கோவை பேருந்து நிலையத்தில் ‘சிறுவானி’ என்ற பெயர்ப் பலகை இட்ட ஒரு பேருந்தைப் பார்க்கும் போதெல்லாம், எப்போது அங்கு செல்லப் போகிறோம் என்ற ஏக்கம் எழ ஒரு காரணம் இருந்தது. பேருந்தின் பலகையில் தான் சிறுவானி என இருக்கிறதே தவிர அது உள்ளபடியே சிறுவானிக்கு ஒரு போதும் செல்லாது. அது மேற்கேயுள்ள பேரூரைக் கடந்து, உயிரினக் களஞ்சியமான மேற்குத் தொடர் மழைக்காடுகளின் ஒரு எல்லை ஓரத்திலுள்ள சாடி வயல் என்ற கிராமத்தின் வழியே, தேக்கு மரங்களடர்ந்த, இலையுதிர் காட்டினுள் ஒரு 3. கிமீ தொலைவிலிருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலர் குடியமைப்பு வரை மட்டுமே சென்று திரும்பும். இதுவே மலை மேல் 3000 அடி உயரத்திலுள்ள சிறுவானி அணையிலிருந்து நீரைப் பெற்று கோவைக்கு அனுப்பும் இடமாகும்.

1995ல், சிறு ஊனுண்ணிகள் குறித்து நீலகிரி உயிர் மண்டலத்தில் ஆராய்ச்சி செய்து வந்த தோழர் யோகானந்த், சிறுவானியில் தமது களப்பணியைச் செய்த போது தான் அப்பகுதியைப் பார்த்து, வியக்க வாய்ப்பு வந்தது.

Elephant சிறுவானியில் அன்று பிற்பகல். காட்டுப்பாதையில், இக்கட்டான பயணத்தை முடித்துக் கொண்டு நண்பர் தினேஷ் உட்பட மூவரும் ஒரு சரக்குந்து வண்டியிலிருந்து இறங்கினோம். குக்குறுவான்களின் பின்னணி ஓசையில் மனத்தில் இனம் புரியா திகைப்பு. அடர்ந்து செறிந்த காடு. எதிரேயிருந்த பள்ளதாக்கை அடுத்திருந்த மழைக்காடு இருண்டு காணப்பட்டது. ஆங்காங்கே காட்டுக் கோழிகளின் கீச்சுக் கூவல் எதிரொலி, சின்ன இருவாசிகளின் தனித்த, உரத்த கேவல் மொழி, அங்குமிங்குமாக மலைச்சிட்டான்கள் என ஒரு புதிய பசுமை உலகம். சில்லென்ற காற்று, எங்கள் வியர்த்த உடல் குளிர்ந்தது. எதிரே விடுதிக் காவலர் ஜோசப் வர, பெருமூச்சு விட்டோம்.

3, 4 நாட்கள் பல பகுதிகளில் சுற்றித் திரிந்த நாங்கள், அந்த ஓங்கிய பெரும் மழைக் காட்டில் விதவிதமான பறவைகள், ஒரு சிறுத்தைப் பூனையின் காலடித் தடம், நீர் நாய்களின் எச்சங்கள், கரடியின் கழிவுகள், பூச்சியினங்கள், ஊர்ந்து சென்ற ஒரு இராஜ நாகம் ஆகியவற்றைப் பார்த்தோம். வெய்யிலும், மழையும் என அக்காட்டின் மாறுபட்ட தன்மை கிளர்ச்சியூட்டியது. இயற்கையின் கோடி அர்த்தங்கள் புரிந்தும் புரியா நிலையில் நிம்மதி மேலிட நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை.

ஊர் திரும்பும் நாள் வந்தது. பிற்பகல் 3 மணி, பை முதுகில் தொற்றிக் கொள்ள, சற்று தொலைவு நடந்து சென்று, தகரம் வேய்ந்த ஒரு குடிசையில், வரத்தேனீர் அருந்தி விட்டு தார்ச்சாலையிலேயே சற்று தொலைவு செல்வோம் என நடக்கலானோம். விடை கொடுத்தவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். “பாத்துப் போங்க அந்தப் பக்கம் ஒரு ஒத்த கொம்பன் இருக்கு” அஞ்சுவதஞ்சாமை பேதமை என்பது புரியாது சிரித்துக் கொண்டே அவர்களை மறந்து நடை போட்டோம்... இனிய பருவக் காற்று, மாசுமருவற்ற சூழல், மாலை வேளை, மழைக்காட்டு ஓரம், ஜொலிக்கும் பசுமை. தலைக்கு மேல் அடிக்கடி மரகதப் புறாக்கள் வேகமாக பறந்தன. நீண்ட தூரம் நடந்திருப்போம். ஒரு திருப்பத்தில், சாலை நீண்டிருந்தது. மூவரும் சாலை நடுவே தொடர்ந்து நடந்த போது, ஒரு வகை மௌனம்... இரண்டு கொண்டைக் குருவிகள் “குர்ர்ரோ...கீக்” என்ற சந்தேகக் குரல் கொடுத்து ஒரு புதரிலிருந்து விர்ட்டென்று பறந்தன. மாலை 5 மணி இருக்கும். வீசிய ஈரக்காற்று எங்களைக் கடந்து சென்ற போது வலது புறம் எதிரே சுமார் 60 அடி தூரத்திலிருந்த ஒரு இளம் வேங்கை மரத்தின் கிளைப்பகுதியை ஏதோ வெடுக்கென்று பலமாகக்குலுக்கியது. துணுக்குற்ற நாங்கள், எங்களை அறியாமல் நின்றோம். அந்த இடத்தில் எங்கள் கண்கள் நிலைத்து நோக்க...

