அலுவலகம் முடித்து வீட்டிற்கு திரும்பிய போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாலித்தீன் பை இருப்பதைப் பார்த்ததும், ‘ஊருக்குத் தாண்டி உபதேசம். உனக்கும் எனக்கும் இல்லை' என்கிற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. என்னதான் பத்திரிகையாளன், கட்டுரையாளன், கவிஞன் எனப் பல முகங்களை வைத்துக் கொண்டு சமூகத்தை பயமுறுத்தினாலும் வீட்டில் நமக்கு எங்கே மதிப்பு கிடைக்கிறது.

Reliance Fresh வீடு என்பது சக்தி ஸ்தலம்தான். நம் குரல் கொஞ்சம் உயர்ந்தாலும், ‘என்னவோ பெரியார், பெண்ணுரிமை என்றெல்லாம் பேசுறீங்க... என்னைப் பேச விடமாட்டீங்களா? என் விருப்பம் போலச் செயல்பட அனுமதிக்க மாட்டீங்களா? என்று கேள்வி வரும். பதில் இல்லாத கேள்விகளைக் கேட்பதற்கான வாய்ப்பை உருவாக்காமல் இருப்பதே உத்தமம் என்ற கொள்கையுடன் இருந்து விடுவது வழக்கம்.

‘படிக்கிறது ராமாயணம். இடிக்கிறது பெருமாள் கோயில்' என்று மட்டும் சொல்லிவிட்டு பணிகளைக் கவனிக்கத் தொடங்கினேன். 'என்ன ராமாயணம், என்ன பெருமாள் கோயிலு? ரிலையன்ஸை மனசிலே வச்சிக்கிட்டுத்தானே சொல்றீங்க. போய்ப் பாருங்க. எல்லா காய்கறியும் மலிவா இருக்குது. ப்ரெஷ்ஷா இருக்குது' என்றார் மனைவி. அப்படியென்ன விலை மலிவு என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் விசாரித்தேன்.

ரிலையன்ஸ் ‘பில்'லை நீட்டினார் இல்லத்தரசி. 120 ரூபாய்க்குக் காய்கறி வாங்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தேன். பக்கத்திலே இருக்கிற கடையிலே 20 ரூபாய்க்குக் காய்கறி வாங்கி வந்தாலே, விலை அதிகம் என்று சத்தம் போடுகிறவரா, 120 ரூபாய்க்கு வாங்கி வந்திருக்கிறார் என்று அதிர்ச்சி விலகாமல் விசாரித்தேன்' விலை மலிவா இருந்ததால வாங்கிட்டேன். ஃப்ரிட்ஜிலே வச்சிக்கிட்டா, ஒரு வாரத்துக்கு மேலே வரும்' என்றார்.

‘நம்ம வீட்டில் இருக்கிற ஃப்ரிட்ஜிலேயே 1 வாரத்துக்கு மேலே கெட்டுப் போகாமல் வச்சிக்கலாம்னா, ரிலையன்ஸ் கடையிலே இருக்கிற கூலிங் வசதிக்கு எத்தனை நாளைக்கு முன்னாடி இந்த காய்கறிகளையெல்லாம் வாங்கி வச்சிருப்பாங்க. அப்புறம் என்ன ப்ரெஷ்? பக்கத்துக் கடையில கீரைத் தண்டு கொஞ்சம் வாடியிருந்தாலும் வாங்குவோமா? தினம் தினம் புது காய்கறி இருந்தால்தானே வாங்குவோம். குளு குளு வசதிக்குள்ளே போனதும் மூளையும் உறைஞ்சு போயிடும் போலிருக்கு' என்றேன்.

அவர் கோபத்துடன், என் கையிலிருந்த பில்லை பறித்தார். அப்போதுதான் அதன் கீழ் இன்னொரு பில் இருப்பது தெரிந்தது. அதை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தேன். ‘அது ஒன்றுமில்லீங்க. காய்கறி வாங்கத்தான் போனேன். ஆனால் அங்கே நிறைய அழகு சாதனங்கள் இருந்தது. பாப்பாவுக்கு போட வேண்டிய க்ரீம், சோப் இதெல்லாம் நல்ல கம்பெனித் தயாரிப்பா தேடிக்கிட்டிருந்தேன். ரிலையன்ஸில் இருந்தது வாங்கிட்டேன்' என்றார். அவற்றின் விலை 340 ரூபாய். அப்புறம் அதற்கு வாட் வரி, வாட்டாத வரி எல்லாம் போட்டுத் தாளித்திருந்தார்கள். ரிலையன்ஸில் விலை மலிவு என்று போய்விட்டு, காய்கறியையும் பிற பொருட்களையும் சேர்த்து சுமார் 500 ரூபாய் வேட்டு. சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என காய்கறி சம்பந்தப்பட்ட பழமொழியாகவே நினைவுக்கு வந்து தொலைந்தது.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை.

