இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி 1,80,000 மெகாவாட்ஸ். இதனை அனல் மின்சாரம் (நிலக்கரி), நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் மற்றும் அணு மின்சாரம் மூலம் உற்பத்தி செய்கிறோம்.

உலகில் இதுவரை 569 அணு உலைகள் கட்டப்பட்டன. இவற்றில் 129 அணு உலைகள் மூடப்பட்டன. மீதம் 440 அணு உலைகள் இயங்குகின்றன. இந்தியாவில் 6 அணு உலைகள் செயல்படுகின்றன. அவை உற்பத்தி செய்யும் மொத்த மின்சாரம் வெறும் 4780 மெகாவாட்ஸ். அதாவது மொத்த மின் உற்பத்தியில் அணுமின் நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வெறும் 2.65 விழுக்காடே.

1.  கர்நாடகம்  – கைகா - 4 உலைகள் - 880 மெகாவாட்ஸ்

2. குஜராத் –  கக்ரபார்  - 2 உலைக்ள  - 440  மெகாவாட்ஸ்

3.  தமிழ்நாடு  –  கல்பாக்கம்  - 2 உலைகள்  - 440  மெகாவாட்ஸ்

4. உத்தரபிரதேசம் – நரோரா - 2 உலைகள் - 440  மெகாவாட்ஸ்

5. ராஜஸ்தான்  – ரவத்பட்டா - 6 உலைகள் - 1180 மெகாவாட்ஸ்

6.  மகாராட்டிரா  –  தாராப்பூர்  - 4 உலைகள் - 1400 மெகாவாட்ஸ்

     மொத்தம் 4780 மெகாவாட்ஸ்

உலகில் அணு உலை எதிர்ப்பு ஏன் ஏற்பட்டது?

உலகில் இதுவரை பல அணுஉலை விபத்துக்கள் ஏற்பட்டாலும், மூன்று அணு உலைகள் குறிப்பிடத்தக்கவை.

 அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுஉலை

 ரஷ்யாவில் சொர்னேபில் அணு உலை

 சப்பானில் புகுசிமா அணுஉலை

மூன்றுமைல் அணு உலை

1979 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 28 ஆம் நாள் அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநகரத்தில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் இருந்த அணுஉலை உருகியது. உடனடியாகப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும் தீவனங்களையும் அடைத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். முதலில் 8 கி.மீ. தூரம் வரை கருவுற்ற பெண்கள், குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர் பிறகு 30 கி.மீ. தூரம் வரை 1,40,000 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் அளவுகோள் 5 என வரையறுக்கப்பட்டது.

கதிர்வீச்சு தூய்மைப்படுத்த ரூ.5000 கோடியில் 14 ஆண்டுகள் பணிகள் நடைபெற்றன. ரூ.12,000 கோடிசொத்துக்கள் அழிக்கப்பட்டன.

செர்னோபில் அணுஉலை

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26 ஆம் நாள் செர்னோபில் அணுஉலை விபத்து ஏற்பட்டது. ஆனால் அதனை இரசிய அரசு இரகசியமாக வைத்திருந்தது. கதிர்வீச்சு கசிந்த மேகங்கள் மூலம் வெளிஉலகம் அறியாமல் தடுக்க அங்கேயே செயற்கை மழை பொழிய வைத்தனர். கருப்பு நிற மழை பொழிந்தது. அதனால் ஆறு, ஏரி, குளம், கட்டிடங்கள் அனைத்தும் விஷம் பரவி நிலைமை மேலும் மோசமடைந்தது.

செர்னோபிலில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ள சுவீடன் நாட்டில் விபத்து நடந்த இரண்டு நாட்கள் கழித்து கதிர்வீச்சு கண்டுபிடிக்கப்பட்டது. (கூடங்குளம் அணுமின் நிலையம் சென்னையிலிருந்து 696 கி.மீ.) உண்மையைச் சொல்லும்படி உலக நாடுகள் இரஷ்யாவைக் கோரின. 15 நாட்களுக்குப்பின் ரஷ்ய அதிபர் கோர்பசோவ் விபத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

கதிர்வீச்சு பாதித்த மொத்த நிலபரப்பு – 2 லட்சம் ச.கி.மீ.  (1.5 தமிழ்நாடு அளவு)

கதிர்வீச்சு அளவு  – இரோசிமா, நாகசாகி அணு குண்டு போல் 400 மடங்கு

மக்களைத் தடை செய்து அமைக்கப்பட்ட வேலி –  200 கி.மீ.

மரணம் – 10 லட்சம் மக்கள்

மொத்தப் பொருளாதார இழப்பு  – 24 லட்சம் கோடி

மக்கள் மீண்டும் குடியேறத் தேவையான காலம்  –  20,000 ஆண்டுகள்

புகுசிமா அணுஉலை வெடிப்பு

2011 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 11 ஆம் நாள் ஜப்பான் நாட்டில் சுனாமியால் புகுசிமா அணுஉலை விபத்துக்குள்ளானது. 20 கி.மீ. தூரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். 12 நகரங்கள் காலி செய்யப்பட்டன. அமெரிக்கா 80 கி.மீ. வரையிலான மக்களை வெளியேற்ற ஜப்பான் அரசுக்கு அறிவுரை கூறியது. ஜப்பான் அணுசக்தி துறை டோக்கியோ மக்களும் நகரைவிட்டு வெளியேற வேண்டும் எனப் பிரதமருக்குப் பரிந்துரைத்தது. டோக்கியோ நகரின் மக்கள் தொகை 3 கோடி பிரதமர் தயங்கினார்.

