்த இரண்டு காரணங்களையே அழுத்தமாக முன் வைத்தனர்.

தாழ்த்தப்பட்டோர் எனும் சொல் தீண்டப்படாதோரைக் குறிக்கும் மறு சொல்லே தவிர வேறன்று. இப்பிரிவில் அடங்கும் சில பகுதியினரின் மனதைத் தீண்டப்படாதோர் எனும் சொல் புண்படுத்திவிடும் என்பதாலேயே தாழ்த்தப்பட்டோர் எனப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என அம்பேத்கர் முதல் காரணத்திற்குச் சுருக்கமாக விடையளித்தார்.

ஏக இந்தியாவுக்கும் ஒரே மாதிரியானதாக, பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் எனும் வாதம் குறித்து அம்பேத்கர் இப்படிச் சொன்னார்:

“…தீண்டாமை என்பது இந்தியாவின் வௌ;வேறு பகுதிகளில் வௌ;வேறு ரூபங்களில் உள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் தீண்டப்படாதவர்களைப் பார்ப்பதே பாவம்@ தீண்டத்தக்க ஒரு இந்துவின் கண்ணில் படும்படியான தூரத்தில் ஒரு தீண்டத்தகாதவன் வந்துவிட்டால் தீட்டு உண்டாகி விடும். வேறு சில பகுதிகளில் தீண்டப்படாதவர்கள் அருகில் வருவதே குற்றம். இதனால் அவர்களால் தீட்டு உண்டாகிவிடுகிறது. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்றில் தீண்டத்தக்க ஒரு இந்து இருக்கும் இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் தீண்டப்படாதவன் வர முடியாது. மற்றொன்றில், ஒரு இந்துவின் மீது தனது நிழல் படும்படியாக வெகு அருகில் ஒரு தீண்டப்படாதவன் வரக்கூடாது. நாட்டின் சில பகுதிகளில் தொடுவதற்குத் தீண்டப்படாதவன் அனுமதிக்கப் படுவதில்லை. வேறு சில பகுதிகளில் தீண்டப்படாதவன் கோவிலுக்குள் செல்லத் தடை உண்டு. இவ்வாறு நாட்டில் தீண்டப்படாதவர்கள் பல்வேறு பிரிவினராக இருக்கும் நிலைமையில், பார்க்கத் தகாமையை மட்டுமே தீண்டாமைக்கு அறிகுறிச் சான்றாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அணுகக் கூடாதவர்களைத் தீண்டத்தகாதவர் வகை வகுப்பினரிலிருந்து விலக்கி வைக்க நேரிடும். இதேபோன்று, அணுகக் கூடாமையைத் தீண்டாமைக்கு அறிகுறிச் சான்றாக எடுத்துக் கொள்வதனால், தொட்டால் மட்டுமே தீட்டு ஏற்படக் கூடியவர்களைத் தீண்டப்படாதவர் வகை வகுப்பினரிடமிருந்து நீக்கி வைக்க நேரிடும். இவ்வாறே, தொடுவது தீட்டை உண்டு பண்ணிவிடும் என்பதைத் தீண்டாமையின் அறிகுறியாகக் கொள்ளும் பட்சத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப் படாதவர்களைத் தீண்டப்படாதவர்கள் என்ற பட்டியலிலிருந்து ஒதுக்கி வைக்க நேரிடும். இதைத்தான் இந்துக்கள் செய்ய விரும்பினர். தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் யார் என்பதை நிர்ணயிப்பதற்கு நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான அளவுகோலைக் கைக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலம் சில வகுப்பினரைத் தீண்டத்தகாதவர்கள் வரிசையிலிருந்து அப்புறப்படுத்தவும் அதன் மூலம் தீண்டப்படாதவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அவர்கள் விரும்பினர். தீண்டாமை என்பது ஒரு குறிப்பிட்ட நபரின்பால் ஒரு இந்துவுக்கு உள்ளத்தில் உள்ள வெறுப்பின் வெளிப்புறச் சின்னமேயாகும். இந்த வெறுப்பின் வெளிப்புற வடிவம் இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம் வேறுபடலாம். சுருக்கமாகச் சொன்னால் இந்த வடிவம் வெறுப்பின் அளவையே குறிக்கிறது. எங்கெல்லாம் இந்த வெறுப்பு நிலவுகிறதோ, அங்கெல்லாம் தீண்டாமை நிலவுகிறது. இந்த சர்வசாதாரண உண்மையை இந்துக்கள் நன்கு அறிவார்கள்.

