மதர்ம கொள்கை தெறியை தமது கவிதைகளில் விதைத்தவர் கவிஞர் வெள்ளியங்காட்டான் மகள் வெ.இரா. நளினி நேர்காணல்

மார்ச் மாதத்தின் மாலையை எதிர்நோக்கும் மதிய வேளை.சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களின், சூட்டைத் தனிக்கும் வெண் மேகப்படலங்கள். மேலும், குளிர்மை சேர்க்க பல நூறு தென்னை மரங்கள். கொய்யாவும், மாவும், பப்பாளியும் இன்னும் பல வகை பழ மரங்கள். மணம் உள்ளதும், இல்லாததுமான மலர்ச் செடி வரிசைகள். ஒரு இல்லத்திற்கு அழகு சேர்ப்பதில் எனக்கு இணையேதுமில்லை எனச் சொல்லும் பச்சைப் பசும்புல் பாத்திகள். இடையிலே ஊஞ்சல், உட்கார பலவகை இருக்கைகள். அந்த இல்லத்தின் பின்னே ஓடிவிளையாடவும், உடற் பயிற்சி செய்திடவும் ஓய்வெடுத்து அமரவும், பாடிப் பரவசமாகவும், ஓ... அந்த இல்லத்தை ஒரு கவிஞன் வடிவமைத்து கட்டியிருப்பானோ? தெரியவில்லை.

இந்த இனிமை பொங்கும் இல்லத்தில் எளிமையின் இலக்கணமாய், பெண்கள் அணியும் ஆபரணங்கள் ஏதுமின்றி, ஒற்றை மூக்குத்தி, காதில் அணியும் தோடுமின்றி, கழுத்தில் சிறுமணி கூட இன்றி, காட்டன் புடவையில் கவிஞர் வெள்ளியங்காட்டான் மகள் வெ. இரா. நளினி.

எழுபதைத் தாண்டிய வயது, முதுமையின் முதிர்ச்சி முகத்தினில் இல்லை. அகத்தினில், ஒளி பிரகாசிப்பதால், அன்பே வடிவாய்த் தெரிகிறார். ஆபரணங்கள் அணியாமையே ஓர் அழகு என்பதை இந்த அம்மையாரைப் பார்த்தோர் ஒப்புவர்.

“தாமரை'' இதழுக்கு ஒரு பேட்டிக்காய் வந்தோம் என்றோம். தாம்பூலம், இளமலர்கள் தந்து உமை வரவேற்கிறேன். அமருக என்றார். குளிர் இளநீர் கொடுத்து உபசரித்தார்.

கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களைப் பற்றியும், தங்களைப் பற்றியும் ஓர் அறிமுகமாக..

வெ. இரா. நளினி: என் தந்தை (இயற்பெயர் இராமசாமி) கோவை மாவட்டம் காரமடையிலிருந்து குந்தா செல்லும் நீலகிரி மலையடிவார கிராமமான வெள்ளியங்காட்டில் பிறந்தவர். 1904 1991 வரை வாழ்ந்தார். விவசாயத் தொழிலாளர் குடும்பம். குத்தகைக்கு நில விவசாயம். உடன் ஆடு, மாடு வளர்த்தல் 3ம் வகுப்பு வரையே கல்விக்கற்றிருக்கிறார்.சுயமாக திருக்குறள்,, புறநானூறு, நன்னூல், இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை கற்றுருக்கிறார்.

கவிதை, கட்டுரை, சிறுகதைகள், குறுநாவல்கள், காவியங்கள், காவியக்காட்சிகள் என 15க்கும் மேற்பட்ட நூல் எழுதியிருக்கிறார். கர்நாடகாவில் சில காலம்வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்ந்த போது கன்னட மொழி கற்றிருக்கிறார். கன்னட சிறுகதைகள், குறுநாவல்களை, தமிழ் மொழியில், மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். உபநிஷத்துக்கு புதிய விளக்கங்களை எழுதி, நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

நவ இந்தியா பத்திரிக்கையில் சில காலமும், வையம் பாளையம் “தந்திர' பள்ளியில், வார்டனாக சில காலமும் பணி செய்திருக்கிறார்.சுயமரியாதை உணர்வு மிக்கவராக இருந்தார். எனவே, இப்பணிகளில் தொடர்ந்து இருக்க இயலாநிலை ஏற்பட்டிருக்கிறது. அடிப்படையில் தையல் தொழிலே தந்தையின் தொழிலாக இருந்தது.

