கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

திராவிடர்களாகிய நம்மீது ஏற்றப்பட்ட இழிவையும் நம்மிடையே புகுத்தப்பட்ட பேதங்களையும் சற்றும் பொறுக்காமல் பல கோட்பாடுகளை வகுத்துத் தந்த பெரியார் பெரிதும் கடைப்பிடித்த குணங்கள் ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகியனவாம். அவர் இத்தன்மையில் வாழ்ந்ததனால், “மானமும் அறிவும் மாந்தருக்கு அழகு” என்று நமக்கெல்லாம் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் ஊட்டிச் சென்றுள்ளார்.

periyar unweiling bharathidasan photoபெரியாரின் இக்குணங்கள் வள்ளுவர் வகுத்த குறள்நெறி யுடன் ஒத்துப் போகின்றனவா? என்று ஆராயுங்கால் குடிமை அதிகாரம் தென்பட்டது.

“ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்” (குறள் 952)

உயர்குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கம், வாய்மை, நாணம் இம்மூன்றிலும் தவறாது நடப்பர். பெரியாரின் குணங்கள் இக்குறளுடன் ஒத்துப் போகின்றன. பெரியாரின் இக்கொள்கை முறையினால் அவரின் குடிப்பிறப்பு மட்டும் உயரவில்லை. சுயமரியாதைக்காரர்கள் அனைவரின் குடிப்பிறப்பும் உயர்ந்துள்ளது என்பது கண்கூடு. பெரியாரின் குடிப்பிறப்பு இத்தன்மை வாய்ந்தது. இராமனின் குடிப்பிறப்பை வால்மீகி இராமாயணத்தைப் படிக்கும் போது எத்தன்மையது என்பதை அறியலாம்.

அயோத்தி இராமனின் தந்தை தசரதனுக்கு (60000) அறுபதாயிரம் மனைவிகள். இத்துணை மனைவிகள் இருந்தும் புத்திர பாக்கியம் உண்டாகவில்லை. இதனால் மோட்சமும் ஆட்சியும் நிலைக்காது எனக் கருதிய தசரதன் வேதியர்களைக் கொண்டு அசுவமேத யாகம் நடத்தினான். யாகத்தில் எழுந்த ஒருவன் கொடுத்த பாயாசத்தை தசரதன் மனைவிகளை அருந்தச் செய்து, யாகக் குதிரையை மூன்று கூறாக வெட்டித் தழுவிய பின் இராமன், பரதன், இலட்சுமணன், சத்ருக்கனன் ஆகியோர் பிறந்தனர் என்கிறது இராமாயணம். மனிதனாகப் பிறந்து கடவுளான இராமனின் மனிதப் பிறப்பில் ஒழுக்கத் தன்மையும் மானமும் மிக்கதாக இல்லை.

இராமாயணம் மட்டுமின்றி, பல புராணங்களையும் இதிகாசத்தையும் படித்தறியும்போது இரண்டு சொல்லாடல்களில் தொடக்கமும் முடிவும் அமைகின்றன. ஒன்று ‘அதர்மம்’ - இதைத் தொடக்கமாகவும், மற்றொன்று தர்மம் - முடிவில் வெற்றி கொள்வதாக எல்லாமும் விளம்புகின்றன. தருமம் நிலைக்க வேண்டுமாயின் அதர்மத்தை அழிக்க வேண்டும்; வெல்ல வேண்டும் என்பதை உள்ளீடாகக் கொண்டு தனக்குச் சாதகமான செயல்களைச் செய்து வருகின்றனர். நம்மில் பொருளில்லார்க்குப் பொருள் தந்து உதவுவதே தருமம் என்ற சிந்தனை ஓங்குவது இங்குப் பொருந்தாது. இதைப் புராண இதிகாசங்களினூடே பொருத்திப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் ‘தர்மம்’, ‘அதர்மம்’ என்பதற்கான உள்பொருள் அறிய முடியும்.

