1964ஆம் ஆண்டில், நான் முதன்முதலில்  எனது 18ஆம் வயதில் கலைஞர் அவர்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்  அறிஞர் அண்ண நற்பணி மன்றம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி ஏழை மாணவர்களுக்கு மாலை நேரத்தில் இலவச வகுப்புகளை நண்பர்களுடன் இணைந்து நடத்தினேன். 

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதார இளங்கலை பட்டப்படிப்பினை மேற்கொண்டிருந்தேன். சிந்தாதிரிப் பேட்டையின் மற்றொரு வட்டத்தில் எம்ஜிஆர் பேசுவதாக இருந்த கூட்டம் அவர் வராததனால் தள்ளி வைக்கும் சூழல் ஏற்பட்டது. புதுப்பேட்டை பகுதியில் மற்றொரு கூட்டத்தில் கலைஞர் பேசிக் கொண்டிருந்தார். அங்கு சென்று அவரிடம் பெரும் கூட்டம் அங்குக் கூடியிருக்கிறது. தாங்கள் வரவேண்டும் என்று கலைஞரிடம் கேட்டேன். உடனடியாக ஒத்துக்கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றார்.

karunadhi annimuthu 6001967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்வர் ஆன பிறகு முரசொலி மாறன் அவர்கள் தென் சென்னை தொகுதியில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டார். அத்தேர்தலில் நான் தீவிரமாகப் பணியாற்றினேன். அப்போது கலைஞரும், அண்ணன் மாறனும் முரசொலிக்கு வந்து போகலாமே என்று அழைத்தனர். அக்காலக்கட்டத்தில் கலைஞரை மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

1988இல் சிந்தாதரிப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டையில் மாடிக் குடியிருப்பிற்கு இடம் பெயர்ந்தேன். அறிவாலயமும் கலைஞர் மண்டபக் கட்டிடப் பணிகள்  மேற்கொள்ளப்பட்ட காலத்தில், நீயும் தினமும் இங்கு வந்து நடைப்பயிற்சி செய்யலாம் என்றார் கலைஞர்.  2009 கலைஞரின் இடுப்புப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வரை 21 ஆண்டுகள் அவருடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். ஏராளமான சமூக பொருளாதார அரசியல் கருத்துகள் பரிமாறும் ஒரு இடமாகவே அறிவாலயத்தின் காலைப் பயணம் இருந்தது என்றால் அது மிகையாகாது.

கலைஞரிடம் நான் பல முறை பல வினாக்களை  எழுப்பியிருக்கிறேன். அதற்கெல்லாம் அவர் மிகப் பொறுமையாகப் பதிலளித்துள்ளார். தந்தை பெரியார் மீது அவர் வைத்திருந்த அன்பிற்கும், பற்றிற்கும், மரியாதைக்கும் அளவே இல்லை எனக் கூறலாம்.

அறிஞர் அண்ணா கூறியது போன்றே கலைஞரும் தன்னுடைய இளமைப் பருவத்தின் வசந்த காலம் பெரியாரிடம்தான் தொடங்கியது என்று அடிக்கடி கூறுவார். பெரியாரிடமிருந்த துணிவை நெருக்கடி நிலையின் போது கலைஞரிடம் நேரடியாகக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.  மாலை 6 மணிக்குப் பிறகு கடற்கரையில் அமர்ந்து உரையாடுவார். நான் கலைஞர் இல்லம் சென்று அவருடன் மகிழுந்தில் வருவேன்.

