நிலக்கோளத்தின் ஈர்ப்பு விசை இயற்கையாய் இருப்பது போல் தமிழ் மொழியின் ஈர்ப்புவிசை எப்போதும் இருக்கிறது என்பதற்குச் சான்று அண்மையில் நடந்து முடிந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு. மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் உள்நோக்கம், சந்தர்ப்ப வாதம் போன்றவை ஒரு பக்கம் இருந்தாலும் வெள்ளம் போல் திரண்ட மக்கள் திரளின் உணர்ச்சி, மொழி உணர்ச்சியே! அண்மைக் காலமாக மொழி உணர்ச்சி இன உணர்ச்சி ஆகியவை கூடுதலாகி வருவது கண்கூடு. கண்காட்சியில் அதிகமான மக்கள் குவிந்த பகுதி சிந்து வெளி அரங்கு. ஆய்வரங்க அமர்வுகளில் மிக அதிகமானோர் செறிந்த அமர்வுகள் இணைய மாநாட்டு அமர்வுகள்.

            இன்றையத் தமிழர்களின் தேடல், தங்களின் தொன்மை அடையாளத்தைக் கண்டறிவதிலும், அதே வேளை தங்கள் மொழியைப் புத்தாக்கப்படுத்திக் கொள்வதிலும் இருக்கிறது என்பதைத்தான் இவ்விரு நிகழ்வுகளும் உணர்த்துகின்றன.

            இதுவரை எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடந்திருக்கின்றன. ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு மாறாக ஒரு எண்ணிக்கையும் குறிப்படாமல் உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டை கலைஞர் கருணாநிதி நடத்த முன்வந்ததற்கு ஒரு முன் கதை உள்ளது.

            தினமணி நாளேடு 18.09.2009 அன்று ஓர் ஆசிரியவுரை தீட்டியிருந்தது. அதில் பதினான்கு ஆண்டுகளாக உலகத் தமிழ் மாநாடு நடத்தாமல் கிடப்பில் போட்டதைச் சுட்டிக் காட்டி, உடன் மாநாடு நடத்துமாறு கூறப்பட்டிருந்தது.

            ஈழப் பேரவலத்திற்கு மறைமுகமாகத் துணை போனவர் என்று தமிழ்கூறும் நல்லுலகில் கெடுபுகழ் பெற்றுள்ள கருணாநிதி தமது கறையை ஒப்பனை செய்து மறைக்கும் உத்தியாக உலகத் தமிழ் மாநாடு நடத்த ஆர்வப்பட்டார். தினமணி ஆசிரியவுரை வெளிவந்த அதே 18.09.2009இல் சென்னையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு 2010 சனவரி கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும் என்று அறிவித்து விட்டார். மாநாட்டை நடத்தும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

            மாநாடு பற்றிய அறிவிப்புகள் வெளியானபின் பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் நொபுரு கராசி மாவை தமிழக அரசு தொடர்பு கொண்டது. அவர் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமெனில் அதற்கான ஆய்வுத் தலைப்புகள், அத்தலைப்புகளில் கட்டுரை எழுதுவோர் போன்ற வற்றை முடிவு செய்து பன்னாட்டு அறிஞர்களை அழைத்து மாநாடு நடத்தக் குறைந்தது இரண்டாண்டு கால அவகாசம் வேண்டும், நாலைந்து மாத அவகாசத்தில் நடத்த முடியாது என்று கூறி மறுத்து விட்டார். அதன் பிறகு 2010 சூன் மாதம் நடத்தலாம் என்று முதலமைச்சர் சொன்னார். அந்தக் கால அவகாசமும் போதா தென்று மறுத்துவிட்டார் கராசிமா.

            இனி, நடந்து முடிந்த மாநாடு பற்றிய நிறை-குறை, எதிர்காலக் கடமைகள் ஆகிய வற்றைப் பார்ப்போம்.

மாநாட்டின் நிறை - குறை

            மாநாட்டுக்கான உள்கட்ட மைப்பு வசதிகள், வரவேற்பு முறைகள், ஆய்வாளர்களைக் கவனித் தல் போன்றவற்றில் முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசுத் துறையினர் ஆகியோரின் திட்டமிடலும் செயலாக்கமும் சிறப்பாக இருந்தன.

            மாநாட்டு ஆய்வரங்குகள், இணைய ஆய்வரங்குகள் ஆகிய வற்றின் உள்கட்டமைப்புகளை மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் நவீன வசதிகளுடனும் பன்னாட்டுத் தரத்தில் அமைத்திருந்தனர். மா பெரும் பொது அரங்கப் பந்தலும் எழிலார்ந்து எடுப்பாக இருந்தது.

            கண்காட்சி, தமிழர் நாகரிகத் தின் தொன்மையை, வரலாற்றை, எடுத்தியம்புவதாக அறிவார்ந்த முறையிலும், ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையிலும், அனை வரையும் ஈர்க்கும் காட்சிப்படுத்த லுடனும் அமைக்கப்பட்டிருந்தது. அதைக் காண மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசையாக மக்கள் மணிக் கணக்கில் காத்து நின்றதும், மாநாடு முடிந்த பின்னும் சூலை 4ஆம் நாள் வரை அக்கண்காட்சி நீட்டிக்கப் பட்டதும் அதன் சிறப்புகளுக்குச் சான்றுகள். “இனியவை நாற்பது” என்ற பெயரில் தமிழர் வரலாற்றை யும் பெருமைகளை யும் சித்தரிக்கும் ஊர்வல ஊர்திக் காட்சிகள் எடுப் பானவை; எழிலார்ந்தவை; பய னுள்ளவை. இணையதள ஆய்வ ரங்கு தனியே வைத்தது மிகச் சிறப்பு.

நெருடல்கள்

 23.06.2010 முற்பகல் நடந்த தொடக்க விழா உரைகளிலிருந்து 27.6.2010 மாலை நடந்த நிறைவு விழா உரைகள் வரை பொது அரங்கில் சரடு போல் ஒரு கருத்து தொடர்ந்தது.

            இந்தியாவின் குடியரசுத் தலைவர் திருவாட்டி பிரதீபா தேவி சிங் பட்டீல் செம்மொழி மாநாட் டைத் தொடங்கி வைத்துப் பேசும் போது, கூறிய ஒரு கருத்தைக் கவனிக்க வேண்டும்.

