ஜனநாயகத்தின் அடித்தளமான உள்ளாட்சியின் முக்கியத்துவத்தை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. வீடுகட்டுவதற்கு எவ்வாறு மண் பறித்து, பள்ளம் வெட்டி, வீட்டின் உறுதிப்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கிறார்களோ அவ்வாறு தான் உள்ளாட்சி அமைப்புகளும். சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் எண்ணிக்கையை விட, பலநூறு மடங்கு எண்ணிக்கையில் களமிறங்கும் சிறப்பைக் கொண்டுள்ளது உள்ளாட்சி. நாட்டின் அடித்தள நிர்வாகத்தில் பங்கேற்பதற்கு, லட்சக்கணக்கில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று அர்ப்பணிப்புடன் செயல்படும் வாய்ப்புகள் கிடைக்குமானால் இது ஜனநாயகத்திற்கு எத்தகைய வலிமையைத் தரக்கூடியது. இன்றைய உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அன்றாட செயல்பாட்டிற்காக, மத்திய மாநில ஆட்சியாளர்களிடம் பிச்சைத் தட்டேந்தி நிற்கும் அவலத்தில் தான் இருக்கின்றன.

உள்ளாட்சி அமைப்புகளின் மீது தங்களின் முழுமையான மேலாண்மையைச் செலுத்துக்கின்றன மத்திய மாநில அரசுகள். இவர்களிடம் குவித்து வைக்கப்பட்ட பணம் மக்களின் பணம் என்பதை மறந்துவிடுகின்றன இவை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டிய பணத்தின் எல்லை எது என்பது முன்னரே அரசாங்கங்களுக்கு வழிகாட்டுதலாக முன் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மிகவும் எளிதாக ஆட்சியாளர்களால் புறக்கணித்து விட முடிகிறது. உள்ளாட்சி அமைப்புகள் தன்னுரிமையோடு செயல்படுவதற்கு ஏற்றவாறு வெளிப்படையான நிதி ஒதுக்கீட்டிற்கானக் கொள்கை ஒன்றை நாம் உடனடியாக வகுத்தாக வேண்டும்.

உலகமயத்தின் பெருங்கொள்ளை, இந்திய இயற்கை வளங்களின் மீது தான் குறி வைத்து நிற்கின்றது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக நிறைந்து கிடக்கும் இயற்கை வளங்கள் பற்றிய அனைத்து விபரங்களும் கார்பரேட் நிறுவனங்களுக்கு முழுமையாகவே தெரிந்திருக்கிறது. அவர்கள் மண்ணுக்கு எதிரான ஈவு இரக்கமற்றக் கொள்ளையைத் தொடங்கிவிடுகிறார்கள். ஆட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்களால் இதனைத் தடுக்க முடியவில்லை. வேறு வகையில் சொல்வது என்றால் இவர்கள் கார்பரேட் கம்பெனிகளின் மறைமுகக் கூட்டாளிகளாகவே மாறிவிடுகிறார்கள். அறியாமையிலும் கல்லாமையிலும் உள்ள மக்களுக்கு தெரிவதில்லை.

இந்திய நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடமையும், அதற்கான வாய்ப்பும் இன்றைய உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தான் இருக்கிறது. தேசம்முழுவதும் வேர்விட்டுப் பரவி நிற்கும் இந்த ஜனநாயக அமைப்புகளால் எதையும் கண்டறிய முடியும். எதையும் தடுக்கவும் முடியும். தங்கள் தேசபக்த கடமையை செய்து முடிக்கவும் முடியும். ஆனால் அதற்கு தேவை விழிப்பு உணர்வு. இந்த விழிப்புணர்வு செயல்பாடுகள் தான் உள்ளாட்சியின் அடித்தள செயல்பாடுகளாக மாற வேண்டும்.

அழுகியப் பொருட்களுக்காக அலையும் பெருச்சாளிகளைப்போல, நமது மக்கள் பிரதிநிதிகள் மாறிவிட்டார்கள். பெரும் பான்மையானவர்கள் லஞ்சம் எவ்வாறு பெறுவது என்பதை மட்டும் அறிந்திருக்கிறார்கள். மக்களுக்கான சேவையை அறிந்திருக்கவில்லை என்பது தான், நாட்டின் மிகப்பெரிய சோகம். இந்த சோகம் நிரந்தரம் இல்லை என்றாலும், அதற்காக நாம் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். அடித்தள மக்கள் ஜனநாயகம் ஏற்றம் பெறுவதற்கு இதைவிடவும் வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

Pin It