கல்கி என்கிற ரா. கிருஸ்ணமூர்த்தி தமிழக புதின வரலாற்றில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுத் தொடர்கதை மிகப் புகழ் பெற்றது. கல்கி இதழிலில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கதையாக வந்து படிப்பவர்களின் உள்ளத்தை அள்ளிச் சென்றது. சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், குந்தவை, செம்பியன் மாதேவி போன்ற வரலாற்று மாந்தர்களைக் கொண்டு புனையப்பட்டது. அந்நூல் ஆசிரியரும் பல கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றைப் படித்து மிகுந்த உழைப்புடனும் சிறந்த, எளிய நடையிலும் கதையை எழுதிருப்பது குறிப்பிடத்தத்க்கது. தமிழர்கள் நடுவில் சோழர்காலம் பற்றி ஒரு விழிப்புணர்வையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது. திருவாலங்காட்டு செப்பேடு, அன்பில் செப்பேடு, ஆய்வாளர்கள் பெயர்கள் ஆகியவையும் அதில் வருகின்றன. ஆசிரியர் அவை குறித்து படித்து செய்திகளை, தம்முடைய கற்பனை வளத்துடன் இணைத்து எழுதியுள்ளார். இது மக்களின் மனத்தைக் கவர்ந்தது. நானும் அந்த கதையினை பல முறை படித்து இன்புற்றுள்ளேன். 5 பாகங்கள், பல ஆயிரம் பக்கங்கள், மணியம் அவர்கள் ஓவியம் என்று பல சிறப்புகளை உடையது அந்த உரை நடைக் காவியம்.

அந்நூலாசிரியர் கல்கி அவர்கள் வரலாற்றைக் கையாண்டவிதம் தான் சற்று நெருடலை ஏற்படுத்துகிறது.

நூலின் முடிவுரையில் ஆசிரியர் கூறுவதாவது. "சோழ நாட்டின் மணிமகுடத்திற்கு தான் உரியவன் ஆக இருந்தும் அருண்மொழிவர்மன் [பின்னால் ராசராச சோழன்] அதை மறுதளித்து, கண்டராதித்தரின் மகனும் தன்னுடைய சிற்றப்பனும் ஆகிய மதுராந்தக உத்தமசோழனுக்கு விட்டுக்கொடுத்தான். அதுவே இந்த நூலின் உச்ச கட்டமாகும். இந்திய வரலாற்றில் இதற்கு ஒப்பான நிகழச்சி நடைபெற்றதில்லை. அசோக சக்கரவர்த்தி கலிங்கப் போரின் வெற்றிக்குப் பிறகு இனி போர் செய்ய மாட்டேன் என்று உறுதி கொண்டதை வேண்டுமானால் அதற்கு இணையாகக் கூறலாம்" என்று எழுதுகிறார். இதற்கு சான்றாக திருவாலங்காட்டு செப்பேடுகள் இதை அறுதியிட்டுக் கூறி உறுதி செய்கின்றன என்றும் எழுதியுள்ளார். எனவே திருவாலங்காட்டுச்செப்பேடுகள் குறித்து கல்கி அவர்களுக்கு நல்ல அறிவு இருந்திருக்கிறது. ஆனால் அதில் இருந்து சில பகுதிகளை தேர்ந்தெடுத்து தமது கதைக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு படைப்பாளிக்கு இத்தகைய உரிமை உண்டு அதை யாரும் மறுக்க இயலாது. ஆயின் அதையே உண்மையான வரலாறு என்று சாதிக்க முடியாது

திருவாலங்காட்டுச்செப்பேடுகள் கூறுவது அனைத்தும் உண்மையான செய்திகள் என்று ஒப்புக் கொள்வது என்றால் அவருடைய கதைக்கு முற்றிலும் மாறான செய்திகள் நிகழ்வுகள் காணப்படுவதையும் அவர் எழுதியிருக்க வேண்டும். குறைந்த அளவு முடிவுரையிலாவது அப்படி எழுதியிருக்கவேண்டும் திருவாலங்காட்டுச்செப்பேடுகள் எவ்விதம் அவருடைய வரலாற்று கதையிலிருந்து வேறுபடுகிறது என்று காண்போம்.

