கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசிக்கும் என் மீதும், என் குடும்பத்தின் மீதும் தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா அசோசியேசன் (அபீமுஅ) ஜமாத் இஸ்லாம் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் காரணம் காட்டி கடந்த 12-07- 2007 ம் தேதி முதல் ஊர்விலக்கம் சமூக புறக்கணிப்பை நடத்தி வருகிறது.
இந்த ஊர்விலக்கத்தை எதிர்த்து அபீமுஅ ஜமாத் மீது தொடரப்பட்ட வழக்கு எண் 231/2007 கடந்த நான்காண்டுகளாக பத்மனாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு 12-04-2011 அன்று தீர்ப்புரை பகரப்பட்டது. இப்போது நீதிமன்றத் தீர்ப்பு முழுமையாக பெறப்பட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்டுள்ள இத்தீர்ப்புரையின் சில முக்கியப்பகுதிகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
1) வாதியின் தன்னிலை விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாமல் அபீமுஅ ஜமாஅத்தால் வாதிக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வாதியின் விளக்கம் ஏன் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதற்கு மேற்படி ஜமாஅத்தால் எவ்வித காரணமும் கூறப்படவில்லை. வாதிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன் வாதியின் விளக்கத்தைக் கேட்டுள்ள ஜமாத், வாதியின் விளக்கம் ஏன் ஏற்கத்தக்கதல்ல என்பதற்கு எவ்வித காரணிகளையும் கூறாமல் வாதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது, இயற்கை நெறியை மீறிய செயல் என்றும் சட்டவிரோதமானது என்றுமே இந்நீதிமன்றம் கருதுகிறது.
2) பிரதிவாதி தனது சாட்சியத்தில் 12-07-2007 தேதிய உத்தரவின்படி வாதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஜமாத்தில் லெப்பை, மோதீன், ஒஸா ஆகியோரின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் வாதியின் வீட்டில் நடக்கும் வைபவங்களில் ஜமாத்தை சேர்ந்தவர்கள் யாரும் அதே தேதியிலிருந்து கலந்து கொள்ளக் கூடாது என்றும் திருமணம், சுன்னத் திருமணம், மரணம், குழந்தை பிறப்பு ஆகிய வைபவங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் வாதியின் மகளின் திருமணத்திற்கு ஜமாத்தின் அனுமதி வேண்டுமென்றால் கொடுக்கமாட்டோம் என்றும் வாதியின் மகள் திருமணத்திற்கும் ஜமாத்திலிருந்து தடையின்மை சான்றிதழ் வழங்கமாட்டோம் என்றும் லெப்பை மோதீன் ஒஸா ஆகியோரின் உதவி இல்லாமல் வாதியின் மகளின் திருமணத்தை முஸ்லிம் முறைப்படி நடத்தமுடியாது என்றும் இஸ்லாமிய முறைப்படி ஜமாத்தில் உள்ள பதிவேடுகளில் வாதியின் மகளை கையெழுத்து போடவிடமாட்டோம் என்றும் வாதியின் மகளின் திருமணம் நடைபெற்றால் அத்திருமணத்திற்கு ஜமாத்தை சேர்ந்தவர்கள் யாரும் போகமாட்டோம் என்றும் ஜமாத்தின் உறுப்பினர்கள் யாரும் தடையை மீறி வாதியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டால் அவர்களையும் நீக்கி வைத்துவிடுவோம் என்றும் ஜமாத்தில் இதர உறுப்பினர்களின் வீட்டில் நடக்கும் வைபவங்களில் வாதியும் வாதியின் குடும்பத்தினரும் கலந்துகொள்ள வாதியையும் அவரது குடும்பத்தையும் அனுமதித்தால் நாங்கள் அந்த வீட்டில் உள்ள வைபவங்களில் கலந்து கொள்ளமாட்டோம் என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.
பிரதிவாதியின் சாட்சியம் வாதியையும், அவரது குடும்பத்தினரையும் பிரதிவாதிகள் ஜமாஅத்திலிருந்து சமூகவிலக்கம் செய்துள்ளனர் என்ற வாதியின் வழக்கை உறுதிப்படுத்தும்வகையில் உள்ளது. வாதியின் குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பிரதிவாதிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டப்படி ஏற்கக் கூடியதாக இல்லை என்றே இந் நீதிமன்றம் கருதுகிறது.
