பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசினால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து வருகிறது என்பது நாம் அறிந்ததே. 2001க்குப் பிறகு 2011இல் மீண்டும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு மாநில வாரியாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சூன் 1 முதல் 15 வரை நடத்தவுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இம்முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதனடிப்படையில் சாதிவாரியாக மக்கள் தொகையைக் கணக்கெடுக்க மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது. ஏனெனில், 1931-க்குப் பிறகு சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது உண்மை. எனினும் இது மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கே பொருந்தும். பட்டியலின, பழங்குடி மக்களின் கணக்கெடுப்பு உள்சாதிவாரியாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சூழ்நிலையில், அருந்ததியர் அமைப்புகள் விழிப்புடன் இருந்து இப்பணியைச் செவ்வனே செய்ய வேண்டிய கடமை உள்ளது. ஏனெனில் தற்போது நிலவும் சமூக அமைப்பில் அருந்ததியர் மக்களில் படித்த பெருமபாலானோர் சாதியை மறைத்துக் கொண்டு, ஆதிதிராவிடர் என்கிற பொதுப் பெயரில் சாதிச் சான்றிதழ் பெற்று உள் ஒதுக்கீட்டு உரிமையைப் பெறமுடியாமல் தத்தளிக்கின்றனர். இது தெரிந்து செய்கின்ற தவறு என்று சொன்னால் அருந்ததியர் மக்களுக்குத் தெரியாமலேயே அவர்களை ஆதிதிராவிடர் எனப் பதிவு செய்யும் தவறு தொடர்ந்து நடைபெறுகிறது. குறிப்பாக, வட மாவட்டங்களில் வாழும் அருந்ததியர் மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும், பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கின்ற போதும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அல்லது அலுவலர்கள் அருந்ததியர் மக்களிடம் தெளிவாக விசாரிக்காமலேயே அவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் பதிவு செய்து விடுகின்றனர். இதனால் உண்மையான அருந்ததியர் மக்களின் எண்ணிக்கை இருட்டடிப்புச் செய்யப் படுவதுடன் அவர்கள் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு உரிமையை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆகவே, அனைத்து அருந்ததியர் அமைப்புகளும் இவ்விசயத்தில் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டிய அவசியமுள்ளது. மேலும், உள் ஒதுக்கீட்டின் உன்னதத்தை உணர்ந்த சில அருந்ததியர் அல்லாத மேல்தட்டு வர்க்கம் “அருந்ததியர்” எனப் போலியாகச் சான்றிதழ் பெறுவதும் தற்போது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

கடந்த 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்சாதிவாரியான தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகையினைக் கீழ்க்காணும் பட்டியல் தெளிவாக விளக்கும். இப்பட்டியலில் ஒற்றை எண்ணிக்கை, இரட்டை எண்ணிக்கையுள்ள நாம் கேள்விப்படாத சாதிகளும் உள்ளடங்கியிருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் பிரிக்கப்படாத சென்னை ராஜதானியில் எடுக்கப்பட்ட உட்சாதிகளின் வகைப் படியே இன்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனாலேயே எண்ணிக்கையில் 76 உட்சாதிகள் இருப்பது போன்ற தோற்றம் நமக்குத் தென்படுகிறது நமது பார்வையில் 76 சாதிகளைக் கீழ்க்கண்டவாறு 6 பிரிவுகளில் வகைப்படுத்தலாம்.

1. அருந்ததியர்
2. ஆதிதிராவிடர்
3. தேவேந்திர குல வேளாளர் / மள்ளர்
4. குறவர்
5. புதிரை வண்ணார்
6. பிற தாழ்த்தப்பட்டோர்

இவ்வாறு வகைப்படுத்தினால் மக்கள் தொகை மிக எளிதாகவும் கணக்கிட முடியும். 2001 மக்கள் தொகைக் கணக்கின்படி 76 பிரிவுகளின் மக்கள் தொகைபின்வருமாறு:

I. பெல்லாரா - 1
சண்டாளா - 9
கூசா - 7
வேட்டுவன் – 6

II. சபரி - 11
பதியன் - 15
நளதேயவா - 10
ரானேயர் - 34
பள்ளுவன் - 68
பஞ்சமா - 94
கரிம்பாலன் - 19
மையா - 99
ஜாம்பவலு - 72
கோலேயா - 47
கோடகாலி - 82
மோகெர் - 51
முண்டாளா – 94

III. அஜிலா - 109
பகுடா - 512
பந்தி - 924
சாலவாடி - 166
சமார் - 533
கோடா - 368
ஜக்காளி - 664
காலாடி - 465
கணக்கன் - 220
கூடன் - 117
மன்னன் - 173
நாயாடி - 279
பாணன் - 301
சமாகரா - 201
வல்லோன் - 273
வேலன் - 636
வேடன் - 406
வெட்டியான் – 461

IV. அய்யனவர் - 1035
பைரா - 1608
பரதர் - 2429
செருமான் - 1910
டொம் - 1918
கோசங்கி - 1522
கடையன் - 9741
கவரா - 1152
கோலியன் - 8397
மாதிகா - 5103
மாலா - 9618
மாவிலன் - 3108
பண்ணாடி - 5070
பண்ணியாண்டி - 6035
பறவன் - 2036
புலையன் - 8406
சாம்பான் - 8822
செம்மான் - 1941
தண்டன் - 2581
தோட்டி - 3896
திருவள்ளுவர் - 1575
வண்ணன் - 6039
வதிரையன் – 6172

V. ஆதி ஆந்திரா - 40371
ஆதி கர்நாடகா - 36530
தேவேந்திரகுலத்தான் - 34649
டொம்பன் - 10670
குடும்பன் - 23240
பகடை - 13795
புதிரை வண்ணான் - 24588
வள்ளுவர் - 71149
பிற  - 55986

VI. அருந்ததியர் - 771659
சக்கிலியன் - 771139
குறவன் - 103975
மாதாரி – 249494

VII.ஆதிதிராவிடர் - 5402755
பள்ளன் - 2272265
பறையன் – 1860519

- சீவகன்
(நன்றி : “அருந்தமிழன்”, காலாண்டிதழ் 2010 மே)

Pin It