* இராசராசனே
 கொஞ்சம் நில்!

* உன்னைப் பற்றி எனக்கு
 அவ்வளவாகத் தெரியாது

* நீ கட்டிய
 பிரகதீஸ்வரர் கோயில்
 நிமிர்ந்துப் பார்த்தால்
 தமிழினத்தின் ஆயிரமாண்டுப்
 பெருமிதம் தெரியுமாமே!

* ஆமாம்...
 எதற்கு கட்டினாய்?
 யாருக்காகக் கட்டினாய்?

* ஆட்டம்... பாட்டம்...
 பலகோடி அரசு செலவில்
 ஆயிரமாண்டு நிறைவு விழா
 அப்படி என்ன இதிலிருக்கிறது?

* ஒரு வேலை
 சிமெண்டும், இரும்பும்
 இல்லாமல் குறிப்பாக
 கருங்கல்லே இல்லாதத் தஞ்சையில்
 கருங்கல்லாலே அதுவும் ஆயிரமாண்டுக்கு
 முன்பே கட்டியது
 பெருமையோ?

* அடிமையும்
 அதிகாரமும்
 பணமும் இருந்தால்
 கட்டிடம் கட்டுவது
 ஒன்றும் கடினமானக்
 காரியமில்லையே!

* உனக்கு ஒன்று தெரியுமா?
 நீ கொண்டு வந்தது கிராம ஆட்சி முறையல்ல
 அது சாதிய ஆட்சி முறை
 பார்ப்பன மனுதர்ம ஆட்சி முறை
 நீ தொடங்கி வைத்த கேடு வினையால்
 ஆயிரமாண்டு கழித்தும் இன்றுவரை
 எங்கள் கிராமத்தை சாதிதான் ஆள்கிறது.

* தாழ்த்தப்பட்டவனையும்
 உழைக்கும் ஒடுக்கப்பட்டவனையும்
 ஊரை மட்டுமா ஒதுக்கி வைத்தாய்
 ஓட்டுரிமையிலிருந்தும் தானே ஒதுக்கி வைத்தாய்
 'நிலம் உள்ளவன்'
 வேதத்தை சார்ந்து வாழ்பவன்'
 வேதம் கற்றவன்'
 வேதம் ஓதுபவன்' இவன்
 மட்டும்தானே கிராமத்தை
 ஆள தகுதிப்படைத்தவன்
 உனது "உத்திரமேரூர்' கல்வெட்டு
 இதைத்தானே சொல்கிறது!

* அடுத்து சோழ மண்டலத்தையே
 அளந்தப் பெருமை வேறு உனக்கிருக்கிறது!
 உனது நில அளவை முறையை
 எமது ஆட்சியாளர்களும்
 பட்டியலிட்டு வியப்படைகிறார்கள்
 ஏன் தெரியுமா?
 இவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலமோகம்தான்!

* சரி நீ நிலத்தை அளந்ததின்
 நோக்கம் இரண்டு வகை
 ஒன்று நிலவரி வாங்க
 இரண்டு பார்ப்பனர்களுக்கு நிலதானம் செய்ய
 இதில் எங்களுக்கென்னப் பெருமை?

* இராசராசனே!
 மேற்சொன்னவைகள்தானே
 உனது பெருமிதத்தின் அடையாளங்கள்
 உனது பொற்கால ஆட்சியின் மகத்துவம்
 உனது ஆன்மீகச் சின்னத்தின் வெளிப்பாடு!
 உனது பெருமிதமும், சின்னமும்
 எனது மொழியை
 எனது இனத்தை
 எனது மக்களை
 எனது பண்பாட்டை
 வாழ வைக்க வில்லை.
 மாறாக அடிமைப்படுத்தியது
 எனது இனத்தின் முன்
 தலை கவிழ்ந்து நிற்கும்
 இந்த ஆரியச் சின்னத்தை
 தலை நிமிர்ந்து பார்ப்பதும்
 பெருமிதம் கொள்வதும்
 மாந்த மாண்பாகாது.
 எம் மக்களைப் பொறுத்தவரை
 இது சாதியத்தின் திமிரடையாளம்
 பார்ப்பனப் பண்பாட்டின் எச்சம்
 சாதிய நிலவுடைமையின் மிச்சம்

* இராசராசனே!
 கொஞ்சம் நில்!
 எங்களின் பெருமிதங்கள்
 எங்கள் பாட்டன் கட்டியக்
 கல்லணையில் இருக்கிறது.
 கரைபுரண்டோடியக்
 காற்றாற்று வெள்ளத்தை
 இடைநிறுத்தியவன்
 உபரியைக் கொண்டு
 உற்பத்தியைப் பெருக்கியவன்
 உலகு வியக்கும்
 கட்டிடக் கலைக்கும் அவனே
 சான்றாதாரம்

Pin It