3) வாதிக்கு எதிரான ஊர்நீக்க உத்தரவு வக்புவாரிய தீர்மானத்திற்கு எதிரானது என்று வக்பு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்ட பின்னரும் வாதிக்கு எதிரான மேற்படி ஊர்நீக்க உத்தரவை ரத்துசெய்யாததை பார்க்கும்போது வாதியின் மேல் உள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாக வாதிக்கு எதிராக பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்ற வாதியின் வாதம் ஏற்கத்தக்கதாக உள்ளது என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது. இவ்வாறு அபீமுஅ ஜமாத் தன்னிச்சையாக வக்புவாரியத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டுள்ளதும் சட்டவிரோதமானது என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது.
4) இவ்வழக்கை விசாரிக்க வக்ப்வாரிய டிரிபியூனலுக்குத்தான் அதிகாரம் உண்டு என்பதற்கு எவ்வித சட்டவிதிமுறைகளும் பிரதிவாதிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்படாத நிலையில் பிரிவு 9 உரிமையியல் நடைமுறை சட்டத்தின்படி இவ்வழக்கை விசாரிக்க அதிகாரம் உண்டு. வாதி கோரியுள்ள விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரங்கள் வாதிக்கு கிடைக்கத்தக்கது.
தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா அசோசியேசன்(அபீமுஅ) ஜமாத் வாதியையும் அவரது குடும்பத்தினரையும் ஊர்நீக்கம் செய்துள்ளது சட்டவிரோதமானது. வாதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அரசியலமைப்பு உரிமைகளும் சிவில் உரிமைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன். அபீமுஅவின் 12-07-2007 தேதியிட்ட ஊர்விலக்க உத்தரவு சட்டவிரோதமானது. வாதியையும் அவரது குடும்பத்தையும் பிரதிவாதிகள் ஊர்விலக்கம் செய்வதிலிருந்து நிரந்தரமாக தடுப்பதற்காக இவ்வழக்கு விளம்புகை மற்றும் நிரந்தர தடை உத்தரவு கட்டளைப் பரிகாரம் கோரப்பட்டது.
முடிவாக இவ்வழக்கு வாதி கோரியபடி விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி செலவுத்தொகையின்றி தீர்ப்பாணை பிறப்பித்து தீர்ப்பளிக்கப்படுகிறது.
தீர்ப்பாணை:
1) ஜமாத் ஊழியர்களின் சேவையை தடைசெய்து பிறப்பிக்கப்பட்ட 12 - 07 ௨007 தேதிய அறிவிப்பை இல்லாநிலை மற்றும் செல்லாநிலையது என்றும் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் வாதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான ஊர்விலக்கு அல்லது வேறு எந்த நடவடிக்கைகளாலும் வாதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வழக்கமான பொது சமூக, சமய உரிமைகள் மற்றும் மத உரிமைகள் ஆகியவை அரசியலமைப்பின்படி தடைபடவில்லை என்றும் விளம்புகை செய்யப்படுகிறது.
2) பிரதிவாதிகளோ அவர்களது வகையறாக்களோ, முகவர்களோ வாதியின் பொது சமூக, சமய உரிமைகளில் இடையூறு எதுவும் செய்யவோ மற்றும் ஜமாத்தில் உள்ள வாதியின் தெய்வீக மற்றும் இம்மை செயற்பாடுகள், பீர்முகம்மது ஒலியுல்லா தர்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகைகளில் பங்கு எடுப்பதை இடையூறு எதுவும் செய்து தடை செய்யக்கூடாது என்றும் நிரந்தர உறுத்துக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.
***
இந்த நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் அபீமுஅஜமாத் ஊர்விலக்கத்தைத் தொடர்கிறது. மேல்நடவடிக்கை எடுக்கவேண்டிய தமிழ்நாடு வக்ப் வாரியம் இன்னமும் குறட்டைவிட்டு தூங்குகிறது.
- ஹெச்.ஜி.ரசூல் (