வெள்ளையர் ஆட்சியிலிருந்து 1947இல் இந்தியா விடுபட்டது. விடுதலை பெற்றுவிட்டதாகப் பொதுமக்கள் எண்ணினாலும் பெரும்பான்மையான ஏழை, எளிய மக்கள் இன்றளவும் விடுதலை பெறவில்லை என்பதை மத்திய அரசின் திட்டக்குழுவின் பலவிதமான புள்ளி விவரங்களே அறிவிக்கின்றன. 1947இல் முற்போக்குச் சிந்தனையாளர், பகுத்தறிவாளர் என்று பாராட்டப்பட்ட ஜவகர்லால் நேரு, பனாரஸ் (காசி) பிராமணர்களின் பிடியில் சிக்கிக் கொண்டதை அண்ணல் அம்பேத்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். “பிரதமர் நேரு 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளில், ஒரு பிராமணன் விடுதலை பெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பிராமணப் பிரதமராகும் நிகழ்வைக் கொண்டாடும் வகையில் பனாரஸ் பிராமணர்களால் நடத்தப்பட்ட யாகத்தில் அமரவில்லையா? இந்த பிராமணர்கள் கொடுத்த ராஜ தண்டத்தை அணியவில்லையா? கங்கையிலிருந்து பிராமணர்கள் கொண்டு வந்த நீரைக் குடிக்க வில்லையா?.......

இந்தியக் குடியரசுத் தலைவர் அண்மையில் பனாரசுக்குச் சென்று பிராமணர்களை வழிபட்டு, அவர்களின் பாதங்களை நீரால் கழுவி அதைக் குடிக்கவில்லையா?” (Did not Prime Minister Nehru on the 15th of August 1947 sit at the Yajna performed by the Brahmins of Benares to celebrate the event of a Brahmin becoming the first Prime Minister of free and independent India and wear Raja Danda given to him by these Brahmins and drink the water of Gangas brought by them?..... Did not the President recently go to Benares and worship the Brahmins, washed their toes and drank the water?) இத்தகைய பின்னணியோடுதான் இந்தியாவில் 1947க்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வுகளைக் காண வேண்டும். யார், யார் பிடியில் இருந்தார்கள். இவர் களால் இந்தியாவின் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு விடுதலை கிடைக்குமா? என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால் இந்தக் கேள்விக்கு 1931இல் வின்சென்ட் சர்ச்சில், “வெள்ளையர் ஆட்சி வெளியேற, காந்தி வாதிடுகிறார்; நேரு, கோரிக்கை விடுக்கிறார்; ஆட்சி நிர்வாகம் இந்தியர் கைகளுக்கு மாறினால், வடநாட்டில் முதலில் போராட்டங்கள் வெடித்து, தென்னாட்டை மீண்டும் வடநாடு கைப்பற்றிவிடும். இந்து-முஸ்லிம் சண்டைகள் உருவாகும். 

இந்த அபாயத்தைச் சூழ்ச்சித் திறன்மிக்க தொலைநோக்குப் பார்வை கொண்ட பிராமணர்கள் காணத்தவறவில்லை... நமது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பெரும்பான்மை என்கிற பெயரில் பிராமண வகுப்பி னரிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டால், எல்லாவிதப் பேராசைகளும் தூண்டப்படும். எல்லா அரிப்பெடுத்த கைகளும் நீண்டு, கைவிடப்பட்ட பரந்து விரிந்த பிரிட்டிஷ் பேரரசைக் கொள்ளையடித்து விடுவார்கள்” (...the departure of the British from India which Gandhi advocates and which Mr. Nehru demands would be followed first by a struggle in the North and thereafter by re-conquest of South by the North and of the Hindus by the Moslems. This danger has not escaped the craftly foresight of the Brahmins... and that our rule is going to pass away and be transferred in the name of majority to the Brahmin sect, allsorts of greedy appetites have been excited and many itching fingers are stretching and scratching the vast pillage of a derelict empire. (Ref : Churchill by Himself, Richard M. Langworth, ed.2008, p.163)) என்று துல்லியமாகக் கணித்து விடை கண்டுள்ளார். 