சொல்லொண்ணா வறுமையில் வாடிவாழ்ந்தவர். அப்படி இருந்தபோது, "வறுமையை சகித்து வாழ முடியும்; அறியாமையை சகித்து என்னால் வாழமுடியாது' என்பார். பணக்காரனாவதுசுலபம். சத்தியத்தை கடைபிடித்து வாழும் கவிஞனாக வாழ்வதே எனது விருப்பம், கொள்கை என்று சொல்வார்.

நாத்தீக கொள்கை உடையவர். சமதர்ம கொள்கை தெறியை தமது கவிதைகளில் விதைத்தவர்.

நளினி: "நொந்தவர் நோயை துடைப்பதன்றோ அறம்'' என புதிய அறம்பாடிய பாவலன் “அந்தோ, கத்தலுங் கூளமாய்க் காணப்படும் காரணம் நீக்கிடும் கட்சியைக் காணடா தோழா'' என மக்களுக்கு விழிப் புணர்வையூட்டி, வழிகாட்டியவர் பாட்டாளி மக்களை பட்டினிபோடும், பகாசூரத் குப்பையை கூட்டியெறிந்திட'' மக்களை கூவியழைத்தவர்.

கவிஞர்வெள்ளியங்காட்டான் படைப்புகள்'' தொகுதி 1,2ன் தொகுப்பாளரான தங்களைப்பற்றி..

நளினி: கவிஞரின் இரண்டாவது மகள் வறுமை காரணமாக 4ம் வகுப்பிற்குமேல் படிக்க இயலவில்லை. எனது கணவர் கோவை டெக்ஸ்டூல் தொழிலாளி. சோஸலிஸ்ட் கட்சிக்கு மகன்களும், இருமகள்களும், இந்த இல்லம் எனது மகன் மகேந்திரனுடையது.

கவிஞர் எனக்கும், எனது சகோதரிக்கும், அண்ணாவிற்கும் திருக்குறள், புறநானூறு, நளவெண்பா, இராமாயணம் போன்றவற்றை பாடங்களாக கற்பித்திருக்கிறார். ஜெயகாந்தனின் நண்பராக விளங்கிய எனது அண்ணா, ஆசிரியராக இருந்தார். காலமாகிவிட்டார். எனது சகோதரி வசந்தாமணியும் என்னைப்போலவே நகை உட்பட எந்த ஆபரணங்களும் இப்போதும் அணிவதில்லை.

கவிஞர் வெள்ளியங்காட்டானின் முதல் படைப்பு எப்போது வெளிவந்தது?

நளினி: கவிஞர் 1948 வரை எழுதிய கவிதைகள் "இனிய கவிவண்டு' எனும் தலைப்பில் சென்னை குமணன் வெளியீடாக அதே ஆண்டு வெளிவந்தது.

"ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்' என கவிஞர் திரிலோக சீதாராம் பாராட்டுரை எழுதினார்.

"வயல் வெளிகளிலே அன்பு

வடிவநெல்லெல்லாம்

சுயநல எருமை அந்தோ

சூரையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் எழுதினார்.

“வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையாவாக இருக்கின்றன'' என கொத்தமங்கலம்சுப்பு எழுதியிருந்தார். கவிஞரது இரண்டாவது தொகுப்பு எனச் சொல்லிய அம்மூதாட்டி.

"விம்மி விம்மி' அழுதார், கண்களில் காவிரி இல்லை. கங்கை போட்டிக்குச் சென்றவர்கள் பதறிப் போனோம்.

அழுகை நின்றபின், வாசப்படுத்திய பின் "ஏனம்மா' என்று கேட்டோம்.