ஒரு நாள் அகில இந்திய வானொலியில் கலைஞர் பற்றிய ஒரு தவறான செய்தியை ஒலிபரப்பினர். கலைஞர் மகிழுந்தில் வரும்போது  அந்த ஓட்டுனரிடம் கடற்கரை சாலையில் இருந்த அகில இந்திய வானொலி கட்டடத்தின் நுழைவாயிலின் உள்பகுதியில் நுழைந்து வெளிப்பகுதி வழியாக மகிழுந்தை ஓட்டு என்றார். இதை கலைஞர் போராட்டமாக அறிவிக்காமல் உள்ளே நுழைந்து வெளியே வந்தவுடன் காவல் துறை நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டது. கடற்கரையில் கலைஞருடன் நான் அமர்ந்திருந்த பகுதியில் காவல் துறையினரும் நுண்ணறிவுப் பிரிவினரும் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த தோழர்கள் இதைத் தெரிவித்தவுடன் கலைஞர் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

இன்று நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. காவல் துறைக்கு நுண்ணறிவு என்பது குறைவு, அவர்கள் என்ன வள்ளுவரிடமா பாடம் கற்றார்கள் என்று கூறிச் சிரித்துவிட்டு, நான் நினைத்தது நடந்துவிட்டது என்றார். கலைஞர் கேட்காமலேயே அந்தச் செய்தி தவறு என்று வானொலி கூறிவிட்டது. கலைஞரிடமிருந்த துணிச்சலும் தன்னை எதிர்த்த நிர்வாகத்தை எப்படி இலகுவாகக் கையாள்வது என்பதையும் தெரிந்து வைத்திருந்தார். “நான் முதலமைச்சராக இருந்த போது காவல் துறையினர் எப்படிச் செயல்படுவார்கள், எந்த எல்லைக்கு மேல் செல்லமாட்டார்கள் என்பது தெரியும்” என்று கலைஞர் கூறினார்.

அதே போன்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா பிறந்தநாள்  தொடர்பாக ஒட்டிய  சுவரொட்டியை வெள்ளை உடையணிந்த காவல் துறையினர் கிழித்ததைப் பார்த்துவிட்டார். உடனடியாக மகிழுந்துவை விட்டு இறங்கி இந்த வேலை செய்வதற்காகத்தான் உங்களுக்கெல்லாம் ஊதிய உயர்வு அளித்தேனா என்று மிகக் கோபத்துடன் அந்தக் காவலர்களைப் பார்த்து கேட்டார். ஐயா எங்களை மன்னித்துவிடுங்கள் என்று கூறி அந்த இடத்தைவிட்டு அகன்று விட்டனர். இவ்வளவு துல்லியமாக காவல் துறையினர்தான் அந்தச் சுவரொட்டியைக் கிழிக்கின்றனர் என்று அறியும் ஆற்றலும், அதனைத் தட்டிக் கேட்கின்ற அஞ்சாமையும் அவரிடம் காணப்பட்டது. இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகளைக் கட்டுரையாசிரியரால் நினைவுகூர முடியும்.

நெருக்கடி நிலை காலத்தில் கடற்கரையில் அமர்ந்து கொண்டு வானொலி செய்திகளைக்  கேட்டுக்கொண்டிருப்பார். அப்போது தென்மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரசுச் சட்டமன்ற உறுப்பினர் பொன்னப்பர் விமான விபத்தில் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. உடனடியாக சத்தியமூர்த்திபவனுக்குச் செய்தியைச் சொல்லி அவருடைய படத்திற்கு கலைஞர் அஞ்சலி செலுத்த வருகிறார் என்று கூறி ஒரு கழகத் தோழரை அனுப்பினார். அப்போது மணி இரவு 7.30; மலர்மாலை வாங்கி பொன்னப்பனாருக்கு அஞ்சலி செலுத்தலாம் புறப்படு என்றார்.

ஓட்டுனரிடம் நேரடியாக பாரிமுனைக்கு சென்று அங்குள்ள பூக்கடை அங்காடிக்குச் செல்லக் கூறினார். அந்நேரத்தில் பலர் கடைகளை மூடிக்கொண்டிருந்தார்கள். நான் போய் மாலை கேட்ட போது கடையைத் திறந்து தர மறுத்தார்கள். கலைஞர் மகிழுந்தில் அமர்ந்திருக்கிறார், அவர் கேட்டுதான் நான் இங்கு வந்தேன் என்று கூறினேன். அவர்கள் நம்பவில்லை. உடனடியாக மகிழுந்து இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தனர். கலைஞரைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியால் உணர்ச்சி வசப்பட்டு கலைஞர் வாழ்க என்று முழக்கமிட்டனர். ஒரு மாலைக்கு இரண்டு மாலைகளாக அளித்தனர். கலைஞர் மிகவும் வலியுறுத்தி மாலைகளுக்கான பணத்தை அளித்தார்.