            “தமிழர்களின் வரலாறு நமது தேசத்தின் பெருமை. நமது தேசத்தின் வளமான ஓவியக் கலை, இசை, கட்டடக் கலை, இலக்கியம் ஆகியவற்றின் வளமான அடை யாளங்களோடு இந்தியாவை ஒரு தேசமாக வடிவமைப்பதிலும் முன்னேற்று வதிலும் தமிழர்களின் பன்மை, சகிப்புத் தன்மை, மனித நேயம் ஆகியவை பல வழிகளில் பங்காற்றியுள்ளன”(தி இந்து, 24.07.2010).

            குடியரசுத் தலைவரின் இக்கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால் தமிழர் சிறப்புகளை எடுத்துச் சொல்லி நம்மைப் பாராட்டுவது போல் தெரியும். கூர்ந்து நோக்கினால், தமிழர் களையும் தமிழ்ப் பண்புகளையும் இந்தியத் தேசியப் பண்புக் கூறுகளுடன் கலந்து கரையச் செய்வது புரியும்.

            மாநாட்டில் நிறைவுரை யாற்றிய இந்திய நிதியமைச்சர் பரணாப் முகர்ஜி “தமிழர்கள் தங்கள் தலைசிறந்த மரபின் மூலம் இந்தியாவின் வரலாற்றுச் செழு மைக்குச் சிறப்பான பங்களிப் பைத் தந்துள்ளனர்” என்று கூறினார். (தினத்தந்தி 28.06.2010)

            கலைஞர் கருணாநிதியும் “இந்தோ - ஆரியப் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தமிழ் மொழி பங்களித்திருக்கிறது” என்று தமது உரையில் குறிப்பிட்டார்.   

            முனைவர் வா.செ.குழந்தை சாமி தமது உரையில், “ஐரோப்பியப் பண்பாட்டிற்கு இலத்தீன் மொழியும் கிரேக்க மொழியும் பங்களித் திருப்பது போல் இந்தியப் பண்பாட்டிற்கு வடமொழியும் தமிழ் மொழியும் பங்களித்திருக்கின்றன. இந்தியப் பண்பாடு வடமொழி மற்றும் தமிழ் மொழி என்ற இரண்டு தூண்களின் மேல் நிற்கிறது” என்றார்.

            மேற்கண்டவர்களின் கருத்து கள், தமிழர் பண்பாடு, தனித்தன்மை ஆகியவற்றை இந்தியப் பண்பாடு என்ற இல்லாத கற்பனைப் பண் பாட்டில் கலக்கச் செய்யும் நோக்கம் கொண்டவை. அவர்களின் அனைத் திந்திய அரசியல் தேவைகளுக்கு உகந்த வகையில் தமிழர்களை இந்திய தேசியத்தில் கலக்கச் செய்யும் உத்தி இது.

            இந்தியப் பண்பாடு என்பதும் இந்திய தேசியம் என்பதும் ஆரியப் பார்ப்பனியம் தவிர வேறு அல்ல.

இந்துப் பண்பாடா?

            மாநாட்டில் “கலைஞர் செம்மொழி விருது” பெற்ற பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலா ஆய்வுரை நிகழ்த்தும் போது கூறியவை, திராவிட மாயை பக்கமும் - இந்துப் பண்பாடு பக்கமும் எந்த அளவு அவர் சாய்ந்துள்ளார் என்பதைக் காட்டிற்று. அவர் முன்வைத்த “சிந்துவெளி எழுத்துச் சிக்கலுக்கான திராவிடத் தீர்வு” ஆய்வுக் கட்டுரையிலும் அவர் உரையிலும் சாரமாக அவர் கூறியவை வருமாறு:

“அரப்பா (சிந்துவெளி) மொழி திராவிட இன மரபைக் கொண்டது. இப்பொழுது நடு மற்றும் தென் னிந்தியப் பகுதிகளில் 36 திராவிட மொழிகள் பேசப்படுகின்றன.

“வரலாற்றியல் மொழி அறிஞர்கள் அரப்பா மக்கள் ஒரு திராவிட மொழியைத் தான் பேசினார்கள் என்று கருதுகிறார்கள்.

“சிந்து வெளி எழுத்துகள் அத்தி மரங்களுடன் தொடர்புடைய வளப்ப வழிபாட்டைக் குறிப்பவை யாக உள்ளன. இந்துக் கதைகளில் மையமாக உள்ள வானவியல் மற்றும் காலக் கணிப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. இந்து மற்றும் பழந்தமிழ்ச் சமயங்களின் முகாமையான கடவுள் உருவங் களைக் கொண்டுள்ளன“ – A Dravidian solution to the Indus Script Problem – Asko Parpola..

            பர்போலா இரண்டு குழப்பங்களைச் செய்கிறார். ஒன்று சிந்துவெளி சமயக் கருத்துகள் இந்து மதக் கருத்துகள் என்று கூறுவது. இன்னொன்று சிந்து வெளி மொழி திராவிட மொழி என்று வரை யறுப்பது.

            அவர் பின்லாந்து நாட்டின் ஹெல்சிங்கிப் பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் துறையில் வடமொழி (சமற்கிருதம்) ஆய்வு செய்த போது, அதன் வழித் தமிழ் மொழியையும் படிக்கத் தொடங்கி ஆய்வுகள் மேற்கொண்டவர் ஆவார். அதனால் அவர் தமிழர்களின் சிந்துவெளி ஆன்மீகம் ஆரியத் திலிருந்து மாறுபட்டது என்பதை யும், ஆரியர் சிந்துவெளி நாகரிக நகரங்களை அழித்தவர்கள் என்பதையும் உரியவாறு உணர்ந்து கொள்ளவில்லை.

            சிந்து வெளிச் சின்னங்களில் “முருகன்” இருப்பதாக பார்போலா ஆய்வு செய்து கூறுகிறார். அந்த முருகனுக்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மிகவும் பிற்காலத்தில் கதைகள் கட்டி முருகனை வட நாட்டுடன் இணைத்து “சுப்ரமணியன்” ஆக்கி னர்.