நளினி: எங்கெங்கோ கடன்பட்டு, யார் யார் மூலமாகவே முயற்சித்து அச்சாகிவந்த தொகுப்பு "எச்சரிக்கை' விற்பனையாக இல்லை. வீட்டிலோ தாங்கொண்ணா வறுமை. எனவே, இதைவிற்றால், ஒரு வாரம் வயிறு நிரம்பும் என்று, பழைய பேப்பர்காரன் அழைக்கப்பட்டிருந்தான். அட்டையை கிழித்துக் கொடுப்பதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

இப்போது போலவே, அப்போதும்நான் அழுதேன். கவிஞரான என் தந்தை சிரித்துவிட்டு சொன்னார். "ஏனம்மா அழுகிறாய்? ஒரு காசு செலவில்லாமல், நம் கவிதைகளுக்கு விளம்பரம் கிடைத்திருக்கிறது. கடையில்சுண்டலோ, கடலையோ வாங்கிக் கொறிப்பவன், நமது கவிதைகளை படித்துவிட்டல்லவா கொறிப்பான்? அடுத்துவரும் தொகுப்பு சக்கைபோடு போட்டு விற்கும்பார். நீ அட்டையை கிழித்துக்கொடு' என்றார். கிலோ ஆறனாவிற்கு விற்றோம் என்று சொல்லிவிட்டு மீண்டும் அழுதார்.

கவிஞரின் இதரபடைப்புகள் பற்றி...

நளினி: அறிஞன், கவிஞன், புரவலன், பரிசு ஆகியவை அச்சுக்கான மேறியவை. இவைதவிர கையெழுத்துப் படிவங்களாக இருந்த தலைவன் துணைவி ஆகிய காவியங்கள், துறவி என்ற கவிதைத் தொகுப்பு, நவஇந்தியா பத்திரிக்கையில் கவிஞர் ப்ரூப் ரீடராக இருந்தபோது, அவர் எழுதிய பாடல்கள், சிறுகதைகள், சங்கப்பாடல்களை முன்வைத்து எழுதிய காவியக் காட்சிகள், கன்னடத்திலிருந்து, தமிழில் மொழிபெயர்த்த ஞானக் கதைகள், குறுநாவல்கள், "மிர்தாத்'தின் ஆகிய அனைத்தும் இருபெரும் தொகுதிகளாக (முதல்தொகுதி 748 பக்கங்கள், இரண்டாம் தொகுதி 968 பக்கங்கள் இரண்டும் சேர்த்து 1716 பக்கங்கள் அழகிய அச்சமைப்பும் கவிஞரின் ஓவியத்தோடு கூடிய மேலட்டையுமாக "காவ்யா' வெளியீடாக வெளியிட்டுள்ளோம்.

இதற்கான எதிர்வினை எப்படியிருந்தது?

நளினி: "காவ்யா' வெளியீடு (கடந்த டிசம்பர் 2011 இப்போது தன் வெளிவந்துள்ளது. எனவே, இதன் எதிர்வினை பற்றி இப்போது சொல்லமுடியாது ஆனால், கவிஞர் காலமானபின்னர் எனது மகன் மகேந்திரன், யதி வெளியீடுகளாக, வெள்ளியங்காட்டான் கவிதைகள் (இத்தொகுப்பு வெளிவர கவிஞர் புவியர” செய்த உதவி என்றும் என்நெஞ்சை விட்டு அகலாது) கவியகம், புதுவெளிச்சம், ஒரு கவிஞனின் இதயம் உருக்கும் நீதிக் கதைகள், அறநெறிக்கதைகள் (இதுவெளிவர என் மகள் சித்ரா சிவா பெரும் உதவிபுரிந்தார்) இவை பற்றிய எதிர்வினைகள் பற்றி, "தாமரை'யின் மூலம் தமிழ் நாட்டிற்கும், தமிழ், தமிழ் என்று முழங்குபவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

சொல்லுங்கள்

நளினி: யதி வெளியீடுகளான மேற்கண்ட நூல்களை, தமிழ் நாட்டின் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், இலக்கிய இதழ்கள் அனைத்துக்கும் பெரும் பொருட் செலவில் ஒரு எழுத்தாளர் உதவியுடன் அனுப்பி, வெள்ளியங்காட்டான், நூல்கள் குறித்த உங்கள் கருத்தை, விமர்சனத்தை எழுதுங்கள் என்று, கடிதமும் அனுப்பினேன்.