நேரடியாக சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்று சட்டமன்ற உறுப்பினர் பொன்னப்பனாருக்கு அஞ்சலி செலுத்தினார். முரசொலிக்குச் சென்று இந்தச் செய்தியை அளித்துவிட்டு இல்லத்திற்குச் செல்லுமாறு என்னிடம் கூறினார். மிகவும் நெருக்கடியான நிலையில் கூட எதிர்க்கட்சியில் அமர்ந்து அதிகமான கேள்விகளைக் கேட்டவர் மறைந்த பொன்னப்பர்; மிகவும் நேர்மையானவர்; மறைந்த காமராசருக்கு நெருக்கமானவர். நெருக்கடி நிலையிலும் கட்சி மாறாதவர் என்று என்னிடம் கலைஞர் தெரிவித்தார். எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களின் திறமைகளை மதித்துப் போற்றியவர் கலைஞர்.

இதே காலக்கட்டத்தில் சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்த சக்கரம் திருமண மண்டபத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் கலைஞரும், மறைந்த டி.கே.சீனுவாசனும் பேசுவதற்குப் பலமுறை காவல் துறையினரை அணுகிய பிறகு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தார்கள். ஆனால் கூட்டம் மண்டபத்திற்கு வெளியேயும் திரண்டு நின்றது.  திராவிட இயக்கத்தால் தத்துவ மேதை என்று அழைக்கப்பட்ட டி.கே.சீனுவாசன் தனக்கே உரித்தான பாணியில் நெருக்கடி நிலையைப் பற்றிப் பேசினார். "நாட்டிலும் நெருக்கடி, கூட்டத்திலும் நெருக்கடி. எந்த நெருக்கடியையும் கண்டு அஞ்சாத கலைஞர் இன்று அண்ணாவைப் பற்றிப் பேசப் போகிறார். நான் காலையில் இந்து நாளேட்டில் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் பேச்சைப் படித்தேன். மும்பை துறைமுகத்தில் ஒரு புதிய கப்பலை அறிமுகம் செய்த போது இந்திரா காந்தி கப்பலோட்டிய தமிழனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் இன்றைய முதலாளிகள் வணிக நோக்கிற்காகவும் இலாபத்திற்காகவும்தான் கப்பல்களை இயக்குகிறார்கள். அதே அடிப்படையில் வணிகக் நோக்கிற்காகக் கப்பலை வ.உ.சிதம்பரம் ஓட்டினார் என்று பிரதமர் பேசியிருக்கிறார். பிரதமருக்கு வ.உ.சி. செய்த தியாகங்கள் தெரிந்திருந்தாலும் அல்லது தெரியாமலிருந்தாலும் உயர் அதிகாரிகள் அளித்த குறிப்பை வைத்துக் கொண்டு பேசியுள்ளார். இது தவறு. கப்பலோட்டிய தமிழன் வஉசி விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக்கட்ட தலைவர். பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இந்திய வணிகம் பெருகுவதற்காகதான் பொது நோக்கோடு கப்பல் குழுமத்தை இயக்கினார். இது கூடத் தெரியாமல் பிரதமர் பேசலாமா?" என்று தொடங்கி "கலைஞர் யார் தெரியுமா?" என்று வினா எழுப்பிப் பேசினார்.

