கூட்டுறவு நாட்டுயர்வு. ஜனநாயகத்தின் அச்சாணியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூட்டுறவு அமைப்புகளும் திகழ்கின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கு கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்திய விடுதலைக்கு முன்பே, 1904 ஆம் ஆண்டு தற்பொழுதுள்ள திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவு சங்கம் இந்தியாவிலேயே முதன் முதலில் துவக்கப்பட்டது. சர்.டி. ராசகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராக பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவர் கூட்டுறவு தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார். ஏழைகள் தன்னந்தனியாக தங்களின் நலனுக்காக காரியத்தை செய்ய இயலாது. அவர்களோ கூட்டு முயற்சியை செய்தால்தான் வெற்றி பெற முடியும். எனவே , கூட்டுறவு என்ற உறவு முறை வேண்டும் என வலியுறுத்தினார்.

ஊர் கூடி தேர் இழுத்தால் தேர் நகரும். சிறு உளியால் தான் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. சிறு துளி தான் பெருவெள்ளம். இதன் அடிப்படையில் தான் கூட்டுறவு இயக்கம் பிறந்தது. கூட்டுறவு அமைப்பு முதன் முதலாக 1844 இல் இங்கிலாந்தில் ராக்டேல் என்ற பகுதியில் 28 நெசவாளர்கள் சேர்ந்து கூட்டுறவு நுகர்வோர் அமைப்பை உருவாக்கினர்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டு வசதி, கதர் கிராமம் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்கு தாங்களே கூட்டாக, உறவாக அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.

நாடு விடுதலை பெற்ற பின் கூட்டுறவு சங்கங்கள் அடிப்படையில் கிராமப் புற விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட்டது. நீண்ட கால, குறுகிய கால கடன்கள், விவசாய தொழிலுக்கு வழங்கப்பட்டன. கூட்டுறவுத் துறை விவசாயிகளுக்குத் தோழனாக விளங்கியது.

1904 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவு சட்டம் 1961, 1963, 1983 என பல முறைகள் முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்து இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு ஆரோக்கியத்தோடு செயல்பட காரணமாக பலர் திகழ்ந்தனர். தூத்துக்குடியில் தொழிற் சங்கத்தைத் துவக்கிய வ.உ.சிதம்பரனார் கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார்.

முன்னாள் முதல்வர் இராசபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா, நெல்லை மேடை தளவாய் குமாரசாமி முதலியார், ஈரோடு எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர், சென்னிமலை எம்.பி. நாச்சிமுத்து முதலியார், சென்னை டாக்டர் நடேசன், மதுராந்தகம் வி.கே.ராமசாமி முதலியார், வேலூர் பி.எஸ்.ராஜகோபால் நாயுடு, தஞ்சை நாடிமுத்துப் பிள்ளை, வேலூர் பக்தவச்சல நாயுடு, மணலி ராமகிருஷ்ண முதலியார் என பலர் கூட்டுறவு இயக்கமாக இயங்க கடந்த காலத்தில் பாடுபட்டனர்.

மீனவர் நலனில் அக்கறை கொண்ட சிஙகாரவேலர், தொழிலாளர்களின் நலனுக்காக போராடிய கம்யூனிஸ்டு தலைவர்கள் பி.இராம மூர்த்தி, அனந்த நம்பியார், எம்.கல்யாண சுந்தரம் போன்ற பல கம்யூனிஸ்டு தலைவர்கள் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் வளர பாடுபட்டனர்.

கூட்டுறவு சட்டத்தில் சங்கத்தின் தலைவராக ஒருவர் இரண்டு முறைதான் பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டது. 1983 இல் இச்சட்டம் சுய அதிகாரத்துடன் செயல்படவும், 1988 இல் திருத்தப்பட்ட இச்சட்டத்தில் செயல்படாத சங்கங்களை மாநில அரசு கலைக்கும் உரிமையும் பெற்றது.

