2011 சட்டசபை தேர்தல் அனல் பறக்க ஆரம்பித்திருக்கும், இவ்வேளையில் தேர்தல் வெற்றி குறித்தும், கூட்டணிகளை பற்றியும் திருவாளர் வெகுசனம் தனது கருத்துக்களை அள்ளித் தெளித்து கொண்டிருக்கின்றனர். அப்பேர்ப்பட்ட வெகுசன கருத்தியலை உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்கள் முகாமையான பங்கு வகிக்கின்றன. 27.02.2011 அன்று தினமணி நாளிதழில் விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. கூட்டணியை மக்கள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் இருதரப்பு சமூகத்து மக்களுக்கிடையே முரண்பாடுகள் அதிகம் இருப்பதால் அவர்கள் இருவரும் இணைந்து அரசியல் பணி செய்வது சாத்தியமில்லை என்று சமூக நல்லிணக்கத்தோடு(?) ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரையின் உள்நோக்கம் வன்னியர், தலித் ஒற்றுமை நடைமுறையில் இல்லாத ஒன்று என்றும், ஆகையால், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கூட்டணி தோல்வி பெறும் என்றும் ஆரூடம் சொல்வதுதான்.

ramadoss_thiruma_340இடைநிலை சாதிகளும், பட்டியல் சமூகத்தினரும் அரசியல் தளத்திலும், சமூக அரங்கிலும் இணைந்து செயல்படக்கூடாது என்கிற நோக்கத்தில் பார்ப்பன அதிகார மய்யம் செய்யும் பிரச்சார மரபின் தொடர்ச்சிதான் இது. ஆனால், வரலாற்றை சற்று பின்னோக்கி கூர்ந்து கவனித்தால், இடைநிலை சமூகங்களும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் இணைந்து பல்வேறு விடுதலை போரட்டக் களங்களை சந்தித்துள்ளனர் என்பதுதான் உண்மை.  திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டான் சேவலை தலைமையிடமாக கொண்டு ஆண்ட பூலித்தேவன் என்னும் தமிழ் மன்னன் கொண்டைய கொட்ட மறவர் சமூகத்தை சேர்ந்தவர். அவரின் போர்த்தளபதியாக இருந்த ஒண்டிவீரன் அருந்ததிய சமூகத்தை சேர்ந்தவர். வெள்ளைக்காரர்கள் "நெற்கட்டான் சேவலை" முற்றுக்கையிட்டு, தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அப்போது, ஒற்றை ஆளாக சென்று வெள்ளைக்காரர்களுடன் போரிட்டு, அவர்களின் ஏகாதிபத்திய பிடியிலிருந்து, தமிழ் மண்ணை மீட்டு வந்தார் ஒண்டிவீரன் என்னும் வீரத்தமிழர். இப்போரில் ஒண்டிவீரனுக்கு ஒரு கையே துண்டாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக தன் உயிரை துச்சமென்று நினைத்து போராடிய "ஒண்டிவீரனை" விட எனக்கு இவ்வுலகத்தில் உறவு எதுவுமில்லை என நெஞ்சம் நெகிழ்ந்து கூறினான் பூலித்தேவன்.

சனாதன தீட்டு மரபை உடைத்தெறிந்து தமிழின ஒற்றுமைக்கு வழிகாட்டியாய் வாழ்ந்த பூலித்தேவன் ‍ ஒண்டிவீரன் வரலாறு இடைநிலை சமூகங்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒன்றுபடுத்தும் அரசியலுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அதே தெற்கத்தி மண்ணில், சிவகங்கை சீமையில் மருதுபாண்டியரின் ஆட்சிகாலத்தில் பிரித்தானியர்களால் சிவகங்கை அரண்மனை கைப்பற்றப்பட்டது. அப்போது, பிரித்தானியர்களின் வெடிகுண்டுக் கிடங்கில் நெருப்பு பந்தத்துடன் குதித்து உயிர் துறந்தவர் "குயிலி" என்னும் ஆதிதிராவிட பெண் என்பது வரலாறு. ஆனால், இன்று மருதுபாண்டியர் அகமுடையர் சமூகத்தின் பிரதிநிதியானது காலத்தின் கோலம். உசிலம்பட்டி அருகே, பெருங்காமநல்லூரில் குற்றபரம்பரை என்று பிறவியின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட "பிரான்மலை கள்ளர்" சமூகத்தை சேர்ந்த பதினாறு பேரை ஈவு இரக்கமின்றி வெள்ளைக்காரர்கள் சுட்டு கொன்றனர். அப்போது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கள்ளர் சமுகத்தைச் சேர்ந்த ஒரு போராளிக்கு, வெள்ளைக்கார அதிகாரிகளின் தடையையும் மீறி, துணிச்சலுடனும், மனிதநேயத்துடனும் தண்ணீர் கொடுத்து உதவினார் ஒரு ஆதிதிராவிடப் பெண்.