மறுபடியும் ரிலையன்ஸுக்கு கிளம்பினார் மனைவி. நான் நாளிதழ்களின் இணைப்புகளில் மூழ்கி விட்டேன். ஒரு மணி நேரம் கழித்து வெறும் கையுடன் திரும்பி வந்தார். ‘எதுவும் வாங்கலையா?' என்று கேட்டதற்கு, "ஞாயிற்றுக் கிழமைங்கிறதால பயங்கர கூட்டம், காய்கறி வாங்குறதுக்கு ஒரு க்யூ. அதை பில் போடுறதுக்கு ஒரு க்யூ. டெலிவரி பண்றதுக்கு ஒரு க்யூ. கர்ப்பமான பொம்பளைங்க காத்திருந்தா டெலிவரியே ஆயிடும். கடை இருக்கிற அளவுக்கு ஆள் இல்லீங்க' என்றார் சலிப்புடன்.

‘அதற்காக ஞாயிற்றுக்கிழமையென்றால் சமைக்காமல் இருக்க முடியுமா? பக்கத்திலே இருக்கிற காய்கறிக் கடைக்குப் போய்க்கிட்டிருந்த போது ஒருநாளாவது இப்படி நடந்திருக்கா? வாடிக்கையாளரை முதலில் கவனித்து அனுப்புவாங்க. ஒரு வேளை, கூட்டம் இருந்தாலும் நமக்கு வேண்டிய காய்கறிகளை எடுத்துக்கச் சொல்லிட்டு, அப்புறமா பணம் கொடுங்கன்னு சொல்லுவாங்க. சின்னக் கடைக்காரர்களுக்கு பெரிய மனசு இருக்கு. பெரிய ரிலையன்சுக்கு மனசும் இல்லை. வாடிக்கையாளரின் வசதியில் அக்கறையும் இல்லையே!' என்றேன். காய்கறி வாங்கப் போய் வெறுங்கையுடன் திரும்பி வந்ததால், ஓட்டலுக்குச் சென்று சாப்பிட வேண்டியதாயிற்று. அதற்கு 200 ரூபாய் அழுததுதான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடை மலிவு விலை விற்பனையில் மயங்கியதன் ஒரே விளைவு.

அதற்கு பிறகும் ஒரு நாள் வந்தது. ‘நாளைக்கு விருந்தாளிகள் வர்றாங்க. வெஜிடபிள் பிரியாணி செய்யலாம்னு இருக்கேன். ரிலையன்ஸிலே எல்லா காய்கறிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் நறுக்கி பேக் பண்ணி வச்சிருக்கான். வாங்கிட்டு வந்தால் சீக்கிரமா சமைச்சிடலாம்'' என்று கிளம்பினார் மனைவி. அவர் சொன்னபடியே, நறுக்கி வைத்திருந்த காய்கறி பேக்கிங்கை வாங்கி வந்தார். கேரட், பீன்ஸ், காலி பிளவர், பச்சை பட்டாணி எல்லாவற்றிலும் தம்மாத்தூண்டு எடுத்து வைத்தது போல ஒரு பேக்கிங் விலை 24 ரூபாயாம். 100 கிராம் கூட தேறாது.

அக்கம்பக்கத்துக் கடைகளில் 10 ரூபாய்க்கோ, 15 ரூபாய்க்கோ கைக்கொள்ளாத அளவுக்குக் கதம்பமாகக் காய்கறிகளை வாங்கி வந்து 3 நாளுக்கு வெஜிடபிள் பிரியாணி செய்ய முடியும். போதாக்குறைக்குக் கருவேப்பிலையும், கொத்துமல்லித் தழைகளும் கொசுறாகக் கிடைக்கும். வீட்டு அம்மணியோ தம்மாத்தூண்டு காய்கறிக்கு 10 ரூபாய் கொடுத்து கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா தழைகளை வாங்கி வைத்திருந்தார்.

ரிலையன்ஸ் ‘மலிவு' விலை காய்கறிகளால், விருந்தாளிகளுக்கே வயிற்றுக்கு நிறைவாக வெஜிடபிள் பிரியாணியை அவரால் பரிமாற முடியவில்லை. "நல்லா பண்ணிருக்கியே... இன்னும் கொஞ்சம் காய்கறி சேர்த்திருக்கலாம். பரவாயில்லை... இன்னொரு கரண்டி வையும்மா'' என்று விருந்தாளிகள் கேட்டபோது, எங்கள் இல்லத்தரசி முழித்த முழியைப் பார்க்க வேண்டும்! டி.ஆர். ராமச்சந்திரன், சோ, பாக்யராஜ், பாண்டியராஜன் அத்தனை பேரும் மொத்தமாக வந்து முழித்ததுபோல இருந்தது.

விருந்தாளிகள் போன பின்பு, மனைவி என்னிடம் வந்து, "இனிமேல் பக்கத்துக் கடையிலேயே காய்கறி வாங்கிக்கலாம்'' என்றார். போராட்டம், மறியல் எதுவுமின்றி எங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது ‘ரிலையன்ஸ்'.
Pin It