கூடங்குளம் அணுமின்நிலையத்தின் அவசியம் குறித்தும் அதில் அபாயம் இல்லை என்றும் நிறைய விஞ்ஞானிகள் அதாவது முதலாளித்துவத்தின் அடியாட்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்லவே..! முன்னதாக பசுமைப் புரட்சி, பி.டி. கத்திரிக்காய் தொடங்கி நமக்கெல்லாம் பற்பல சமுதாய சீர்கேடுகளைப் பற்றி விலாவாரியாக புரியவைத்தவர்கள்தானே(!).

விஞ்ஞானிகள் நன்கு படித்தவர்கள்; அரசியல்வாதிகளுக்கும், முதலாளித்துவத்துக்கும் எப்படி அடிவருடிகளாக நடந்து கொள்வது என்று நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள். அதே கலையைப் பயன்படுத்தி மக்களையும் ஏமாற்றுவது எப்படி என்பதையும் நன்கு அறிவார்கள். விஞ்ஞானிகள் ஒன்றும் வானத்திலிருந்து குதிக்கவில்லை. அவர்களும் நம்மைப் போன்றவர்களே! என்ன ஒரு வேறுபாடு, அவர்கள் புளித்த ஏப்பகாரர்கள்! நாம் அத்த பசிக்காரர்கள்.. அவ்வளவுதான்.
 
இவர்களைவிட மிகுந்த அறிவார்ந்த விஞ்ஞானிகளைக் கொண்டதும், இதுவரை உலகிற்கு நிறைய கண்டுபிடிப்புகளை கொடுத்ததுமான ஜெர்மன் நாடு அணு உலைகள் ஆபத்தானவை என்று முடிவெடுத்து தங்களது அணு உலைகளை 2022ம் ஆண்டுக்குள் மூடிவிடுவதென முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் தொடங்கியதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஸ்விட்சர்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளும் அணு உலைகளை மூடிவிடத் திட்டமிட்டுள்ளன. புகுஷிமா விபத்திற்குப் பிறகு தங்கள் நாட்டில் கட்டப்பட்டுவரும்  அணு உலைகளை ஜப்பான் நிறுத்திவிட்டதோடல்லாமல், முன்னதாக இயங்கிக்கொண்டிருந்த 28 அணு உலைகளையும் மூடிவிட்டார்கள்.

மின்னனுவியலிலும், அணுவியலிலும் கைதேர்ந்த ஜப்பானுக்கே அணு உலைகள் குறித்து பீதி கிளம்ப, தங்களால் அணு உலைகளை சரிவர பராமரிக்க இயலாது என்றும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அழிவுகள் அணு உலைகளையும் பாதிக்கும் என்பதையும் வெட்கம் விட்டு ஒப்புக்கொண்டு தங்களது அணு உலைகளை மூடிக்கொண்டிருக்கும் தருவாயில் ஒரு மின்கலத்தையே சரியாக பராமரிக்கத் தெரியாமல் வெய்யில் காலங்களில் வெடிக்கவைத்து நகரங்களை இருளில் முழ்கடிக்கும் நம் கைதேர்ந்த விஞ்ஞானிகள்தான் இன்று கூடங்குளத்தில் கட்டப்படும் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை (அவர்களுக்கு இல்லைதான் அவர்கள் எல்லாம் வெளிநாட்டிக்கு குடிபெயரப் போகிற‌வர்கள்தானே) என்று நமக்குத் தெளிவாக விளங்கும்வரை பாடம் நடத்தப் போகிறார்களாம்.

அணு உலைகுறித்த வாக்கெடுப்பில் உலக மக்கள் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்புகளையும், அமைக்கவேண்டாம் என்கிற கருத்துக்களையும் ஆணித்தரமாக பதிவுசெய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த விடயமாக இந்த விஞ்ஞானிகள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அறிவாளிகள்.

மேற்கு வங்கத்தில் ஹரிப்பூர் என்ற இடத்தில் ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட இருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்துவிட்டார் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. 'மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலை இனி அமையாது’ என்றும் அறிவித்து விட்டார்.

ஆனால் கூடங்குளத்தில் அமைக்க இருக்கும் அணு மின் நிலையத்திலிருந்து கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கவே திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்கு மின்சாரம் தரக்கூடிய அணு உலையினை கேரள மக்களே 'வேண்டாம், இங்கே அமைக்கக்கூடாது' என்று அடித்துவிரட்டியதும் அது தமிழநாட்டில் நிறுவப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல கேரளாவில் இனி அணு உலை அமைக்க விடமாட்டோம் என்று அறிவித்தும் விட்டார்கள்.

தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்றும், அவர்களின் முதலமைச்சர்கள் காசுக்காக இனத்தை விற்பவர்கள் என்றும் நன்கு அறிந்தவர்கள் வெளிநாட்டுப் பெருமுதலாளிகள். கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணு உலையில் மின்சாரம் மட்டுமின்றி எதிர்காலத்தில் சல்பேட், அமோனியா போன்ற மனிதனுக்கு அழிவையும், உடல், மனரீதியான பலவீனத்தினை தரக்கூடிய இரசாயனங்களை தயாரிக்க உள்திட்டம் இருப்பதாகவும் மக்கள் அஞ்சுவது நியாயமானதே.

முன்னதாக இந்திய அளவில் நாம் போபாலில் இழந்த மனித உயிர்கள் ஆயிரக்கணக்கில், உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. இன்னும் தமிழக அளவில் சிப்காட் அதைச் சுற்றி வாழும் மக்களை புற்றுநோய் தொடங்கி கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத நோய்களையும் பரப்பிவந்தாலும் அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் அமைக்க இருக்கும் துறைமுகத்தில் உள் தயாரிப்பாக "சல்பேட்" தயாரித்து அனுப்புவதற்கு அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருப்பதும் அவர்களை சமாதானப்படுத்துவதற்காக உள்ளூர்காரர்களுக்கு வேலைதருவதாக சொல்லும் பொய்யை நம்பாததும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

முத்தாய்ப்பாக இன்று தீபாவளி இல்லையா இதுவே உதாரணம் அணு உலை அமைத்து ஏதாவதொரு தினத்தில் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க இப்பவே அடிக்கல் நாட்டுவிழா வேலைகள் நடக்கிறது என்றால் மிகையில்லை. இந்தியாவைப் பொருத்தவரை தமிழர்கள் அனைவரும் நரகாசூரர்களே.