3 லட்சம் மக்கள் வெளியேறினர்

கதிர்வீச்சு அளவு இரோசிமா – நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளைப் போல் 168 மடங்கு ஆகும்.

கதிர்வீச்சைச் சுவாசிக்கிறவர்களுக்கும் அவர்களின் வாரிசு களுக்கும் நீண்டகால மரணம் ஏற்படும். அடுத்த 50 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் புற்று நோயால் மடிவர். அணுஉலையைச் செயல் இழக்கச் செய்ய ரூ.78,400 கோடி தேவைப்படுகிறது. தேவைப்படும் காலம் 40 ஆண்டுகள். பொருளாதார இழப்பு 12.5 இலட்சம் கோடி

இதனால் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் உலக முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பல நாடுகள் மக்களின் அச்சத்திற்கு மதிப்பளித்து அணுஉலைக் கொள்கையிலிருந்து பின்வாங்கிவிட்டன இந்தியாவும் சீனாவையும் தவிர!

ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையின் கதிர்வீச்சு 1500 கி.மீ. தூரம் உள்ள சுவீடன் நாடுவரை சென்றது.

சப்பானின் புகுசிமா அணுஉலையின் கதிர் வீச்சு 8500 கி.மீ. தூரம் உள்ள அமெரிக்கா வரை சென்றது.

சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டால் அணுமின் நிலையங்களை எவராலும் காப்பாற்ற முடியாது. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் தமிழ்நாடு கேரளம் சுடுகாடாக மாறும். இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பர்.

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 1,80,000 மெகாவாட்சில் 31 விழுக்காடு அதாவது 55,000 மெகாவாட் விரயமாகிறது. 1,25,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பயன்படுகிறது. மற்ற நாடுகளில் விரயமாகும் மின்சாரம் மிகக்குறைவு. குறிப்பாக சப்பான் நாட்டில் 4 சதவிகிதம், அமெரிக்காவில் 6 சதவிகிதம். நாம் வெட்கப்பட வேண்டாமா? நாம் எந்த அளவுக்குப் பின்னோக்கியுள்ளோம் என்பதை இது பறைசாற்றுகிறதல்லவா? விரயமாகும் மின்சாரத்தை (31 சதவிகிதத்தை) 20 சதவிகிதமாகக் குறைத்தாலே நமக்கு 35,483 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். வெறும் 4780 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து அணுமின் நிலையங்களையும் உடனே மூடிவிடலாம். இதற்கு அரசு முன்வருமா என்றால் வராது, ஏன்? அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதல் காரணம் : அணுஉலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தால் அதன் கழிவிலிருந்து அணு ஆயுதங்கள் தயார் செய்து இந்திய அணு ஆயுத வல்லரசு நாடு என்று பெருமைப்படலாம்.

இரண்டாவது காரணம் : அணுஉலைகளை வழங்கும் பன்னாட்டு முதலாளிகள் ஆட்சியாளர்களுக்கும், பிரதான அரசியல் கட்சிகளுக்கும் பங்கு தருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு அனைவராலும் சொல்லப்படுகிறது.

மேலும் மாற்று எரிசக்தி மூலம் (காற்றாலை, சூரிய ஒளி) உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 22,233 மெகாவாட்ஸ் அணுஉலை மூலம் பெறப்படும் மின்சாரம் 4,780 மெகாவாட்ஸ் அதாவது 5 மடங்கு குறைவு.

கடந்த 15 ஆண்டுகளில் இந்திய பட்ஜெட்டில் மாற்று எரிசக்திக்கு ஒதுக்கிய தொகை ரூ.10,000 கோடி. 5 மடங்கு குறைவாக உற்பத்தி செய்யும் அணுஉலைகளுக்குச் செலவு செய்துள்ள மொத்த தொகை ரூ.80,000 கோடி. 40 மடங்கு அதிக செலவு செய்து அணுமின்சாரம் ஏன் தயாரிக்க வேண்டும்?

மக்களின் அச்சத்திற்கு மதிப்பளித்து உலகநாடுகள் அனைத்தும் அணுஉலைக்கொள்கையிலிருந்து பின்வாங்கிய நிலையில் இந்தியா மட்டும் பிடிவாதமாக இருப்பது ஏன்?

கூடங்குளம் மக்களின் இடைவிடாத போராட்டம் நியாயமானது. அம்மக்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும் செய்திகளையும் மத்திய அமைச்சர் நாராயணசாமி போன்றோர் உண்மைக்குப் புறம்பாக தரும் உத்தரவாதங்களையும் புறக்கணித்துக் கூடங்குளம் மக்களின் தனிப்பட்ட பிரச்சனை என்று கருதாமல் இது ஒட்டு மொத்தத் தமிழகத்தின் பிரச்சனை என்று கருதி அவர்களுக்குத் துணைநிற்போம். இந்திய அரசை வலியுறுத்துவோம்.

Pin It