தமிழ்நாடு கதர்போர்டு அக்கிராசனர் ஸ்ரீயுத ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் எழுதுகிறார்.

தீபாவளி என்பது வருஷத்திற்கொருமுறை வந்து பெருவாரியான இந்து குடும்பங்களுக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்து தங்கள் குழந்தை குட்டிகள் மக்கள் மருமக்கள் முதலானவர்களோடு களிக்கும் ஒரு பெரிய பண்டிகையாகும். அப்பண்டிகையன்று ஏழையானாலும் பணக்காரனானாலும், கூலிக்காரனானாலும், முதலாளியானாலும் பண்டி கையை அனுபவிப்பதில் வித்தியாசமில்லாமல் தங்கள் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி ஸ்நானம் செய்வதும், புது வஸ்திரங்களை அணிவதும், பலகாரங்கள் உண்பதும் முக்கிய கொள்கையாகும். இக்கொள்கைகள் எந்த தத்துவங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதில் எவ்வளவு அபிப்பிராய பேதங்கள் இருந்தபோதிலும் பொதுவாய் மக்கள் சந்தோஷத்திற்கு புதிய வஸ்திரங்களையே அணிய வேண்டுமென்றிருப்பதனால் ஏழைத்தொழிலாளருக்கு ஒரு விடுதலையும் ஏற்பட்டு வந்ததென்பது அபிப்பிராய பேதமில்லாமல் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.

தற்கால அனுபவத்திலோ சந்தோஷமும் களிப்பும் பலவிதமாயிருந்தாலும் பெரும்பாலும் மேற்படி தீபாவளியானது ஏழை தொழிலாளர்களுக்கு பெருந்துரோகத்தை செய்வதற்கே வருவதாகவும் போவதாகவும் ஏற்பட்டுவிட்டது. இவ்வித துரோகத்திற்கு பணக்காரர்களும், உத்தியோகஸ்தர்களுமேதான் பெரும்பாலும் ஆதரவளிப்பவர்களாயிருக்கிறார்கள். காரணமென்னவென்றால் பட்டு சேலைகளும், பட்டு துப்பட்டாக்களும், சரிகை சேலைகளும், சரிகை துப்பட்டாக்களும், மல்லுகளும், சல்லாக்களும் இவர்கள்தான் வாங்குகிறார்கள். அதோடு இவர்களைப் பார்த்து இவர்களைப் போல் நடிக்க வேண்டுமென்கிற சிலர் தங்களுக்குத் தகுதியில்லாதிருந்தாலும் கஷ்டப்பட்டு இவற்றையே வாங்க ஆசைப்படுகிறார்கள்.

கூலிக்காரர்களாகவும் ஏழைகளா கவும் உள்ளவர்களுக்கு இந்த முதலாளிகளும் பணக்காரர்களுமாயிருப்பவர்கள் ஏழைகளுக்கும் கூலிக்காரர்களுக்கும் துணிவாங்கிக் கொடுக்கும் முறையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்த துணிகளையே வாங்கிக் கொடுக்கவும் செய்கிறார்கள். இத்தியாதி காரணங்களால் தீபாவளி வருகிறது என்றால் பெரும்பாலும் ஏழை நூற்புக்காரர்களுக்கும் கை நெசவுக்காரர்களுக்கும், பெரிய துரோகமும் கொடுமையும் வரப்போகிறது என்றுதான் அஞ்சவேண்டியதாக இருந்து வருகிறது. மகாத்மா காந்தியின் சகாப்தமானது இத்தீபாவளிப் பண்டிகையை தேசத்திற்கும், ஏழை மக்களுக்கும் உண்மையான சந்தோஷத்தையும் நன்மையையும் கொடுக்கத் தக்கதான பரிசுத்த பண்டிகையாக்க வேண்டுமென்று மூன்று நான்கு வருஷங்களாக எவ்வளவோ பிரயத்தனங்கள் பட்டும் இன்னும் அது சரியான பலனை கொடுக்குமென்று நம்புவதற்கு இடமில்லாமலிருக்கிறது.