1948இல் பெருந்தலைவர் காந்தியும் வேறுவித மாக இதற்குப் பதில் கண்டார். இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றும் அவையில் தங்களின் கருத்துகள் ஏற்கப்படுமா? என்ற வினாவிற்கு. காந்தி - “அரசமைப்புச் சட்டம் இயற்றும் அவை என்னுடைய எதிர் பார்ப்புகளை உணருவதற்கு எல்லாவிதச் சாத்தியக் கூறுகளும் உள்ளன. இருப்பினும், எனக்குப் பெரும் நம்பிக்கையில்லை. காரணம், அரசின் அறிக்கை அவ்விதச் சாத்தியக் கூறுகளுக்கு இடம் தரவில்லை. ஏனெனில், அந்த ஆவணம் முழுமையுமே இயல்பான தன்மையுடையதாகவும், பல கட்சிகளின் பொதுவான ஒப்புதலையும் பெற வேண்டியுள்ளது. இந்த ஆவணத் திற்குப் பொதுவான இலக்கில்லை. காங்கிரசாரிடையே கூட சுதந்தரம் குறித்த உட்பொருளில் ஒருமித்த கருத் தில்லை. அகிம்சை, இராட்டை அல்லது கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பரவலாக்குதலில் எத்தனை பேர் உறுதியும், நம்பிக்கையும் கொண்டுள் ளனர் என்று எனக்குத் தெரியாது. இதற்கு மாறாக, இந்தியா முதல் தரம்மிக்க இராணுவ சக்தியாகவும், வலிமையான மைய அரசையும், அதையொட்டி மொத்த அமைப்பும் உருவாக வேண்டும் என்றும் பலர் விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்”( HInd Swaraj and Other Writings, Edited by Antony J. Parel and other writers, P.190190). 

இத்தகைய பின்னணியோடுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானதையும், அதன் பின்பு 1952இல் கூடிய நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற மேலவையையும் அவற்றின் நடவடிக்கைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சான்றாக, கிரான்ட்வில் ஆஸ்டின் என்கிற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல் அறிஞர், இந்திய அரசமைப்புச் சட்டம் எவ் வகையில் இந்திய மக்களுக்கு எதிரானது என்பதை 1972இல் வெளியிட்ட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் நேரு உட்பட அரசமைப்புச் சட்ட அவையில் இடம்பெற்ற பல உறுப்பினர்களைச் சந்தித்து நேர்முகப் பேட்டி எடுத்து, ஆய்வு செய்து இந்நூலை வெளியிட்டார்.

“பெரும்பாலும் வெளிநாட்டுத் தோன்றலாக அமைந்த அரசமைப்புச் சட்டம் இந்தியாவிற்குப் பயன்படாது என்பதே மிக அதிகமாக வெளிப்படுத்தப்பட்ட, எளிதாக விளங்கக்கூடிய ஒரு அச்சமாக இருந்தது. வரைவு அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட கொள்கை தளத்திற்கும், இந்தியாவின் அடிப்படை உயிரோட்டத் திற்கும் தெளிவான எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒரு உறுப்பினர் சாடினர். ‘இந்த அரசமைப்புச் சட்டம் நமக்கு உகந்ததாக அமையாமல், நடைமுறைக்கு வந்தவுடன் இது சிதறுண்டுவிடும் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்ல முடியும்’ என்று அவர் மேலும் குறிப்பிட்டார். ‘வீணை அல்லது சித்தாரின் இசைதான் எங்களுக்கு வேண்டும். ஆனால் இங்கு நமக்கு வாய்த்ததோ ஆங்கிலேய பேண்டு வாத்தியம்’ என்று புலம்பினார், மற்றொரு உறுப்பினர். மூன்றாவது உறுப்பினர், இந்த அரசமைப்புச் சட்டம் அடிமைத் தனத்தின் நகல், அதையும் தாண்டி மேலை நாட்டின் கூறுகளுக்கு அடிமைத்தனமாக மண்டியிடுவதாகும் என்றார். இந்தியாவின் தொன்மை அரசியலை உள்ளடக்கியோ அல்லது அதன் அறிவாற்றலை வெளிப் படுத்துவதாகவோ அரசமைப்புச் சட்டம் அமையாததால், இதனை ‘இந்தியனல்லாதது’ அல்லது ‘இந்தியனுக்கெதி ரானது’ என்று இந்த விமர்சகர்கள் நம்பினார்கள்”( Granville Austin, The Indian Constitution: Cornerstone of a Nation, 1972, P.325).