இது தவிர, கோவையில் நடக்கிற அனைத்து விழாக்களுக்கும் சென்று 1000 புத்தகங்களுடன் சென்று, எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் இலவசமாக கொடுத்து உங்கள் விமர்சனத்தை, கருத்தை, இரண்டே இரண்டு வரி எழுதுங்கள் என்று கேட்டிருக்கிறேன்.

இதற்கெல்லாம் மேலாக, தஞ்சையில் தமிழ்மாநாடு நடந்தபோது, தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திற்கே நேரடியாக புத்தகங்களுடன் சென்று, அப்போதைய துணை வேந்தரிடம் தொகுத்து, வெள்ளியங்காட்டான் நூல்களை படித்துப் பாருங்கள்; பல்கலைக் கழகத்தில் வையுங்கள், மாநாட்டில் அறிமுகப்படுத்துங்கள் என்று மூன்று நாட்கள் காத்திருந்து கேட்டுக்கொண்டேன்.

உங்களுக்கு கிடைத்த எதிர்வினை என்னவாக இருந்தது?

நளினி: வேதனைப்படும்படியாக இருந்தது. வெட்கப் படும்படியாக இருந்தது. தமிழ் குறித்தும், மொழிவளர்ச்சிகுறித்தும், கவிதை, இலக்கிய வளர்ச்சி குறித்தும் மேடையிலே முழங்குபவர்கள் முகத்திரை கிழிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது என எண்ணத்தக்கதாக இருந்தது.

பூடகமாக பேசுகிறீர்கள் கொஞ்சம் புரியும்படியாக சொல்லுங்கள்.

நளினி: சொல்கிறேன், நான் அனுப்பிய நூல்களுக்கு தீக்கதிர் பத்திரிக்கை மட்டுமே உங்கள் நூல்கள் கிடைத்தன. நன்றி என்று மட்டும் பதில் அனுப்பினார்கள். வேறு எங்கிருந்தும் ஒருவரி பதில் அல்லது விமர்சனம் கூட வரவில்லை.

பல்கலைக்கழகத்தில் நிற்கவைத்தே பேசினார்கள் கிடைத்த பதில் என்ன தெரியுமா? இவ்வளவு கஷ்டப்பட்டு, தமிழ்மொழியில் உங்கள் தந்தையை யார் எழுதச்சொன்னார்கள்? எதற்காக இதையெல்லாம் உங்கள் தந்தை எழுதினார்? இதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்? இதைச் சொன்னதோடு நிறுத்தாமல், அமெரிக்கா பற்றியும், ஆங்கில மொழிகுறித்தும், தமிழ்பாட்டியின் பெயரை தன்னுடன் வைத்திருக்கும் அந்தப் பெரிய மனிதரின் செயல் வெட்கப்படும்படியாக, வேதனைப்படும்படியாக இல்லையா?

இன்னொன்று, பட்டி மன்றங்களில், சத்திய ஆவேசத்தோடு உரையாற்றிய, நடுவராக இருந்தவர், என் தந்தையின் நூல்கள் குறித்து என்ன சொன்னார் தெரியுமா? இதையெல்லாம் கொண்டுபோய் பூஜையறையில் வைத்து பூஜை செய் என்று சொன்னார். இதெல்லாம் வெட்கப்படவேண்டிய வேதனைப்பட வேண்டிய சொல், செயல்கள் இல்லையா?

ஆவேசமான குரலில் தமிழ் மக்களையும், தமிழ் இலக்கியவாதிகளையும் பார்த்து கேட்கிறேன். வெள்ளியங்காட்டான் நூல்களில், கவிதையில், கட்டுரையில், சிறுகதைகளில், குறுநாவல்களில், காவியங்களில், கன்னடத்திலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்ட இலக்கியங்களில், சமூகத்திற்கு, மொழிக்கு, இலக்கியத்திற்கும் பயன்தரத்தக்கதாக ஒன்றுமே இல்லையென்று சொன்னால், தமிழக அர” 2010ல் கலைஞர் அர”, வெள்ளியங்காட்டான் படைப்புகளை, அனைவரின் உடமையாக நாட்டுடமை ஆக்கியது ஏன்?

கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகளை இருட்டடிப்பு செய்தவர்கள், புறக்கணித்தவர்கள், நேர் நின்று, நியாயமாக பதில் சொல்லவேண்டும்!

