பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான தூக்குத்தண்டனைக்கு எதிரான தமிழ்த்தேசத்தின் எழுச்சி மரணதண்டனைக்கு எதிரான கிளர்ச்சியாக பரிணமிக்க வேண்டிய வேளை இது.

சட்டமும் நீதியும் நவீனக் கோட்பாடுகள் பலவற்றால் வளம்பெற்றிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் மரணதண்டனை என்பது ஐயத்திற்கிடமின்றி கொடுங்குற்றம்தான்.

'சட்டம் வலிமையான வர்களுக்கு வளைந்து கொடுக்கும் ஏழைகளைக் கண்டால் எட்டி உதைக்கும்'. என்ற அண்ணல் அம்பேத்கரின் பார்வையோடு மரணதண்டனைத் தீர்ப்புகள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. இந்தியாவில் ஆகஸ்ட் 2004 இல் தூக்கிலிட்டு கொல்லப்பட்ட தனஞ்செய் சட்டர்ஜி “நீதி பணம் படைத்தவர் களுக்கானது இன்னொருமுறை நான் பிறக்க நேரிட்டால் ஒரு பணக்காரனாகப் பிறக்க விரும்புகிறேன்'' என்று சாவதற்கு முன் சொன்ன சொற்கள் இதனை உறுதிசெய்கின்றன. ஒரு பள்ளிச்சிறுமியைக் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திக் கொலை செய்ததாக அவர்மேல் குற்றம்சாட்டப்பட்டு இந்தத் தூக்கு வழங்கப் பட்டது.

1991 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு ஒரு வாழ்நாள் தண்டனையை அதாவது சற்றேறக் குறைய 14 ஆண்டுகளை கழித்த பின் அந்த ஏழை மனிதன் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டான்.

பாலியல் வல்லுறவு வழக்குகளில் செய்யப் படுகிற மரபணு ஆய்வு தனஞ்செய் வழக்கில் செய்யப்படவில்லை என்றும் தக்க சட்ட உதவி தனஞ்செய்க்குக் கிடைக்கவில்லை என்றும் அவ்வாறு கிடைத்திருந்தால் தீர்ப்பு வேறாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்றும் தனஞ்செய் தரப்பில் தூக்கு நாளுக்கு முந்தைய நாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட செய்திகள் ஏதும் நீதிமன்றங்களின் காதுகளில் விழவில்லை. இறுதியாக 2004 ஆகஸ்ட் 14 இல் அந்த ஏழைச்சிறையாளியை தூக்கிலிட்டு தன் பணியை முடித்துவிட்டு அவர்பொருட்டு இறைவனிடம் பிரார்த்தனைபுரிந்துவிட்டு அந்த 72 அகவைக் கிழவரான தூக்கிலிடும் பணியாளர் தீரா மன உளைச்சலுடன் ஒதுங்கிக்கொண்டார்

எண்ணாயிரம் மனிதர்களை கழுவிலேற்றிப் பதைக்கப் பதைக்கக் கொன்ற மரபு நம்முடையது. எளிய திருட்டு வழக்குக்கு கோவலனை நேரிய விசாரணை ஏதுமின்றிக் கொன்ற நீதி தமிழர் நீதி. கணைக்கால் இரும்பொறை மன்னனுக்கே ஒரு குவளைத்தண்ணீர் தரத் திமிர்பேசிய சிறைப்பண்பாடு சங்கத்தமிழர் பண்பாடு. மூத்த தமிழ்க்குடிக்கு மனித உரிமை, மரணதண்டனை ஒழிப்பு என்பதெல்லாம் புரியவே புரியாத விந்தைகள் என்பதை நாம் அறிவோம்.

ராசீவ் காந்தி படுகொலை சிறப்புப் புலனாய்வுக் குழுத்தலைவர் கார்த்திகேயன் “என்றாவது மரணதண்டனை இந்தியாவில் ஒழிக்கப்படும்'' என்று தன் அவாவை வெளிப்படுத்துகிற அதே காலத்தில் "சிறைக்குள் புகுந்து ராசீவ் கொலை சிறையாளிகளைக் கொன்றிருக்க வேண்டும்' என்ற ஈவிகேஎஸ் இளங்கோவனின் சீறலும் வெளிப்படுகிற காரணம் நமக்குத் தெரிகிறது.

ஒரு துளிக் கண்ணீரிலும் ஒரு துளிச் செந்நீரிலும் ஏன் ஒரு துளி விந்திலும் கூட அரசியல் கலந்தோடும் காலம் நமது காலம். பேரறிவாளனுக்கும் முருகனுக்கும் சாந்தனுக்கும் உருகி யோடும் தமிழ் மனச்சான்று அப்சல் குருவுக்கும் நாளை கசாப்புக்கும் உருகியாகவேண்டும். இது மனிதநேயச் சிக்கலில்லை என்றும் நீதி குறித்த நாகரிக சமூகத்தின் பார்வைச் சிக்கல் என்றும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். ஆனால், மனிதநேயப் பார்வையின் ஈரம் கூடச் சுரக்காத நெஞ்சில் மனித உரிமைக்கான ஆழ்ந்த போர்க்குணம் உருவாவ தில்லை.

130நாடுகளுக்கும் மேலாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடைசெய்யப்பட்ட ஒரு தண்டனைக்கு நாம் எதிராகப் போர்க்கொடியை உயர்த்துகையில் மரணதண்டனைக்கு ஆதரவான வர்களால் எந்த வெட்கமும் இன்றி அரசியல் அம்மண ஆட்டம் களத்தில் தொடங்கப்படுகிறது. வாருங்கள் அனைவரும் வாருங்கள் மரணதண்டனை குறித்த உணர்ச்சிப்பெருக்கற்று அறிவார்ந்த விவாதங்களைத்தொடங்குவோம்.