மேற்கூறிய அரசியல் தலைவர்கள், அறிஞர்களின் கருத்துகள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளதா? பொய்ப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதற்கு நாட்டின் அரசியல் நடப்புகளும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுமே சான்றுகளாக அமைந்து வருகின்றன.

மே 16ஆம் நாள் 60 ஆண்டுகள் நிறைவு விழா வைக் கொண்டாடும் நாடாளுமன்றத்தில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொறுப்போடு செயல் படுவோம். அவை நடவடிக்கைகளில் கண்ணியம் காப் போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டு நாடாளு மன்றத்தின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்ட னர். மறுநாள் (மே 17), மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் ‘சுழியம்’ நேரத்தில் (Zero Hour)) நாடாளுமன்ற அவையில் தனியாக அமர்ந்திருக்கும் காட்சியைச் செய்தி ஏடுகள் வெளியிட்டன. ஒரே நாளில் இவர்களுடைய கடமை, கண்ணியம், நாடகம் முடிந்துவிட்டது.

ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள அமைதிக்கான ஆய்வு மையத்தின் (SIPRI Year Book)) புள்ளிவிவரப் படி, 2012இல் வெளிநாட்டிலிருந்து இராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதில் சீனாவை இந்தியா விஞ்சிவிட்டது என்பது, மறுநாள் வந்த மற்றொரு செய்தியாகும். இந்த ஆய்வு மையத்திடம்தான் 2004இல் இலங்கை அதிக அளவிற்கு ஆயுதத் தளவாடங்களை வாங்கியுள்ளது. இதனால் இலங்கையின் முன்னேற் றத்திற்கான பொதுச்செலவு போர்ச்செலவாக மாற்றப் பட்டு வருகிறது. இது பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கையும் செய்தது. 2009இல் முள்ளிவாய்க்கால் தாக்குதலில் எல்லாவிதமான பேரழிவை உருவாக்கக் கூடிய, ஐக்கிய நாடுகள் மன்றத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் ஈழத் தமிழர்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டன என்பது உண்மையாகிவிட்டது. எல்லோருக்கும் கல்வி என்ற கனவு பல சட்ட வடிவங்களில் 1950க்குப் பிறகு மீண்டும் மீண்டும் தென்படுகிறது. குறிப்பாக, கல்வி பற்றி மத்திய அரசு பல சட்டங்களை இயற்றி வரு கிறது. ஆனால் குறிப்பாக, வட மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் 70 விழுக்காட்டுப் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னும் கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை.

இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை என்ன என்பதை 2012இல் வெளிவந்த பொருளாதார ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது. வேலை வாய்ப்பும், வேலையின்மையும் அமைப்புச்சார்ந்த, அமைப்புச்சாராத் தொழில்களின் வளர்ச்சியை ஒட்டியே பெருகியும், குறைந்தும் வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு கணிப்புகளை ஒப்பிட்டு வேலையின்மையின் நிலையைப் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டுகிறது. ஊரகப் பகுதிகளில் 2010-11இல் அதிக வேலைவாய்ப்பின்மை உள்ளது என்ப தையும் இப்புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. அமைப்புச் சார்ந்த துறையில் (Organised Sector), பொதுத் துறை, தனியார் துறை இணைந்து கணக்கிட்டால் வேலை வாய்ப்பு குறைந்து வருவதையே இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு வேலை வாய்ப்புத் திட்டங்கள், சமூகநலத் திட்டங்கள் ஆகியவற்றினைக் கடந்து இந்த வேலை வாய்ப்பின்மை பெருகி வருவது இந்தியப் பொருளாதாரம் சந்திக்க இருக்கின்ற பெரும் அறைகூவலாகும். இதற்குரிய நடவடிக்கை களை பள்ளிக்கல்வி, தொழில்நுட்பக் கல்வி ஆகிய வற்றினைப் பெருக்கி திறன் வளர்க்கும் நடவடிக்கைகளை இளைய சமூகத்தினரிடம் முனைந்து மேற் கொள்ள வேண்டும்.

ஆனால், இந்தியாவில் கல்விக் காகச் செலவிடப்படும் தொகை, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3 விழுக்காடு என்பது கவலைக்குரிய தாகும். உடலுழைப்பை, மூளை உழைப்பை இளைஞர்கள் சிறந்த முறையில் நல்குவதற்கு நல்ல பொதுச் சுகாதார அமைப்புத் தேவைப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஒரு விழுக்காடு அளவில்தான் உள்ளது என்பது கவலைக்குரியதாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற முதுமொழிக் கேற்ப நோயற்ற மக்கள் தொகைதான் நாட்டின் மனித வளத்தையும், பொருளாதார வளத்தையும் பெருக்கு வதற்கு அடித்தளமாக அமையும். இத்துறைகளில் வருகின்ற ஆண்டுகளில் நிறைவான, போதிய கவனத் தை மத்திய அரசு செலுத்த வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மனித மேம் பாட்டுக் குறியீடுகளில் இந்தியா, 187 நாடுகளின் உலகத் தரவரிசைப்பட்டியலில் 134ஆம் இடத்தில் உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் முயற்சியால் “பிரிக்சு (Brazil, Russia, India, China, South Africa (BRICS))” நாடுகளின் மாநாடு, புதுதில்லியில் 2012 மார்ச்சு திங்களில் நடைபெற்றது. 2011-12 ஆய்வறிக் கையில் உள்ள அட்டவணையைப் பார்த்தால், மனித மேம்பாட்டுக் குறியீடு தரவரிசைப்பட்டியலில் இரஷ்யா 66ஆம் இடத்தையும், பிரேசில் 84ஆம் இடத்தையும், சீனா 101வது இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 123ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. 

