ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசில் சம உரிமைக்கான போராட்டமும், ஆதிக்க சாதியினரின் இருப்பைத் தக்கவைக்கும் போராட்டமும் சாதிக் கலவரங்களாகவும், சாதிச்சங்கங்களாகவும், சாதிக் கட்சிகளாகவும் உருமாறுகின்றன ஆயினும் இது ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலையல்ல; இது தமிழகத்தின் வடகிழக்கு மற்றும் தென் தமிழகத்தின் நிலைதான் இது. ஆனால் முற்றிலும் மாறுபட்ட சூழல் வடமேற்கு தமிழகமான கொங்குமண்டலம் என்று அழைக்கப்படுகின்ற ஈரோடு, நாமக்கல், கோவை, போன்ற மாவட்டங்களில் நிலவுகிறது.

சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளது போலவே இங்கும் நிலவுகிறது. பல ஊர்களில் இரட்டைக்குவளை முறையும் நீடிக்கிறது; வழிபாட்டுத்தலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையும் மறுக்கப்படுகிறது. குறிப்பாக பண்ணை அடிமை முறை இங்கு அதிகமாகவே காணப்படுகிறது. திருமண மண்டபங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாடகைக்கு விடப்படுவதில்லை ஆயினும் இங்கு பெரிய அளவில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான கலகங்கள் ஏற்படவில்லை.

இங்கு நிலவம் சமூக சூழலை ஆய்ந்து நோக்கும்போது ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் வலுபெறாமல் போவதின் காரணமும் ஒடுக்குமுறையாளர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையற்ற சூழலையும் இங்கு நாம் காணமுடியும்.

இங்கு கிராமப்புறங்களில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் இக்கொடுமைகளிலிருந்து தப்பிக்க ஏற்ற சூழல் தொழில் வளம் மிக்க திருப்பூர், கோவை போன்ற தொழிற்சாலைகள் நிரம்பிய நகர்ப்புறங்களில் நிலவுகிறது. இதனால் படிக்கும் வாய்ப்புபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், கிராமப்புறங்களில் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட துடிக்கும் கூலி உழைப்பாளர்களுக்கும், சாதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காத நகர்ப்புற வாழ்க்கை சிறந்த அடைக்கலமாக உள்ளது. இதன் பயனாக சாதி வன்கொடுமைகளுக்குகெதிரான போராட்ட சக்தி சிதறிப் போகின்ற காரணத்தால் மற்ற தென் மாவட்டங்களில் ஏற்பட்டது போன்ற போராட்டச் சூழல் இங்கு அண்மைக் காலம்வரை நிலவில்லை.

இந்நிலையில் மாற்றங்கள் தீவிரமடைந்து வருகின்றன. கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ளதாகக் கருதப்படும் வேளாளக்கவுண்டர்களின் ஆதிக்கமே  இப்பகுதிகளில் தொழில், அரசுப்பணி, அரசியல் ஆகிய அனைத்துத்துறைகளிலும் மேலோங்கி இருந்து வருகிறது. ஆயினும் இவ்வாதிக்க சக்திகள் தங்களது மேலாதிக்கத்தின் பிடியை மேலும் இறுக்கவும் இவ்வோட்டுப் பொறுக்கி சனநாயகத்தின் அரசியல் பொருளாதார ஆதாயங்களைப் பொறுக்கித் தின்றிடவும் ஒரு கூட்டமாக கிளம்பியுள்ளன.

தேர்தல்கால திடீர் அரசியல்வாதிகளான ஈஸ்வரன், பெஸ்ட்ராமசாமி போன்ற தரகு முதலாளிகள் புதியதாக “கொங்குநாடு முன்னேற்றக் கழகம்” என்ற பெயரில் ஒர் அரசியல் வியாபரத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கு முதலீடுகளாக சில கோடிகளும், ஆதிக்க சாதியுணர்வும், மக்களின் மூடத்தனங்களுமே உள்ளது. இதைக்கொண்டு கூட்டத்தைக் கூட்டி சில சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றிட முடியும் என்ற கனவுடன் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இதற்குத் தோதாக ஆதிக்க சாதியுண‌ர்வைத் தூண்டி அதில் குளிர்காயும் யுக்தியைக் கையாள ஆரம்பித்து விட்டனர்.

உதாரணமாக பெங்கலூரில் உள்ள வளுபுரத்தம்மன் கோவிலில் வேளாளக்கவுண்டர்கள் கோவிலின் உள்ளே வழிபடவும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலின் வெளியே வழிபடுவதும் நடைமுறையாக இருக்கின்றது. இதைக்கூட சகிக்காத சில ஆதிக்க சாதி வெறியர்கள் கோவிலின் வெளியே வழிபாடு செய்துகொண்டிருந்த தாழ்த்த‌ப்பட்ட மக்களை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியுள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில் காவல் துறையினரால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஆதிக்க சாதியான வேளாளக்கவுண்டர்களுக்கு ஆதரவாக பெஸ்ட் ராமசாமி செயல்பட்டார். இதன் மூலம் ஆதிக்க சாதி சாதி நலன்களுக்காகப் போராடும் ஒர் இயக்கமாக கொங்குநாடு முன்னேற்றக்கழகத்தைக் காட்டிக்கொள்ள இப்பிரச்சனையைப் பயன்படுத்தினர்.

நம்பியூரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு திருமண மண்டபம் தர மறுத்த பிரச்சனையில் திருமண‌ மண்டபம் செட்டியார் சமூகத்திற்கு சொந்தமாக இருந்தபோதும் வேளாளக்கவுண்டர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு தங்கள‌து ஆதிக்க சாதியுணர்வை நிரூபித்தனர். அதைத்தொடர்ந்து கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை சார்பாக வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று போராட்டமும் நடத்தினர்.

சாதி ஒடுக்குமுறை மிகுந்துள்ள இங்கு இவ்வொடுக்குமுறையை ஊக்கப்படுத்தும் வகையிலும் ஒடுக்குமுறையாளர்களுக்கு பாதுகாப்புணர்வை அளிக்கும் வகையிலும் செயல்பட எத்தனிக்கும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் போன்ற ஆதிக்க சாதிக்கட்சிகள் கொங்கு மண்டலப் பகுதியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லாமல் பதற்றமிக்க கலவரப்பகுதியாக மாற்றுவார்களே அல்லாமல் இவர்கள் கூறுவதுபோல் “கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்” என்பது வெறும் பிதற்றலாகவே முடியும்.

தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு சீட்டு வாங்கிவிடலாம் என்று எண்ணும் இவர்களுக்கு எந்தக் கூட்டணி சீட்டு கொடுத்தாலும் நிச்சயம் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பிறசாதிகளின் வாக்குகளை அக்கூட்டணி இழக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கொங்கு மண்டலப் பகுதியில் சரிவிகித பலமுள்ள திமுகவும் அதிமுகவும் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு தொகுதிகள் வழங்குவதன் மூலம் புதிய அரசியல் எதிரியை உருவாக்க துணை போவ‌தாகவே அமையும். மேலும் தமது கட்சியின் வாக்காளர்களையும் நிரந்தரமாக இழக்கவும் சிதறடிக்கவும் செய்யும். வர்க்கப் பார்வையோ இன உணர்வோ சிறிதும் அற்ற இது போன்ற சாதிக்கட்சிகளை நாம் எதிர்ப்பதும் புறக்கணிப்பதும் நமது கடமையென்றே நினைக்கிறேன்.

சாதி மதங்களைக் கடந்து வர்க்கப்பார்வையுடன் இனரீதியாக ஒன்றுபட வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம்.

- வணங்காமண் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It