முன்னுரை:

(அ) கி.பி.1853ஆம் ஆண்டு பிரிட்டானிய மக்களவையில் ‘கிழக்கிந்தியக் குழுமத்தின் வேலைத்திட்டத்தினை’ப் புதுப்பிப்பதற்கான சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது நீண்ட விவாதம் நடந்தது. அந்தச் சூழலில் மார்க்சு மூன்று கட்டுரைகளை எழுதினார்.

1.            இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி

2.            கிழக்கிந்தியக் கம்பெனி : வரலாறும் விளைவுகளும்

3.            இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்

இக்கட்டுரைகள் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘நியூயார்க் டெய்லி டிரிபியூன்’ எனும் நாளிதழில் முறையே 25.6.1853, 11.7.1853, 8.8.1853 ஆகிய நாள்களில் வெளியாயின.

இவற்றுள் ‘கிழக்கிந்தியக் குழுமம் - வரலாறும் விளைவுகளும்’ எனும் கட்டுரையில் அய்ரோப்பிய நாடுகளின் அரசியல் மற்றும் வணிகப் போட்டி தொடர்பான செய்திகளே விவாதிக்கப்படுவதால், அக் கட்டுரை இந்த மொழிபெயர்ப்பில் இடம்பெறவில்லை.

(ஆ) மார்க்சின் கருத்தைச் சரியாக அறிந்து கொள்ள அவரது கட்டுரையில் பொதுவாகக் கையாளப்படும். சில சொல்லாடல்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் தன்மையில் நடைமுறையில் உள்ள சொற்களாக இடம்பெறுகின்றன. (எ.கா.) மார்க்சு கட்டுரை எழுதிய காலத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசம், பர்மா, இலங்கை போன்றவற்றை உள்ளடக் கிய பெரிய நிலப்பரப்பு ஆங்கிலேயர் ஆதிக்கத்திலி ருந்தது. இவற்றை மொத்தமாகக் குறிப்பிடும் தன்மையில் “தெற்காசியா”, “ஆசியா”, “இந்துஸ்தானம்”, “இந்தியா” என்னும் பெயர்களைப் பயன்படுத்தியுள் ளார். மேலும் மக்களைக் குறிக்கும் போது ஆசியச் சமூகம், இந்துக்கள், இந்தியர்கள் எனும் சொற் களைப் பயன்படுத்தியுள்ளார். எனினும் மொழிபெயர்ப் பில் பொதுவாக இந்தியா, இந்தியர் எனும் சொற்களே இடம்பெறுகின்றன.

(இ)  இந்தியாவை, இத்தாலியுடன் ஒப்பிட்டு எழுதி யுள்ளார் மார்க்சு. இன்று பொருளாதார வல்லரசாக உள்ள இத்தாலி, 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இராணுவ வல்லரசாகவும் திகழ்ந்தது. ஆனால் 19ஆம் நூற்றாண்டு வரை இத்தாலி எனும் நாடும் அதன் மக்களும் முழு ஆளுமையுடையவர்களாக இருக்கவில்லை. ரோமப் பேரரசுக்கும் - ஸ்பார்ட்டன் அரசுக்கும் இடையே நடந்த போர்களின் போர்க்கள மாகக் கிடந்தது; மக்களும் துன்பத்திலேயே தவித்த னர். அதுகுறித்தே மார்க்சு இத்தாலியை இந்தியா வுடன் ஒப்பிடுகிறார்.

(ஈ) வரிக்கு வரி மொழிபெயர்ப்பு என்பதைவிட கருத்து அடிப்படையிலான மொழிபெயர்ப்பு முறை இங்கு கையாளப்பட்டுள்ளது.

1. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி

இந்தியாவின் நிலைமை (19ஆம் நூற்றாண்டில்) அய்ரோப்பாவில் உள்ள இத்தாலியை ஒத்ததாக இருக்கிறது. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடர், வம்பார்டிக் சமவெளி, ஆப்பீனைன் பீடபூமி, சிசிலித் தீவு போன்ற இயற்கையமைப்புகளை இந்தியாவின் இமயமலைத் தொடர், வங்காளச் சமவெளி, தக்காண பீடபூமி, இலங்கைத் தீவு ஆகியவற்றுடன் ஒப்பிடலாம். வளமிக்க மண் அமைந்துள்ள போதிலும் அரசியல் அதிகாரம் மற்றும் அரசியல் ரீதியான ஒருங்கிணைப்பு இல்லாத தன்மையும் (இத்தாலி மற்றும் இந்தியா) இரு நாடுகளிலும் உள்ளன. இத்தாலி பல காலமாக பல் வேறு நாடுகளின் ஆயுதப்போட்டியின் ஆடுகளமாக இருந்துவந்துள்ளது; இந்தியா, மொகலாயர் மற்றும் பிரிட்டானியரின் வருகைக்கு முன்னரே ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல்வேறு தனித்தனி நாடுகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஆனால் சமூகவியல் நோக்கில் இந்தியா இத்தாலியைப் போலல்லாமல் அயர்லாந்தைப் போலக் காட்சியளிக்கிறது.

இத்தாலி மற்றும் அயர்லாந்து நாடுகளின் விநோதக் கலவைபோலக் காணப்படும் இந்தியாவின் சிக்கல்களுக்கான காரணிகளை, அதன் மத வழிப்பட்ட பழைய பழக்கவழக்கங்களில் காணமுடிகிறது. இந்தியாவில் மதம் என்பது காமம் சார்ந்த இன்பநுகர்ச்சி ஒரு பக்கமும், உடலை வருத்திக் கொள்ளும் கட்டுப்பாடுகள் மறுபக்கமு மான கலவையாகும். லிங்க வழிபாடு ஒரு பக்கம் உடலின்பத்தை மறுக்கும் கொள்கை; மறுபக்கம், துறவிகளும் தேவதாசிகளும் இன்னொரு பக்கம் என ஒரு கூட்டுக்கலவையாக உள்ளது.

ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியாவின் பொற்காலம் எனக் கூறுபவர்கள் இவற்றை பெர்சிய ஆக்கிரமிப் பாளரான நாடிர்சா (எனும் கூலிகான்) டெல்லியில் ஏற்படுத்திய அழிவுகளுடன் ஒப்பிடுகிறார்கள்; இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. வரலாற்றில் (வட இந்தியாவில்) மொகலாயர் ஏற்படுத்திய மாற்றம், தென்னிந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கம், முகமதியர்களின் படையெடுப்பு, தக்காணப் பகுதியில் ஆட்சி செலுத்திய ஏழு அரசுகள், அல்லது கிறித்துவம் உலகில் ஆதிக்கம் செலுத்தும் முன்னரே (இந்தியாவில்) கொடுமைகளைப் புரிந்த பார்ப்பனரின் புராணகாலம் தொட்டு இந்தியாவில் எந்த வரலாற்று மாற்றமும் நடந்ததாகக் கூறப்படுவதை நான் ஏற்க வில்லை.

இந்தியாவின் மீது பிரிட்டிஷார் நிகழ்த்திய கொடுமைகள் வேறு தன்மையிலானதும், இதற்கு முன்னர் இந்தியர் அனுபவிக்காததுமான கொடூரமாகும். ஆங்கி லேயக் கொடுங்கோலர்கள் இந்தியக் கொடுங்கோலாட் சிகளுடன் இணைந்து நிகழ்த்திய அழிவுகள் இதற்கு முன்னர் (மொகலாயர் போன்ற) எந்த ஒரு ஆக்கிரமிப்பாளரும் ஏற்படுத்தியதை விடவும் வேறுபட்டதும் கொடுமையானதும் ஆகும்.