            ஐரோப்பியர் உருவாக்கிய “இந்து” என்ற செயற்கை ஆன்மீகத் தலைப்பற்குள் தமிழர்களையும் இணைத்தனர். சிவ மதம், வைணவ மதம் என்று தமிழர்கள் தங்களைக் குறிப்பட்டுக் கொள்ளும் வழக்கம் ஐம்பதாண்டுகளுக்கு முன் வரை இருந்தது. ஆனால், அவர்கள் தங்களை இந்துக்கள் என்று ஆவணங்களில் பதிவு செய்வ தில்லை. இங்கு நிலவும் சைவ சித்தாந்தம், வைணவத் தென்கலை போன்றவை வடநாட்டு வேத மரபுகளிலிருந்து வேறுபட்டவை.

            தமிழ்ப் பண்பாடு ஆரியப் பண்பாட்டுடன் மோதுமே தவிர இணையாது. நாலாயிரம் ஆண்டு களாக இணையவில்லை.

தி.மு.க.வின் அரசியல் தேவை

            வட இந்தியத் தலைமையின் கீழ் இயங்கும் மிதவாத இந்துத்துவாக் கட்சியான காங்கிரசுடனும், தீவிரவாத இந்துத்துவா கட்சியான பாரதிய ஜனதாவுடனும் அவ்வப் போது கூட்டணி சேர்ந்து ஆட்சியிலும் பங்கு வகித்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

            கலைஞர் கருணாநிதி அடிக்கடி இந்திய தேசிய ஒருமைப் பாடு பற்றி கவலையோடும் கரிசனத்தோடும் பேசி வருகிறார்.

            நிகழ்காலத்தில் மட்டுமின்றி எதிர்காலத்தில் தம் குடும்ப வாரிசு களுக்கு அனைத்திந்திய அரசியல் தான் சிறந்த பாதுகாப்பு என்று கருணாநிதி கருதுகிறார். தமிழ்த் தேசியம் வீச்சுப் பெற்றால் போராட் டமும் புரட்சியும்தான் தமிழக அரசியலை இழுத்துச் செல்லும். அந்த நிலையில் தலைமை தாங்கும் ஆற்றலோ, தாக்குப் பிடிக்கும் வலுவோ தம் வாரிசுகளுக்கு இல்லாமல் போகலாம் என்று கருணாநிதி கவலைப் படுகிறார். இதனால் அவர் இந்திய தேசியத்தின் பக்கம் இணைந்துவிட்டார்.

            எனவே, கலைஞர் கருணா நிதி, தமிழர்களின் மனநிலையை வரலாறு, மெய்யியல் போன்ற துறைகளில் மெல்ல மெல்ல, “இந்திய தேசிய”த்தை நோக்கி நகர்த்துகிறார். தமிழர்கள் “இந்திய” மனநிலை பெற்றுவிட்டால் அவர்கள் வடநாட்டு அரசியல் தலை மையை ஏற்றுக் கொள்வதில் தடங்கல் இருக்காது என்று கருதுகிறார்.

            தமிழ் வேறு தமிழர் வேறு அல்ல. இரண்டும் தனிப் பிரிக்க முடியாத ஒற்றை மூலப்பொருளில் அடங்கியுள்ளன. இன உணர்ச்சியில் ஏமாந்து போனால் மொழி உரிமையில் ஏமாந்து போவோம். மொழி உணர்ச்சியில் ஏமாந்து போனால் இன உரிமையில் ஏமாந்து போவோம். தமிழர்களைப் பொறுத்தவரை இனம் உடல் போன்றது. மொழி உயிர் போன்றது.

            ஆரியத்திற்கும் தமிழுக்கும் இடையே இன அடிப்படையிலும் உடன்பிறப்பு உறவு கிடையாது; மொழி அடிப்படையிலும் உடன் பிறப்பு உறவு கிடையாது. ஆரி யத்துடன் உடன்பிறப்பு உறவு பூண்டால் அதுவே தமிழ் இன அழிவுக்கும், தமிழ் மொழி அழிவுக்கும் வழிவகுக்கும்.

திராவிட மாயை

            கோவைச் செம்மொழி மாநாட்டில் “திராவிடக்” கூச்சல் கூடுதலாகவே ஒலித்தது. தமிழா ராய்ச்சியில் திராவிடத்தை கலக்கச் செய்த “பெருமை” கால்டுவெல் அவர்களையே சாரும்.

            நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்து வெளிக்கு வந்த ஆரியர்கள், தமிழ், தமிழர், என்பதை ஒலிக்கத் தெரியாமல் திரமிள், திரமிள, திராவிட என்று திரிபாக ஒலித்தனர். அதை அப்படியே “திராவிட” என்று தங்கள் நூல்களில் குறித்தனர். இதைக் கால்டுவெல் பிழையாகப் புரிந்து கொண்டு மூலத் திராவிட மொழி ஒன்று இருந்ததாகக் கருதிக் கொண்டார் என்று மொழி ஞாயிறு பாவாணர் குறிப்பிடுகிறார்.

            செம்மொழி மாநாட்டில் இதுதான் சாக்கு என்று கருதி அளவுக்கு மீறி திராவிடத்தைத் திணித்தார் கருணாநிதி. சிந்துவெளித் தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்றார் அவர்.

            “திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816 இல் எல்லீசு, அவரைத் தொடர்ந்து 1856இல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர். திராவிட இனத் தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர். ரவீந்திரநாத் தாகூர், திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப் படையை அலுங்காமல் காத்தது என்று கூறியுள்ளார். சோவியத் நாட்டு அறிஞர் சாகிரப் என்பவர், வட இந்திய திராவிட மொழி களையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டவர்” என்கிறார் கருணாநிதி (மாநாட்டுப் பேச்சு, தினத்தந்தி 25.06.2010).

            கால்டுவெல் வைத்த தவறான பெயரை அப்படியே ஏற்றுக் கொண்டு மேலை நாட்டு அறிஞர் களும், தாகூர் போன்றோரும் “திராவிடம்” பற்றிப் பேசுகின்றனர். அவர்கள் குறிப்படுவதெல்லாம் தமிழைத்தான். தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் அரப்பா எழுத்துக் களுடனோ, தமிழகத்தில் கண்டெடுக் கப்பட்ட செம்பியன் கண்டியூர் கற்கோடரி எழுத்துடனோ, ஆதிச்ச நல்லூர் மட்பாண்ட எழுத்துடனோ ஒத்துப் போகவில்லை. பிறகு எங்கிருந்து வந்தது திராவிடம்? கால்டுவெல் கைகாட்டி விட்ட தவறிலிருந்து வந்தது.

