நீர்க்குமிழி வாழ்க்கை; என்றும்
நிலையென்ப தில்லை யாக்கை!
யார்க் கெதுவும் நேரும்; சொத்து
சுகத்தாலும் துன்பம் ஊரும்!
ஊர்க்கொரு தோற்றம்; ஆனால்
உள்ளுக்குள் வேறாய் மாற்றம்!
பார்க்கின்றோம் கண்முன் னாலே
பதவியும் போம்தன் னாலே!
தாயக மக்கள் மேன்மை
தாமென்றே வருவர்; ஊழல்
நோயாகப் பற்றும் போது
நுனிக்கொம்பி னின்று வீழ்வர்
ஆயிரம் ஆண்டு காலம்
அடிமையாய் வாழ்தல் நன்றா?
தீயவை எதிர்த்த போரில்
செத்துப்பிண மாதல் நன்றா?
மந்தையின் ஆடுகள் போல்
மடமையை ஊட்டி மக்கள்
சிந்தையை மழுங்கச் செய்வோர்
தேசத்தின் தலைவர் அல்லர்
தந்தையும் இன்றி நாளும்
கண்ணீரில் வாழு வோர்க்குத்
தந்தையாய் தாயாய் மாறித்
தாங்குவோர் தலைவர் ஆவர்
பழம்சப்பிக் கொட்டை போட்ட
பழம்பெருச் சாளி எல்லாம்
குழம்பிய குட்டையில் மீன்
கொள்ளத்தான் துடிக்கின் றார்கள்
அழுவதா மீட்சி? போலி
அரசியல் அமைப்பின் மீதில்
விழும்அடி ஒவ்வொன் றாலும்
விளங்கும்விடு தலையின் மாட்சி!

- தமிழேந்தி

Pin It