வணங்கி வரவேற்பது, உயர்வு - தாழ்வைக் காட்டுகிறது. கைகுலுக்கி வரவேற்பது – வழியனுப்புவது மானிட சமத்துவத்தை உடனே நிலை நாட்டுகிறது!

என் 93ஆம் பிறந்த நாள் கட்டுரை முடிவில், மேலே கண்ட கோரிக்கையை முன்மொழிந்தேன்.

இந்துக்கள் - பிராமணர், சத்திரியர், வைசியர், சற்சூத்திரர், சூத்திரர், தீண்டப்படாதவர் என 6 பெரும் பிரிவினராகவும், 6700 உள் பிரிவினராகவும் உள்ளனர்.

இவர்களில் கீழே - மேலே படிக்கட்டுப் பிரிவினையாக - உயர்வு - தாழ்வு உள்ளதாக சாதிப் படிக்கட்டு அமைப்பு இருக்கிறது. உயர்ந்த சாதிக்காரனை எல்லாக் கீழ்ச்சாதிக்காரரும் கும்பிடுகின்றனர்; உயர்ந்த சாதிக் காரர் ஒருபோதும் கீழ்ச்சாதிக்காரரைக் கும்பிட்டதில்லை; மேலும்  கீழ்ச்சாதிக்காரரோடு கைகுலுக்கத் தயங்குகிறார்; மறுக்கிறார். எனவே, கீழ்ச்சாதித் தீண்டப்படாதவர், தீண்டப்படாதவராகவே நடத்தப்படுகிறார்.

இவர்கள் கூடி வேலை செய்கிறார்கள்; கூடி உண் கிறார்கள்; ஆனால் கைகுலுக்கத் தயங்குகிறார்கள்.

இஸ்லாமியர் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து வரவேற்கிறார்கள்; சகமானிட சமத்துவம் அதில் இருக்கிறது.

1865க்குப் பிறகும், 1960க்குப் பிறகும், நீக்ரோவும் வெள்ளையரும் கைகுலுக்கி வரவேற்கிறார்கள். சமூக சமத்துவம் அவர்களிடையே வந்துவிட்டது.

அய்ரோப்பியர் ஒருவரையொருவர் கைகுலுக்கி வரவேற்கிறார்கள்; கைகுலுக்கி வழியனுப்புகிறார்கள்.

இந்தியரை அய்ரோப்பியர் கைகுலுக்கி வரவேற்கிறார்கள்.

இந்துக்களாக-இந்தியராக உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி வரவேற்போம். அதிலேயே சமூக சமத்துவம் வந்துவிடும்.

ஆணை ஆண் கைகுலுக்கியும் கட்டிப்பிடித்தும் வரவேற்போம். முழு சமூக சமத்துவம் வந்துவிடும். பெண்ணைப் பெண் கைகுலுக்கியும், கட்டிப்பிடித்தும் வரவேற்போம்.

முயன்றால்-மனதார முயன்றால், முடியாதது ஒன்றும் இல்லை. இது என் வேண்டுகோள்; என் ஆசை. முயலுங்கள்.

Pin It