ஆங்கிலேயர் நிறுவியுள்ள கொடுங்கோல் ஆட்சி காட்டுமிராண்டித்தனத்தை நினைவூட்டுகிறது. இது டச்சக்காரர்களின் ‘கிழக்கிந்தியக் குழுமம்’ நடத்திய சுரண்டல் மற்றும் இந்தியத் தொழிலாளர்கள் மீது அவர்கள் ஏவி விட்ட கொடுமைகளின் மறு மதிப்பே எனலாம். ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னால் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது நிகழ்ந்த படை யெடுப்புகள், வெற்றிகள், மக்கள் கிளர்ச்சிகள் மற்றும் புரட்சிகள் எவையும் இந்தியச் சமூகத்தில் ஆழமான பாதிப்புகளை உண்டாக்கிவிடவில்லை. மறுசீரமைப்புச் செய்ய முடியாத அளவுக்கு அதன் முழுக் கட்டமைப் பையும் ஆங்கிலேயர் சீரழித்துவிட்டார்கள். இந்திய ருக்கு ஏற்பட்ட இந்த இழப்பு (அவர்களுக்கு) புதிதாக எதையும் கொண்டுவரவில்லை; மாறாகப் புதுவகை யான சோகத்தையே திணித்துள்ளனர். இது இந்தியரைத் தங்கள் பழைய வரலாற்றிலிருந்தும் முற்றாகப் பிரித்துவிட்டது.

பொதுவாக ஆசிய நாடுகளில் பன்னெடுங்கால மாகவே உள்நாட்டில் சுரண்டல், படைத்துறையை வைத்து அடக்குதல் மற்றும் பொதுப்பணித்துறை என மூன்று துறைகள் இயங்கிவந்துள்ளன. ஆசிய நாடுகளின் காலநிலை மற்றும் பரந்த பாலை நிலத்தைக் கொண்ட புவியியல் ஆகியவை ஆறுகளைச் செயற்கையாக உருவாக்கி ஆற்றுநீர்ப்பாசனம் மூலம் வேளாண்மை நடந்தது. இந்தியா, எகிப்து, மொசப்ப டோமியா, பெர்சியா போன்ற நாடுகளில் வெள்ளப் பெருக்கம் ஆற்றுநீர்ப்பாசனத்துக்கு உதவியது. தண்ணீரைப் பொது நன்மைக்காகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டிய தேவை இத்தாலி, பின்லாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் தனியார் நிறுவனங்கள் கூட்டமைப்புகளாக மாறிட ஏதுவாகியது. ஆனால் கிழக்கத்திய நாடுகளில் நிலப்பரப்பு மிக அதிகமாக இருந்ததாலும், (மக்களின்) நாகரிகம் மிகக் கீழாக இருந்து மக்கள் கூட்டமைப்புகளை உருவாக்க இயலாதிருந்ததாலும் அதிகாரம் குவிக்கப் பட்ட மைய அரசின் தலையீடு தேவையாயிற்று. எனவே, ஆசிய நாடுகளில் பொதுப்பணித்துறை அரசின் பொருளாதாரச் செயல்பாடாக உருவெடுத்தது.

ஒரு காலத்தில் மிக அறிவு நுட்பத்துடன் வேளாண்மை செய்யப்பட்ட பகுதிகள் - இந்தியா, எகிப்து, ஓமன், பெர்சியா போன்ற நாடுகளில் - மைய அரசைச் சார்ந்து நின்றதால் செயற்கை உரமிடுதல் மூலம் பாலையாகிக் கிடக்கிற வினோதக் காட்சியைக் காண்கிறோம். அதுபோல ஒரே ஒரு போர் நூறாண்டு களுக்கு மக்கள் தொகையில் பேரழிவையும், அவர்கள் நாகரிகத்தினை இழக்கவும் ஏதுவாகியது என்பதை அறிய முடிகிறது.

பிரிட்டிசார் முந்தைய ஆட்சியாளர்களிடமிருந்து படைத்துறையையும் நிதித்துறையையும் பெற்றுக் கொண்டனர்; ஆனால் பொதுப்பணித்துறையை முழுவதுமாக வீணடித்தனர். வேளாண் துறை பிரிட்டனில் உள்ளதைப் போலத் தனியாரின் கட்டுப் பாடற்ற போட்டி உருவாகாத நிலையில் சீரழிவை நோக்கிச் செல்கிறது. ஆசியாவில் ஓர் ஆட்சியில் சீரழிந்த வேளாண் தொழில், இன்னொரு ஆட்சியில் சீரமைக்கப்பட்டதையும் காண முடிகிறது. இங்கே நல்ல விளைச்சல் என்பது ‘ஆட்சி நல்ல ஆட்சியா? இல்லையா’ என்பதைப் பொறுத்தே அமையும்; இதுவே அய்ரோப் பாவில் காலநிலை நல்லதா இல்லையா என்பதைப் பொறுத்தே அமையும். எனவே இந்த (ஆங்கிலே யரின்) ஆக்கிரமிப்பும், வேளாண்மைக்கான ஒதுக் கலும் எவ்வளவுதான் கேடாயிருந்தாலும், அதுவே இந்தியச் சமூகத்தின் மீது விழுந்த மரண அடி எனக்கொள்ள வேண்டியதில்லை; வேறு குறிப்பிடத் தக்க சூழ்நிலை இல்லாதிருந்தால் மொத்த ஆசியச் சமூகத்தின் வரலாற்றிலும் இது ஒரு புதுமை எனக் கொள்ள வேண்டும்.