அப்படியிருந்தும் தீண்டப்படாதவர்கள் யார் என்பதை நிர்ணயிப்பதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான அளவுகோலைக் கைக் கொள்ள வேண்டும் என்று இந்துக்கள் வலியுறுத்தியிருப்பதற்குக் காரணம் என்ன? எப்படியேனும் தீண்டப்படாதவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அதன் மூலம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் பெரும் பங்கைத் தாங்கள் அபகரித்துக் கொள்ள அவர்கள் விரும்பியதே இதற்குக் காரணம்.”

தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைகளை மறுப்பதற்கு ஏக இந்திய முழுக்கம்தான் சரியானது என்பதையே இவ்வனுபவமும் நமக்குக் கற்பிக்கிறது. இன்றுவரை, அது மெய்ப்பிக்கப்படுகிறது என்பது தனிக் கட்டுரைக்குரியது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் எண்ணிக்கையை இருக்கிறபடியே உறுதி செய்து கொள்ள எவர் துணையுமின்றி தன்னந்தனியாகப் போராடினார்கள். இறுதிக் கட்டத்தில் தாம் வெற்றிபெற முடியாது எனக் கருதிய சாதி இந்துக்கள் தீண்டப்படாதோர் பட்டியல் தயாரிப்பது தீண்டாமையை நிலைநிறுத்தச் செய்யும், இப்படிப்பட்ட பட்டியலில் ஒரு சமூகத்தின் பெயர் இடம்பெறுவது தவறு என்றும் இறுதியாக வாதிட்டனர். இதனால் தீண்டப்படாதவர்களாக இருக்கும் பல சமூகத்தினர் தீண்டப்படாதோர் பட்டியலில் தாம் இடம் பெறத் தேவையில்லை என்று கூறலாயினர். உண்மையில் இப்பட்டியல் எடுப்பு நம்மக்கள் உரிய பிரதிநிதித்துவம் பெறச் செய்யும் உரிமைக்காகவே என்பதை உணர்த்த வேண்டிய நிலை கூட ஏற்பட்டது.

ஆனால், இறுதியாக தீண்டப் படாதவர்கள் என்பவர்கள் குறித்து எல்லாத் தடைகளையும் மீறி தெளிவாக்கப்பட்டது. 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் ஷெட்யூல்டு வகுப்பினர் என்ற பட்டியல் இணைக்கப்பட்டது இங்கே குறிக்கத்தக்கது.

இரண்டாம் வட்டமேசை மாநாடு முடிந்து அம்பேத்கர் 1932 சனவரி 29ஆம் நாள்தான் பம்பாய் வந்து சேர்ந்தார். செய்தி அறிந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அம்பேத்கரை வரவேற்கத் துறைமுகத்தில் பெருந்திரளாகத் திரண்டிருந்தனர். பி.பாலு உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும் காந்தியாரின் ஆதரவாளரான கஐ;ரோல்கர் உட்பட பலர் அம்பேத்கரை மாலை அணிவித்து வரவேற்றனர். அம்பேத்கரோடு இசுலாமியத் தலைவரான மௌலானா ஷவுகத் தலியும் பயணம் செய்தார்.

அம்பேத்கரை வரவேற்கத் திரண்டிருந்த மக்கள் இடையில் ஷவுகத் அலி உரையாற்றினார். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். அவ்வகையில் அம்பேத்கர் தாம் கொண்ட கொள்கையில் உறுதியோடும், துணிச்சலோடும் போராடியது பாராட்டுக்குரியதாகும் என்று கருத்துரைத்தார்.