"அரசியலிலே தானாக வந்தவர்கள், தள்ளப்பட்டவர்கள் என்று இரு பிரிவினர் உண்டு. இந்திரா காந்தி அம்மையாரே உங்களின் தாத்தா மோதிலால் நேரு, தந்தை ஜவகர்லால் நேரு செல்வச் செழிப்பில் வளர்ந்த குடும்பம். நீங்கள் அரசியலுக்கு வரும் போதே ஒரு பெரிய குடும்பப் பின்னணி உங்களுக்கு இருந்தது. இங்கே அமர்ந்திருக்கின்ற தலைவர் கலைஞருக்கு சொந்த ஊர் திருக்குவளை. ஒரு சிறு ஊர்ப்பகுதி. அவரது தந்தை யாரை அந்த ஊர்ப்பகுதி ஒட்டியுள்ளவர்களுக்குதான் தெரியும். ஆனால் இன்றைக்குக் கலைஞர் என்றால் இந்தியாவே தெரிந்திருக்கிறது.

நெருக்கடி நிலையையே எதிர்க்கும் துணிவு இருக்கிறது. கலைஞரும் நானும் இந்தக் கூட்டத்திற்கு வரும்போது ஒன்றாகவே வந்தோம். மகிழுந்திலிருந்து இறங்கியவுடன் கலைஞர் வேகமாக மேடை நோக்கிச் சென்றுவிட்டார். நான் அவருக்குப் பின்னால் வந்ததால் கூட்டத்தினரால் தள்ளப்பட்டுத்தான் வந்தேன். அதுபோன்று தான் பிரதமர் இந்திரா காந்தியும். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு என்ற பெரும் அரசியல் பின்னணியோடு இன்றைக்கு என்னைப்போல் தள்ளப்பட்டு வந்தவர். ஆனால் கலைஞரோ அன்றும் இன்றும் தானாக வந்தவர். இதனின் உட்பொருளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.

திருவாரூரில் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி திராவிட இயக்கத்தில் இணைந்து தந்தை பெரியாரின் கைப்பிடித்து வளர்ந்து அறிஞர் அண்ணாவோடு நடைபோட்டு வந்தவர். அதற்கு அவர் அளித்த உழைப்பு எண்ணிப் பார்க்கவே வியப்பாக இருக்கும். கலைத்துறையாக இருக்கட்டும், கவிதை துறையாக இருக்கட்டும், திரைக்கதை வசனமாக இருக்கட்டும், ஏடு நடத்துவதாக இருக்கட்டும்  - அவர் உழைத்த உழைப்புயாராலும் அறிந்திருக்க முடியாது.  நான் கலைஞரின் வளர்ச்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். தமிழகத்தினுடைய தலைவர்களில் கலைஞர் ஒரு விடிவெள்ளி. வள்ளுவருக்குக் கோட்டம் அமைத்தவர். ஏழை மக்களின் வாட்டம் போக்கியவர்" என்று கலைஞரைப் பற்றியும், அண்ணாவைப் பற்றியும் ஓர் இலக்கியச் சொற்பொழிவையே நிகழ்த்தினார். "இப்போது புரிகிறதா? தானாக வந்த தலைவருக்கும், தள்ளப்பட்டு வந்த தலைவருக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் உணர முடிகிறதா?" என்று  முடித்தார்.

தத்துவமேதை டி.கே.சீனுவாசன் பேசிய பேச்சிற்குப் பிறகு 43 ஆண்டுகள் கலைஞர் வாழ்ந்தார். 2018 ஆகஸ்ட் 7 அன்று மறைந்தார். இந்த 43 ஆண்டுகளில்  இரண்டாண்டுகள்தான் உடல் நலிவுற்று இருந்தார். 41 ஆண்டுகளில் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை கண்டார். 1330 திருக்குறளுக்கும் எளிய உரை எழுதினார். பல திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதினார். ஆயிரக்கணக்கான கடிதங்களை உடன்பிறப்புகளுக்கு முரசொலியில் தீட்டினார். இக்காலக் கட்டத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தார். பல அரிய சமூக பொருளாதார திட்டங்களைத் தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்.