            திராவிடம் என்ற பெய ரையும் மொழி சார்ந்த கருத்தியலை யும் மறுத்து ஏற்கெனவே பாவாண ரும் இப்போது பல அறிஞர்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளனர். அவற்றைக் கணக்கில் கொண்டு கோவைச் செம்மொழி மாநாட்டில் சிந்து வெளித் தமிழ் எழுத்தைத் திராவிட எழுத்து என்று சொல்வதையும் தமிழ் இனத்தை திராவிட இனம் என்று சொல்வ தையும் மறுத்து ஆய்வரங்கில் தமிழக அரசே விவாதங்களைக் கட்டமைத் திருக்க வேண்டும். தமிழ் தமிழர் அடையாள மீட்பில் இது முகாமையான, உடனடித் தேவை யான ஆராய்ச்சிப் பணி. அதைச் செய்வதை விடுத்து முதலமைச்சர் கருணாநிதி தம் அரசியல் வசதிக்கேற்ப திராவிடக் கூச்சலின் ஒலி அளவை அதிகப் படுத்தினார்.

அது என்ன தமிழ் ‘பிராமி’?

            ஆய்வாளர் ஐராவதம் மகா தேவன் ‘தமிழ் பிராமி எழுத்து’ என்று ஒரு புரியாத பெயரை வைத்து அழைக்கின்றார். அது என்ன ‘பிராமி’?

            கி.மு.மூன்றாம் நூற்றாண் டைச் சேர்ந்த அசோக மன்னன் ‘பிராமி’ எழுத்தில் தன் கல்வெட்டு களைச் செதுக்கச் செய்தான். அந்த மூன்றாம் நூற்றாண்டு எழுத்துத்தான் இந்தியாவிலேயே மிகப் பழமையான எழுத்து என்று ஆய்வுலகில் ஒரு சாரார் கூறுகின்றனர். அதையே ஐராவதம் மகாதேவன் ஏற்றுக் கொண்டு தமிழின் பழங்கால எழுத்துகளைத் தமிழ் பிராமி என்று கூறுகிறார். அசோகன் பிராமி யிலிருந்து தமிழ் எழுத்து உருவானதாக இவர் சொல்கிறார்.

            மயிலாடுதுறை அருகே உள்ள செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட கற்கோடரியில் உள்ள எழுத்தும் அரப்பா (சிந்து வெளி) எழுத்தும் ஒன்றுபோல் உள்ளன என்கிறார் இப்போது ஐராவதம் மகாதேவன். கற்கோடரி எழுத்து கி.மு.ஆயிரத்தைச் சேர்ந்தது என்றும் அவர் கூறுகிறார். கி.மு. ஆயிரம் என்றால் அசோகன் எழுத்துக்கு முந்தையது அல்லவா அது. அது அக்காலத் தமிழ் எழுத்து தானே! அதை ஏன் பிராமி என்று அழைக்க வேண்டும்? தமிழுக்கு முதன்மை வந்துவிடக் கூடாது என்ற தயக்கம்தான். அது தமிழ் இல்லை என்று மறுக்க முடியாததால் “தமிழ் பிராமி” என்று கூறி இரட்டைக் குதிரை சவாரி செய்கிறார் மகாதேவன்!

            இதே செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் தொல்லியல் அறிஞர் சு.இராசவேலு அசோகன் பிராமிக்கு முந்தையது தமிழ் எழுத்து என்றும், தமிழிலிருந்துதான் அசோகன் பிராமி உருவானது என்றும் ஆய்வுத்தாள் முன்வைத்துப் பேசியுள்ளார். (சு.இராசவேலு அவர்களும் தமிழ் எழுத்தின் காலத்தை மிகவும் குறைத்துக் குறிப்படுகிறார் என்பது வேறு செய்தி.)

            இந்தியத் துணைக் கண்டத்தில் சிந்து வெளி நாகரிகத்திற்கு முந்தைய நாகரிகம் குமரிக்கண்ட (லெமூரியா) தமிழர் நாகரிகமே. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத் துள்ள அகழ்வாய்வுத் தாழிகள், மட்பாண்டங்கள், உலோகக் கருவிகள் அகியவற்றில் உள்ள எழுத்துகள் சிந்து வெளி நாகரிகத் திற்கும் முற்பட்டவை. ஆதிச்ச நல்லூர் எழுத்துகளும் சிந்துவெளி எழுத்துகளும் ஒத்த தன்மையில் உள்ளன என்று அறிஞர்கள் கண்டுள்ளனர்.

            இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் நாகரிகமாக விளங்கிய தமிழர் நாகரிகத்தின் அகழ்வுச் சான்றுகளைப் பிற்கால - வேத கால இலக்கிய வடிவங்களுடன் இணைத்தும், “திராவிடத்” திரி பினங்களின் சான்றுகளுடன் பிணைத்தும் பேசுவது தமிழர் தனித் தன்மையை அடையாளங் காட்டா மல் குழப்பி விடுவதாகும்.

ஆதிச்சநல்லூர் - பேரூர் அகழாய்வுகள்

            தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு, நொய்யல் கரையிலுள்ள பேரூர் அகழாய்வு போன்றவற்றிற்கு உரிய முகாமை அளித்து மாநாட்டில் ஆய்வு செய்யவில்லை. ஆதிச்சநல்லூர் பற்றி இரு ஆய்வுக்கட்டுரைகள் வந்தன. சிந்துவெளி ஆய்வுக்குத் தந்தது போல் இவ்விரு ஆய்வுக் கட்டுரைகளுக்கும் உரிய முகாமை அளிக்கப் படவில்லை.

            பேரூரில் அகழ்ந்தெடுக்கப் பட்ட சுட்ட களிமண் தகடுகள் கி.மு.3300ஆம் ஆண்டுக்கு உரியவை என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். இக்களிமண் தகடு களிலுள்ள எழுத்துகள் சிந்து வெளி எழுத்துகளுடன் ஒத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். உண்மை கள் இவ்வாறிருக்க பிராக்கிருத (பிராமி) மொழியிலிருந்து தமிழ் மொழி எழுத்து வடிவம் பெற்றது என்ற கருத்தில் ஐராவதம் மகாதேவன் கூறுவதை வன்மை யாகக் கண்டிக்கிறார் அறிஞர் குணா. (கட்டுரை: செம்மொழி மாநாடாம் - குணா).

