சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் அய்யா ஆனைமுத்து, தோழர் சங்கமித்ரா, நெருப்புக்கவிஞர் தமிழேந்தி போன்றோரிடம் எனக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இதற்குக் காரணமாக அமைந்தவர் அய்யா கு.ம.சு. அவர்கள். தூத்துக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாச்சி ந.தனசேகரன் அவர்களும் இந்த தோழமைக்குள் உண்டு.

ஆனைமுத்து அய்யா அவர்கள் தனது வாழ்க்கை யையே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். மக்களுக்காகப் பிரதிபலன் பார்க்காது பாடுபட்டதில் ஏழ்மையைத் தன் சொத்தாக வரித்துக் கொண்டவர். கொள்கையில் உறுதியான நிலைப்பாடு உள்ளவர்; வணங்காமுடி.

தோழர் சங்கமித்ரா அவர்கள் என்னை வியக்க வைத்த மனிதர். அவரது இதழ்களில் பல போலித் தலைவர்களைத் தோல் உரிப்பார். இத்தனைக் கடுமை வேண்டாமே? என்று தொலைப்பேசியில் பகிர்ந்து கொள்வோம். ‘கிடக்கிறான் விடுங்க... அவனால ஒண்ணும் புடுங்க முடியாது...’ என்பார்.

யாருக்கும் எவருக்கும் அஞ்சாத திடநெஞ்சு! இந்த ஊரைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரக் கும்பல், அதிகாரப் போதையில் திமிர்பிடித்து அலைபவர்கள் ஏதாவது மறைமுகத் தாக்குதல் நடத்திவிடக்கூடாதே... என்ற அச்சம் எனக்குள் எப்போதும் அவரைப் பற்றி எழும். முதியவர்கள், ஊனமுற்றோர், பெண்கள், தமிழினம், ஊழல் என்று அனைத்துக்கும் அவர் குரல் கொடுத்தார். அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக ஆவேசமாக எழுதினார். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் சிந்தனையாளன், சங்கமித்ராவின் தன் முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் குரல், சங்கமித்ரா பதிலளிக்கிறார் இதழ்கள் இடம்பெறாதா என்று எண்ணிப் பார்ப்ப துண்டு.

இன்று வெளிவரும் தினசரி, வார, மாத இதழ்கள் தமிழின் மேம்பாட்டுக்குத் துளியும் பயன்படவில்லை என்பதுதான் உண்மை. அத்தனையும் வணிக நோக்கத்திற்காகவே வெளியிடப்படுகின்றன.

நம்முடைய உயர்வுக்காகப் பாடுபடும் நல்ல இதழ்களை நாம் ஆதரிக்க வேண்டாமா? சங்கமித்ரா இதழ்ப்பணிகளில் பல தடவைகள் அவரோடு கை கோத்துக் கொண்டேன். மாதச் செலவை ஏற்றேன். கண்டிப்பாக அவருடன் நிற்க வேண்டும் என்ற உந்து தல் காரணமாக, நினைத்த மாத்திரத்தில் தொலை பேசியில் அவரோடு நிறைய நேரம் பேசுவேன். அப்படித்தான் கவிஞர் தமிழேந்தியோடும். சங்கமித்ரா நீண்ட நெடுநாள் இருப்பார்; சிம்மம் போல அவர் கர்ச்சனை எழுந்து கொண்டே இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன். கடைசியாகப் பல நாள்கள் அவர் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. என்ன ஆயிற்று அவருக்கு; ஒன்றும் புரியவில்லை. இதழ்ப்பணியில் ஏற்பட்ட தடையினால் சோர்ந்துவிட் டாரா? இறப்பதற்குப் பத்துப்பதினைந்து நாட்களுக்கு முன்னால் மீண்டும் ஒருமுறை அழைத்தேன். யாரு தனகரனா? என்றார். அவரது குரல் மேற்கொண்டு கேட்கவில்லை. அவர் உடல்நலமற்று இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. அவர் மரணமடைந்த தினம் கவிஞர் எனக்குச் செய்தி அனுப்பினார். அதில் ஒரு தொடர்பு எண் இருந்தது. அந்த எண்ணில் அவர் பெண் பேசினார்.

இரவோடு இரவாகத் திருச்சி விரைந்தேன். காலையில் 8 மணிக்கு அடக்கம் என்றார்கள். திருச்சி எங்கும் கருஞ்சட்டைப்படை திரண்டு நிற்கும் என்று எதிர்பார்த்தேன். நமக்காக உழைத்து உருக்குலைந்து போன ஒரு போராளியை வழியனுப்பப் பல்லாயிரம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். எவரும் இல்லை; நான்கைந்து பேரைத் தவிர. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் இறுதிப் பயணத்தின் போது ஏற்பட்ட அதே நிலை, வாராது போல வந்த இந்த மாமணிக்கும் நேர்ந்ததே என்று எனக்கு வருத்தம். அவரது இறுதிச்சடங்கு அவரே விரும்பாத மதச் சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்டு நடந்தது என்பது அதைவிடக் கொடுமை. மனுநீதி, வர்ணாசிரமம், ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று அவர் உயிரோடு இருந்தவரை நெருங்க முடியாதிருந்த அத்தனைக் கர்மங்களும் அவர் உயிர் நீத்த பிறகு அவரைத் தொட்டுவிட்டனவோ! சங்கமித்ரா என்ற மாமனிதரை அவரது குடும்பத்தினரே புரிந்து கொள்ளவில்லையோ என்ற வேதனை.

சங்கமித்ராவின் இதழ்களில் பொன்னுசாமி தனகரன் என்ற பெயரில் எனது கதைகள் வெளிவந்தன. அதனை எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். அவரோடு பேசிப் பழகிய-அவரது இதழ் களைப் படித்த ஒவ்வொரு நாளும் என்றும் பசுமை யாக இருக்கும். வானில் நட்சத்திரங்களைப் பார்க்கும் பொழுது அதில் விடிவெள்ளியாக நீவிர் வீற்றிருப்பீரோ? நல்ல தமிழ் உள்ளங்கள் உம்மை மறவாது தோழரே! உமக்கு வீர வணக்கம்.

- தூத்துக்குடி பொன்.தனகரன்

Pin It