ஒரு பணக்காரருக்குத் தீபாவளி வருவதாயிருந்தால் பெண்டு பிள்ளைகளையும், மருமக்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்து, உனக்கு எந்தமாதிரி பட்டு வேண்டும்? உனக்கு என்னமாதிரி துப்பட்டா வேண்டும்? என்று கேட்பதும், என்னமாதிரியான பட்டோ, துப்பட்டாவோ, சேலையோ வாங்கினால் அவர்கள் திருப்தி அடைவார்கள் என்பதையும் மாத்திரம் யோசிக்கிறார்களே ஒழிய, என்ன மாதிரி துணிவாங்கினால் நம் நாட்டில் தினம் ஒரு வேளை வயிறார கஞ்சி குடிப்பதற்குக் கூட மார்க்கமில்லாமல் தங்கள் மானத்தையும் கற்பையும் விற்று ஜீவிக்க வேண்டி கட்டாயப்படுத்தப்படுகிற ஏழை நூல் நூற்பவர்களையும், கைநெசவுக்காரர்களையும் திருப்தி செய்வதற்கு உதவும் என்று இவர்கள் கொஞ்சம்கூட எண்ணுவதேயில்லை.

 கிராமங்களில் கஞ்சிக்குக் கஷ்டப்பட்டு பட்டணங்களுக்கு வந்து தெருக்குத் தெருவாய் அலையும் ஸ்திரீகள் நம் சகோதரிகள் என்பதை கொஞ்சமும் கவனிப்பதில்லை. இந்த ஸ்திரீகளின் வாழ்வும் தாழ்வும் நமக்கும் சம்மந்தப்பட்டதென்பதைக் கொஞ்சமும் உணர்வதில்லை. நெசவுத் தொழிற்காரர்கள் தங்களுக்குச் சரியான தொழிலில்லாமல் வெளிநாடுகளுக்குக் கூலிகளாகச் சென்று, வெள்ளைக்காரத் தோட்டக்காரர்களிடமும் கங்காணிகளிடமும் தங்கள் பெண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்து மானங்கெட்டு கற்பிழந்து கஷ்டப்படுகிறார்களேயென்று கொஞ்சமும் கவலைப்படுவதேயில்லை. அவர்களும் நம்முடைய சகோதரர்கள்தானே அவர்கள் கற்பும் மானமும் கெட்டுக் கஞ்சிக்கு அலைய நாம்தானே காரணமாயிருந்து வருகிறோம் என்று கொஞ்சமும் சிந்திப்பதேயில்லை.

உத்தியோகமும், பணமும், அந்தஸ்தும் வந்தால் முதலாவது தேசாபிமானம் ஓடிப்போய் விடுகிறது. ஏழைகளிடத்தில் அன்பும், தயாளமும் ஏற்படும் வழி அடைபட்டுப்போய் விடுகிறது. இவைகளையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு தூக்குத் தண்டனையுள்ளவனுக்கு தூக்கிலிடும் தேதி கிட்ட வரவர எவ்வளவு பயமும் கஷ்டமும் ஏற்படுமோ அதுபோல் தீபாவளி வருகிறதென்றால் தீபாவளி நாள் கிட்ட நெருங்க நெருங்க ஐயோ நம் ஏழைக்கூலிக்கார ஸ்திரீகள் வயிற்றிலும் வாயிலும் மண்ணைப் போடுவதான காரியங்கள் நடைபெறப்போகிற நாள் வரப்போகிறதே! வரப்போகிறதே! என்ற பயமும் கஷ்டமும் மனவேதனையும் ஏற்படச் செய்கிறது. எவ்வளவோ நன்மைக்காக ஏற்பட்ட பண்டிகை இக்கொடுமைக்கு உதவவா வரவேண்டும் என்று மனம் பதறுகிறது.

 நமது நாட்டில் நன்மைக்காக ஏற்பட்ட காரியங்களெல்லாம் எப்படி தீமைக்குதவப்பட்டு வருகிறதோ அதுபோல நமது தீபாவளியும் இவ்வளவு பெரிய தீமைக்கு ஆளாகிறதே என்று தேச சேமத்தில் கவலையுள்ளவர்களும் ஏழைகளிடத்தில் அன்புள்ளவர்களும் கவலைப்படாமலிருக்க முடியாதென்றே நம்புகிறேன். தீபாவளியின்போது அர்த்தமில்லாமல் சுடும் வெடிமருந்து பட்டாசுக்காக நம் நாட்டிலிருந்து எவ்வளவு பணம் வெளிநாட்டுக்குப் போகிறதென்பதை நமது நாட்டு ஜனங்கள் அறிவதேயில்லை. ஏதோ சிலர் அறிந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படுவதேயில்லை.