தருமத்தைக் காக்கப் பிறந்தவனாம் இராமனின் நாடான அயோத்தியில், பிராமணன் ஒருவனின் குழந்தை எந்தக் காரணத்தினாலோ இறக்கிறது. இராமன் தருமத்தைக் காக்கவில்லை என்று அப்பிராமணன் குற்றஞ்சாற்றுகிறான். எவ்வாறெனில்? ஒரு சூத்திரன் தவம் செய்கிறான்; ஆகவேதான் என் குழந்தை இறந்தது என்ற குற்றச்சாற்றிலிருந்து விடுபட அப்பிராமணன் சொற்படி இராமன் தருமத்தைக் காக்கப் புறப்படுகிறானாம்.

புறப்பட்ட இராமன் நாட்டைச் சுற்றி வரும் போது விந்திய மலைக்குத் தெற்கில் ஒருவன் தலைகீழாகத் தொங்கித் தவம் செய்வதைப் பார்க்கிறான். நீ, நால்வருணத்தில் எவன்? என்று இராமன் வினவ, நான் சூத்திரக்குலத்தில் பிறந்தவன் என்றும், நான் தேவனாகிக் கடவுளைப் பார்க்க வேண்டும். தேவருலகைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இத்தவத்தைச் செய்கிறேன் என்கிறான் சம்பூகன். இப்படி அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே இராமன், தன் வாளை எடுத்து சம்பூகனின் தலையை வெட்டிக் கொல்கிறான். அதே வேளையில் இறந்த பிராமணக் குழந்தை உயிர் பெறுகிறது.

சம்பூகன் தலைகீழாகத் தவம் செய்தது வழக்கத்துக்கு மாறாக உலகம் தலைகீழாகி விட்டது என்றும், கீழ்ச்சாதி ஒருவன் திமிராகப் பேசுகிறான். இவனை வெட்டுவது, உருக் குலைப்பது தருமம் என்று நியாயப்படுத்துகிறது இராமாயணம். இங்கே சம்பூகனை வெட்டிக் கொல்லப்பட்டதால் அதர்மம் அழிக்கப்பட்டதாகச் சொல்கிறது.

சம்பூகன் இராமனையோ, அவனின் சகோதரர்களையோ அயோத்தி அரண்மனைப் பெண்களையோ கடத்தினானா? துன்புறுத்தினானா? இல்லையே. இராவணனைப் பழிப்பவர்கள் சம்பூகனுக்கு நிகழ்த்தப்பட்டதில் இருந்து சிந்தித்துத் திருந்த வேண்டும்.

சம்பூகன் கடவுளை நேரில் கண்டு தேவனாக வேண்டும் என்று நினைத்தது தவறா? இது அதர்மமா?

பிராமணர்களையும் வருணாசிரமத்தையும் காப்பதொன்றே தருமம் என்கிற படியால், இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரை, ஆரிய - திராவிடர் போர் என்கிறார் பெரியார். ஆரியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துபவர்களைக் களங்கப்படுத்தி அழித்தொழிப்பதே இராமாயணத்தின் கருப்பொருளாகும்.

இராவணன் தங்கை சூர்ப்பனகையின் ஆளுகைக்குட்பட்ட காட்டில் அலைந்து திரிந்த ஒருவன், புதிய ஆடவனாக இருப்பதால் இராமனை நெருங்கி வந்து விரும்புவதாகக் கூறுகிறாள். கணவனை இழந்து வாடும் சூர்ப்பனகையிடம், இராமன் தனக்குத் திருமணமாகி விட்டதென்று சொல்லிவிட்டு, உடன் வந்த இலக்குமணனை அடையாளப் படுத்துகிறான். இராமன் சொல்படி சூர்ப்பனகை, இலக்குமணனைத் தேடி அணுகிய போது அங்கயீனப்படுத்தி அவமதிக்கிறான். இன்றுங் கூட கணவனை இழந்தவர்கள், பிரிந்தவர்கள் மறுமணம் செய்ய முனையும் போது, அப்பெண்களை மானபங்கப்படுத்துவது இராமாயணத்தின் நீட்சியாகக் காண்கின்றோம்.

