உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, முகம்மத் அஃப்சல் குரு 2006 அக்டோபர் 20ம் தேதியன்று, சாகும் வரை தூக்கிலிடப்படப் போகிறார். பாதுகாப்புக் காவலர்கள் பலர் கொல்லப்படுவதற்குக் காரணமான பாராளுமன்றத் தாக்குதல் (2001) டிசம்பர் 13 வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் குரு.

       எந்த ஒரு பயங்கரவாத அமைப்பிலும் குரு இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட வில்லை. தாக்குதலில் எந்த நேரடிப் பங்கும் அவருக்கு இருக்கவில்லை. நீதி விசாரணையில் 'சிவில்' மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டில்' கண்டுள்ள எந்தப் பிரிவுகளும் மதிக்கப்படவில்லை. தாக்குதலில் அவர் ஈடுபட்டதற்கான நேரடிச் சாட்சியம் ஏதுமில்லை என்பதை உச்ச நிதிமன்றம் குறித்துள்ளது. முன் வைக்கப்பட்ட சாட்சியங்கள் தற்செயலானவையே.

       ஒரு பயங்கரவாத அமைப்பு அல்லது கும்பலுடன் தொடர்புடையவர் என்பது குறித்த 'பொடா' சட்டப் பிரிவின் கீழான குற்றச்சாட்டுகளை உச்ச நீதி மன்றம் உட்பட மூன்று நீதி மன்றங்களுமே ஏற்கவில்லை. சாட்சியங்கள் இட்டுக் கட்டப்பட்டவை என்பதையும் நீதிமன்றம் குறித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக விசாரணையின் போது குரு தன்னைக் காத்துக் கொள்வதற்கான உருப்படியான சட்ட உதவி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளார்.

       ராம்ஜேத்மலானி இவ்வழக்கில் வாதிட விருப்பம் தெரிவித்தபோது இந்துத்துவக் குண்டர்கள் அவரது அலுவலகத்தைச் சூறையாடினர். 2006 ஜீலை 11 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காகத் தோன்ற இருந்த வழக்குரைஞர்கள் இந்துத்துவ அமைப்பொன்றால் மிரட்டப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

       இவர்களின் போலி தேச பக்தியின் கோழைத்தனமான வெளிப்பாட்டிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குரு மீது ஏதேனும் குற்றஞ்சாட்ட முடியுமானால் அவர் அந்தக் குற்ற நடவடிக்கைகளில் ஏதோ ஒரு வகையில் துணையாக இருந்தார் எனச் சொல்லலாமேயொழிய நேரடியாக இதில் பங்கு வகித்தார் எனச் சொல்ல முடியாது, "பெரும் (உயிர்) இழப்புகளுக்குக் காரணமான இச்சம்பவம் தேசம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதன் மூலமே சமூகத்தின் கூட்டு மனச் சாட்சியைத் திருப்தி செய்ய முடியும்" எனச் சாட்சியின் தாகத்தைத் தணிப்பதற்காகத்தான் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா? இன்னொன்றையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். இங்கே சொல்லப்படும் மனச்சாட்சி எனப்படுவது ஆதிக்கத்திலுள்ள நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் மனச் சாட்சிதான்.

       மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்பதற்காக பெயர் பெற்ற மனித உரிமைப் போராளிகள் பலரும் தர்ணா போராட்டம் ஒன்றை நடத்தினார். வெளிப்படையாக இதற்கான வேண்டுகோள்களையும் விடுத்தனர். கருணை மன்னிப்பு விண்ணப்பங்களையும் அனுப்பினர் இன்னொரு புறம் இன்னொரு வகையான போராளிகள் இந்தப் பயங்கரவாதிக்கு மரண தண்டனைக்குக் குறைவாக எதையும் தரக் கூடாது கதையிலுள்ள ஓட்டைகளைச் சுட்டிக் காட்டி அதனடிப்படையில் இரக்கம் வேண்டி நின்றவர்களுக்கு எதிராக பல்வேறு உரைக் காட்சிகளை ஏற்பாடு செய்து கோபக் குரலில் குலவையிட்டனர்.