            செம்மொழி மாநாட்டில் ஆய்வுரை வழங்கிய கல்வெட்டாய் வாளர் ஒய்.சுப்பராயலு கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பிராகிருத வணிகர் களிடமிருந்து தமிழ் வணிகர்கள் எழுத்தைக் கற்றுக் கொண்டு தமிழுக்கு வரிவடிவம் கொடுத்தனர் என்கிறார். (Archeology and the Cankam Literature with special Reference to Inscribed Pots and Herostones – y.Subbarayalu) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆய்வரங்கச் சிறப்பு மலர் பக். 134-166)

            ஆதிச்சநல்லூர் ஆய்வுக் கட்டுரையை ஆறு ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். அக்கட்டுரை ஆய்வரங்கச் சிறப்பு மலரில் 16 வரிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. (பக். 833) அவர்களின் ஆய்வு உரியவாறு கண்டுகொள்ளப் படவில்லை.

            தமிழ் எழுத்து வடிவத் திலிருந்துதான் பிராக்கிருதத்திற்கு எழுத்து வடிவம் போனது என்று கூறும் ஆய்வாளர் இராசவேலு போன்றோர் கருத்துகளுக்கு அம் மாநாட்டில் உரிய முகாமை தரவில்லை. அதே போல் உலகின் முதல் செம்மொழி என்ற ஆய்வுக் கட்டுரை வழங்கிய (மலர் பக்.659-661) ம.சோ.விக்டர் ஆய்வும் பத்தோடு பதினொன்றாகக் கவனிக் கப்படாமல் போனது. ஆனால் பிராக்கிருதத்திலிருந்துதான் எழுத்து வடிவம் தமிழுக்கு வந்தது என்று கூறும் ஐராவதம், சுப்பராயலு போன்றோர் கருத்துகளுக்கு மா நாட்டில் கூடுதல் முகாமை வழங்கப்பட்டது.

ஆய்வரங்கக் கட்டுரைகளின் அவலம்

            ஆய்வரங்கத்திற்கு 913 கட்டுரைகள் வந்தன என்று முதலமைச்சர் 28.06.2010 அன்று செய்தியாளர்களிடம் கூறினார். இக் கட்டுரைகளின் சுருக்கம் ஆய்வரங்கச் சிறப்பு மலரில் வந்துள்ளது.

            இக்கட்டுரைகளைத் தொகுக்க எந்த வரிசை முறையும் கடைப் பிடிக்கவில்லை. அவசரத்தில் அள்ளித் தெளித்த அலங்கோலமாகவே உள்ளது.

            அஸ்கோ பர்போலா, ஜார்ஜ் ஹார்ட்(வடஅமெரிக்கா), அலெக் சாண்டர் எம். துபியான்ஸ்கி(ரஷ்யா) பொற்கோ, எஸ்.என். கந்தசுவாமி, தினமலர் கிருட்டிணமூர்த்தி, ஒய்.சுப்பராயலு போன்றோர் சிலரின் கட்டுரைகளுக்கு கலந்தாய்வரங்கம் என்ற தலைப்பில் ஆய்வரங்கச் சிறப்பு மலரில் முன்வரிசை இடமும் கொடுத்து கட்டுரைகளை முழுமையாக வெளியிட்டுள்ளனர். இவற்றிற்குப் பின் ஆய்வுச்சுருக்கம் என்ற தலைப்பில் இதர அனைத்துக் கட்டுரைகளையும் மானாங் காணியாக (கண்டமேனிக்கு) திணித்துள்ளனர்.

            அச்சமில்லாமல் செய்யப்படும் பிழைதான் அச்சுப் பிழை என்று புதிய பொருள் தரும் வகையில் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. ஐராவதம் மகாதேவனின் ஆங்கிலக் கட்டுரைத் தலைப்பு Adam and Puram… என்று தொடங்குகிறது. அகம் மற்றும் புறம் என்று பொருள்படும் Akam அகம் என்பதைத்தான் ஆதம் என்று அச்சிட்டுள்ளனர். (மலர் பக். 781)

            மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்டு அரைப்பத்தாண்டு ஆகிறது என்று ஒரு கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. (மலர் பக்.782) அரைநூற்றாண்டு என்பதைத்தான் (Half a Centuary) அரைப்பத்தாண்டு (Half a Decade) என்று தவறாக அச்சிட்டுள்ளார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை அச்சுப் பிழை என்று சொல்ல முடியாதல்லவா?

            பல கட்டுரைகள் பிளாஸ்டிக் குப்பைகளாகவும், சில கட்டுரைகள்; தமிழர், தமிழ் உரிமைக்கு எதிராகவும் உள்ளன. “ஆண்டாள் பாடலில் கண்ணன் திருநாமங்கள்” என்று ஓர் “ஆய்வு”க் கட்டுரை. ஆன்மிக இலக்கியங்களை ஆழ்ந்து ஆய்வு செய்வது தேவை. ஆனால் ஆண்டாள் பாடலில் கண்ணன், கோபாலன் என்று எத்தனை இடங்களில் குறிக்கப்பட்டிருக் கின்றன என்று சொல்வதற்கு “ஒன்று, இரண்டு...” எண்ணத் தெரிந்திருந்தால் போதும். ஆய்வு தேவையில்லை. “பாலக்காட்டு ஐயர்களின் துன்பங்கள்” என்றொரு ஆங்கிலக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

            இவற்றைப் போன்ற ஆய்வரங்கத்திற்குள் நுழையத் தகுதியற்ற கட்டுரைகளை ஜாக்கி வைத்துத் தூக்கி வந்து போட்ட வர்கள் யார்?

            கலைஞர் கருணாநிதியின் இலக்கு ஆய்வரங்க வெற்றி அன்று; அவரின் வெற்றியே!

            913 ஆய்வுக் கட்டுரைகள் வந்ததாக அவர் பெருமைப்பட்டுக் கொள்வது இந்த வகைப் பெருமைதான்.