(கால் சிலம்பை எடுத்துவந்து கண்ணகி நியாயம் கேட்டது போல், கவிஞரின் கவிதையை எடுத்துவந்து, நேர்நின்று நியாயம் கேட்கும் நவீன கண்ணகி)

தமிழக்தில் உள்ள அனைவரும் கவிஞரைப் புறக்கணித்தார்கள் என்று சொல்கிறீர்களா?

நளினி: இல்லை. நிச்சயமாக இல்லை. கவிஞரின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு நல்லோரிடம் சென்று சேரவேண்டுமென்று உழைத்தவர்கள், உதவி செய்தவர்கள் என்ற வகையில், கோவை ஞானி, ஈரோடு தமிழன்பன் கோவை தமிழ்வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனராக இருந்த. தேவதாசு, புலவர் இளங்கிரன், அழகுதாசன், கவிஞர் சக்திக்கனல், கோவை கோகுலன். இரா. கோ.ராமசாமி தம்பித்துரை, புதுயுகம் ஆடலரசு, உதவி கலெக்டராக இருந்து ஓய்வுபெற்ற வெ.சுப்பிரமணியன், பொதுவுடமைவாதி வடிவேலு மற்றும் சிலரை நான்நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

இதில் சில பெயர்கள் விடுபட்டு உடனடியாக பெயர் ஞாபகத்திற்கு வராமல் இருக்கிறது. மேலும், த.மு.எ.ச.வின் இரண்டாவது கோவை மாவட்ட மாநாட்டு அரங்கத்திற்கே "வெள்ளியங்காட்டான் நினைவரங்கம்' என்றுபெயர் வைத்திருந்தார்கள்.

கோவை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கவிஞரை கௌரவிக்கும் முகமாக என்னை அழைத்து, அதன் மாநாட்டில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

"ஜனசக்தி' நாளிதழ், "சமதர்மம் பாடிய பாவலன்' எனும் தலைப்பில், ஒரு பெரிய கட்டுரையை வெளியிட்டதுடன் கவிஞன் என்பவன் எனும் நூலுக்கு அறிமுகம், அற்புதமாக எழுதி வெளியிட்டது. கவிஞர் ஜீவபாரதி, கைபேசியில் அழைத்துப் பேசினார்... அனைவருக்கும் நன்றி!

கவிஞரின் கடிதங்களை நூலாக வெளியிட்டுள்ளீர்கள்...

நளினி: ஆம் "புதுமைப்பெண்' எனும் தலைப்பில் அமரர் ஜீவா, கடிதங்கள் எழுதினார். டாக்டர். மு.வ. தம்பிக்கு, தங்கைக்கு எழுதினார். புதுமைபித்தன் தன் காதல் கிழவிக்கு கடிதங்கள் எழுதினார் நேரு, தனதுமகள் இந்திரா பிரியதர்சினிக்கு கடிதங்கள் எழுதினார்.

என் தந்தை வெள்ளியங்காட்டான்சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், எனக்கும், என் சகோதரி வசந்தாமணிக்கும், அண்ணன் மனோகரனுக்கும் எழுதிய கடிதங்களே இவை.

நளினி: இக்கடிதங்களின் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்தால் கவிஞர் வெள்ளியங்காட்டான் இதயம், எதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறது என்பதை உணரமுடியும். அவர் எழுதிய சிலவற்றை சொல்கிறேன். தாங்கவொண்ணா வறுமையில் இருந்த சூழலில் இது எழுதப்பட்டிருக்கிறது என்பதை உங்களுக்கும், வாசகர்களுக்கும் நினைவூட்டுகிறேன்

கவிஞரின் கடிதவரிகளில் சில.