       இந்த வழக்குடன் தொடர்புடையதாக இரு முக்கிய கேள்விகள் உள்ளன. ஒன்று: அபூர்வங்களிலும் அபூர்வமான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இரண்டு: உலகம் முழுவதும் கொடூரமான இம் மரண தண்டனையைக் கைவிட்டு வரும் போது நாம் இன்னும் அதை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமா? அடிப்படையான முக்கிய பிரச்சினைகளைக் கீழறுத்துக் கவிழ்க்கும் இதர சிறிய பிரச்சினைகளில் ஒன்று வலது சாரி இந்துத்துவ சக்திகள் மற்றும் மக்களில் ஒரு பிரிவினரின் பித்துக்குளி தேசியம்.

       பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றமும் கூட நிரூபிக்கப்பட்ட பின்னரே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும், வழங்கப்படும் தண்டனை குற்றத்திற்கு ஏற்ற அளவிலேயே இருக்க வேண்டும் என்பதையும் ஏற்காத இம் மக்கட்பிரிவினரின் கருத்துக்கள் வலதுசாரி இந்துத்துவவாதிகளுடன் இணைந்து விடுகின்றன.

       கேள்விக்குரிய விதிமுறைகளைப் பயன்படுத்தி போலீசால் கட்டமைக்கப்பட்ட அடித்தளத்தின் மீது நின்றே உச்ச நீதி மன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்வழிமுறைகளை நீதிமன்றமும் கண்டித்துள்ளது. குரு தூக்கிலிடப்படாமற் போவது, பாராளுமன்றத்தைக் காப்பதற்காக உயிரிழந்தவர்களுக்கு இழைக்கப்படும் அவமானம் என்பது எதிர்த் தரப்பினர் முன் வைக்கும் வாதம். காஷ்மீரிலும், ஏன் தென் ஆசியா முழுமையிலும் மேற்கொள்ளப்படும் அமைதி நடவடிக்கைகளின் கதி என்னவாகும் என்பது இத்துடன் தொடர்புடைய இன்னொரு பிரச்சினை, வலதுசாரி இந்துத்துவவாதிகளாலும் இன்னும் சிலராலும் பீய்ச்சி அடிக்கப்படும் பித்துக்குளி தேசியத்தை தொலைக்காட்சி விவாதங்களில் நாம் பார்த்துக் கொண்டு தமது தேசபக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொண்டு மன்னிப்பு வழங்குதலுக்கு எதிரான குருட்டுத்தனமான நிலைபாடுகளை முன் வைக்கின்றனர். ஒரு விவாதத்தின் போது, இவ்வழக்கில் மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என பகத்சிங்கின் வழித் தோன்றல்கள் கேட்க மாட்டார்கள் என்றார் பா.ஜ.க.வின் முக்தார் அப்பாஸ் நக்வி. அரங்கிலிருந்து பார்வையாளர்கள் ஆரவாரமாகக் கைத்தட்டினார்கள்.

       உண்மை என்னவெனில் பகத் சிங்கின் வழித் தோன்றல்களான பேரா. ஜகன்மோகன் சிங்கும் புகழ்பெற்ற ஆவணப்படத் தயாரிப்பாளரும் மனித உரிமைப் போராளியுமான ஆனந்த் பட்வர்தனும் குருவுக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று மனு சமர்ப்பித்துள்ள செய்தி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. பா.ஜ.க, பேச்சாளர் கண்ணில் அது படாமலிருந்திருக்காது. என்ன செய்வது, சில சமயங்களில் ஒருவரின் அரசியல் முடிவுகளைத் திணிப்பதற்கு (மக்களின்) அறியாமையே ஒரு வரமாகி விடுகிறது. பத்திரிகைகளில் ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதுபவர்களின் கருத்துக்களும் இப்படித் தான் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் இந்தப் பயங்கரவாதியின் ரத்தத்தை வேண்டுகிறார்கள். சமூகப் பொதுப் புத்தியின் நிலையை இதை விடச் சிறப்பாக எதுவும் எதிரொலிக்காது.

       வகுப்புக் கலவரம் என்பது இப்போது சமூகத்தில் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப் படக்கூடிய ஒன்றாகிவிட்டது. வகுப்புக் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. கேவலமாகப் பார்க்கப்படுவதில்லை, அதே சமயத்தில் பயங்கரவாதச் செயலுடன் நேரடியாகவன்றி ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருந்தால் கூட அவரை, மனச்சாட்சியின் உறுத்தலில்லாமல் தூக்கிலிடலாம். வகுப்பு வாதத் தேசபக்தியின் மோசமான வெளிப்பாடு இது.