கருணாநிதி எத்தனை கருணாநிதி

            கலைஞர் கருணாநிதியின் ஆக்கங்கள் குறித்து “ஆய்வு” செய்த கட்டுரைகள் சற்றேறக் குறைய 35 இருக்கும். ஆனால் அவரை மட்டுமே தலைப்பாக்கி ஆய்வு செய்த கட்டுரைகள் 24. அவை வருமாறு:

1. கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப் புதினங்களில் ஊடிழைப் பிரதிகள் - சி. காந்தி

2. பராசக்தி, மனோகரா - தமிழ்த் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்ப டுத்திய படங்கள் ஓர் ஆய்வு - கா.வெ.சே.மருதுமோகன்

3. மு. கருணாநிதியின் சோக்ரடீஸ் திரைநாடகமும் சோக்ரடீஸ் வழக்கு விசாரணையும் - ஒரு சமூகத் தத்துவ விசாரணை - எம்.எஸ்.என். அனீஸ்

4. மாண்புமிகு டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நாடகங்கள் ஓர் ஆய்வு - ஸ்டெல்லா ஸ்டான்லி

5. கலைஞரின் குறள் வெளிப் பாட்டுக் கோட்பாடு - டாக்டர் நசீம் தீன்

6. வான்புகழ் வள்ளுவமும் வையம் புகழ் கலைஞரும் - அ. மருதன்

7. தமிழ் ஆட்சி மொழி வரலாற்றில் முதல்வர் கலைஞரின் பங்களிப்பு - க. வெற்றிவேல்

8. கலைஞரின் சிலப்பதிகார நாடகம் - ஆம்பூர் பி.மணியரசன்

9. கலைஞரின் சிலப்பதிகாரத்தில் நாடகக் கூறுகள் - கோ. கருணாகரன்

10. சிலம்பை மீட்டுருவாக்கம் செய்யுங்கால் கலைஞரின் கைச் சிலம்பு (உள்ளிரு பரல்கள்) ஒலிப்ப தெவற்றை? ஏன்? எங்ஙனம்? - பா. தமிழ்ச்செல்வி

11. கலைஞர் மு.கருணாநிதியின் கடிதங்களில் இலக்கிய ஆளுமை - மு.அன்புச் செல்வி

12. Comparitive Aesthetics, the Smile and Imagery in the work of Thiruvaluvar, Kambar, Kalidasan, Shakespeare, and Kalaignar - வி. அயோத்தி

13. கலைஞரின் பேசும் கலை வளர்ப்போம் - பழனிராசன்

14. தொல்காப்பியக் கலைஞர் - வெ. திருவேணி

15. தொல்காப்பியப் பூங்கா கலைஞர் உரைத்திறன் - நாகூர் கனி

16. தொல்காப்பியப் பூங்காவில் கலைஞரின் கவித்துவமலர்கள் - வ. முகமது யூனுஸ்

17.       தொல்காப்பியப் பூங்காவில் கலைஞரின் மொழிநடை - அ. இரவிச்சந்திரன்

18.       முத்தமிழ் வித்தகர், மூதறிஞர் கலைஞர் மு.கருணா நிதியின் சங்கத்தமிழில் மொழி நடைக் கூறுகள் - சோ. முத்தமிழ்ச் செல்வன்

19. கலைஞரின் கவிதைகளில் தமிழ்மீட்சியும் தமிழின மீட்சியும் - கடவூர் மணிமாறன்

20. கலைஞர் கவிதைகளில் திராவிட வியல் சிந்தனைகள் - மா. மீனாட்சி சுந்தரம்

21. மு.கருணாநிதியின் பாயும் புலி பண்டாரவன்னியன் இலக்கியத் திறன் - சுசீலா கோபாலகிருஷ்ணன்

22. கலைஞரின் இலக்கிய நெறி ஒரு கண்ணோட்டம் - கருவை பழனிச் சாமி

23. பொன்னர் சங்கர் நாவலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள் வழி உணர்த்தப்படும் சமுதாயச் சிந்த னைகள் - கு.செ. ருக்மணி

24. கலைஞர் மு.கருணாநிதியின் படைப்புகளில் மரபும் மரபு மீறலும்- பெ. கந்தன்

            இப்பட்டியலில் இடம் பெறாமல் மேலும் சில “கலைஞர் ஆய்வுகள்” இருக்கலாம்.

            ஆய்வு என்பது செய்திகளின் தொகுப்போ, தரவுகளின் தொகுப் போ அன்று. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மேற்கோள் களை அடுக்குவதும் அன்று. தரவுகளையும், மேற்கோள்களையும் வைத்துக் கொண்டு இவர் என்ன புதிதாகச் சொன்னார் என்பதே ஆய்வின் சாரம்.

            இந்த அளவு கோலைப் பொருத்தித் திறனாய்வு செய்தால் மாநாட்டில் படிக்கப்பட்ட மொத்த ஆய்வுக் கட்டுரைகளில் நூற்றுக்குப் பத்து தேறலாம். இதில் கலைஞர் கருணாநிதி குறித்த ஆய்வுக் கட்டுரைகள் கலைஞரின் படைப்புகளைப் போலவே சொற்கூட்டங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்!

            அடுத்த தலைமுறைக்கும் கலைஞர் பாணி கையளிக்கப் படவேண்டுமல்லவா! இதோ கனி மொழி படைப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைப் பட்டியல் :

1. கவிஞர் கனிமொழியின் கவிதைகளில் பெண்மன உணர்வுச் சித்திரம் - வெ. கலைச்செல்வி

2.         கனிமொழியும் கவிதை மொழியும் - பெ. பகவத் கீதா

3.         கனிமொழி - கவிதைமொழி - ஏ. ஹாஜா மொகைதீன் மற்றும் சா.அகத்தியன்

            மூப்பு - உடல் நலிவு ஆகியவற்றால் களைப்படையாமல் கலைஞரை வைத்துக்கொள்ளும் சிகிச்சைக்குப் பெயர் ‘புகழ்ச்சிச் சிகிச்சை’ என்று சொல்லலாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஒட்டுண்ணி கல்வியாளர்களும் காக்கைப்பாடிகளும் ஆவர்.

            ‘சூரியனுக்கே ஒளி கொடுத்தவர் கலைஞர்?’ என்று ஒரு குரல் கரைந்தது. ‘நாளுக்கு நாள் நாளுக்கு நாள் கலைஞர் சிறகு விரிகிறது; ககனம் சிறிதாய்த் தெரிகிறது’ என்று இன்னொரு கவிஞர் பாடினார்.