பெரிய காட்டு யானை ஒன்று. டைனோசாரைப் போல நடந்து வந்து சாலையின் குறுக்கே நிற்கின்றது. எதிர்பாராத பேருருவம்... அதிர்ச்சியில் “யானை” என்று கத்தியதோடு சில நொடிகளுக்கே அதை பார்க்கும் வாய்ப்பு. ஒரு தந்தம் மட்டுமே அதற்கு இருந்தது. ‘ஒற்றைக் கொம்பன்’ திடீரென உணர்ந்து, மிரண்டு “விர்” எனப் பிளிறிக் கொண்டு எங்களை நோக்கி ஓடி வந்தது. அவ்வளவு தான் மூவருக்கும் ஓட்டப்பந்தயம். சுமார் 200 அடி தூரம் ‘அப்படி’ ஓடியிருக்க வேண்டியதில்லை திரும்பி மட்டும் பார்த்திருந்தால், உறைய வைத்த அந்த பிளிறல் ஓசையின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது எங்கள் உடல்கள் நடுங்கின. துடிதுடித்த இதயங்கள் படபடத்து போயின. வியர்த்து மூச்சிறைக்க திரும்பிப் பார்த்தோம்... அதே வேங்கை மரச்சாலையின் ஓரத்தில் அந்த யானை எதையோ பறித்துக் கொண்டிருந்தது.

நாங்கள் பீதியுடன் மெல்ல சிரித்தோம். அடுத்து என்ன செய்வது? எப்படி ஊருக்கு செல்வது? சிந்தனையுடன் திரும்பி நடக்கத் தொடங்கினோம். 2 கிமீ வந்து ஒரு பாலத்தின் பக்கச் சுவரில் அமர்ந்தோம். நாங்கள் வருவதாக சொல்லியிருந்த இன்டேக் பகுதியில், இன்னும் அந்த லாரி காத்திருக்காது. மணி 6.15... பொழுது போய்விட்டது. அந்த தகரக் குடிசை தேனீர் விடுதிக்கே சென்று விடலாம் என எழுந்து புறப்பட... ஒரு ஆச்சரியம். ஏதோ ஒரு வண்டி வரும் ஓசை கேட்டது. இரு நிமிடங்களில் ஒரு பழைய ஜீப் முனகிக் கொண்டே வர, நிறுத்தச் செய்து, கீழே சாடி வயல் வரை செல்லக் கேட்டுப் பேசி தொற்றிக் கொள்ள, உள்ளே மொத்தமாக 12 பேர். யானை விஷயத்தை ஓட்டுநரிடம் சொல்ல அவர் முகம் விகாரமடைந்து. “ம், வண்டியில் ஹார்ன் வேற இல்ல...” என்ற மலையாள வார்த்தைகள் மெல்ல வந்தன. நாங்கள் வந்த வழியே சிறிது நேரம் ஓடிய வண்டி அதே திருப்பத்தில் திரும்பியவுடன், அங்கே... அதே ஒற்றைத் தந்த யானை. கிறீச்சிட்டு ஜீப் நின்றது. சகிக்க முடியாத அவ்வொலி கேட்ட யானை. பிளிறிக் கொண்டு முன்னே ஓடி வர, ஜீப்பை இவன் பின்னெடுக்க, உள்ளிருந்த ஆட்கள் கோவென கூச்சலிட, நாங்கள் மூவரும் நடுவண்டிக்குள் பாதுகாப்பாக இரசித்துக் கொண்டிருந்தோம்.

தலையை உயர்த்தி, காதை விரித்து கொண்டு 10-30 அடிகள் விரட்டிய யானை, வந்த வேகத்தில் திரும்பி ஓடி பழைய இடத்துக்கே போய் நின்றது. எதைச் சொன்னாலும் கேட்க மறுத்த ஜீப் ஓட்டுநன், எங்களையெல்லாம் கத்தச் சொல்லிய போது, காத்திருந்தவர்கள் விதவிதமான குரல்களில் கடும் கூச்சல் போட்டனர். ஏனையயோர் தைரியம் பெற வழி?

