மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய லாக்அப் மரணங்கள், போலி என்கவுண்ட்டர்கள் என சட்ட - தர்ம மீறல்களுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடுவதில் திறமை படைத்தவர் மூத்த வழக்கறிஞரான சங்கர சுப்பு. இவரது மகன் சதீஷ் குமார் கடந்த 2011 ஜூன் மாதம் 7ம் தேதி காணாமல் போனார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் சங்கர சுப்பு, காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனியில் உள்ள ஏரியில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் சதீஷ்குமார் பிணமாகக் கிடந்தார் என காவல்துறை கண்டு பிடித்து உடலை மீட்டது.

சதீஷ் குமாரின் உடலைப் பார்வையிட்ட வழக்கறிஞர் சங்கர சுப்பு, சதீஷின் கழுத்துப் பகுதியில் ஆழமான வெட்டுக் காயம் இருந்ததை கவனித்துள்ளார். கூலிப் படை மூலம் தனது மகன் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு வந்த சங்கர சுப்புவின் மனதில், இச்சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்வுகள் ஃப்ளாஷ்பேக்காகத் தோன்றின.

ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டு சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையத்திலும், ஆவடி கேம்ப் காவல் நிலையத்திலும் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அருண் குமார் என்பவருக்காக நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறார் சங்கர சுப்பு.

இந்த வழக்கில் அருண்குமார் சட்ட விரோதமாகக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டு, இந்த சட்ட விரோதக் காரியத்தில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர்கள் ரியாசுத்தீன் மற்றும் கண்ணன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் சங்கர சுப்பு ஆஜராகக் கூடாது என்று காவல்துறை ஆய்வாளர்களான ரியாசுத்தீனும், கண்ணனும் கேட்டுக் கொள்ள... அதற்கு சங்கர சுப்பு மறுக்க... “நீங்கள் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்'' என ஆய்வாளர்கள் இருவரும் மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். (நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார் சங்கர சுப்பு.)

இந்த நிகழ்வுகள் யாவும் தனது மகன் சதீஷ்குமாரின் பிரேதத்தைப் பார்த்தபோது சங்கர சுப்புவின் மனதில் தோன்ற... தன்னைப் பழிவாங்கும் நோக்கில் தனது மகனை கூலிப் படை மூலம் ஆய்வாளர்கள் ரியாசுத்தீனும், கண்ணனும்தான் படுகொலை செய்திருப்பார்கள் என சந்தேகம் கொண்ட சங்கர சுப்பு சி.பி.ஐ. விசாரணையைக் கோரியுள்ளார்.

சங்கர சுப்பு கோரியபடியே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கின்றனர் உயர் நீதி மன்ற நீதிபதிகளான நாகப்பனும், சிவகுமாரும். இதுவரை இந்த வழக்கு விசாரணை தொடர்பாக 8 அறிக்கைகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சி.பி.ஐ. இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் சங்கர சுப்புவோ, “சி.பி.ஐ. சரியாக விசாரணை நடத்தவில்லை. உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. ஆரம்பத்திலிருந்தே சதீஷ் குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி வந்த சி.பி.ஐ., தற்போது தற்கொலை என்று கூறுகிறது. இதனால் சி.பி.ஐ. இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடுவர் என இறுதி அறிக்கைக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்குத் தொடர... நீதிமன்றமும் இறுதி அறிக்கைக்கு தடை விதித்தது.

சி.பி.ஐ.யின் இறுதி அறிக்கைக்கு தடைகோரி வழக்குத் தொடர்ந்த கையோடு இன்னொருபுறம் சதீஷ் குமாரின் படுகொலையை தற்கொலை என மூடி மறைக்க முயற்சிக்கும் சி.பி.ஐ.யைக் கண்டித்து வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை சக்திகளோடு தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் சங்கர சுப்புவிடம் பேசினோம்.

சி.பி.ஐ. விசாரணை சரியில்லை என்கிறீர்களா?

ஆமாம்! இந்த வழக்கில் சதீஷ் குமார் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறது சி.பி.ஐ. உண்மையான குற்றவாளிகளை அது கண்டுபிடித்து விட்டது. ஆனால் அவர்களை மறைப்பதற்காக பொய்யான ரிப்போர்ட்டின் அடிப்படையில் இந்த வழக்கை முடிக்கப் பார்க்கிறது என்பதுதான் எனது குற்றச்சாட்டு.

நீங்கள்தானே ஆரம்பத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டீர்கள்?

ஆமாம்! கேட்டேன். ஆனால் சி.பி.ஐ. ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. அதன் விசாரணையில் எங்களுக்குத் திருப்தி இல்லை. அதனால்தான் சி.பி.ஐ. தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றத்திடம் கேட்டிருந்தேன். நீதி நலன் கருதி தடை உத்தரவை வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.