            சிறப்புச் சிகிச்சை முகாமை மறைப்பதற்கான மூடுதிரையாக கோவை மாநகரில் தி.மு.க. கொடி கட்டக் கூடாது. பதாகைகள் வைக்கக் கூடாது என்று அன்புக் கட்டளையிட்டார் கருணாநிதி.

            “கலைஞரின் குடும்பத்தைச் சேர்ந்த 2,632 பேர்க்கு ‘தங்க அனுமதிச் சீட்டு’ (கோல்டன் பாஸ்) கொடுத்து அவர்களை மாநாட்டிலும் தங்குமிடங்களிலும் மரியாதையுடன் கவனிக்க 90 புரோட்டோ கால் அதிகாரிகளையும் அமர்த்தி யிருந்தார்கள்” என்கிறார் தமிழருவி மணியன். உலகம் கலைஞர்மயம்!

குறைகள் களைய...

            ஆட்சியில் உள்ளவர்களை, அதிகாரத்திற்கு வர வாய்ப் புள்ளவர்களை பொருந்தாப் புகழ்ச்சியில் குளிப்பாட்ட ஒரு கூட்டம் எப்பொழுதும் அணியமாக இருக்கும். அப் புகழ்ச்சிகளை அருவருக்கின்ற மனப்பண்பு ஒரு தலைவர்க்கோ, தலைவிக்கோ இருந்தால் ஒட்டுண்ணிகளையும் காக்கைகளையும் கட்டுப்படுத்த முடியும்.

            ஆய்வரங்கில் கட்டுரைக் கருத்துகளை முன்வைக்க நேரம் போதவில்லை என்ற குறையும், நோக்கர்கள் போதிய அளவு வரவில்லை என்ற குறையும் பரவ லாகக் காணப்பட்டது.

            ஆய்வரங்கத் தலைவர், கட்டுரை முன்வைப்போர் தவிர வேறு ஆள் இல்லாத அரங்குகளும் இருந்தன.

            இக்குறைகளைப் போக்க எதிர்காலத்தில் பின்வரும் திருத்தங் களைச் செய்து கொள்ளலாம்.

1. ஆய்வுக் கட்டுரைகளின் எண் ணிக்கையைத் தேவை, தரம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும்.

            ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பரிந் துரைகளின் பேரில் ஆய்வுக் கட்டுரைகளை அனுமதிக்கக் கூடாது.

2.         ஒரு நாளில் நடைபெறும் ஆய்வரங்குகளின் எண்ணிக்கை யைக் குறைக்க வேண்டும்.

3.         தொடக்கநாள் நிறைவுநாள் தவிர மற்ற நாள்களில் பொது அரங்க நிகழ்வுகள் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆராய்ச்சி மாநாட்டில் ஆராய்ச்சிக்குத்தான் முதன்மை இடம் கொடுக்க வேண்டும். முதலமைச்சர் யாராயிருந்தாலும் அவரை நடுவமாக வைத்து அத்தனை நாள்களும் பொது அரங்க நிகழ்வுகள் நடத்தக் கூடாது. பொது மக்கள் பங்குபெறும் நிகழ்வுகளை முதல்நாள் - கடைசி நாள் என்று சுருக்கிக் கொள்ள வேண்டும். (கண்காட்சிகள் மாநாடு நடைபெறும் அத்தனை நாள்களிலும் அதற்குப் பன்னரும் கூட நடை பெறலாம்.)

4.         புதிய கருதுகோள்களை உரு வாக்கக் கூடிய ஆராய்ச்சிக் கட்டுரை களுக்கு முதலிடம் வழங்க வேண்டும். அடுத்த நிலையில் புதிய செய்திகளைத் தருகின்ற கட்டுரை களுக்கு இடம் தரலாம். அதற்கு மேல் வேறுவகைக் கட்டுரைகளை அனுமதிக்கக் கூடாது.

மாநாட்டு அறிவிப்புகள்

            மாநாட்டின் நிறைவு நாளான 27.06.2010 அன்று மாநாட்டுத் தீர்மானங்களையும், அறிவிப்புகளையும் முதல்வர் கருணாநிதி அளித்தார்.

            மரபு வழிப்பட்ட மரஞ்செடி கொடிகள், விலங்குகள் ஆகிய வற்றைப் பாதுகாக்கும் “ஐந்திணைப் பூங்கா” எம்.எஸ் சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்படும் என்றார்.

            மரஞ்செடி கொடி உள்ளிட்ட உயிரினங்களின் பன்மையை அழிப் பதில் பெரும் பங்கு வகிப்பவர் எம்.எஸ்.சுவாமிநாதன். “பசுமைப் புரட்சி” என்று சொல்லப்பட்ட காலத்தில் பன்னாட்டு முதலாளி களின் வேதி (இரசாயன) உரங்களை மிகையாகப் போடச் சொல்லி இந்திய விளை நிலங்களை மலடாக் கியது மட்டுமின்றி, உயிரிப் பன்மையை அழிக்கச் செய்தவர் இவர்.

            மரபீனி மாற்றப் பயிர்களை உருவாக்கி நம் மரபுவழிப்பட்ட பருத்தி, நெல், கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றை அழித்து வரும் மான்சான்டோ குழுமத்தின் முகாமைக் குழு ஒன்றின் உறுப் பினராக இருக்கிறார் எம்.எஸ். சுவாமிநாதன். அவரை ஐந்திணை உயிர்மப் பாதுகாப்பிற்குக் காப்பாள ராக அமர்த்தியது ஆட்டுமந்தைக்குக் காவலாக நரியைக் அமர்த்தியது போல்தான்! மரபு வழிப்பட்ட உயிர்மங்களைப் பாதுகாப்பதில் கருணாநிதிக்கு உள்ள அக்கறையின் தன்மை இதிலிருந்தே தெரிகிறது.

            ஈழத்தமிழர் விடியலுக்கு இலங்கை அரசிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இன்னொரு தீர்மானம் கூறுகிறது. இரண்டக நாடகம் தொடர்கிறது என்பதைத்தான் இந்தத் தீர்மானம் உணர்த்துகிறது.

            விடுதலைப் புலிகள் அமைப்பே செம்மொழி மாநாட்டை வாழ்த்தியும், அம்மாநாட்டை யாரும் எதிர்க்கக் கூடாது என்று வலியுறுத்தி யும் செய்தி அனுப்பியுள்ளதாகக் ஓர் ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அது எடுபடவில்லை.

            தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்றொரு தீர்மானம் போடப்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டிய தீர்மானம். இதற்கான சட்டம் விரைவில் இயற்ற வேண்டும். தமிழ் வழியில் படித் தவர்களுக்குத்தான் முன்னு ரிமை என்பதை நிபந்தனையாக்க வேண் டும். தமிழை ஒரு மொழிப் பாடமாக எடுத்தவர்களுக்கு முன்னு ரிமை என்று ஆக்கிவிடக் கூடாது.

            நடுவண் அரசில் தமிழை அலுவல் மொழியாக்குவது, சென் னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடும் மொழி யாக்குவது, சமற்கிருதத்திற்குத் தருவதுபோல் தமிழுக்கும் வளர்ச்சி நிதி தருவது, அமைக்க உள்ள இந்தியத் தேசியக் கல்வெட்டியல் துறை தலைமை அலுவலகத்தைத் தமிழ்நாட்டில் நிறுவுவது, பூம்புகார், குமரிக் கடல்களில் ஆழ்கடல் அகழாய்வு செய்து பழந்தமிழர் நாகரிகச் சின்னங்களைக் கண்டறிவது போன்ற கோரிக்கைகள் இந்திய அரசை நோக்கி வைக்கப் பட்டுள்ளன.

            பூம்புகார், குமரி ஆழ்கடல் அகழாய்வை இந்திய அரசு மேற்கொள்ளாது. தமிழுக்கு, தமிழர்க்கு முதன்மை கிடைப்பதை இந்தியா எப்போதும் விரும்பாது. எனவே இவ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளத் தமிழக அரசு முன்வர வேண்டும். இதற்காக யுனெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங் களிடம் நிதியுதவி பெற முயல வேண்டும்.

            பாகிஸ்தான் நாட்டிலுள்ள சிந்து வெளி நாகரிக நகரங்களான மொகஞ்சதாரோ, அரப்பா உள்ளிட்ட அகழாய்வுக் களங்களைப் பராமரிக்கும் செலவின் ஒரு பகுதியைத் தமிழக அரசு ஏற்று, பாகிஸ்தான் அரசுடன் தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

            அதே போல் குசராத்திலுள்ள லோத்தல் சிந்துவெளி அகழாய்வுக் களத்தைப் பராமரிக்கும் பணியில் நிதியுதவி செய்து தமிழக அரசு பங்கேற்க வேண்டும்.

            ஆதிச்சநல்லூர், பேரூர் உள்ளிட்ட அகழாய்வுக் களங்களைத் தமிழக அரசே தன் பொறுப்பில் ஏற்று அவற்றின் ஆய்வுப் பணிகளை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும். ஆதிச்சநல்லூர், பேரூர், சித்தன்ன வாசல், பெருமுக்கல், மாங்குளம் உள்ளிட்ட பல்வேறு தமிழர் தொன்மைச் சான்றகங்களை சுற்றுச்சுவர் எழுப்பிப் பாதுகாத்து அங்கங்கு எடுக்கப்பட்ட பொருள் களை அந்தந்த இடத்தில் காட்சிப் படுத்தி பொது மக்கள் பார்வையிடும்படி கட்டமைப்பு களை உருவாக்க வேண்டும். ஆளுங் கட்சியின் ஆதரவோடு பழங்காலச் சின்னங்கள் உள்ள குன்றுகளில் கருப்புக் கல் வெட்டுவதை உடனடி யாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

            இவற்றையெல்லாம் தமிழக அரசு தானே முன்வந்து செய்து விடாது. தமிழ் மக்கள் இவ்வுணர்வு பெற்று போராட்டம் நடத்தித்தான் அரசைச் செயல்பட வைக்க வேண்டும்.

            கர்நாடகத்தில் கன்னட மொழியைச் சரிவரப் பயன்படுத்தாத அதிகாரிகளை அழைப்பாணை அனுப்ப விசாரிக்கும் அதிகாரம் கன்னட மொழி வளர்ச்சி இயக்குநருக்கு இருக்கிறது. அறிவுறுத் தியும் கன்னட மொழியைப் பயன்படுத்தாத அதிகாரிகளை இடைநீக்கம் செய்து அவர் நடவடிக்கை எடுக்கிற செய்திகளை அவ்வப்போது ஏடுகளில் பார்க்கி றோம். இங்கு அவ்வாறான அதிகாரம் தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு இதுவரை ஏன் வழங்கவில்லை? செம்மொழி மாநாட்டிலாவது அந்த அதிகாரம் வழங்குவது பற்றி அறிவிப்பு செய்திருக்க வேண்டும். அதற்கு மாறாக பொது மக்களும் அலு வலர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுவது திசைதிருப்பும் உத்தி யாகும்.

            இம்மாநாட்டில் தமிழைக் குறைந்தது 12ஆம் வகுப்பு வரையாவது தமிழ்நாட்டிலுள்ள மெட்ரிகுலேசன் உள்ளிட்ட எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயப் பயிற்று மொழி ஆக்கிட எந்த அறிவிப்பும் செய்யவில்லை. அதே போல் 12ஆம் வகுப்பு வரை தமிழை உடனடியாகக் கட்டாய மொழிப்பாடமாக ஆக்கிட எந்த அறிவிப்பும் இல்லை.

            தமிழர்கள் மேலும் மேலும் விழிப்புணர்வு பெற்று இயங்கினால், போராடினால் மட்டுமே எந்த ஆட்சியாக இருந்தாலும் தமிழ் மொழி காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும். தமிழ், தமிழர் பெருமை களை வர்ணித்து வர்ணித்து ஏமாற்றிப் பழக்கப்பட்டவர்கள் ஆட்சியாளர்கள். படிப்பினைகளைக் கற்று விழிப்புடன் செயல்பட வேண்டியது தமிழர்கள் கடமை.

            உலகத்தில் யாருக்கும் கிடைக்காத பேறாக - உலகின் முதல் மொழியாக விளங்கும் தமிழைத் தாய்மொழியாகப் பெற்றிருக் கிறோம். அந்த அருமையை உணர்ந்து ஒவ்வொரு தமிழரும் பெருமிதம் கொள்ள வேண்டும். தமிழ் நமக்கு தாய் மட்டுமன்று, நமது போர் ஆயுதமும் அதுவே!

Pin It