பம்பாய் பரேலில் அன்று மாலை பதினான்கு தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் இணைந்து அம்பேத்கருக்கான வரவேற்பு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தனர். அங்கே திரண்டிருந்த தம் மக்கள் காட்டிய அன்பும் நன்றியுணர்ச்சியும் அம்பேத்கரை நெகிழச் செய்தது. எல்லோருக்கும் நான் செய்திருப் பதாகச் சொல்லப்படும் அருஞ் செயல்கள் எல்லாம் தொண்டர்கள் தந்த ஒத்துழைப் பினாலும் தம் மக்களின் பேராதரவினாலும்தான் என்று அம்பேத்கர் அங்கே பேசினார்.

அக்கூட்டத்தில் இலண்டனில் தாம் காந்தியாரை சந்தித்த நிகழ்வுகளை எடுத்துரைத்தார். தாழ்த்தப்பட்டோர் கோரிக்கை வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகக் காந்தியார் இரகசியமாக ஆகாகான் வீட்டிற்குச் சென்றார். அப்போது அவர் கையில் குரான் இருந்தது. தாழ்த்தப்பட்டோர் முன்வைக்கும் தனி வாக்காளர் தொகுதிக் கோரிக்கையை ஆதரிப்பதை திரும்பப் பெற வேண்டும் என காந்தியார் ஆகாகானிடம் கேட்டதை அங்கே வெளிப்படுத்தினார். இறுதியாக அம்பேத்கர் இப்படிச் சொன்னார்:

“காந்தியைத் தெய்வாம்சம் உள்ளவராகக் கருதாதீர்கள்@ மனிதனை தெய்வாம்சமாகக் கருதுவதை எதிர்ப்பவன் நான்.”

அம்பேத்கர் தம் அறிவாற்றல், உள்ள உறுதி, போர்க்குணம் ஆகியவற்றால் தம் மக்களின் நெஞ்சங்களில் நிலையாக இடம்பெற்றார். காந்தியாரின் எதிர்; துருவமாகவே அம்பேத்கர் வளர்ந்து நின்றார். நம்பிக்கையற்று முடங்கிக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் மனங்களில் அம்பேத்கர் புத்தொளி பாய்ச்சினார். வரலாற்றில் அடுத்த கட்டத்திற்கு அம்பேத்கர் தம் மக்களை அழைத்துப் போக இருந்தார்.

அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் சார்பில் அம்பேத்கர் முன்பு வாசிக்கப்பட்ட வரவேற்பு மடல் இப்படிக் குறிப்பிட்டது:

“சம உரிமை தந்து சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை வாளின் வலிமையான கைப்பிடியாக நீங்கள் உண்மையில் செயல்பட்டீர்கள். எங்களுக்காக நீங்கள் தீரமுடன் போராடியிருக்காவிட்டால் எங்கள் கோரிக்கைகளைப் புறக்கணித்திருப்பார்கள். எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு மனிதன் ஆற்றக் கூடிய எல்லா வகையான முயற்சிகளையும் நீங்கள் செய்தீர்கள். இலண்டனில் நீங்கள் ஆற்றிய அருஞ்செயல்களின் விளைவாக மிக விரைவில் நாங்களும் இந்தியாவில் உள்ள பெரிய வகுப்பினர்களுக்குச் சமமாக நடத்தப்படப் போகிறோம். நம் சமூகம் இன்று பெற்றுள்ள பொறுப்புணர்வும், சிந்தனையோட்டமும் இந்தியா முழுவதும் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முனைந்திருப்பதும் முழுக்க முழுக்க உங்களுடைய முயற்சியின் வழிகாட்டுதலின் விளைவேயாகும் என்றால் அது மிகையன்று”

       ஆனால் தீண்டத்தகாத மக்கள் தம் நிலை உயரும் எனக் கொண்டிருந்த பெருநம்பிக்கை காந்தியார் உருவாக்கிய அடுத்தடுத்த காட்சிகளால் சிதறித்தான் போனது.

Pin It