கடந்த 60 ஆண்டுகால விடுதலை போராட்டத்தில் பல்வேறு களங்களைக் கண்ட காசுமீர் தற்போது புதியதொரு களத்தை சந்தித்து இந்திய அதிகாரத்தின் ஆணிவேரை ஆட்டிக் கொண்டிருக்கிறது.

காசுமீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே இந்திய அரசால் அனுப்பப்பட்டு, அங்கு முகாமிட்டுள்ள துணை இராணுவப் படை யினரை தற்போதைய கலவரத்திற்குக் காரணம்.

கடந்த ஆண்டு காசுமீரின்தென் பகுதியில் அமைந்துள்ள சோபியான் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நிலோபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆசியாஜானும் கடந்த மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் சிற்றாறு ஒன்றில் சடலமாகக் கிடந்தனர்.

kashmir_171அவர்களின் உடலெங்கும் காயங்களோடும் ஆடைகள் கிழிந்த நிலையிலும் அவர்களது சடலங்கள் ஆற்றின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தன.

இவ்விருவரில் நிலோபர் ஜான் நிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு இளம் பெண் களின் நிலையைப் பார்த்தபொதுமக்கள் அவர்கள் காவல் துறையினராலோ, அல்லது இராணுவச் சிப்பாய் களிலோ கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் போராட்டங்களில் இறங்கினர். ஆனால் அவ்விருப் பெண்களின் மரணம் எப்படி நேர்ந்ததுஎன்பதற்கான உடற் கூறாய்வு அறிக்கையை வெளியிடாமலே காசுமீர் அரசு அப்பிரச்சினையை அமுக்கி விட்டது.

அதன்பிறகு பதவி உயர்வுக்காக சில ராணுவ உயர் அதிகாரிகள் அப்பாவிகளை தீவிரவாதிகள் என என்கவுண்டர் மூலம் கொல்வது சாதாரண நிகழவாக மாறி விட்டது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் காசுமீரத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில் 8,000த்திற்கும் அதிகமானோர் இடம் பெற்றுள்ளனர்.

இத்தகையப் படுகொலைகளில் அண்மையில் பதின் வயது நிரம்பிய சிறுவன் ஒருவனும் தீவிரவாதி என்கிறப் பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டது காசுமீரத்தை மேலும் உசுப்பேற்றி விட்டது. இப்படி மெல்ல மெல்ல வெகுண்டெழுந்த காசுமீர் மக்களின் போராட்டம் கடந்த ஒரு மாத காலமாக மிகப் பெரிய அளவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மக்கள் போராட் டத்தை ஒடுக்குகிறோம் என்கிறப் பெயரில் துணை இராணுவப் படையினர் 20க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்துள்ளனர்.

எனினும் தளராமல் தொடர்ச்சியாகப் போராடும் மக்களை எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் தான் இயக்குகிறார்கள் என்றும் பணத்திற்காக பெரும் பாலான மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்றும் இந்திய உளவுத் துறை கூச்சமில்லாமல் குற்றம் சுமத்தி அம்மக்களின் மீதானப் படுகொலையை நியாயப்படுத்த முயன்றது; முயன்று வருகிறது.

இதன் விளைவு இன்று காசுமீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அங்கே அவர்கள் கேட்பது காசுமீர், காசுமீர மக்களுக்கே என்றுதான்.

ஆனால் இந்திய அரசோ காசுமீர் இந்தியாவிற்குச் சொந்தம் என்கிறது. உண்மையில் காசுமீர் காசுமீர மக்களுக்குத்தான் சொந்தமேத் தவிர இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ கிடையாது. 1947ல் அன்றைய காசுமீரை ஆண்டவர் ஹரிசிங் மஹா ராஜாதி ராஜா என்கிற இந்து மன்னன்.

ஆனால் அம்மக்களில் 75% த்திறகும் அதிகமானோர் முசுலீம்கள். இந்தியாவின் ஆணைக்கிணங்க காசுமீர மன்னனும் அம்மக்களின் அனுமதியின்றியே இந்தியா வுடன் காசுமீரை இணைப்பதாக இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டார். காசுமீரைக் கைப்பற்ற பாக்கிசு தானுக்கும், இந்தியா வுக்கும் நடந்த போட்டியில் காசுமீரம் இரு கூறுகளாகி பாகிஸ்தானிடம் ஒரு பிரிவும் இந்தியாவுடன் மற்றொரு பிரிவுமாக மாறியது.

எனினும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிய உடனே காசுமீர் இணைப்புத் தொடர்பாக சர்வதேச மேற்பார்வை யின் கீழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மக்களின் தீர்ப்பை ஏற்போம் என்று இந்தியா தெரிவிக்க அறிவித்தது. ஆனால் 60 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இந்திய அரசு அம்மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வில்லை.

மேலும் 1948 ஏப்ரல் மாதம் 21ம் நாள் ஐ.நா. பாதுகாப்பு சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜம்மு காசுமீரில் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இதற்காக ஐ.நா. சபையின் சிறப்புக் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இதுநாள் வரை ஐ.நா.வும் அதற்கான முயற்சியை எடுக்கவில்லை.

ஆனால் அதற்கு மாறாக பழைய வரலாற்றை மறைத்துவிட்டு காசுமீர் மக்களின் தேசம், மொழி, பண்பாடு குறித்துப் பேசியவர்களை பிரிவினை வாதிகள், தீவிரவாதிகள் என இந்திய அரசும் அதன் எடுபிடி ஊடகங்களும் தொடர்ந்து பறைசாற்றுகின்றன. தொடர்ச்சியாக நடந்த ஆயுதப் போராட்டத்தால் அம்மக்கள் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் அம்மக்களின் உணர்வுகளை இந்தியஅரசுத் துளியும் மதிக்கத் தயாராகவில்லை.

அதனால்தான் இந்தியாவிற்கு எதிராகவும், அதன் கூலிப் படைகளுக்கு எதிராகவும் அம்மக்கள் போராடு வதை ஒடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தது. இறுதியில் அச்சம் தலைக்கேறி தற்போது போராட்டம் செய்பவர்களை கலவரக்காரர் களாக மாற்றி அவர்களைக் கண்டவுடன் சுட உத்திரவுப் போட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப் பட்டபோது காங்கிரசுக்காரர்கள் பல்லாயிரம் சீக்கியர்களைக் கொன்றது வன்முறையில்லையாம்! ஆனால் காசுமீர் மக்கள் அநியாயமாகப் படுகொலை செய்யப்படும் போது அதை எதிர்த்துப் போராடினால் அதற்கு நியாயம் சொல்ல வக்கில்லாத இந்திய அரசு பிரச்சினையைப் பெரிதுபடுத்தி மக்களின் உணர்வு களைத் தூண்டி அவர்களை வன்முறைப் பாதைக்கு அழைத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல் அவர்களைக் கண்டவுடன் சுடவும் உத்தரவிடுகிறது.

ஒருவேளை இவர்களின் இத்தகைய உத்தரவிற்கு காசுமீர் மக்கள் பலியாகலாம். காசுமீரின் விடுதலை ஒரு போதும் பலியாகாது. காசுமீர் விடுதலை பெறும்; இந்தியா உடைந்து சுக்கு நூறாகும்!

Pin It