இராமாயணம், ஆரியத்தை எதிர்ப்பவர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்திக் கொள் என்கிறது. வாலி - இராவணன் சகோதரர்களுக்குள் பேதத்தை உருவாக்கி, பகையை வளர்த்து முடித்துக் கொண்டு, சுக்ரீவன் - விபீடணன்களை அடிமையாக்கிக் கொண்டது. இவ்வடிமைகள் இருவரும் ஆழ்(ள்)வார்களாயினர்.

இப்படிப்பட்ட இராமாயணத்தை, பெரியார் கொடுத்துதவிய நுண்ணோக்கி கொண்டு ஆராய்ந்தால்தான் புனிதத்துக்குள் புதைந்து இருக்கும் புன்மைகளை அறிய முடியும்.

விதவை மறுமணத்தை ஆதரிக்காத இராமா-யணம்,

சீதை பிறரிடத்தில் தங்கியதாலே சந்தேகிக்கும் இராமா-யணம்,

சீதை கருவுற்றதும் சந்தேகித்து நாடு கடத்திய இராமா-யணம்

இம்மூன்றும் பெண்களை இழிவுபடுத்துவதாகவே பார்க்கிறார் பெரியார்.

பார்ப்பனர்களின்றி மந்திரம் ஓதுவதும், கடவுளைக்கான விழைவதும், சூத்திரர்கள் தவமிருக்கக் கூடாதென்று தடைவிதிக்கும் இராமா-யணம் இராமனைக் கடவுளாகவும், சீதையைப் பத்தினியாகவும், திராவிடர்களைக் குரங்குகளாகவும், அடிமைச் சேவகர்களாகவும் சித்தரிக்கின்றதால், பெரியார் சீறியெழுந்து சீர்திருத்தங்காண விழைகிறார்.

பெண் விடுதலை, கற்பு நிலை, இன இழிவு போன்றவற்றின் உரிமைகளுக்காகப் போராடிய பெரியார், 1922-ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் கோரினார். காங்கிரசில் இருந்த பார்ப்பனத் தலைவர்களால் இத்தீர்மான வடிவத்தை ஏற்க மறுத்துப் புறக்கணிக்கப்பட்டது.

பெரியார், அம்மாநாட்டிலேயே மேற்சொன்ன இராமாயணக் கூறுகளை விளக்கிப் பேசியதன்றி, “இந்த இராமாயணம் எங்களை இழிவுபடுத்துகிறது; உரிமைகளைப் பறிக்கிறது” என்று கூறி, “இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்” என்று எதிர்த்தார். அன்று இவ்வாறு பிரகடனப்படுத்திய நாள் முதல் இன இழிவைத் துடைக்கின்ற நாள் வரையில் பெரியாரின் இராமாயண எதிர்ப்பு நம்மிடையே இருந்து வரும் என்பதில் அய்யமில்லை.

பெரியார் தன்னறிவால் இராமாயணத்தை எதிர்த்தாலும், மூடத்தனத்தால் இராமனைக் கடவுளாகப் பாவிப்பவர்கள் எண்ணிக்கை பெருத்திருப்பதால் நம்பிக்கை, அய்தீகம், பழக்க வழக்கம் போன்றவற்றின் அடிப்படை யில் சட்டத்தைத் துணைக்கொள்கின்றனர். இதன் வழியில் இன்றைய அயோத்தியத் தீர்ப்பும் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வெளியிடுவதற்குமுன், நாட்டின் பாதுகாப்பு கருதி அரசின் உறுதிமொழியைக் கேட்டுப் பெற்ற பின்னரே தீர்ப்புரைத்தனர். ஆட்சியாளர்களும் ஊடகங்களின் வழியே மக்களிடம் பேசினர். “பாதகமோ சாதகமோ எது வந்தாலும் ஏற்போம்! அமைதி காப்போம்!” என்றனர். கலவரமோ கல்வீச்சோ எதுவும் நிகழாவண்ணம் 2019 நவம்பர் 9-ஆம் நாள் சனிக்கிழமை விடுமுறை நாளில் தீர்ப்புரைத்தனர்.