அடுத்த கணமே துப்பாக்கி தோட்டா அவள் தலையில் துளைக்க உயிர் துறந்தாள் அந்த வீரத்தமிழச்சி. சுதந்திரப் போராட்டம் என்கிற பேரில் காந்தியையும், நேருவையும், தலைவர்களாக சித்தரித்து பிரச்சாரம் செய்யும் இந்த பார்ப்பன # பனியா அதிகார வர்க்கம், சாதிகளைக் கடந்து விடுதலை போராட்டத்திற்காக தமிழர்கள் ஒற்றுமையுடன் நின்று சமர் புரிந்த இந்த வீர சரித்திரங்களைப் பிரச்சாரம் செய்யுமா என்றால் கண்டிப்பாக செய்யாது. ஏனென்றால், அங்குதான் பார்ப்பனியத்தின் சூழ்ச்சி அடங்கியுள்ளது. மறவர், பள்ளர் பகைமையை பட்டை தீட்டுவதற்காக நாற்பதாண்டு காலமாக, முதுகுளத்தூர் கலவரத்தைப் பற்றி இரு சமூகத்தினரிடமும் சொல்லப்பட்டு வருகிறது. இது சொல்லப்பட வேண்டிய உண்மை என்பதில் நமக்கு மாற்று கருத்து கிடையாது.

ஆனால் அதே சமயம், அதில் சொல்லப்படப்படாத, வெகுவான மக்களுக்கு சென்று சேராத உண்மை ஒன்று இருக்கிறது. முதுகுளத்தூர் கலவரத்தில் பள்ளர் சமூகத்தினரையும், நாடார் சமூகத்தினரையும் காப்பாற்றுவதற்காக போராடியதால், மறவர் சமூகத்தினரால் வெறித்தனமாக வெட்டிக் கொல்லப்பட்டார் இமானுவேல். அதே கலவரத்தில், தினகரன் என்னும் மறவர் சமூகத்தைச் சேர்ந்த போராளி, பள்ளர் சமூக மக்களை காப்பாற்றும் முயற்சியில், தன் சொந்த சாதிக்காரர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இமானுவேல் சேகரன் என்னும் தலித் போராளியை கொலை பண்ணுவதற்கு யார் காரணமாக இருந்து செயல்பட்டார் என்று சொல்லப்படுகிறதோ, அதே மனிதர்தான் "தினகரன்" என்னும் போராளி கொலையுண்டதற்கும் காரணமானவர். தினரகன் என்னும் இடைநிலை சமூகத்தை சேர்ந்தவரையும், இமானுவேல் என்கிற தலித்தையும் சாதி வேறுபடுத்தினாலும், சமூக நீதிக்கான போராட்ட களம் அவர்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை. இது போன்று சாதிய மரபை உடைத்த தமிழர்களின் வரலாறு, நீதிக்கட்சியின் வரலாற்றிலும் தொடர்கிறது.

சமையல்கார பார்ப்பான் ஒருவன் பெரியாரை "சூத்திரன்" என்று சொல்லித் தீட்டியதற்கு, அருந்திய சமூகத்தை சேர்ந்த எல்.குருசாமி என்னும் தோழர் அவனை அடித்துவிட்ட சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்டோர், பார்ப்பன எதிர்ப்பினை கையில் எடுத்து பிற்படுத்தப்பட்டோரோடு இணைந்து அரசியல் செய்யும் காலகட்டத்தினை நீதிக்கட்சி துவக்கி வைத்தது. "பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே" என்று பார்பபன பாரதி புலம்புவது இந்த ஆரோக்கியமான சமூக மாற்றத்தைப் பார்த்துதான். மேலும், பிற்படுத்தப்பட்டோரை, தாழ்த்தப்பட்டோரிலிருந்து பிரிக்கும் சூழ்ச்சியின் வெளிபாடுதான் பார்ப்பன பாரதி "பள்ளு இலக்கியம்" பாடியது, தலித் குழந்தைகளுக்கு பூணூல் அணிவித்தது போன்ற சமூகசீர்திருத்த செயல்பாடுகள். சாதிய நம்பிக்கைகள் புரையோடிக் கிடந்த இராமநாதபுரத்தில் "ஆதிதிராவிட மகாநாடு" நடத்தி தன் சொந்த சாதி மக்களால் கல்லெறி வாங்கி வன்முறைக்கு ஆளான இராமச்சந்திரன் சேர்வை, (தேவர் சமூகத்தை சேர்ந்தவர்), பஞ்சமர்களுக்கு பேருந்தில் இடமளிக்காவிட்டால், பேருந்து போக்குவரத்தையே தடை செய்ய வேண்டும் என்று சொன்ன சௌந்திரபாண்டிய நாடார் என சாதிப் பகைமைகளை விரட்டிய நீதிக்கட்சித் தலைவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. சரி, இப்போது, கட்டுரையின் முதல் பத்திக்கு வருவோம்.

