“இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சோனியா காந்தியின் நிலை என்னவோ, அதுதான் காங்கிரசின் நிலை. விலைமதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்துள்ளோம். அந்த இழப்பு தமிழ் மண்ணில்தான் நடந்தது யாரால் இழந்தோம் என்பதை மக்கள் அறிவார்கள்” என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அண்மையில் உரையாற்றியுள்ளார். இதன் மூலம் இராஜிவ்காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்டதற்காகவே ஈழத்தமிழர்கள்அழிக்கப்பட்டனர் என நியாயப்படுத்தியதோடு, இதில் சோனியாவின் முடிவே காங்கிரசின் முடிவு என்று கூறுகிறார். தமிழக மக்கள் காங்கிரசுக் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் கனவு காண்கிறார்.

இராஜிவ் காந்தி கொலையில் நடந்த சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் தமது அறிக்கையில் “1995 ஜுன் – ஜுலையில் சந்திரசாமியும், சுப்பிரமணிசாமியும் இலண்டனுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களின் இலண்டன் பயணத்தின் நோக்கம் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. காலிஸ்தான் விடுதலைப்படையைச் சார்ந்த ஜெக்சித் சிங் சவுகான் என்பவர், அகாலிதளம் கட்சியைச் சார்ந்த சேவாதான் என்பவரிடம் இராஜிவ் காந்தியைக் கொல்லத் திட்டம் இருப்பதாக கூறி இருக்கிறார். இதை சேவாதான் என்பவர் ஜெயின் கமிசன் முன்தெரிவித்துள்ளார். இலண்டனில் உள்ள சவுகான் வீட்டில் தீவிரவாதிகள் பங்கு கொண்ட கூட்டம் நடந்தது என்றும் அவர் மேலும் கூறினார். இந்த நிலையில் சவுகானை அப்ரூவராக மாற்றும்படி வலியுறுத்தவே சந்திரசாமியும், சுப்ரமணியசாமியும் இலண்டன் சென்றார்களா? என்று கமிஷன் கேள்வி எழுப்பியது.

கமிசன் தனது அறிக்கையில் 8ஆவது பகுதியில் 231 ஆவது பக்கத்தில்

"It would appear that consistant and persistant efforts is there on his (Subramaniaswamy) part not to answer the questions which are most relevant in order to find out the truth" (Jain Commission Report)

“பல தேவையான பொருத்தமுள்ள கேள்விகளுக்குச் சுப்ரமணியசாமி பதிலளிக்க மறுத்துவிட்டதால் உண்மையைக் கண்டறிய அவர் ஒத்துழைக்கவில்லை என்று ஜெயின் கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது. (ஆதாரம் “அரசியல் தரகர் சுப்ரமணியசாமி” நூல் ஆசிரியர் – விடுதலை ராஜேந்திரன்)

மேலும் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலையான ரெங்கனாத் என்பவர் “வீக்” (சூன் 1998) ஆங்கில வார பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இராஜீவ் கொலை நடப்பதற்கு 40 நாட்களுக்கு முன் புது தில்லியில் அரித்துவார் போகும் சாலையில் உள்ள சந்திரசாமி ஆசிரமத்தில் இராஜீவ் படுகொலை வெற்றிகரமாக நடப்பதற்காக ஒரு யாகம் நடந்தது. அந்த யாகத்தைப் பார்வையிட சிவராசனை சந்திரசாமி அழைத்திருந்தார். அப்போது சிவராசனின் துப்பாக்கிக்குச் சந்திரசாமி ஆசி வழங்கினார். சந்திரசாமி அறை முழுவதும் தாமரை மலர்களால் குவிக்கப்பட்டிருந்தது. அடுத்த அறை முழுவதும் எலுமிச்சைபழங்களாக குவிந்துகிடந்தன. தனக்கு இந்தச் சடங்குகளில்எல்லாம் நம்பிக்கை இல்லை என்றார் சிவராசன். இராஜீவ் காந்தியை மட்டும் தனியாக சுட்டுக் கொன்றுவிட்டு தன்னால் தற்கொலை செய்துகொண்டிருக்க முடியும். ஆனால் இராஜீவ்காந்தியோடு பலரும் மடியவேண்டும் என்றும் அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து தனக்கு வந்து சேரவேண்டிய தொகை கிடைக்கும் என்றும் சந்திரசாமி சொன்னதாகச் சிவராசன் என்னிடம் கூறினார்.”