இந்த தடை உத்தரவை பெற்றதன் மூலம் நீதிக்கான உங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?

இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரைக்கும் பல்வேறு கட்டங்களில் சி.பி.ஐ. பல அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கைகளின் நகல் வேண்டும் என நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறேன். இந்த அறிக்கைகள் நியாயமாக இருக்கிறதா அல்லது ஒரு தலைப்பட்சமாக இருக்கிறதா என்பதை தனியாக ஒரு நீதிபதியை வைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டிருக்கிறேன்.

சி.பி.ஐ. ஒருதலைப்பட்சமாகத்தான் நடந்திருக்கிறதா?

ஆமாம்! நீதியின் நலனைக் கருதாமல் காவல்துறையினருக்கு (ரியாசுத்தீன், கண்ணன் ஆகியோரைச் சொல்கிறார்) சாதகமாகத்தான் நடந்திருக்கிறது என்று கருதுகிறேன். கொலையை தற்கொலையாக மாற்றுவதற்கு சி.பி.ஐ.க்கு அதிகாரமே கிடையாது. கொலை வழக்கை புலன் விசாரணை செய்யத்தான் சி.பி.ஐ. வசம் வழக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கொலையை மூடி மறைத்து விட்டு அவர்கள் இஷ்டம்போல தற்கொலை என்று முடிவு செய்யப் பார்க்கிறார்கள். அதனால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும் எனக் கேட்கின்றேன்.

- இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கும் உயர் நீதிமன்றம் அதுவரை சி.பி.ஐ. இறுதி அறிக்கையை தாக்கல் செய்யத் தடை விதித்திருப்பதோடு இந்த வழக்கை இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்றும் உத்த ரவிட்டுள்ளது.

நீதி தோற்கக் கூடாது என்பது தான் எல்லோரது எதிர்பார்ப்பும்.

நீதியே நீதி கேட்டுப் போராடுகிறது!

சி.பி.ஐ.யைக் கண்டித்து தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறிஞர் சங்கர சுப்புவிற்கு வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்பினர், இயக்கவாதிகள் என பல தரப்பினரும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

கடந்த 22ம் தேதி நடந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் எஸ்.எம். பாக்கர் கண்டன உரையாற்றினார்.

“நீதியே நீதி கேட்டுப் போராடி, நீதியை வீதியில் தேட வேண்டியிருக்கிறது. வெள்ளைக்காரன் அடக்குமுறையை ஏவியபோது கூட இப்படி நடந்து கொள்ளவில்லை. உண்ணாவிரதம் என்றால் அவன் கவனித்தான். அது குறித்து கவலைப்பட்டான். இப்போதைய ஆட்சியாளர்கள் உண்ணாவிரதத்தை மதிக்காமல் செத்துத் தொலை என்கிறார்கள்.

காவல்துறையினருக்கு நேர் எதிரி யார் என்றால் வக்கீல்கள் தான். மக்களுக்காக, நீதிக்காக போராடும் உங்களைத்தான் எதிரியாகக் கருதுகிறது போலீஸ். சி.பி.ஐ. என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பட்டியலே போட்டார் ஒரு தோழர்.

ஒன்றை தெளிவாக்கிக் கொள்ளுங்கள். யார் உரிமைக்காகப் போராடுகிறார்களோ அவர்களுக்கு எதிராக நிற்பது அரசியல்வாதிகள். அதற்கு அடுத்து காவல்துறையினர்.

உண்மையான கொலைகாரனை பிடி, கோர்ட்டில் நிரூபி, தண்டனை வாங்கிக் கொடு என்றால்... இல்லை எங்களிடம் துப்பாக்கி இருக்கு சுட்டு விட்டேன் என்கிறது போலீஸ். இப்படித்தான் சதீஷ் குமாரும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று நினைப்பீர்கள். நான் தடாவில் போனவன். கொடுமைகளை அனுபவித்தவன். அன்று கேட்க எவருமில்லை. பி.யு.சி.எல். சுரேஷ், சுதா, சங்கர சுப்பு என உங்களைப் போன்றவர்கள்தான் போராடினார்கள். அதற்கு நன்றிக் கடனாக நான் இங்கு வரவில்லை. நீதிக்காக வந்திருக்கிறேன். அநியாயத்திற்கு எதிராக வந்திருக்கிறேன். எத்தனை தடைகள் வந்தாலும் வழக்கறிஞர் சங்கர சுப்புவிற்கு துணை நிற்போம்...'' என்றெல்லாம் கொந்தளிப்புடன் பேசினார் எஸ்.எம். பாக்கர்.

சில நிமிடங்களே பேசினாலும் தீயாய் இறங்கிய அவரது உரை ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியதை அவர்களின் கை தட்டல் ஒசைகளின் மூலம் அறிய முடிந்தது.

Pin It