30 மீட்டர் தொலைவில் தனது பின்புறத்தைக் காட்டிக் கொண்டிருந்த யானை அப்போதும் நகரவில்லை. ஓட்டுநரின் எலும்பும் தோலுமாயிருந்த உதவியாளன் அணைக்கப்படா வண்டியில் ஒரு காலும், தரையில் ஒரு காலுமாய் நின்று கொண்டு தன் தொண்டைக்கு மீறிய பெருங்குரலில், “அப்பா முருகா எங்களை மன்னிச்சிக்க, வழியை விடு, நாங்க ரொம்ப தூரம் போகனும், புள்ள குட்டிக தேடுவாங்க (மனைவி அல்ல) முருகா வழி விடப்பா” என வேண்டினான். பாமர மக்களின் வெகுளித்தனமான வேண்டுதல்களை இரசித்தோம்.

5 நிமிடங்களுக்குப் பிறகு எங்களால் இடையூறுக்குட்பட்ட அந்த யானை தனது பெரும் உடலை மெல்ல அசைத்து இடது பக்கமுள்ள ஒரு மேட்டில் ஏறி நின்றது. இப்போது ஜீப் செல்ல வழியுண்டு. பயத்தில் உடல் நடுங்கினாலும் ஒருவாறு சுதாரித்துக் கொண்ட ஒட்டுநன், மெல்ல வண்டியை நகர்த்தி சற்று வேகத்தைக் கூட்டி, முடிந்த வரை வலது புறமாக ஓட்டிச் செல்ல “அந்த” இடத்தருகே வந்த போது நாங்கள் யானையை மிக அருகே பார்த்தோம். நீட்டி அதன் தும்பிக்கை முனைக்கும் வண்டிக்கும் சுமார் 20 அடிகளே இருந்தன. சட்டென வேகம் பிடித்த ஜீப் எங்களுக்கும், யானைக்கும் பெரிய நிம்மதியை தந்தது.

காடுகளில் பல முறை யானைகளை சந்தித்த அனுபவம் எங்களுக்குண்டு. ஆனால் வாழ்வின் மறக்க முடியாத மேற்கண்ட சம்பவத்தின் ஒவ்வொரு முனையிலும் நாங்களே தவறு செய்திருக்கிறோம் என்பதனை வாசகர்கள் கூர்ந்தறிதல் வேண்டும். யானைகளுக்கு, மக்கள் நினைப்பது போல சூதும், வாதும், பழியுணர்வும் இருக்குமேயானால் இந்த கட்டுரை எழுத நாங்கள் இல்லை. அல்லவா? உயிரினங்கள் வாழும் காடுகளை நாம் கிள்ளுகீரையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு நமது வீடுகளை போலவே அவற்றிற்கு காடுகளே வீடுகள் என்பதையும், கானகம் நம் சுற்றுலா தலம் அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இந்த வரையறைக்கும் நாம் தான் காரணம். மக்கள் தொகையை பெருக்கியதும், காடுகளின் பரப்பளவை குறுக்கியதும், காட்டுயிர்களை கொன்று குவித்ததும், மனிதர் தானே?

அரசியல், ஊழல், ஏழ்மை, சாதி, மதவெறி, போன்ற நெருடலான நமது சூழலில் யானைகளைக் காப்பாற்றுவது எளிதல்ல. சட்டம், உத்தரவு, மிரட்டல், தண்டனை ஆகியவையே இன்று யானைகளைக் காப்பாற்றி வருகின்றன என்பதை விட, இப் புவிச் செழிப்பின் சின்னமான அப் பேருயிரின் அழிவை சற்றுத் தள்ளிப் போட மட்டுமே அவை உதவுகின்றன எனலாம். இந்நிலை மாற மக்கள் மனம் மாற்றப்பட வேண்டும். இதை வழக்கம்போல அரசுக்கு ஓயாது சொல்லிக் கொண்டிருப்பதை விட வேறு என்ன செய்து விட முடியும்? ஒரு வேளை அரசு தீவிரச் செயலில் இறங்கும் போது, கடைசி யானையின் பாடம் செய்யப்பட்ட உடல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கலாம்.

முடிவாக ஒன்றைக் குறித்...’டுமில்’ அதோ கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றியடைந்த, இப்புவியில் வாழும் உரிமையை நமக்கு முன்பே பெற்று விட்ட, தந்தம் தாங்கிய மேலும் ஒரு கம்பீரமான ஆண் யானை சுடப்பட்டு, காடே எதிரொலிக்கும் கதறலுடன் பிணமாக கீழே சாய்கிறது.

இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?
Pin It