தீர்ப்பு எப்படியாயினும் சகிப்புத் தன்மையுடன் ஏற்றுச் சமாதானமாகிச் சகச நிலைக்கு வரவேண்டும் என்பதே நீதிபதிகளின் கருத்தாகவும் கட்டளையாகவும் இருந்துள்ளன. நீதிபதிகள் ஒவ்வொருவரும் தங்களின் தடையடையாளத்தைத் துறந்து, கூட்டாகத் தீர்ப்புரைக்கையில் பெரும்பான்மையோர் ஆர்ப்பாட்டமின்றி சகச நிலையில் மகிழ்ந்திருக்கவும், சிறுபான்மையோர் சகிப்புத் தன்மையை மேற்கொள்ளவும், நூற்றாண்டுக்கு மேலாக நடைபெற்றுவரும் அயோத்தி வழக்கினை முடித்து வைக்க வேண்டும் என்ற நோக்கம் வெளிப்பட்டன.

நாடு சுதந்தரம் அடைந்த பிறகு நாட்டிற் கான அரசமைப்புச் சட்ட வரைவுகளை விவாதித்து உருவாக்கிக் கொண்டிருந்த வேளையில் 1948-ஆம் ஆண்டு இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம் என்னும் ஆர்.எசு.எசு. அமைப்பினர், பாபர் மசூதி குறித்து விவாதித்தனர். இராமர் கோயிலை இடித்து அதன் மேல் மசூதி கட்டியதாக முடிவெடுத்து, அதற்காகப் பணியாற்றத் துடித்தனர்.

1949 நவம்பர் 26 அன்று சட்ட வரைவுக்கான விவாதங்கள் முடித்து, இறுதியாக்கப் பட்டது. அதில், “இந்திய நாடு மதச்சார்பற்ற நாடு” என்ற வாசகம் இடங்கொண்டிருப்பதால் ஆர்.எசு.எசு. அமைப்பினர் அதிருப்தியாயினர். இவ்வமைப்பினர் விரும்பியவாறு ‘இந்து நாடு’ என்று அறிவிக்கப்படாது போகவே, இராமர் சிலையைக் கையிலெடுத்தனர்.

1949 திசம்பர் 23 ஆம் நாள் நள்ளிரவில் ஒரு கும்பல் மசூதியின் பூட்டை உடைத்து இராமன் பொம்மையை உள்ளே வைத்தனர். நள்ளிரவில் திருட்டுத்தனமாக மசூதிக்குள் நிறுவியதைக் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

சிலை திருட்டுத்தனமாக வைக்கப் பட்டதால் சிலரை குற்ற வழக்கில் கைது செய்து, வழக்கைப் பதிந்தது காவல் துறை. இவ்வழக்கு ஃபைசாபாத் நீதிமன்றம் சென்றதில், இடைக்கால உத்தரவு ஒன்று பிறப்பித்தது. இடைக்கால உத்தரவுப்படி 1949 திசம்பர் 29ஆம் நாளன்று மசூதியின் முக்கிய வாசல் பூட்டப்பட்டு, தனி அலுவலர் வசம் ஒடைப்பக்கப்பட்டது. ஒரு வாரக் காலக்கெடுவில், தனி அலுவலர் தல அறிக்கையொன்றைத் தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதில் மீண்டுமொரு உத்தரவு 1950 சனவரி 5-இல் பிறப்பித்தபடி மசூதிக்குள் இருக்கும் சிலைக்குப் பூசாரி ஒருவரையும் அரசு சார்பில் அன்றாட பூசையும் நடத்திட ஆணையிட்டது. பொம்மை வைத்த 15 நாள்களுக்குள் எந்நாளும் அகற்றக் கூடாதென்று நிரந்தரப்படுத்தியது நீதிமன்றம்.

