தூய்மைக் காலம்
எவ்வளவு நாளிருக்கும்
நிலா இரவுகளில் கரைந்து...

ஒரு மூச்சுத் திணறலுக்குப் பிறகு
வெளிவந்து வானம் பார்க்கிறேன்.

சர்க்கரைத் தண்ணீராய்
உலர்வை அள்ளிப்பருகும் வானம்...

மனதின் பளிங்குத் தரையில்
வீசியெறியப்பட்ட
கண்ணாடிச் சில்லுகளின் கூர்மை
உயிர்வரை பாய
மெளனம் முழுக்க ரணம்...

அம்மா...
அப்பா...
பாட்டி...
கிராமத்தின் தெரிந்த முகங்கள் தாண்டி
இன்று வயிற்றில் மிதக்கும் உயிர்வரை
ஒரு காலப்பகுதியை
கிளிஞ்சல்களுக்குள் அடைத்து
கிணற்றுக்குள் வீசியது போல இருக்கிறது
வெறுமனே அமர்ந்திருப்பது...

என் எழுத்துக்களின் வழியே
சூரியன் குடித்து
பச்சை தரித்து
மீண்டும் மீண்டும்
மரங்களை, மலர்களை, விதைகளை
சுமக்க வேண்டும் நான்....

எழுத முடியாமல் போவதை விட
மிகப்பெரிய வலி
வேறு எதுவும் இல்லை...
Pin It