கூட்டுறவு முறை ஆரம்பக் காலகட்டத்தில் செயல்பட்ட மாதிரி தற்பொழுது இல்லை. சுயநலவிரும்பிகள் பலர் பொறுப்புக்கு வந்து கூட்டுறவு என்ற உயர்ந்த நோக்கத்தை பாழடித்து விட்டனர். சமீபத்தில் நடைபெற்ற கூட்டுறவு அமைச்சர் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் “முழு சுயாட்சி கூட்டுறவு அமைப்புகளுக்கு தருவதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர தயாராக உள்ளது.”என உறுதி அளித்துள்ளார். இந்த அமைப்புகளுக்கு பல்கலைக் கழங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி போன்ற உரிமைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கிட வேண்டும். கலைக்கப்படும் கூட்டுறவு சங்கங்களுக்கு காலந்தாழ்த்தாமல் தேர்தல் நடத்தக் கூடிய நிலையை கட்டாயம் ஆக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 30,000 கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் திறம்பட செயல்பட்டால் பொருளாதாரம் , மக்களின் நலன், ஜனநாயகம் பேணப்படும். அரசியல் தலையீடு இல்லாமல் கூட்டுறவு உறுப்பினர்களுடைய விருப்பத்தின் பேரில் இந்த இயக்கங்கள் செயல்பட வேண்டும். கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அமைப்பு மட்டுமல்லாமல், கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை உள்ள பல ஆயிரம் அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பாலபாடத்தைப் போதிக்கும் போதி மரமாகும்.

கூட்டுறவு அமைப்புகளில் ஊழல், அதிகார முறைகேடுகள் திட்டமிட்டு நடைபெறுகின்றன. இம்மாதிரியான அவலக் கேடுகளை களைந்திடும் வண்ணம் கூட்டுறவு செயல்பட அரசு மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் கூட்டுறவுத்துறையில் பொறுப்புக்கு வந்த நிர்வாகிகள் கூட்டுறவு பணிகளை மேற்கொள்ளும் பொழுது தங்களுடைய சொந்த செலவிலேயே பயணத்தையும், தங்களுடைய செலவுகளையும் மேற்கொண்டனர். சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் காந்தியின் பெரிய தகப்பனார் ஈரோடு.எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர் ஒன்றுபட்ட கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார். காந்தியவாதி. ஈரோட்டிலிருந்து கோவைக்குச் சென்று கூட்டுறவுப் பணிகளை ஆற்றும் போது தன்னுடைய மதிய உணவுக்கு தன் பையில் இருந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுத்து, அப்பொழுது கோவையில் இருந்த அங்கணன் உணவு விடுதியில் இருந்து மிக எளிமையான உணவை வாங்கிவரச் சொல்லுவார். கூட்டுறவுத் துறை வாகனங்களில் தன் குடும்பத்தாரை ஏற்ற மாட்டார்.

இவரைப் போன்று மேடைத் தளவாய் குமாரசாமி முதலியாரும் தன் நெருங்கிய உறவுக்கார ஒருவர் ஒருசமயம் சட்டத்திற்கு புறம்பாக உதவி கேட்டு வந்த போது தன் அலுவலகத்தை விட்டு வெளியே போக கறாராகச் சொல்லி விட்டார். ஆனால் இன்றைக்கு பொறுப்பில் உள்ளவர்கள் கூட்டுறவு அமைப்பின் கணக்கிலேயே பிரியாணிகள், குளிர்சாதன வாகனங்கள், தனக்கு மட்டுமல்லாமல் தனது பரிவாரங்களுக்கும் மக்களின் பணத்தை வாரியிறைக்கின்ற காட்சிகளைப் பார்க்கின்றோம்.

கூட்டுறவுத் துறையின் நிர்வாகத்திற்கு வந்து விட்டால் அனைத்து வசதிகளையும் தருகின்ற காமதேனுவாக நினைக்கின்ற நிலைமை ஆகிவிட்டது. சிறுக சிறுக சேர்த்து அமைக்கப்பட்ட அமைப்புகளின் ஒழுங்கற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்பதால் இந்த அமைப்பு சீரழிந்து வருகிறது. கூட்டுறவு என்பது கூட்டு கொள்ளையாக மாறிவிட்டது.

சிறு துளி பெரு வெள்ளம் என்ற நிலையில் எளியோர், வறியோர், சிரமப்பட்டு எல்லோரும் சேர்ந்து அமைக்கப்பட்ட கண்ணியத்திற்கு உரிய கூட்டுறவை காப்பாற்ற நூற்றாண்டு விழா காணும் கூட்டுறவுத் துறைக்கு முயற்சிகளை மேற்கொள்ளுவோம்.
Pin It