       உச்ச நீதிமன்றம் எல்லா விதமான மரியாதைகளுக்கும் தகுதியான போதிலும், காவல் துறையின் புலன் விசாரணையை அது ஆராய்ந்திருக்க வேண்டும். அதிலுள்ள ஓட்டைகளை பார்த்திருக்க வேண்டும். அதுவே தீர்ப்பின் அடிப்படையாக இருக்க வேண்டும். ஒரு புலனாய்வில் பல ஒட்டைகள் உள்ளபோது அது எவ்வாறு காவல் துறையால் முன் வைக்கப்படுகிறதோ அவ்வாறே ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது. முதன்மைக் குற்றவாளிகள் உயிருடன் இல்லாதபோதோ, அல்லது அவர்களில் சிலர் அகப்படாமல் உள்ள போதோ முழு உண்மைகளும் வெளி வந்து விடுமா? அல்லது பழி தீர்க்கும் வெறியைத் தணிப்பதற்காக யாரையேனும், எப்படியேனும் தண்டித்துத்தான் ஆக வேண்டுமா?

       சில ஆயிரம் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக பல லட்சம் படையினரை அங்கே நாம் குவித்துள்ளோம். காஷ்மீரி மக்கள் இதனை ஒரு ஆக்கிரமிப்புப் படையாகப் பார்ப்பதில் என்ன வியப்பு? குருவுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை அவர் இழைத்ததாகச் சொல்லப்படும் குற்றத்திற்குப் பொருத்தமுடையதாக இல்லை என்பதோடு மரண தண்டனையே ஒரு காட்டுமிராண்டித்தனம் என்பதையும் சொல்லியாக வேண்டும். பயங்கரவாதி ஒருவருக்கு அளிப்பதன் மூலமே அதை கண்ணியப்படுத்திவிட முடியாது. மற்ற வகைகளில் அகிம்சை பற்றிப் பேசுபவர்களில் பலரும் கூட குருவைத் தூக்கிலிட வேண்டும் என்று கோரும் நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கும் அளவிற்கு உள்ளுக்குள் வகுப்பு வெறியூட்டப்பட்டவர்களாக உள்ளனர்.

       ஆர்.எஸ். எஸ்-சுக்கும் அதன் பரிவாரங்களுக்கும் தங்கள் தேச பக்தியைக் காட்டிக் கொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாக உள்ளதை ஒருவர் புரிந்து கொள்ள இயலும். பயங்கரவாதிகளுடன் கந்தஹார் வரை அவர்களின் அமைச்சர்களில் ஒருவர் சென்று வந்த பாவத்தைக் கழுவுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அவர்களுக்குப் பயன்படக் கூடும். வகுப்புவாதச் சிந்தனையின் முன் உண்மை, மனித மதிப்பீடுகள் முதலியவை பொருட்படுத்தத் தக்கவையாக இல்லாமற் போகும் அளவிற்கு சமூகச் சிந்தனையை சார்புத் தன்மை உடையதாக்கியதில் ஆர்.எஸ்.எஸ் பெற்றுள்ள வெற்றியையும் ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

       நீதி என்பது பழிவாங்கலாக மாற்றப்பட்டுள்ளது. தண்டனை என்பது சீர்திருத்தத்திற்கான வழிமுறை என்பதாகவும், ஏன் இத்தகைய குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன என்கிற சுய பரிசோதனைக்கு வழிவகுப்பதாகவும் அல்லாமல் மேலும் சமூகத்தை மத வெறி யூட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

       நிச்சயமாக யாரும் பயங்கர வாதிகளாகப் பிறப்பதில்லை. இத்தகைய வன்முறைச் செயல்கள் நடை பெறுவதற்கான ஆழமான சூழல்கள் யாவை எனச் சிந்தித்தாக வேண்டும். உள்ளே புரையோடியுள்ள நோயின் வெளியே தெரியும் குறியே பயங்கரவாதம். வேறெங்கோ உள்ள அநீதிகளில் அது வேர் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளைக் கொல்வதன் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படையான காரணங்களைக் களைவதன் மூலமே அது சாத்தியம்.

