பள்ளிக்கூட இடைவேளை நேரத்தில்
சிவன்கோயிலினுள்
நானும் ரவியும்
பதுங்கிக்கொள்வோம்
உள்ளே சுற்றித்திறிந்து
தேடிப்பிடித்து மகிழ்வான் தாமஸ்


வெளியூரிலிருந்து
செங்கல்சூளைகளுக்கு
கல் அருக்க
வந்தவர்களுக்கு
வாய்த்ததெல்லாம்
வெய்யிலும்
மழையும்தான்


பெரிய ஏரியின்
மீன் பிடித்திருவிழாவில்
கால்சட்டைப் பைகளுக்குள் பதுங்கிய
மீன்களின் பெயர்களும்
நினைவில் இல்லை இன்று
எல்லாவற்றையும்
மீன்கள் என்றே
சொல்லிப்பழகிக்கொண்டேன்


ஏரி கோடிபோகும் நாளில்
கிடைக்கும்
பள்ளி விடுமுறைகளை
விழுங்கிக்கொண்டு
எழுந்து நின்றது
புதிய பாலம்


ஓடிவிளையாடிய போது
கால்களை பழுதாக்கிய கருவேலமரங்களும்
துள்ளத்துள்ள ரசித்தாலும்
நெருங்கிய கையில் குருதி பார்த்த
கெளுத்திமீன்களும்
எதிரிகள் என்று
அப்போதெனக்கு தெரியாது

Pin It