இந்தியா மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்நாடுகளுக்குப் பின்னால் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அனைத்து மக்களின் நலன்கள் மேம்பாடு பெறுவதற்கு உரிய திட்டங்களைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்பதையே மேற்கூறிய கூற்றுகள் மெய்ப்பிக்கின்றன. ஆனால் இந்தியாவின் வருமானத்தை ஆயுதங்கள் வாங்குவ தற்குப் பயன்படுத்தினால் நாடு வளருமா? நாடாளு மன்ற நடவடிக்கைகள் இதைப்பற்றி விவாதிக்கிறதா? போர் ஆயுதங்களைக் குவிப்பதனால் யாருக்கு இலாபம்? போர் ஆயுதங்களைப் பெருமளவிற்கு விற்பனை செய்யும் அமெரிக்கா, இரஷ்யா, பிரான்சு, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள்தான் ஐக்கிய நாடுகள் மன்றத் தின் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. யார் யாருக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள்? ஆடுகளுக்கு ஓநாய்கள் பாதுகாப்பைத் தருமாம்! இந்த ஓநாய்களைத்தான் அறிஞர் அமர்த்தியா சென், ‘வாதிடும் இந்தியன்’ (Argumentative Indian) என்ற நூலில், மரண வியாபாரிகள் (Merchants of Deaths) என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த மரண வியாபாரிகளின் நிரந்தரப் பட்டியலில் இந்தியாவும் சேரத் துடிக்கிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்காவின் காலையும் பிடிக்கத் தயாராக இருக்கிறது. இல்லையென்றால் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஈரான் நாட்டிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோலியப் பொருட்களின் அளவினைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மறுநாளே, 7 விழுக்காடு குறைத்துக்கொண்டது. 60 ஆண்டுக்கால இந்திய நாடாளுமன்றத்தின் தன்மான மும், இந்தியாவின் அரசுரிமையும் எங்கே போயிற்று? என்னவாயிற்று? ஒரு வேளை பெருந்தலைவர் காந்தி இதையெல்லாம் உணர்ந்துதான் விடுதலைக்குப் பின்பு காங்கிரசிலிருந்து ஒதுங்கிக் கொண்டாரோ என்னவோ? இவ்வகை அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே பாபா ராம்தேவ், இந்திய நாடாளுமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குரலும் எழுப்பப்படுகிறது. நாடாளுமன்றத்தின் தகைமை தகர்ந்து வருகிறது என்பதற்குப் பல புள்ளிவிவரங்கள் உள்ளன. மே 2011 புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்திய நாடாளு மன்ற மக்களவையின் 543 மொத்த உறுப்பினர் களில் 30 விழுக்காட்டினர் - ஏறக்குறைய 163 உறுப்பி னர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள்.

குறிப்பாக, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற கொடிய குற்றங்களைச் செய்தவர்களும் இதில் அடங்குவர். நாடாளுமன்ற மக்களவை மொத்த உறுப் பினர்களில் 128 பேர் பெரும் முதலாளிகள், வணிகர் கள், கட்டுமான முதலாளிகள் உள்ளனர். இவர்கள் தான் இந்திய நாட்டின் ஏழை, எளியோர்களின் பிரதிநிதிகள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள். இவர்களின் நலனுக்காகக்தான் இந்திய நாடாளு மன்றம் இயங்கும்.

சான்றாக, 2012 நிதிநிலை அறிக்கையை நாடாளு மன்றத்தில் அளித்தபோது, சென்ற நிதியாண்டில் மத்திய அரசு வரிவிலக்கு அளித்ததன் வழியாக இழந்த தொகையின் அளவு ஒரு அட்டவணையில் குறிக்கப்பட் டுள்ளது. அதில் வைரம், தங்கத்திற்கு மட்டும் அளிக் கப்பட்ட மத்திய அரசு வரிவிலக்கு ரூபாய் 49 ஆயிரத்து 164 கோடியாகும் (Statement of Revenue Foregone,2012, P.32). இது மொத்த நிதியிழப்பில் 21.50 விழுக்காடாகும். நான்கில் ஒரு பங்கைத் தங்கத்திற் கும், வைரத்திற்கும் வரிவிலக்காக, மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்குகிற போது, இந்திய நாடாளு மன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருந் தார்கள்? மேலும், இந்த ஆண்டு தங்கம், வைரத்தின் மீது அளிக்கப்பட உள்ள வரிவிலக்கால் 57 ஆயிரத்து 63 கோடி ரூபாய் இழப்பு மத்திய அரசிற்கு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வரிச்சலுகை போதாது என்று, தங்க வைர வியா பாரிகள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தத் தைச் செய்தார்கள். இந்தியா முழுவதும் ஏழை மக்கள் இந்த வேலை நிறுத்தத்தால் வாடி வதங்கி விட்டார்கள் என்று நினைத்துத்தான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இவர்களுக்குத் தீர்வை வரியை உடனடியாகக் குறைத்துள்ளார். 