மிகப்பழங்காலத்திலிருந்து 1820கள் வரை நடந்துள்ள அரசியல் மாற்றங்களினூடேயும் இந்தியச் சமூக அமைப்பு மாறாமலேயே இருந்து வந்துள்ளது. இந்தியாவின் கைத்தறியும், நெசவு எந்திரங்களும் அதிக எண்ணிக்கையில் நூற்போரையும், நெசவாளர் களையும் தந்து சமூகத்தின் இயங்கு சக்தியாக விளங்கியது; மிகப் பழங்காலந்தொட்டே இந்தியத் தொழிலாளர்கள் தயாரித்த வியக்கத்தக்க துணிவகை களை அய்ரோப்பா பெற்று வந்துள்ளது; அவற்றுக்கு ஈடாக விலைமதிப்பற்ற (தங்கம் போன்ற) உலோகங்களைக் கொடுத்தனர். கலைத்திறன் மிக்க இந்தியப் பொற்கொல்லர்கள் அவற்றைச் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய நகைகளாக மாற்றினார் கள். தங்கம், வெள்ளியிலான நகைகளை அணிவது சமுதாயத்தின் தாழ்ந்த நிலையிலிருந்த மக்களிடையே கூடப் பரவலாக இருந்தது. சரியாக ஆடை கூட அணியாதிருந்த அவர்கள் கூடத், தங்க நகைகளைக் காதிலும் கழுத்திலும் அணிந்தனர். பெண்களும் குழந்தைகளும் தங்கம், வெள்ளியிலான பெரிய அளவு கழுத்தணிகளையும் வளையல்களையும் அணிந்திருந்தனர். வீடுகளிலிருந்த சிறிய சாமிச் சிலைகளைத் தங்கம், வெள்ளியிலான பெரிய அளவு நகைகள் அலங் கரித்தன.

ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய நாட்டையும் கைத்தறியையும் ஒழித்துக்கட்டினர்; (மாறாக) இங்கிலாந்திலிருந்து துணியைப் பெருமளவு கொண்டு வந்து குவித்தனர்; நூல் ஆலைகளின் பெருக்கத்தால் துணிகளின் தாயகமான இந்தியாவை, இங்கிலாந்தின் துணிகள் ஆக்கிரமித்தன. 1818 முதல் 1836 வரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதியான துணி 5200 மடங்கு அதிகரித்தது. 1824-இல் இறக்குமதியான மஸ்லின் துணி சுமார் 10 இலட்சம் முழம்; அதுவே 1837-இல் 64 இலட்சமாயிற்று. அதே காலக்கட்டத்தில் டாக்கா நகரின் மக்கள் தொகை 1,50,000-இருந்து 20,000ஆகக் குறைந்து போயிற்று. துணி தயாரிப் பில் சிறப்பிடமாகவிருந்த (அப்படிப்பட்ட) இந்திய நகரங்களில் மக்கள் தொகை இப்படிக் குறைந்ததானது (ஆங்கிலேயர் வணிகத்தின்) கேடான விளைவாகும். இங்கிலாந்தின் எந்திரங்களும் அறிவியலும் இந்தியா வில் வேளாண்மைக்கும் தொழில்துறைக்கும் இருந்த பிணைப்பை உடைத்தெறிந்தன; இந்தியத் துணைக் கண்டத்தின் முகமே தலைகீழாகிவிட்டது.

- (தொடரும்)

தமிழாக்கம் : நாஞ்சில்

Pin It