தமிழ் மாநிலம் அமைந்த நாளைத் தூக்கிப்பிடித்த நா. அருணாசலம் மறைந்தார்

பழைய தஞ்சை மாவட் டம் திருக்கண்ணபுரத்தில் 12.05.1939இல் பிறந்த தோழர் நா.அருணாசலம், அடிப்படையில் பெரியார் கொள்கைப் பற்றாளர்.

அவர் 23.5.2016 திங்கட் கிழமை, சென்னையில் தம் இல்லத்தில் 77ஆம் அகவை யில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தோழர் நா.அருணாசலம் தமிழ்நாட்டு அரசு வருவாய்த்துறையில் வட்டாட்சியராக இருந்தார். அப்போதே “அடையாறு மாணவர் நகலகம்” என்ற பெயரில் ஒளிப்படம் எடுத்துத்தரும் தொழிலகத்தைப் பல இடங்களில் அமைத்து, நல்ல வருவாய் ஈட்டினார். அதனை ஒட்டி அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

1956இல், இந்தியா மொழிவாரியாக மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, 01.11.1956இல் தனித் தமிழ் மாநிலம் ஒரு தனி ஆட்சிப் பகுதியாக அமைந்தது. அப்படித் தமிழகம் அமைந்த “நவம்பர் 1-ஆம் நாளை”த் தமிழக அரசு கொண் டாடியிருக்க வேண்டும்; எண்ணற்ற வகையில் உள்ள எல்லாத் தமிழ் அமைப்புகளும் கொண்டாடியிருக்க வேண்டும்.

எவரும் செய்யாத அந்த அரிய செயலை, அவர் மட்டுமே தம் சொந்தச் செலவில் ஒரு பெருவிழாவாகப் பல ஆண்டுகள் எடுத்தார். இடையில் அவரும் செய்ய முடிய வில்லை; வேறு எவரும் செய்யவுமில்லை.

கருநாடக அரசு “நவம்பர் 1” என்ற நாளை ஒரு பெருவிழா நாளாக ஊர்தோறும் கொண்டாடுகிறது.

அவர் நல்ல தமிழ் உணர்வாளர். அதன் வெளிப் பாடாக, தமிழ்ச் சான்றோர் பேரவை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் இவற்றை நிறுவினார். 1995இல் “நந்தன்” என்ற தமிழ்க்கிழமை இதழைத் தொடங்கி நடத்தினார். அது செல்வாக்கோடு பரவி, ஓய்ந்தது.

அவர் தமிழ் வழிக் கல்வியின் காப்பாளராகவும் போராளியாகவும் திகழ்ந்தார். சென்னை மாநகரில் தமிழ்வழிக் கல்விக்காக ஒரு பெரும் பேரணியை நடத்தி, “ஒரு நூறு தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாநோன்பு” நோற்கும் எழுச்சியூட்டும் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.

அத்தகைய தமிழினப் போராளி நா. அருணாசலம் அவர்கள் மறைவு என்பது தமிழர்க்கும், அவர்தம் குடும்பத் தார்க்கும் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

வாழ்க நா. அருணாசலம் புகழ்!

- வே. ஆனைமுத்து

Pin It