காந்தியாருக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்துள்ளது. இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், காந்தி நாடாளுமன்றத்தைப் பற்றிப் பொதுவாக என்ன சொன்னார் என்பதைப் புரிந்து கொண்டால், ஓரளவிற் காவது பொது நலத்தைப் பற்றி எண்ணுவார்கள். காந்தி இவர்கள் சூடு, சொரணை பெறுவதற்காகத்தான் பின்வரும் கருத்தைக் கூறியிருப்பாரோ! “ஹிந்து சுயராஜ்” என்ற நூலில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தை மற்ற நாடுகளின் தாய் என்று குறிப்பிடுவதைப் பற்றி காந்தி செய்த ஒப்பீடு மிகவும் கடுமையானதாகும். ‘மலட்டுத்தன்மை உள்ள பெண்ணாகவும், விலை மாதராகவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தை ஒப்பிட்டார். வெளியார் வற்புறுத்தல் இன்றி நாடாளுமன்றம் எனக் கூறிக்கொள்ளும் தன்மையில் தானாக முன்வந்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை. எனவேதான் மலட்டுப் பெண்ணுடன் ஒப்பிட்டேன்” என்கிறார்.

‘காலத்திற்குக் காலம் மாறும் அமைச்சர்களின் நிர்ப்பந்தத்தினால்தான் நாடாளுமன்றம் நடைபெறுகிறது. எனவே நாடாளுமன்றத்தை ஒரு விலைமாது என்று குறிப்பிட்டேன்’ என்கிறார். பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை வேடம் போடுபவர்களாகவும், சுயநலமிகளாகவும் இருந்தனர். சில நேரங்களில் கேட்பவர்கள் வெறுப்புக் கொள்ளும் அளவிற்கு உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். இதனால்தான் அறிஞர் கார்லே, ‘உலகின் பேச்சுக் கடைதான் நாடாளுமன்றம்’ என்று சாடியதை நினைவு கூர்கிறார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தை நாட்டின் விலை உயர்ந்த பொம்மை என்றும் சாடுகிறார். நாடாளுமன்றத்திற்கு நேரம், பணம் போன்றவற்றைச் சில நல்ல மனிதர்களிடம் கொடுத்திருந்தால் இங்கிலாந்து இன்னும் உயர்ந்த நிலையில் இருந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு உண்மையான கிருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினராகமாட்டார் என்று ஒரு நாடாளு மன்ற உறுப்பினரே கூறியதாகக் குறிப்பிடுகிறார். இங்கிலாந்து நாடாளுமன்றம் 700 ஆண்டுகளாகியும் குழந்தையாகவே இருக்கிறது. எப்போது குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ச்சி பெறும் என்று கூறியதையும், (the which you consider to be the Mother of Parliaments is like sterile woman and a prostitute. Both these are harsh terms, but exactly fit the case. That Parliament has not yet of its own accord done a single good thing, hence I have compared it to a sterile woman. The natural condition of that Parliament is such that, without outside pressure, it can do nothing. It is like a prostitute because it is under the control of ministers who change from time to time..... But, as a matter of fact, it is generally acknowledged that the members are hypocritical and selfish..... Sometimes the members talk away until the listeners are disgusted. Carlyle has called it the ‘talking-shop of the world’...... The Parliament is simply a costly toy of the nation..... One of the members of that Parliament recently said that a true Christian could not become a member of it. Another said that it was a baby. And, if it has remained a baby after an existence of seven hundred years, when will it outgrow its babyhood? (Ref : “Hind Swaraj and Other Writings,” Edited by Anthony J. Parel, P.30-32)) காந்தி குறிப்பிடுகிறார்.

ஒரு வேளை காந்தி இன்று இருந்தால் 60 வயதாகியும் வளராத குழந்தை என்று இந்திய நாடாளுமன்றத்தைக் குறிப் பிட்டிருப்பாரோ?

Pin It