1 சுந்தரசோழன் இறந்த பிறகு ஆதித்த கரிகாலன் ஆட்சி செய்ததாகவும் பிறகு "விண்ணுலகை காணும் ஆசையால் மரணம் அடைந்தாதகவும்" திருவாலங்காட்டுச்செப்பேடுகள் உறுதியிட்டுக் கூறுகின்றன. ஆனால் பொன்னியின் செல்வன் கதை இதிலிருந்து வேறுபட்டு ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டு அல்லது தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டதாகக் கூறுகிறது. [கொலையா? தற்கொலையா? யார் கொன்றார்கள்? என்ற செய்திகள் ஒரு லாவகத்துடன் தெளிவில்லாமல் விடப்பட்டுள்ளன. கல்கி பொன்னியின் செல்வன் நாவலில் திருவாலங்காட்டுச்செப்பெடுகளை தமது கதைக்கு ஏற்ப பயன்படுத்தியிருப்பதில் தவறில்லை ஆனால் தனது சாதிக்கு ஏற்றவகையில் பயன் படுத்தி உள்ளதுதான் கண்டிக்கத்தக்கது. எப்படி?

அதில் அவர் கதை மாந்தர்களை படைத்தவிதம். 1 அனிருத்த பிரும்மராயன் என்ற பார்ப்பனர் சுந்தரசோழன் அமைச்சராக இருந்திருக்கிறார். இதுவும் வரலாற்று உண்மைதான் அன்பில் செப்பேடுகள் இதை உரைக்கின்றன. அவருக்கு சுந்தரசோழன் பல ஊர்களை பிரம்ம தேயமாகவும். இறையிலி நிலமாகவும் அளித்ததையும் அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆனால் அவர் அதை மறைத்துவிட்டார். மேலும் அனிருத்த பிரும்மராயன் அவர்களை "பூஜை புனஸ்காரம், ஜபதபம், நியம நிஸ்டைகள் இவற்றில் உயர்ந்தவராகவும். எல்லாம் தெரிந்த, பக்தி மிக்க, உன்னத புருடராகவும் படைத்துள்ளார். அது செல்க. தன் இனத்தாரை உயர்த்தி சொல்லுவது மனிதவழக்கம் என்று விட்டு விடலாம். அதைப்போன்றே அருண்மொழிவர்மன், குந்தவை மதுராந்தகன் போன்ற வரலாற்று மனிதர்களையும் உத்தமபுத்திரர்களாகப் படைத்துள்ளார். ஆனால் ஆதித்தகரிகாலனை தொடக்கம் முதல் சினம் மிக்கவன் ஆகவும் பெரியோரை மதிக்காதவன் போலவும் படைத்துள்ளார். அதற்கு ஏதேனும் சான்றுகள் உள்ளனவா?

ஆவேசமும் மூர்க்கக் குணம் மட்டுமின்றி, ஒரு பெண் பித்தன் என்பது போலவும் படைத்துள்ளார். அவனை மட்டும் அல்ல அவனது நண்பனாகிய பார்த்திபேந்திர பல்லவன் என்ற பல்லவ வழிவந்த இளவரசனையும் அதைப்போன்றே படைத்துள்ளார். இவனும் வரலாற்று மனிதனே பல கல்வெட்டுகள் பார்த்திபேந்திரபல்லவன் தொண்டை நாட்டில் ஆட்சி செய்ததற்கு சான்று அளிக்கும். அவனும் கோவில்கள் முதலியவற்றிற்கு நன்கொடை அளித்தவன்தான். ஆதித்தகரிகாலனும் அவனுடைய காலத்திய அதிகாரிகளும் கோவில்களுக்கும். பார்ப்பனர்களுக்கும் கொடை அளித்த மன்னர்கள் தான். ஆயினும் அவர்கள் பாத்திரப் படைப்பை அப்படி அமைத்தற்கு காரணம் என்ன?