       நமது சமூகம் மற்றும் அமைப்பின் இரட்டை நிலைகள் இன்று அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளன. வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோர் குற்ற தண்டனைகளிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். சில நேரங்களில் பதவி உயர்வு கூட பெறுகிறார்கள். எ.டு. மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த ராம்தியோ தியாகி, விசாரணைக் கமிஷனால் (குற்றமிழைத்தவர்கள் எனப்) பெயரிடப்பட்ட நூற்றுக்கணக்கான போலிஸ் அதிகாரிகள் இன்று அவர்களின் செயல்களுக்கான "பலன்களை" அனுபவித்து வருகின்றனர்.

       திட்டமிட்டு கலவரங்களை நடத்திக் காட்டிய தாக்கரேயையும் மோடியையும் நமது சட்டத்தின் நீண்ட கரங்களால் தொடக் கூட முடியவில்லை. மாறாக இந்த இனப் படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்தியதன் மூலம் தமது அரசியல் பிடிமானத்தை இவர்கள் வலுப்படுத்திக் கொண்டுள்ளனர். மும்பைக் கலவரத்திற்குக் காரணமானவர்கள் தமது பொற்காலத்தை அனுபவித்துக் கொண்டுள்ள போது தொடர்ந்து நடைபெற்ற குண்டு வெடிப்புக் குற்றவாளிகள் மட்டும் அதற்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டுள்ளனர். சமூகத்தில் இருவகைச் சட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்கிற கருத்து இன்று வலுப்பட்டு வருகிறது. ஒன்று இந்துத்துவ வெறியர்களுக்கானது. பாதிரியார் ஸ்டெய்ன்ஸையும் குழந்தைகளையும் கொன்ற தாராசிங் தூக்குக் கயிற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளான். இந்து தர்மக் காவலனாகப் '(ஹிந்து தர்ம ரக்ஷக்)' போற்றப்படுகிறான். வகுப்புக் கலவரங்களை முன்னின்று செயல்படுத்தியவர்கள் எளிதாகத் தப்பித்து விடுகின்றனர். இன்னொரு சட்ட அமைப்பு சிறுபான்மையினருக்காகச் செயல்படுத்தப்படுவது. அவர்களைப் பொருத்த மட்டில் பயங்கரவாதத்துடன். நேரடியாகவன்றி ஏதேனும் ஒரு வகையில் சிறிய தொடர்பு இருந்தால் கூட அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கோ, கடுந்தண்டனைகள் வழங்கப்படுவதற்கோ அதுவே போதுமானது.

       காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படை ஒரு ஆக்கிரமிப்புப் படையாகவே பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப் படுகின்றனர். சிட்சிங்புரத்தில் வெளிப்பட்டது அமிழ்ந்து கிடக்கும் பனிப்பாறையின் மேல் முனை மட்டுமே 1984ல் மக்பூல் பட் தூக்குலிடப்பட்டதென்பது பின்னர் காஷ்மீர் மக்கள் அந்நியப்படுவதற்கும், தீவிரவாதம் தலையெடுப்பதற்கும் காரணமாக வில்லையா? அதற்காக யாரை நாம் குற்றம் சாட்டுவது? குருவுக்காக தூக்கு மாட்டுபவரைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் அதே காரியத்தைத் தான் திருப்பிச் செய்கிறார்கள். இந்தக் கடும் குற்றத்துடன் தொடர்பில்லாதவரைத் தூக்கிலிடுவதை தேசம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

       ஆனால் அவ்வாறு தூக்கிலிடுவதன் மூலம் என்ன மாதிரி விளைவுகள் இங்கே உருவாகும் என்பதை சற்றே நமது வகுப்புவாதப் பார்வையை விலக்கி வைத்துவிட்டு நாம் யோசிக்க வேண்டும். தூக்கிலிட வேண்டும் எனக் கூக்குரலிடுவோரின் பித்தேறிய தேசியத்தையும், இவர்களில் ஜூரப் பிதற்றலைத் தவிர்ப்பதற்காக அளிக்கப்பட்ட மரண தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுப்பவர்களின் மனிதாபிமானத் தேசியத்தையும் நாம் பிரித்தரிய வேண்டும், இன்று நாட்டில் நடைமுறையிலுள்ள இருவகைச் சட்ட அமைப்புகள் தொடர்பான பார்வையை இந்தத் தூக்கு நிச்சயமாக வலுப்படுத்தவே செய்யும்.

                     09, அக்டோபர் 2006 countercurrents.org

Pin It