“அரிதிலும் அரிதான வழக்குகளில்'' மரண தண்டனை வழங்கப்படலாம் என்ற இந்திய நீதித்துறையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருது கோள் வேண்டும் பொழுதெல்லாம் வளைத்துப் பொருள்கொள்ளத்தக்க ஒரு ரப்பர் கூற்றாக மாறி நெடுநாட்களாகிவிட்டன. இதனை உலக மன்னிப்புக்கழகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் உறுதிசெய்த கவலை தோய்ந்த பரிந்துரைகள் நிறையக்கிடக்கின்றன.

“அரிதிலும் அரிதான வழக்குகளில்'' என்ற சொற்றொடரில் எந்த வழக்கையும் எளிதாக இணைத்துப் பொருள்சொல்ல நீதிமான்கள் மலிந்து கிடக்கும் சூழலில் மரணதண்டனைக்கு எதிரான இயக்கத்தின் அறம்சார்ந்த அடிப் படைகள் வலுப்படட்டும்.

மரணதண்டனை என்பது திரும்பப்பெற முடியாத தீவினை மரணதண்டனை என்பது தண்டனை அல்ல கொலை. மரணதண்டனை என்பது குற்றவாளி திருந்தும் வாய்ப்பைத் தடுக்கும்நோக்குகொண்டது.

மரணதண்டனை என்பது கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்பது போன்ற பழிவாங்கும் செயல்பாட்டை ஒத்தது. மரணதண்டனை மனிதரின் வாழ்வுரிமைக்கு எதிரானது. மரண தண்டனை ஒருபோதும் குற்றங்களைக் குறைப்பதில்லை.

இக்கூற்றுகள் எல்லாம் தொடர்ந்த தருக்கங் களில் நிறுவப்பட்டும் இன்று மரணதண்டனை தொடர்வதன் காரணம் எளிமையானதன்று.

ஈவிகேஎஸ் இளங்கோவன் நிகழ்த்தும் சாகச அரசியல் வித்தைகளைப் போன்று அது விளையாட்டானதும் அன்று.

காலங்காலமாய் அரசியற்சமூகத்தில் நிலவுகிற பகைவன்மத்தின் வேர்கள் ஆழப் பரவியிருக்கும் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தின் அரசியற் போர்க்களத்தில் மரணதண்டனை ஒரு கூரிய போர்வாள்.

ராசீவ் காந்தியின் கொலைவழக்கு ஆதாரங் களில் நுழைந்து நுழைந்து செல்லும் எந்த ஒரு எளிய வாசகரும் அனைத்து ஆதாரங்களும் காங்கிரசை நோக்கிக் கைகாட்டுவதையும் அவற்றின் சுட்டுவிரல் ராசீவ் காந்தியைக் கொடூரமாக கொன்ற கொலையாளியாக சோனியா காந்தியை முதல் குற்றவாளியாகக் கருதச் செய்வதையும் உய்த்துணரமுடியும்

காவு கொடுக்கப்படுகிற மெலிந்த ஆடுகள் நம் குருதி வெறியைத் தணிக்கின்றன. பீறிட்டுக் கிளம்பும் ஆடுகளின் குருதியில் பொதுச் சமூகத்தின் மூச்சுக்காற்று குமிழியிட்டு மறைகிறது. ஒரு பெருமூச்சு மேலெழும்புகிறது.

அப்பாவிகளின் உயிர்களை ஒரு வெறிக்கடியில் குடித்தபிறகு அரசியல் ஓநாய் இளைப்பாறுகிறது. ஆகப்பெரிய புத்தகங்களில் ஒரு பெருங்கதையின் முடிவுரையை எழுதிமுடித்தபின் அடுத்த வேட்டைக்கு அது கிளம்புகிறது.

அரசியல் கயிற்றில் ஆடும் பொம்மைகளாய் தூக்குதண்டனைச் சிறையாளிகளாக பேரறி வாளன் சாந்தன் முருகன் ஆகியோர் முகங்கள் தென்படுகின்றன.

சொந்தவலியிலிருந்து இன்னபிறரின் வலியை அறிந்து கிளர்வதே மக்கள் அரசியலின் அறம்.

சதாம் உசேனைத் தூக்கிலேற்றிய அமெரிக்க அறம், பேரறிவாளன் உள்ளிட்டோரைத் தூக்கி லேற்றத் துடிக்கும் இந்திய அறம் என எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தினவோடும் திமிரோடும்தான் இருக்கிறோம்.

நமது மானுட அறத்தின் திருப்பெயரால் சொல்கிறோம்.

மரணதண்டனை ஒழியட்டும்!

அப்பாவிகளுக்கு மட்டுமல்ல! குற்றவாளிகளுக்கும் சேர்த்தே சொல்கிறோம் !

மரணதண்டனை ஒழியட்டும்!

குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் மனப்பிறழ்வு மனிதர்களுக்கும், கயர்லாஞ்சிப் படுகொலைக்குக் காரணமான ஆதிக்கச்சாதி வெறியேறிய மனிதர்களுக்கும் நாம் கற்பிக்கவேண்டிய மானுட அறம் நிறைய உள்ளது.

எந்த உணர்ச்சிக் கலப்பும் இல்லாத அறிவார்ந்த சொற்களால் ஆன இம்முழக்கத்தை முன்னெடுப் போம்!

மரணதண்டனை ஒழியட்டும்! மானுட அறம் வெல்லட்டும்!

Pin It