இன்றைய சூழலில் வன்னியர் - தலித் அரசியல் கூட்டணி சாத்தியமா? என்றால் நூறு விழுக்காடு சாத்தியம் என்பதே உண்மை. தமிழகம் முழுவதும் பார்ப்பனியத்திற்கு தமிழர்கள் பலியானதன் விளைவாக, கள்ளர் - பள்ளர், வன்னியர் - பறையர், கவுண்டர் - அருந்தியர் முரண்பாடு பரவலாக இருப்பது உண்மை என்றாலும், அந்த சாதிய இறுக்கத்தை தளர்த்துவதில் வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் - தலித் சமூகங்கள் முன்னிலை வகிக்கின்றன.

தென்மாவட்டங்களை ஒப்பிடும்போது, வடமாவட்டங்களில் பெரியாருடைய சிந்தனைகள், இடஒதுக்கீடு பற்றிய உணர்வு அதிகம் என்பதே வரலாறு நமக்கு தரும் செய்தி. இங்கே, இவ்வளவு காலமாக அரசியல்ரீதியாக பா.ம.க. # விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமையாததுதான் ஆச்சரியமான ஒன்று. காலம் தாழ்த்தி ஏற்பட்டிருக்கின்ற இந்த வன்னியர் - தலித் அரசியல் கூட்டணியை கூட பொறுத்து கொள்ள முடியாமல் தங்கள் வன்ம விமர்சனங்களை கொட்டுகின்றன பார்ப்பன ஊடகங்கள் அனைத்தும். சாதிய அமைப்பு இறுக்கமாக இயங்கி கொண்டிருக்கும் தென்மாவட்டங்களில் கூட, முக்குலத்தோர் பலபேர் விடுதலை சிறுத்தைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். மூக்கையாதேவரின் மகன் பசும்பொன் மூ.மூக்கையா என்பவர் விடுதலை சிறுத்தைகளின் சமூக நல்லிணக்க மாநிலச் செயலாளராக இருக்கிறார் என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. வலங்கை சமூக பொதுப் புத்தியில் வந்த கள்ளர் சமூகம்  பறையர்களுடன் இணைந்து அரசியல் களத்தில் நிற்பதற்கு ஆயுத்தமாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இடங்கை சமூக மரபில் வந்த வன்னியர் சமூகம் - பறையர் சமூகத்துடன் இணைந்து நிற்பதற்கு தடை ஒன்றும் இல்லை. (வலங்கை சமூகம் - பார்ப்பன ஆதரவு மனநிலை, இடங்கை சமூகம் - பார்ப்பன எதிர்ப்பு மனநிலை).

ஆகவே, இருபது வருடங்களுக்கு முன்னரே நடைபெற்ற ஆரோக்கியமான சமூக மாற்றத்தின் பலனை இப்போது தான் அரசியலில் அறுவடை செய்ய வாய்ப்பு அமைந்திருக்கிறது. சாதிய படிநிலைகளை தகர்த்தெறியும் இந்த ஆரோக்கியமான இடைநிலை சாதி - தலித் கூட்டணியை உடைப்பதிலும், அதனை வலுகுன்ற செய்வதிலும், பார்ப்பன அமைப்புகளும், அதன் ஊடகங்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆதித்தமிழ் சமூகத்தில் இல்லாத சாதி, பாதியில் வந்து, தமிழனத்தை சீர்குலைத்த வரலாற்றையும், மீண்டும் தேசிய இன அடிப்படையில் தமிழ் சமூகம் திரள வேண்டிய கட்டாயத்தையும், பெரியார், அம்பேத்கரிய சிந்தனையாளர்களான நாம் எடுத்தியம்ப வேண்டிய கடமை இருக்கிறது. எந்த ஒரு கூட்டிலும் தலித் மக்களின் உரிமைகள் ஒருபோதும் பலியாகிவிடக்கூடாது என்ற தெளிவுடன் தலித், இடைநிலை சாதிகளின் கூட்டுறவை நாம் தொடர்ந்து ஆதரிப்போம்.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It