anna karunadhi 450சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றியதில் அவரின் சாதனை அளப்பரியது. சான்றாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆகியோர்க்கு ஊதிய உயர்வு குழுக்கள் அளித்த பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுத்தியவர். எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள், பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடை முறைப்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும்,  3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இசுலாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்துச் சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு  இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை அளித்தது, கலப்புத் திருமணங் களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது ஆகியன பெண்ணுரிமைக்கான சமூகப் புரட்சிக்கான அடையாளங்களாகும். இது போன்று எண்ணற்றப் பணிகளைச் செய்து கொண்டிருக்கையிலேயே கலைஞர் பெரியார் பற்றாளர்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்தி வந்தார்.

சான்றாக, பெரியார் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து அவர்கள் பெரியார்-நாகம்மையார் அறக்கட்டளைக்காக உள்ள நிலத்தை அரசு  99 ஆண்டுக் குத்தகைக்குத் தர வேண்டும் என்று கோரினார். கலைஞர் உடனே 30 ஆண்டுகளுக்குக் குத்தகைக் காலத்தை நீட்டித்துத் தந்தார்.

ஒரு நாள், நடைப்யிற்சியின் போது  கோவை ராமகிருஷ்ணன் எப்படி இருக்கின்றார் என்று கேட்டார். அவர் கேட்ட இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை ராமகிருஷ்ணன் பெரியார் சிலையை வைப்பதற்கு நாங்கள் கேட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் தர மறுக்கிறார். உரிய அனுமதியை மற்ற அதிகாரிகளும் தர மறுக்கிறார்கள். கலைஞரிடம் இதைக் கூற முடியுமா என்று என்னிடம் கேட்டார்.

அதன் தொடர்பான விண்ணப்பத்தையும் எனக்கு அனுப்பியிருந்தார். நான் உடனே கோவை ராமகிருஷ்ணன் தங்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார் என்று கூறினேன். மறுநாள் அந்த விண்ணப்பத்தைக் கலைஞரிடம் அளித்தேன். ஒரு வாரத்திற்குள் கோவை ராமகிருஷ்ணன் கேட்ட இடத்திலேயே தந்தை பெரியார் சிலையை வைப்பதற்கு அனுமதி ஆணையை அளிக்கச் செய்தார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது இறுதிக் காலத்தில் கலைஞரிடம் வந்து ஒரு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். சென்னை தியாகராயர் கல்லூரியில் 1978ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா இறுதியாக நடித்த நாடகத்திற்குக் கலைஞர் தலைமை தாங்கினார். அவ்விழாவில் பெரியார் இயக்கத்திற்கு நடிகவேள் அளித்த அளப்பரிய தொண்டினைப் பாராட்டி கலைஞர் தான் வாங்கிய ஒரு பொன்னாடையை அளித்துச் சிறப்பித்தார். அப்போது நடிகவேள் பெரியார் நூற்றாண்டு விழாவில் என்னைச் சிறப்பித்ததற்காக நன்றி நன்றி என்று கூறினார். இக்கட்டுரையாசிரியர் கலைஞருடன் கலந்து கொண்டிருந்தார்.

இது போன்று சமூக நீதிக்காகப் போராடிய தந்தை பெரியாரின் தொண்டர்களை அவர் மதித்த பாங்கே தனிச்சிறப்பானது. இதற்குக் காரணம் கலைஞரின் 75 ஆண்டு கால அரசியல் பயணத்தில் டி.கே.சீனுவாசன் குறிப்பிட்டது போலத் தானாக வளர்ந்த தலைவர். அந்தப் பயணத்தின் வலிச் சுமைத் தியாகம், உழைப்பு ஆகிய பண்புகளைக் கலைஞர் உணர்ந்து செயலாற்றியதை அறிந்தவர்கள் உலகம் முழவதும் உள்ளவர்களும் ஊடகத்தினரும் தமிழக மக்களும் எழுத்தாளர்களும் இந்திய அரசியல் தலைவர்களும் நண்பர்களும்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Pin It