ஆதித்த கரிகாலன் ஒரு கொடியவன். வீரபாண்டியனின் தலையைக் கொய்த அறம் கொன்ற செய்கை புரிந்தவன் என்று அமைத்து அவன் கொலை செய்யப்பட வேண்டியவனே என்ற முடிவிற்கு படிப்பவர்களை இட்டு செல்லும் நோக்கம் இருந்திருக்கவேண்டும். பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிப்பவர்கள் யாருக்கும் ஆதித்த கரிகாலன் மீது சிறிதளவும் அன்போ அல்லது பரிவோ ஏற்பட்டு விடாதவாறு அக்கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதையின் வில்லன் அவன் என்று சொன்னால் அது மிகையாது. அவ்வளவு தூரம்மெனக்கட்டு ஆதித்த கரிகாலனை இழிவுபடுத்துவதற்குக் காரணம் அவனைக் கொலை செய்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை படிப்பவர்கள் நடுவில் விதைப்பதற்கே.

ஏன்? ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே. ஆனால் இந்த உண்மையை கல்கி வெளிப்படையாக சொல்லவில்லை மறைவாகவும் சொல்லவில்லை. அவருக்கு ஒரு வேலை தெரியாதோ என்று நாம் எண்ணிவிடக் கூடாது. ஏனெனில் அவர் ஆதித்த கரிகாலனைக் கொல்லுவதற்கு [சோழகுலம் முழுவதையுமே அழிப்பதற்கு என்று கல்கி வர்ணித்துள்ளார்] என்று திட்டம் தீட்டியவர்கள் என்ற பெயரில் அவர் குறிக்கின்ற ஆட்களின் பெயர்கள் எல்லாம் உண்மையானவை. சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன், ரேவதசக் கிரம வித்தன் போன்ற பெயர்களை உடையவர்கள் சோழ நாட்டிற்கு எதிராக சதி செய்தனர் என்று கல்கி எழுதுகிறார். அவர்கள் திட்டங்கள் அனைத்தையும் ஒரு துப்பறியும் நாவலுக்கு இணையான சாகசத்தோடு கொண்டு சொல்லுகிறார். ஆனால் அவர் சொல்லாமல் ஒளித்தது அவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே என்ற உண்மையை மட்டும்தான்.

உடையாளூர்க் கல்வெட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்ற மேற்சொன்ன அனைவரும் பிரும்மாதிராயன் [சோழ நாட்டுப் பார்ப்பனர்களுக்கு வழங்கப்படும் விருதுப் பெயர்] பஞ்சவன [பாண்டிய நாட்டுப் பார்ப்பனர்களுக்கு வழங்கப்படும் விருதுப் பெயர் ] என்று கல்லில் இட்ட எழுத்துப் போல் அடித்துச் சொல்லுகிறது. ஆனால் கல்கி அவர்கள் மீது பார்ப்பன வாடையே அடிக்காத அளவிற்கு அவர்களைப் படைத்துள்ளார். படிப்பவர்கள் யாருக்கும் அவர்கள் மந்திரவாதிகள், ஒற்றர்கள், இழிகுலத்தோர் என்றுதான் தோன்றும். அவர்கள் பார்ப்பன சாதியினராய் இருப்பரோ என்ற எண்ணம் அணு அளவும் மனதில் தோன்றாது. அப்படிப்பட்ட நேர்த்தியான கை வேலை.

அனிருத்த பிரும்மராயன் என்ற வரலாற்று மனிதனை அவன் சாதியுள்பட வெளிக்காட்டி எழுதிய கல்கி, சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன், ரேவதாசக் கிரம வித்தன் போன்ற வரலாற்றுக் குற்றவாளிகளை வேற்று சாதியினர் போல் படைத்துள்ளார். உடையாளூர்க் கல்வெட்டுகள் அவர்கள் அனைவரும் பார்பபனர்கள் என்று எழுதி உள்ளதை மறைத்துவிட்டார். பெயர்களை மட்டும் எடுத்துக் கொண்டு சாதியை மறைத்துவிட்டார். என்ன காரணம்? தன்னுடைய சாதியின் நற்பெயரைக் காப்பற்றுவதுதான். வரலாற்றில் கல்வெட்டில் தன் சாதியைப் பற்றி கூறப்பட்டுள்ள உண்மைகள் வெகுசன மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்று வெகு அக்கறையாக அவர்களின் சாதியை மறைத்துவிட்டார். என்னே அவர் கைவண்ணம்! இனப்பற்று! நேர்மை!

நமக்குத் தெரிந்த அளவிலேயே மறைப்பு வேலைகள் நடக்கின்றன. தெரியாமல் நடந்தது எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே தலையைச் சுற்றுகிறது.

Pin It