நள்ளிரவில் சிலை வைத்த போது குற்ற வழக்கு, சிலையை நிரந்தரப் படுத்தியதும் உரிமையியல் வழக்கமாக மாறுகிறது. நிறுவப்பட்ட சிலையை அகற்றவோ, பூசைக்குத் தடை விதிக்கவோ கூடாதென்றும் பூசை செய்யும் உரிமை, நிறுவியதன் நில உரிமை இவைகள் குறித்து மேலும் மேலும் வழக்குகள் தொடுக்கப்பட்டதால், சிலையுள்ள இடம் சர்ச்சைக்குரியதானது. எனவே, நீதி மன்றம் “சர்ச்சைக்குரிய இடம் இருக்கும் நிலையிலேயே தொடரும்” என்று அறிவித்தது. பின்னர் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம்? என்றும் ஆராய முற்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்வதென்ன? என்றால், நாடு சுதந்தரம் அடைந்த போது எந்தெந்த இடங்களில் மதவழிபாட்டுத் தலங்கள் இருந்ததோ அது அப்படியே தொடரும் என்றது. சுதந்தர நாட்டில் சட்டத்தை அமல்படுத்திய நாளைக் குடியரசு நாள் என்கிறோம். இந்நாளுக்குள் 1950 சனவரி 16 அன்றே பாபர் மசூதியைச் சர்ச்சைக்குரிய இடமாக அறிவித்தது நீதிமன்றம். வரைவு செய்யப்பட்ட சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குள், மூன்று வாரங்களில் நீதிமன்றம் முந்திக் கொண்டது. இதனால், முன்னே சொன்ன எந்தெந்த இடங்களில் எப்படி இருந்ததோ அது அப்படியே இருக்கும் என்பதை, இந்நீதிமன்றம் தகர்த்து விட்டது.

அயோத்தி வழக்கின் போக்கறிந்த நரசிம்மராவ் அரசு, “வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்” என்று Places of Worship (Special Provision) Act 1991 என்ற சட்டம் கொண்டு வந்தது.

இச்சட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்ட ஆர்.எசு.எசு. உள்ளிட்ட சகோதர அமைப்புகள் தலைவர் அத்வானி தலைமையில் இரத யாத்திரை தொடங்கினர். நாடு முழுதும் சுற்றி வந்து கரசேவகர்களை அழைத்துக் கொண்டு 1992 திசம்பர் 6 ஆம் நாளன்று அயோத்திக்குள் நுழைந்தனர். பாபர் மசூதி மேலேறி கரசேவை செய்து சிதைத்தனர்.

சிதைவுற்று கால் நூற்றாண்டுக்கு மேல் 2019 நவம்பர் 9ஆம் நாளில் வழங்கிய தீர்ப்பில் மசூதியை இடித்தது சட்ட விரோதம் என்றனர். இரத யாத்திரையின் போது, இதே உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடையை மீறியதற்காக, ‘சட்ட விரோதம்’ என்று தீர்ப்பளித்தனரோ!

இத்தீர்ப்பு, வழக்கின் வாதுரைகள், நம்பிக்கை, அய்தீகம், தொல்லியல், வருவாய் ஆவணங்கள் போன்றவைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தாலும் மதக் கலவரங்கள் வெடிக்கக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.

முடிவாக

நள்ளிரவில் நிறுவப்பட்ட சிலைக்கு கோவில் கட்ட அனுமதித்தது என்பது, வால்மீகி இராமனை கடவுள் அவதாரமாக்கியது போன்றுள்ளது. இதையே இன்றைய அயோத்தி அரசியலாகப் பார்க்க நேர்கிறது. பெரியாரின் இராமாயண எதிர்ப்பு நிறைவுறும் போதில் தான் அயோத்தி அரசியலும் முற்றுப் பெறும் என்பதை அறிவோமே!

- தி.ச.குணசேகரன், திருக்கழுக்குன்றம்