இராஜீவ்காந்தி இறந்த பிறகு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நரசிம்மராவ் தலைமையில் 1991 முதல் 1996 வரை 5 ஆண்டுகள் நடைபெற்றது. மீண்டும் 2004 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரசுக் கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. சோனியாவும், சிதம்பரமும் இராஜீவ்காந்தி கொலையில் சுப்ரமணியசாமியும் சந்திரசாமியும் எந்த அளவிற்குத்

தொடர்புள்ளவர்கள் என்பதனை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.அய்.) மூலம் வழக்குத் தொடர்ந்து உண்மையை அறிந்துகொள்ள ஏன் முயற்சி செய்யவில்லை? உண்மை வெளிவந்தால் பல காங்கிரசுக் கட்சி தலைவர்களே குற்றவாளி களாக அடையாளம் காணப்படுவார்கள். அதனைத் தவிர்த்திடவே மேற்கண்ட இருவர் மீதும் வழக்கு தொடரவில்லை.

விடுதலைப்புலிகளை அழிக்கின் றேன், தீவிரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை இராசபக்சே கொன்று குவித்தான். இந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு துணைபோனது என்பதைத் தமிழக மக்கள் தற்போது நன்கு அறிந்து கொண்டனர். அதன் விளைவே தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் எழுச்சிபெற்றது.

“பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துவிடலாம்” எனப் ப. சிதம்பரம் முயல்கிறார். இனிமேலும் காங்கிரசுக் கட்சியினர் கபட நாடகம் தமிழகத்தில் வெற்றிபெறாது. தேர்தலில் காங்கிரசுக் கட்சி படுதோல்வி அடையும். அதனுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் சுனாமி அலைபோல் அடித்துச் செல்லப்படும்.

தமிழ் இனப் படுகொலைக்குத் துணைபோன காங்கிரசுக் கட்சியைத் தமிழகத்தில் வேரறுக்க ஒரு நல்ல வாய்ப்பு நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு கிடைத்துள்ளது. சிதம்பரங்களும், நாராயணசாமிகளும், ஞானதேசிகன்களும் இனிமேல் தில்லி பக்கம் தலைவைத்துப் படுக்காத நிலையைத் தமிழர்கள் உருவாக்க வேண்டும் அதற்கு ஒரே வழி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைய வேண்டும்.

இது காலத்தின் கட்டாயம். ஆனால் இப்படி ஒரு கூட்டணி ஏற்பட முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் கேட்பது உண்மை. ஆனால் இந்தக் கூட்டணியின் தத்துவமே வித்தியாசமானது. இந்தக் கூட்டணியில் தி.மு.க. அ.தி.மு.க. இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. இரண்டு கட்சிகளின் கொடிகளும் ஒரே கம்பத்தில் பறக்கப் போவதில்லை. தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு வாக்கு கேட்கப்போவதில்லை. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு வாக்கு கேட்கப்போவதில்லை. இரு கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றப்போவதில்லை. பிறகு இது என்ன கூட்டணி? என்று நீங்கள் கேட்கலாம். இவர்களிடையே ஒரே ஒரு உடன் பாடு. அதாவது தி.மு.க. அ.தி.மு.க. இரு கட்சிகளும் தலா 20 தொகுதிகளைப் புதுவை உட்பட – பிரித்துக் கொள்ள வேண்டும். தி.மு.க. போட்டியிடுகின்ற தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடாது, அ.தி.மு.க. போட்டியிடுகின்ற தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடாது இதுபோன்ற ஒரு கூட்டணி இதுவரை ஏற்படவில்லை. தமிழகத்தில் இப்படி ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் அமையாது, காரணம் கட்சிகள் செயல்படுவது மக்களுக்காகத்தான் என்ற நிலை மாறி நீண்டகாலமாகிவிட்டது. இன்று கட்சிகள் அதன் தலைவரின் விருப்பு வெருப்புகளின்படியே செயல்படுகின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு மறைக்கப்பட்ட கருத்து உண்டு, அதனை மய்யமாக வைத்தே அவை செயல்படுகின்றன.

எனவேதான் ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்படும்போது தமிழகத்தில் 6 கோடி தமிழர்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்தது.

உலகில் அழிந்து போகும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இனம் அழிந்தால் மொழி அழிந்துபோகும். எனவேதான் ஈழத்தில் தமிழ் மொழியை அழிக்க தமிழ் இனத்தை அழித்தான் இராசபக்சே இங்கே தமிழர் தலைவர்கள் தமது சுய நலத்திற்காக தமிழினத்தை அழிக்க துணைபோன காங்கிரசுக் கட்சிக்கு துணைபோகின்றனர்.

தமிழர்களை ஒன்றுபடுத்த ஒரு தலைவன் இல்லை

ஒரு தலைவன் உருவாக தமிழர்கள் ஒன்றுபடப் போவதில்லை. 

Pin It