கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பாட்டாற்று வெள்ளமாய்ப் பாவேந்தன் பாய்ந்தான்

பாவாற்றில் தமிழ்ச்சுவைக் கடல் கரைத்தான்

ஏட்டாற்றை எழுதுகோலில் பிறக்கவிட்டு

எழுத்தாற்றல் விசையினிலே வான்இழுத்தான்.

நாட்டாற்றில் பூணூல் முதலைவாய் புய்த்தான்

‘நடை’யாற்றில் சாதிவேங்கை மூழ்க்கடித்தான்

கூட்டாற்று வெள்ளச் சீற்றப் பெருக்காய்க்

குமுகாயக் கொடுமைகளின் வேர்கிழித்தான்.

மண்பெற்று மதர்ப்புற்ற பாண்டியன்தன்

பரிசுக்கு வான்பரிசும் ஈடே இல்லை.

பெண்பெற்று மதிப்புற்ற ‘குடும்ப வெற்றிப்

பொன் விளக்கிற்கு’ மின்சுடரும் இணையே இல்லை.

கண்மயக்கி உயிர்மலர்த்தும் ‘எதிர்பாராத

கனி முத்தக்’ காதலுக்குத் தமிழேஈடு

பண்மிழற்றும் நெஞ்சிழுக்கும் ‘இசைஅமிழ்தம்’

பல் தொழிலோர் மனவுணர்வின் யாழின் ஊற்று!

“விழித்தெழுடா தமிழாநீ! உறக்கம் போதும்

விரைந்தெழுடா தமிழியக்கக் களப்போர் காண

அழித்தொழிடா மூடத்தன முட்டாள் முள்ளை

அறுத்தெறிடா பழங்கட்டுப் பாட்டின் கட்டை

வழித்தெறிடா ஆரியத்தின் வேர்வை நீசம்

வகுத்தெழுடா பகுத்தறிவுக் கொள்கைப் பாடம்.

மழித்தொழிடா மயக்கும் பொய்மதக் கோட்பாட்டை

மதித்தெழுடா பெரியார் சீர்திருத்தக் கோட்டை.”

வெட்டுதற்கும் வண்டமிழின் வாளெடுத்தான்

வெல்லுதற்கும் தமிழ் உலையில் வேல்வடித்தான்

திட்டுதற்கும் தீந்தமிழில் கனலெடுத்தான்.

தீட்டுதற்கும் துறை அனைத்தும் உச்சம் தொட்டான்.

கொட்டுதற்கும் தமிழ்மழையை வான்வழித்தான்.

கொஞ்சுதற்கும் தமிழ்க்காதல் அமுதெடுத்தான்.

எட்டுதற்கும் விண்ணடுக்கைத் தமிழால் எய்தான்

ஏவுதற்கும் தமிழ்த்தலைமை வீறெடுத்தான்.

தமிழுக்கும் அமுதென்று பெயரை வைத்தான்.

தழலுக்கும் தண்மைக்கும் தமிழ்குடித்தான்

இமைக்குங் கண்ணுக்குள்ளும் தமிழ்வரைந்தான்.

இடைவிடாது தமிழ்ப்பற்றுக்குருதி வார்த்தான்.

குமிழிக்கும் குன்றுதாங்கும் உரத்தைச் சேர்த்தான்.

குயிலுக்கும் அரிமாவின் குரல் கொடுத்தான்.

திமிருக்கும் எதிர்ப்புக்கும் போர்தொடுத்தான்

திசையெங்கும் தமிழ்ஒளிர உயிர்விதைத்தான்.