"துன்பப்படுகின்றவர்களுக்கு எந்த விதத்தில் உதவமுடியும். என்னென்ன செய்யமுடியும் என்ற எண்ண அலைகள், என் இதயக் கடலில் மோதிக்கொண்டிருக்கின்றன''

"ஒரு கவிஞனாக வாழ்வதைக் காட்டிலும், ஒரு பணக்காரனாவதுசுலபம். ஒரு கவிஞனாக வாழ்வதைக்காட்டிலும் உயர்ந்த வாழ்க்கை இல்லை''

"உலகப் போக்கு எப்படி இருப்பினும் உன்போக்கு உயர்ந்ததாக'' இருக்கட்டும். நல்ல புத்தகங்களைப்படி. இல்லையெனில் ஏழை எளியவர்க்கு உன்னால் முடிந்த உதவியை செய்''

"ஆம் மகளே! இந்த உலகம் முழுவதும் என்னுடையது. எல்லாக் குழந்தைகளையும் நான் நேசிக்கிறேன். எந்த இடத்தில் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ, எந்த குடத்தில் அறியாமை இருள் நிறைந்திருக்கிறதோ அங்கு செல்ல என் மனம் அவாவுகிறது!' தோட்டத்துக் கிணற்றில் தண்ணீர் நிறைந்திருக்கிறதா என்று கேட்டு எழுதிய கடிதத்தில் இப்படிக் கேட்டார். தோட்டத்தில் கிணறு இன்னும் முதலாளிகள் மனம்போல்தான் இருக்கிறதா?

"அன்புச் செல்வி' காவலன் தீபம் என்றொரு நாடகம் அதில் என் இதயம் கவர்ந்தவை "தோழா! கடவுள் என்று ஒருவன் இருந்தால், அவன்தான் கோடிக்கணக்கான தொழிலாளர்களான எங்கள் முன்னே மண்டியிட்டு, கோடி கோடி தடவைகள் மன்றாடி மன்னிப்புக் கேட்கவேண்டும்.. பண்ணூற்றாண்டுகளாய் எங்களின் ரத்தத்தைப் பிழிந்து, துன்புறுத்திக் காலால் மிதித்து ஏந்திருப்பவன் அவனேயன்றோ?... இதையெல்லாம் விட நீயும் ஒரு தொழிலாளியாகவே பிறந்து, கோடிக்கணக்கான நம் சகோதரரையெல்லாம்.

கனல் வீசும் கொடியின் கீழே இப்போதே பல சாம்ராஜ்ஜியங்களை நிலைகலங்கச் செய்துள்ள அந்தக் கொடியின் கீழ் திரளச் செய்வதே மேலாகும்.

என் செல்வமே! இதை நீ சிந்தனை செய்து பார். இதிலிருந்து நான் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்.

என் அன்பு மகனே! ஒருவருக்கொருவர் அஞ்சி வாழ்வதும் கூடாது. அடிமைப்படுத்தி வாழ்வதும் கூடாது. சமத்துவத்தில்தான் வாழ்க்கையின் இரகசியமே அடங்கியிருக்கிறது.

கவிஞனின் கடிதத்தில் இதயத்தில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

கடவுள் குறித்து கவிஞரின் இதயம் புரிகிறது உங்கள் கருத்தில் இதயத்தில்...

நளினி: எள்ளளவு இடமும் இல்லை. ஐந்து வயது குழந்தையை ஒருவன் வன் புணர்ச்சி செய்கிறான். ஆண்டவன் ஓடி வரவில்லை. உதவியும் செய்யவில்லை. ஆனால், ஐந்துபேருக்கு பொண்டாட்டியாக இருந்தவளுக்கு ஓடிவந்து, உதவிசெய்கிறான் என்றால்...

ஜீவாவின் "தாமரை' இதழ் பற்றி...

நளினி: சந்தா கட்டி படித்துவருகிறேன். அமரர் ஜீவா காலத்தில் என் தந்தை "முகில்' எனும் தலைப்பில், தாமரையில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அது பொங்கல் மலர்.

"முகில்' விண்ணகமெங்கும் விளங்கிபரந்து விரையும் ஆனால், அது மண்ணகத்தில் "புன்செய்' நிலத்தை மட்டும் சற்றேனும் மதிப்பதில்லையாம். இந்த மேகமோ, கம்பும் வரகும் காய்வதைக் கண்டும் காணததுபோல், தெம்புமிகுந்த கரும்பையும், நெல்லையும் தேடித்திரிந்து வரும் என்றந்த பாடல் வரும்.

நொந்தவர் நோய் துடைக்கும் அறப்போரில் என் கரத்தை இணைத்துக் கொள்கிறேன்.

Pin It