ஒரு தேசம் முன்னுக்கு வரவேண்டுமானால் அத்தேச மக்களுக்கு கடுகளவாவது தேசாபிமானமும், பரோபகார எண்ணமும் ஏற்பட்டால்தான் முன்னுக்கு வரமுடியும். அது இல்லாத நாடு எவ்விதத்திலும் முன்னுக்கு வராது. ஆதலால் இவ்வருஷ தீபாவளியை தேசவிடுதலைக்கும் ஏழைகளின் கஷ்டம் நீங்குவதற்கும் ஏழைத்தொழிலாள சகோதர சகோதரிகள் நன்மைக்கும் உபயோகப்படும்படி கொண்டாட வேண்டுமானால் பணக்காரர்கள், உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள், முதலாளிகள் முதல் ஏழைகள், கூலிக்காரர்கள், நடுத்தர வகுப்பினர் முதலிய எல்லோரும் தீபாவளியின் பொருட்டு தங்களுக்காகவும் தங்கள் பெண்டு பிள்ளைகள் மக்கள் மருமக்கள் வேலைக்காரர்கள் ஏழைகள் முதலியவர்களுடைய ஒவ்வொருவருடைய திருப்திக்காகவும் செலவு செய்ய நினைக்கும் ஒவ்வொரு பைசாவும் நம் நாட்டிலேயே இருக்குமா?

நம் நாட்டில் கஞ்சிக்கில்லாமல் திண்டாடும் ஏழைகளுக்கும் கூலிக்கார சகோதர சகோதரிகளுக்கும் போய்ச்சேருமா? அவர்கள் திருப்தி அடைவார்களா? என்று யோசித்துப்பார்த்தே செலவு செய்ய வேண்டியது முக்கியமான கடமையாகும்.

அப்படிச் செய்வது வாஸ்தவமானால் துணிவாங்குவதில் வெளிநாட்டுக்குப் பணம் போகும்படியான பட்டோ, சரிகையோ, வெளிநாட்டு மல்லோ, சல்லாவோ இன்னும் பலமாதிரியான வெளிநாட்டு சாமான்களையோ வாங்காமல் நம் நாட்டில் நம் ஏழைச் சகோதரிகளால் கை ராட்டினத்தில் நூல் நூற்கப்பட்டு ஏழைச்சகோதர சகோதரிகளால் நெய்யப்பட்டதுமான துணிகளை வாங்கவேண்டும். அதையே அணியவேண்டும். அதன் தத்துவத்தை நம்மக்கள், மருமக்கள், பெண்டு பிள்ளைகளுக்குச் சொல்லி அதையே அவர்களையும் பின்பற்றச் செய்ய வேண்டும்.

இதனால் எத்தனை ஏழை குடும்பங்களில் தீபாவளி சந்தோஷமாய் நடைபெறும். இப்படிச் செய்யாவிட்டால் எத்தனை குடும்பங்களுக்கு தீபாவளி இல்லாமல் போய்விடும் என்பதையும் அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இப்படியே ஒவ்வொருவரும் நினைத்து எல்லோரும் கதர் வாங்க ஆரம்பித்தால் ஒருசமயம் எல்லோருக்கும் கதர் கிடைப்பது கஷ்டமாய் போனாலும் போகலாம். ஆதலால் இந்த எண்ணம் உள்ள தேசாபிமானிகளும் ஏழைக்கிரங்குபவர்களும் இப்பொழுதே கதர்வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். புதுப்பாளையத்திலும், திருப்பூரிலும் இன்னும் சில இடங்களிலும் மொத்தமாய் கதர் கிடைக்கும். ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி, கோயமுத்தூர், கடலூர், மதராஸ், மாயவரம், கரூர், ராஜபாளையம், அந்தணர் பேட்டை முதலிய சில இடங்களில் காங்ரஸ் டெப்போவும், காங்ரஸ் நற்சாக்ஷி பத்திரம் பெற்ற கதர் கடைகளும் இருக்கின்றன.

(குடி அரசு - கட்டுரை - 20.09.1925)

Pin It